தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில் கோவையில் நடக்கவுள்ள மாநாட்டிற்கு இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடி வருகை என்ற செய்தி ஊடகங்களில் நிரம்பி வழிகிறது.
தமிழகத்தில் அமைப்பு சாராத விவசாய சங்கங்கள் என்ற பெயரில் பாசிச பாஜகவின் கொள்கைகளை விவசாயிகள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் திருவாளர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘இயற்கை விவசாயிகள் மாநாட்டில், விவசாயிகளின் அழைப்பை ஏற்று பிரதமர் பங்கேற்பது மிகவும் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. பிரதமர் பார்வையிடுவதற்காக இயற்கை வேளாண் உற்பத்திப் பொருட்கள், சிறு தானியங்க, பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 16 அரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதை பிரதமர் திறந்து வைத்து பார்வையிடுகிறார்’’ என்று முன் வைத்துள்ளதையும், இந்த மாநாட்டின் தயாரிப்பு வேலைகளை மேற்பார்வை செய்வதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
தென்னிந்திய மாநிலங்களைச் சார்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இயற்கை விவசாயத்திற்கும், இந்திய ஒன்றியத்தின் பிரதமரான மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பினால், “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்” என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் தான் நமக்கு கிடைக்கும்.
இந்தியா ஒரு விவசாய நாடு. ஏறக்குறைய பல நூற்றாண்டுகளாக இந்திய விவசாயம் இயற்கையை சார்ந்து விவசாயத்தை நடத்தி வந்தது. மக்களின் தேவைக்கு பொருத்தமான அளவிற்கு இந்திய விவசாயம் எப்போதுமே பாதிப்பு இல்லாமல் நடந்து வந்தது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடைபெற்ற வேளாண்மை பற்றிய பண்டைய கால நடைமுறைகளை இன்றளவும் உலகே வியந்து பார்க்கின்ற அளவிற்கு பாசன வசதிகள், நீர் தேக்கங்கள், அணைக்கட்டுகள் கொண்டதாக உள்ளது. அவை இயற்கை விவசாயத்தை சார்ந்து நடத்தப்பட்டது என்பது தான் நிலைமையாகும்.
தமிழகத்திலும் சரி! இந்தியா அளவிலும் சரி! இயற்கையாக நடந்து வந்த விவசாயத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தேங்கி கிடந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி என் பி கே என்ற பெயரில் செயற்கை உரங்களை தயாரித்து, பசுமைப் புரட்சி திட்டம் என்ற பெயரில் தீவிரமான விவசாயத்தை நடத்துவது என்று இயற்கையை விவசாயத்தின் மீது தாக்குதலை தொடுத்தது பசுமைப் புரட்சி திட்டம்.
பசுமைப் புரட்சி திட்டத்தில் விளைச்சல் பெருகியதே ஒழிய விவசாய நிலங்கள் பாழாகிப்போனது. படிப்படியாக இயற்கையை சார்ந்து நடத்தப்பட்ட விவசாயம் அழிக்கப்பட்டு மண்ணின் வளங்கள் அனைத்தும் செயற்கையாக இடுபொருள்கள் மற்றும் உரங்கள் பயன்படுத்தி தான் விவசாயம் செய்ய முடியும் என்ற அளவிற்கு மண்ணை மலடாக்கியது.
அதன் பிறகு 90களில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறு காலனியாக்க கொள்கைகள் இந்திய விவசாயத்தின் மீது மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது. அதாவது அரைகுறையாக நிலம் வைத்திருந்த விவசாயிகளிடமிருந்தும் நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கின்ற வகையிலும், ஒப்பந்த விவசாயம் என்ற முறையில் விவசாயத்தை விவசாயிகள் கையில் இருந்து பறித்தெடுக்கும் சதித்தனத்தை “கருமைப் புரட்சி” என்ற முறையில் நடத்தினர்.
இந்த கார்ப்பரேட் பாணியிலான விவசாயக் கொள்கை தொடங்கியது முதல் விவசாயிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்பது உண்மைதான். குறைந்தபட்சம் ஒவ்வொரு விவசாயியும் சுமார் 2 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை கடனாளியாக மாறியுள்ளனர் என்பது தான் அந்த உண்மை நிலைமையாகும்.
2014 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசாங்கத்தை கைப்பற்றிய ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இந்திய விவசாயத்தில் ஏற்கனவே இருந்த சுயசார்பு தன்மையை முற்றாக ஒழித்துக் கட்டி வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புகள், விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துகின்ற வகையிலான கார்ப்பரேட் விவசாயக் கொள்கையை தீவிரப்படுத்தியது.
படிக்க:
♦ ’தமிழன் திருடன்’: பாசிச மோடியின் தாக்குதல்! சூடு-சொரணை உள்ளவனே! பாஜகவை விட்டு வெளியேறு!
உள்நாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கைப்பற்றி பண்ணை பாணியிலான விவசாயத்தை நடத்துவது என்பது நாடு முழுவதும் ஒரு புதிய போக்காக மாறியது.
இந்த விவசாய பண்ணைகளில் உற்பத்தியை பெரிய அளவில் நடத்துவதற்கு செயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்பது தான் எதார்த்தமாக உள்ள நிலைமையாகும்.
இந்த சூழலில் இயற்கை விவசாயத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் இந்திய ஒன்றிய அரசாங்கம் எகிறி குதிப்பதும், தென்னிந்தியாவில் உள்ள விவசாயிகளை ஒன்றிணைத்து இயற்கை விவசாய மாநாடு நடத்துவதும் மற்றும் ஒரு சதித்தன செயல்பாடாகும்.
ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் கார்ப்பரேட்டுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் செயற்கை உரங்களையும், விவசாயத்திற்கான உள்ளீடு பொருள்களையும் இந்தியா போன்ற விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் தலையில் கட்டிக்கொண்டு, தங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கு இயற்கையான விவசாயத்தில் விளைந்த விளைபொருள்கள் தேவை என்பதை முன்வைத்து ஒப்பந்தங்களை போடுகின்றனர்.
ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் உள்ள கொழுப்பெடுத்த பணக்காரர்கள் தின்று கொழுப்பதற்கு தேவையான இயற்கை முறையில் விளைந்த பச்சை காய்கறிகள் முதல் விவசாய பொருட்கள் வரை அனைத்தும் தேவை என்பதை குறி வைத்து பிரச்சாரம் செய்வதற்காகவே இந்த இயற்கை விவசாயம் என்ற பித்தலாட்டம் தற்போது அமலாக துவங்கியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தின் பாரம்பரியத்தில் இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி போராடி வந்த நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விஞ்ஞானிகளை புறக்கணித்த இந்திய ஒன்றிய அரசாங்கம் மற்றும் தமிழகத்தை ஆண்ட, ஆளுகின்ற அரசாங்கங்கள் தற்போது திடீரென்று விவசாயத்தின் மீது பாசம் வந்ததைப் போல நடிப்பது ஒருபோதும் சகிக்க முடியாததாகும்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17.8% பங்களிப்பு செலுத்துகின்ற விவசாயம் 51.86 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைக் கொண்டது. இதனை சூறையாடுவதற்கு வேளாண் கார்பரேட்டுகள் தயாராகி வருகின்றனர் என்பது தான் கோவையில் நடக்க உள்ள இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை விவசாய மாநாட்டின் முக்கிய செய்தியாகும்.
மற்றொருபுறம் கொங்கு மண்டலத்தில் விவசாய நிலங்களை பல ஆண்டுகளாக கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் கவுண்டர்கள் ஆதரவை திரட்டுவதற்கும் இந்த மாநாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.
- கரட்டுபட்டியான்.
புதிய ஜனநாயகம் தினசரி






