தேதி:02.12.2025
கண்டன அறிக்கை
கார்த்திகை திருநாளை ஒட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவும், காவல்துறை முழு பாதுகாப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R சுவாமிநாதன் 01.12.2025 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்து தமிழர் கட்சியின் தலைவர் மதுரையைச் சேர்ந்த இராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக மக்களாலும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்தாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்திற்கு மாறான தீபம் ஏற்ற வழங்கப்பட்டிருக்கும் உத்தரவால் சமூகத்தில் பதற்றமும், மத நல்லிணக்கமும் கெட்டுப்போகும் என மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டி யுள்ளது. எனவே சமூக பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் W.P(MD)Nos. 32317, 33112, 33197, 33724 & 34051 of 2025 dated:01.12.2025 தீர்ப்பு சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. PER INCURIUM என்பதால் அரசு தலைமை வழக்கறிஞரின் கருத்துரை பெறாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என கோரிக்கை வைத்து மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முதல்வருக்கும் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பில் நீதிபதி திரு.G.R. சுவாமிநாதன் அவர்கள் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள Geological Survey of India ன் எல்லைத் தூணை தீபத்தூண் என தீர்மானித்து மிகுந்த அவசரத்துடன் டிசம்பர் 3 அன்று கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் பல நூற்றாண்டுகளாக கோயில் கருவறைக்கு நேர் மேலே உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதே காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாகும். திருப்பரங்குன்றம் மலையில் ஒரே ஒரு தீபத்தூண் தான் உள்ளது. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு இதற்கு சான்றாக உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தலைமை அர்ச்சகர் ராஜா பட்டர், அர்ச்சகர்கள் மற்றும் ஸ்தானிகர்கள் கருத்தும் இதுதான்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுப்ரமணியன் என்பவர் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றக்கூடாது தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதுதான் ஆகமப்படி சரியானது என கோரிக்கை வைத்து மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி திரு வேணுகோபால் அவர்கள் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது ஆகமத்துக்கு புறம்பானது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யக் கோரினார். உரிய ஆதார ஆவணங்களை சுப்பிரமணியன் தாக்கல் செய்யாததால் WP(MD)No.19422 of 2014 வழக்கு 04.12.2014 அன்று தள்ளுபடி ஆனது. பின்னர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மதுரை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதிகள் கல்யாணசுந்தரம், பவானி சுப்பராயன் அமர்வில் விசாரணைக்கு வந்ததில் கோவில் நிர்வாகமும், தர்கா நிர்வாகமும் முடிவெடுத்து பல ஆண்டுகளாக அமைதியான முறையில் உச்சிப்பிள்ளையார் கோயில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். தர்கா அருகில் உள்ள மலை உச்சியில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான ஆகமம் ஆதாரம் எதுவும் இல்லை. அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க தேவையில்லை. எனவே வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மிகத் தீர்க்கமாக 07.12.2017 அன்று தீர்ப்பளித்துள்ளது.
தற்போது வழக்கு தொடுத்திருந்த ராம ரவிக்குமார் என்பவர் கோவில் நிர்வாகத்திடம் மனு அளித்தார் அதை பரிசீலித்த நிர்வாகம் பல ஆண்டுகளாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தான் தீபம் ஏற்றுவோம் அதுதான் கோயிலின் பழக்கவழக்கம் ஸ்தானிகர்கள் முடிவு என தெரிவித்ததை ஏற்காத இராம, ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது நீதிபதி ஜி ஆர் சாமிநாதன் ராம ரவிக்குமார் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பை வழங்கியுள்ளார்.
படிக்க:
♦ திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவோம் எனும் பெயரில் இந்து முன்னணி கல*வரத்தை தூண்ட முயற்சி!
இதில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழங்கிய தீர்ப்பை முற்றாக புறக்கணித்த ஜி ஆர் சாமிநாதன் அவர்கள் தற்போது இராம ரவிக்குமார் கூறியுள்ள தீபத்தூண் என்ற இடம் தீபத்தூண் தானா? அல்லது எல்லைக்கல்லா? என்பதை தீர்மானிக்க எங்கள் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என வக்புவாரியம் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இந்த கோரிக்கையை முற்றாக நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நிராகரித்ததற்குரிய விளக்கம் தீர்ப்பில் இல்லை.
மத நல்லிணக்கத்தின் இலக்கணமாக திகழும் தமிழ்நாட்டினை மற்றொரு அயோத்தியாக, மற்றொரு குஜராத்தாக பாசிச பாஜக மற்றும் சங் பரிவார் கும்பல் மாற்றத்துடிக்கிறது. அவர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதை சமூக நீதி பேசும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது. முற்போக்கு ஜனநாயகத்தை பேணிக்காக்க விரும்பும் ஒவ்வொருவரும், முற்போக்கு இயக்கங்களும் இதனை கடந்து போவது, காணாமல் விடுவது ஆபத்தானது. தன்னால் இயன்ற வகையில் கண்டனத்தை தெரியப்படுத்த வேண்டும். காலங்காலமாக மக்களிடம் இருந்து வந்த பழக்க வழக்கத்தினையும், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பையும் புறந்தள்ளி, சங் பரிவார கும்பலின் கலவரத்திற்கு வித்திடும் இத் தீர்ப்பினை எங்களின் தொழிற்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கண்டனங்களுடன்,
R. லோகநாதன்,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு – புதுச்சேரி.








திருப்பரங்குன்றம் பிரச்சனையில் இதற்கு முன்பு நீதிபதி கல்யாணசுந்தரம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வினால் தள்ளுபடி செய்யப்பட்ட தீர்ப்பிற்கு மாறாக ஒற்றை பார்ப்பன நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதே மாபெரும் தவறு. இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தபின் ஒற்றை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என்பது முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகளிலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும் திருப்பரங்குன்றம் மதுரை பகுதிகளில் மத நல்லிணக்கத்தோடு வாழ்கின்ற மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் சங்கிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 3-ல் (இஸ்லாமியர்களுக்கு சொந்தமென 1923-களிலேயே உறுதிப்படுத்தப்பட்ட தர்காவின் படிக்கட்டுப் பாதைகள் வழியாக எல்கைக் கல்லை தூபத் தூண் என்பதாக இந்த சங்கி நீதிபதியே வரையறுத்துக் கொண்டு) ரவிக்குமார் என்ற ஒரு தனிநபர் தொடுத்த வழக்கில் எண்ணற்ற எதிர்மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த சட்டப்படியான -நியாயபூர்வமான விவாதங்கள் எதற்கும் செவிமடுக்காமல் தன் இஷ்டத்திற்கு சட்டத்திற்கு புறம்பாகவே தீர்ப்பளித்துள்ளார்
GRS. ஏற்கனவே எச். ராஜா அர்ஜுன் சம்பத் போன்ற சங்கிகள் ‘பாபர் மசூதி போன்று திருப்பரங்குன்றமும் மாறப்போகிறது’ என்று சவால் அடித்தார்கள். அதாவது இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தர்காவை தகர்த்தெறிவோம் என்பதுதான் அவர்களது கனவு. இதில் எச்ச ராஜா மீது
எஃப் ஐ ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நீதிபதி GR. சுவாமிநாதன் கடந்த காலங்களில் வழங்கி வந்த பல்வேறு விதமான காவித்தனமான தீர்ப்புரைகள் போல் இப்பொழுதும் வழங்கியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இதற்கு தக்கப் பாடம் புகட்டும் வகையில் – அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் மதுரை மட்டுமல்ல; தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக மற்றும் புரட்சிகர இயக்கங்களும் தமிழ் மக்களை அணி திரட்டி களம் இறங்கி ஆர் எஸ் எஸ் – பாஜக – இந்துத்துவப் பாசிசக் காவிக் கூட்டத்திற்கு தமிழ் மண்ணில் சமாதி கட்டுவதற்கு அணி திரள்வோம்! அந்த வகையில் புஜதொமு மாநில பொதுச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையை முழு மனதுடன் ஏற்போம்!