
“சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, அந்த நாட்டின் உயர்நிலைக் குழுவாக கருதப்படுகிறது. இந்த கமிட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பெய்ஜிங்கில் கூடி ஆலோசிப்பது வழக்கம். இதன்படி கடந்த 20-ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் மத்திய கமிட்டியின் கூட்டம் பெய்ஜிங்கில் தொடங்கியது. இதில் 350 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற கூட்டம் நேற்று நிறைவுப் பெற்றது.
இதன் பிறகு மத்திய கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவத்தில் முக்கிய பதவிகளில் இருந்த 9 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஹீ வெய்டோங்கின் பதவி நீக்கத்துக்கு மத்திய கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ராணுவத்தின் ஊழல் தடுப்பு துறை தலைவராக ஜாங் ஷெங்மின் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மத்திய ராணுவ கமிஷனின் துணைத் தலைவராகவும் பதவி வகிப்பார்.” என்று சீனாவில் தற்போது அதிபராக நீடித்து வரும் ஜி ஜின் பிங் தலைமையின் மீது மீண்டும் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தோழர் மாவோ இறப்புக்கு பிறகு சீனாவில் படிப்படியாக முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டதையும், 2007 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு சீனா நவீன சமூக ஏகாதிபத்தியமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததையும் மார்க்சிய லெனினிய அமைப்புகள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் சீனாவில் இன்னமும் சோசலிசம் பூத்துக் குலுங்குவதாகவும், 21ம் நூற்றாண்டுக்கான சோசலிசம், சீனாவின் பாதை மற்றும் சீன சோசலிசப் பாதை என்றெல்லாம் குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்களும், திருத்தல்வாத கம்யூனிஸ்டுகளும் வியந்து கொண்டாடி வருகின்றனர்.
சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் (PKU) 2025 அக்டோபர் 11-12 தேதிகளில் நடைபெற்ற மார்க்சியம் குறித்த நான்காவது உலக காங்கிரசில் கார்லோஸ் மார்டினெஸ் வழங்கிய விளக்கக்காட்சியின் உரை பின்வருமாறு
“முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை விட சீனா ஏன் உலகின் ஒரே ‘பசுமை வல்லரசாக’ உருவெடுத்துள்ளது? சீனாவின் பொருளாதாரம் “தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கான மூலதனத்தின் உந்துதலால் அல்ல, மாறாக மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளால் அரசியல் மற்றும் பொருளாதார முன்னுரிமைகள் தீர்மானிக்கப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்பதே அடிப்படைக் காரணம் என்று கார்லோஸ் வாதிடுகிறார்.
முதலாளித்துவ சந்தை பொருளாதாரத்தை முன்வைத்து உலகை சூறையாடி வருகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைவதும், கடன்காரர்களாக மாறிக்கொண்டிருப்பதும் ஒரு நிகழ்ச்சி போக்காக உள்ள சூழலில் சீனா வேறொரு பாதையில் சென்று முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சீனாவின் வளர்ச்சியை பற்றி முன்வைக்கின்றனர் மேற்படி அறிஞர்கள்.
சீனாவின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால், சீனா, 20வது தேசிய காங்கிரசுக்கு ஜனாதிபதி ஜி ஜின் பிங் அளித்த அறிக்கையின்படி, “தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியை அடிப்படையாகக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தைக் கொண்ட ஒரு சோசலிச நாடு; சீனாவில் அரசின் அனைத்து அதிகாரமும் மக்களுக்குச் சொந்தமானது.” என்று முன் வைத்துள்ளதை வைத்து சீனா வழமையான சோசலிசப் பாதையில் இருந்து மாறி வேறொரு புதிய பாதையில் சோசலிசத்தை கொண்டு செல்வதாக வியந்து பாராட்டி வருகின்றனர் உலகெங்கிலும் உள்ள குட்டி முதலாளித்துவ அறிஞர்கள்.
“கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்காமலேயே கம்யூனிசத்தை பேச முடியும்” என்ற கட்சி சாராத புரட்சிகர வாதம் என்று தோழர் லெனினால் நிராகரிக்கப்பட்ட கோட்பாட்டை சில திருத்தங்களுடன் புதிய கோட்பாடாக முன்னிறுத்துகின்ற இந்த அமைப்பு சாராத மார்க்சியர்கள் ஏதாவது ஒரு அம்சத்தை கையில் எடுத்துக்கொண்டு அதை பிரதானப்படுத்தி பேசுவது என்பது 90களில் இருந்து ஒரு போக்காக மாறியுள்ளது.
மார்க்சியம் பருண்மையானது அல்ல, பெண்ணியம், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை, வர்க்க கோட்பாடுகளுக்கு மாற்றாக அடையாள அரசியல், சூழலியல் போன்ற அம்சங்களில் மார்க்சியம் இன்னும் பங்களிப்பு செலுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு கருத்துகளுடன் மார்க்சியத்தின் மீது திருத்தம் கோருகின்ற இத்தகைய அறிஞர்களின் குழாமானது சீனாவை சோசலிசப் பாதையில் முன்னேறுகிறது என்று முன்வைக்கின்றனர்.
“21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சீனா “ஒரு சக்திவாய்ந்த சோசலிச தொழில்துறை நாடாக” மாறியிருக்கும் என்றும், “அது மனிதகுலத்திற்கு அதிக பங்களிப்பைச் செய்திருக்க வேண்டும்” என்றும் மாசேதுங் 1956 இல் கூறினார். சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சமாளிப்பதிலும், சுற்றுச்சூழல் நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதிலும் சீனாவின் தலைமை நிச்சயமாக மனிதகுலத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும்.” என்று இன்றைய உலகில் நவீன சமூக ஏகாதிபத்தியமாக பரிணமித்துள்ள சீனாவின் வளர்ச்சிகளையும் அது சூழலியல் குறித்த பார்வையில் மாற்றம் உள்ளதாக முன்வைக்கின்றனர்.
படிக்க:
♦ சீனா நவீன சமூக ஏகாதிபத்தியம் | புதிய ஜனநாயகம் வெளியீடு
♦ உலக மேலாதிக்கப் போட்டி! அமெரிக்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபை! சீனாவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு!
பிற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஆகியவற்றின் கார்பன் பயன்பாடு, எரி எண்ணெய் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து வேறுபட்டு செயல்படுவதில் இந்த சோசலிசத் தன்மை வெளிப்படுவதாக ஆய்வு செய்து வெளியிடுகின்றனர்.
மனித குலத்தை காப்பதற்கு சோசலிச மற்றும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியான கம்யூனிசமே முழுமையான தீர்வு என்று தோழர் மாவோ முன்வைத்த அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை திரித்துப் புரட்டி ஏதாவது ஒரு தருணத்தில் முன்வைத்த சீனாவைப் பற்றிய வரையறுப்பை எடுத்துக்கொண்டு அவர் சொன்ன திசையில் தான் சீனா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று வாதிடுவதற்கு மிகப்பெரும் மன தைரியம் வேண்டும்.
அந்த தைரியத்தை வழங்குவது எது? “பாட்டாளி வர்க்க கட்சி, அதன் கட்டுப்பாடு, ஜனநாயக மத்தியத்துவம், மத்தியத்துவத்திற்கு உட்பட்ட விவாத சுதந்திரம், போன்றவற்றை உள்ளடக்கிய ஊருக்குலையாத போல்சவிக் கட்சி ஒன்றை கட்டுவதில் ஏற்படுகின்ற நடைமுறை சிக்கல்களை கண்டு பயந்து ஓடுகின்ற குட்டி முதலாளி தாராள வாதிகள் மற்றும் அமைப்பு முறைகளுக்கு அஞ்சுகின்ற கோழைகளின் பிதற்றல்கள் போன்றவற்றினால் சிதைக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை” இவைதான் மேற்படி நபர்களுக்கு அந்த மன தைரியத்தை வழங்குகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி கோடீஸ்வரர்கள் கூட கட்சியில் உறுப்பினராக முடியும் என்று திருத்தம் கொண்டு வந்துள்ளது என்பதெல்லாம் அம்பலமாகி இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகிறது. உலகை சூறையாடுகின்ற சீனாவின் நவீன தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தான் என்ற நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளத்தையே மாற்றி ‘ பணக்கார கம்யூனிஸ்ட் கட்சி’ என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கியுள்ள சீனா மனித குலத்தின் விடிவுக்காக புதிய பாதையை முன் வைத்துள்ளது என்பதெல்லாம் வரலாற்றின் அபத்தங்கள் தான்.
‘ ஒரு கம்யூனிஸ்டாக’ வேடமணிந்து கொண்டு ஏழைகளின் வறுமை, அவர்களின் மீது திணிக்கப்படும் ஏற்றத்தாழ்வு, அவர்கள் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றி பேசலாம். ஆனால் சொந்த வாழ்க்கையில் எளிய வாழ்க்கை கடினமான போராட்டம் என்ற கோட்பாட்டை கைவிட்டு உத்திரவாதமான குட்டி முதலாளித்துவ வாழ்க்கை மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாத அனைத்து ஆடம்பர, உல்லாச சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு பணக்கார கம்யூனிசம் பேசலாம் என்ற புதிய வழிமுறை சீனாவின் கட்சியில் முன் வைக்கப்படுவது பலருக்கும் உவப்பானதாக உள்ளது.
ஆனால் இத்தகைய போக்குகளின் மூலம் சீனாவில் அதை எதிர்த்துப் போராடுகின்ற பலரையும் கட்சியை விட்டு நீக்கியும், ஈழத்தில் நடந்தது போல வெள்ளை வேன் தாக்குதல்களும் தொடர்கின்றன என்று அங்கிருந்து செய்திகள் கசிய துவங்கி உள்ளன.
ஒரு கம்யூனிஸ்ட் தனது அடிப்படைகளில் இருந்து விலகி பிழைப்புவாதியாக மாறினால் ஏற்கனவே காலங்காலமாக பிழைப்புவாத தொழில் செய்து வரும் பலரை விட மிகச் சிறந்த பிழைப்புவாதியாக மாற முடியும் என்று விவசாயப் பின்னணியில் இருந்து செயல்பட்ட நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் காரப்பட்டு ரங்கநாதன் முன் வைத்தது இன்றும் நமக்கு மிகச்சிறந்த பாடமாக உள்ளது என்பதை தான் சீனாவைப் பற்றிய குட்டி முதலாளிகளின் வரையறுப்பு மற்றும் ஜி ஜின் பிங் தலைமையை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அங்கீகரிப்பது போன்றவை உறுதிப்படுத்துகிறது.
◾ஆல்பர்ட்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி






