தாயைக் கொல்லத் துணிந்த 14 வயது சிறுவன்! காரணம் என்ன?
கேமிங் நிறுவனத்தின் சந்தை உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் அதன் வருமானம் 92 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது இந்திய அளவில் பார்த்தோமானால் அதன் வருமானம் 4.3 பில்லியன் டாலராக அமெரிக்க டாலராக உள்ளது

டலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மொபைல் கேம் விளையாட அனுமதிக்காததால் தன் தாயை கத்திரிக்கோலால் தொண்டையில் குத்தி விட்டு வேறு யாரோ குத்தி விட்டதாக நாடகமாடியுள்ளான். போலீஸ் விசாரணையில் ஏன் அப்படி செய்தேன் என ஒப்புக் கொண்டுள்ளான்.

அந்த சிறுவனின் தாய் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மகனின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுவன் காவல்துறைக்கு கொடுத்துள்ள வாக்குமூலத்தில் “நான் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடுவதால் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். அத்துடன் எப்போது பார்த்தாலும் படிச்சியா, ஹோம் ஒர்க் பண்ணுனியா என்று கேட்டுக் கொண்டே இருப்பாங்க. சம்பவம் நடந்த அன்று தூங்கிக் கொண்டிருந்த அம்மாவை எழுப்பினேன். அப்போது அவங்க என் கன்னத்தில் அடிச்சாங்க. நானும் பதிலுக்கு அடிச்சேன். அதோட பக்கத்தில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அவங்க கழுத்துல குத்தினேன். அப்புறம் அப்பாவுக்கு போன் செய்து யாரோ வந்து அம்மாவை கத்தியால குத்திட்டு ஓடிட்டாங்கன்னு நாடகம் ஆடினேன்” என வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

இதேபோன்று கள்ளக்குறிச்சியை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவம் கடந்த இரண்டு நாட்களில் நடந்தவை. இதுபோல் தொடர்ச்சியாக குழந்தைகளால் பெற்றோர்கள் மீதோ அருகில் இருப்பவர்கள் மீதோ பள்ளியிலும் வீட்டிலும் வன்முறைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் மொபைல் கேம்கள்!

American Psychological Association (APA) ஆய்வு முடிவுகள் நீண்ட காலமாக வன்முறை கேம்கள் விளையாடும் குழந்தைகளிடம் அதிருப்தி, எரிச்சல், தாக்குதல் (Aggressive behaviour) அதிகரித்திருக்கிறது என்கிறது.

பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு சமூகத்துடன் உறவாடிய குழந்தைகள் இப்போது ஸ்மார்ட்போனுடன் உறவாடிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். பெற்றோர்களுடனும் உறவினர்கள், நண்பர்களுடனும் நெருக்கம் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களது ஒரே உலகம் ஸ்மார்ட்போன் தான்.

ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால் இளைஞர்களையும், சிறுவர்களையும் குறிவைத்து கேமிங் ஃபோன்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கொலைவெறி ஏற்றும் கேம்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி விடுகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பப்ஜி, பிரீ பையர் உள்ளிட்ட பல்வேறு கேம்கள் சிறுவர்களிடம் வன்முறையை போதையாக மாற்றி உள்ளது. இத்தனை பேரைக் கொன்றால் அடுத்த படிக்கு (Level) முன்னேறலாம் என தூண்டுகிறது. தொடர்ந்து விளையாடும் சிறுவர்கள் கொலை செய்வதையும், ரத்தம் தெறிப்பதையும் திரையில் பார்த்து அதற்கு சகஜம் ஆகி விடுகிறார்கள். மறுபுறம் அந்த கேம்களுக்கு அடிமைகளாகவும் ஆகிவிடுகிறார்கள். அதனால் பெற்றோர்கள் மொபைலில் கேம் விளையாடாதே எனும் போதும் அவர்களிடம் செல்போனை பறிக்கும் போதும் உச்சகட்ட எரிச்சல் உண்டாகி அவர்களை தாக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

Aggressive behaviour ஐ அதிகரிக்க செய்யும் சினிமாக்கள்.

பழைய கால சினிமாக்கள் எல்லாம் ஹீரோ வில்லனை பழிவாங்க கிளைமேக்ஸ் காட்சியில் கொன்று ஹீரோ தனது கடமை நிறைவேற்றியதை போல் படமாக்கி இருப்பார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் படத்தின் தொடக்கம் முதல் கொண்டே இரத்தம் தெறிக்கும் காட்சிகள். இறுதிவரை ஹீரோ ஒருவர் பல நூறு பேரை பந்தாடுவது போலவும், கத்தியால் சரமாரியாக வெட்டி வீழ்த்துவது போலவும் செயற்கைதனமான காட்சிகள் வலிந்து திணிக்கப்படுகின்றன.

படிக்க: 

 காட்சி போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறை!

 சாமானியர்கள் மத்தியில் அதிகரிக்கும் வன்முறை கலாச்சாரம் ! தீர்வு என்ன?

இதனைப் பார்த்து பழகிய சிறுவர்களும் இளைஞர்களும் வன்முறையை இயல்பானதாக மனதில் கொண்டு அதாவது திரையில் பார்க்கும் காட்சியும் நடைமுறை வாழ்க்கையும் ஒன்றான எண்ணிக்கொண்டு வன்முறையை தன் தாயின் மீதே பிரயோகிக்கும் மனநிலையை வீடியோ கேம்களும் சில சினிமாக்களும் உருவாக்கி வளர்க்கின்றன.

கோடிகளில் புரளும் மொபைல் கேமிங் சந்தை!

இளைஞர்களையும் சிறுவர்களையும் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி அவர்களை வன்முறையாளர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றும் கேமிங் நிறுவனத்தின் சந்தை உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் அதன் வருமானம் 92 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது இந்திய அளவில் பார்த்தோமானால் அதன் வருமானம் 4.3 பில்லியன் டாலராக அமெரிக்க டாலராக உள்ளது இதுவே 2033 ஆம் ஆண்டில் 15.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக வருமானம் தரும் சந்தையாக தான் மொபைல் கேமிங் சந்தை உள்ளது. மொபைல் கேமை டவுன்லோடு செய்வதும் மூலம் மட்டுமே இந்தியாவில் 400 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளனர். வருமானம் மட்டுமே இலக்காக வைத்து பல கோடி இளைஞர்களின் வாழ்வை சூறையாடுகின்றனர். குடும்ப, சமூக உறவை சிதைக்கின்றனர். ஏகாதிபத்திய நிதி மூலதன கும்பலின் துணை இல்லாமல் இவர்களால் மட்டுமே இதனை செய்ய முடியாது. மக்களின் வாழ்வை சூறையாடும் இவர்கள் அடுத்த தலைமுறை இளைஞர்களையும் சீரழிக்கிறார்கள்.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியானது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவம் அதில் கொள்ளை லாபம் பார்க்கிறது. இதைப்பற்றிய புரிதல் பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் இருப்பது அவசியம். பிரச்சனையை புரிந்து கொள்ள தவறுவோமானால் நாளைய இளைஞர் சமுதாயம் முதலாளித்துவம் உருவாக்கி இருக்கும் நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி சீரழிந்து போவதை தவிர்க்க முடியாது. அதற்கு இரண்டு சிறுவர்களின் வன்முறை செயல் உதாரணம் மட்டுமே.

  • சுவாதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here