மிழகத்தில் உள்ள சன் டி வி, புதியதலைமுறை உள்ளிட்டவை மே1 இல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்துள்ளதாகவும், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டன. ஆனால் பிற சர்வதேச செய்தி நிறுவனங்களில் இருந்து இப்படி ஒரு செய்தி இதுவரை வெளியாகவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியின்  மீது நடத்தி வரும் இன அழிப்பு போருக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் வெடித்து பரவுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் பேராசிரியர்களும் தொடர்ச்சியாக பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசை கண்டித்து, அதன் போர் வெறியை கண்டித்து, உள்ளிருப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாத பல்கலைக்கழக நிர்வாகங்கள் காவல்துறையின் உதவியை கேட்டு போராட்டக்காரர்களை கைது செய்து தற்காலிகமாக போராட்டத்தை தடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் பரவிய இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களில் பாசிசத்தை நிராகரிக்கும் யூதர்களும் கூட பங்கெடுத்துள்ளனர். இது அமெரிக்காவோடு நிற்கவில்லை; ஐரோப்பாவுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது . இந்த சூழலில் தான் பெஞ்சமின் நெதன்யாகு மே – 1 ல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் வதந்தி பரப்படுகிறது.

இடுக்கண் களைய வந்த நட்பு!

உலக நாடுகள் பாலஸ்தீனம் மீதான போர் எதிர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வர ஐநா அவையில் பலமுறை முயன்றன.  அதை தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்து, உடுக்கை இழந்த (இடுப்புத்துணி அவிழ்ந்த) இஸ்ரேலுக்காக துணை நின்ற நாடுகள் தான் அமெரிக்காவும் பிரிட்டனும். அப்படி இருக்க வல்லரசுகளின் துணையோடு இன அழிப்புப் போரை நடத்தி வந்த நெதன்யாகுவுக்கு எங்கிருந்து நெருக்கடி வந்தது?

முதலில் 50% இஸ்ரேலியர்களே நெதன்யாகுவை கண்டித்து பல மாதங்களாக போராடி வருகின்றனர். தன் சொந்த நாட்டு மக்களையும் அடக்கி ஒடுக்கியபடி தான் இந்த இன அழிப்புப் போரை நெதன்யாகு நடத்தி வந்தார்.

பாசிஸ்டுகள் தம் மக்களையே ஒடுக்குவார்கள்!

இஸ்ரேலின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் ஹமாசின் தாக்குதலை முன்கூட்டியே தடுக்க தவறியது, பிணைய கைதிகளை மீட்பதில் அக்கறை காட்டாமல் இன அழிப்பு போர்வெறியுடன் மூர்க்கமாக தாக்கி வருவது ஆகியவற்றால் சொந்த நாட்டு மக்களிடமே தனிமைப்பட தொடங்கியிருந்தனர். இதைக் கண்டித்து நடக்கும் போராட்டங்களை போலீசாரை ஏவி சேறு கலந்த தண்ணீரை கொண்டு தாக்கி ஒடுக்கி வந்தனர்.

இதுபோல் உலக மக்களின் இன அழிப்புப் போருக்கு எதிரான போராட்டங்களை நசுக்க முடியவில்லை. தற்போது கூடுதலாக, காசாவில் நடந்த வரும் போர்க் குற்றங்களை உலக அளவில் அம்பலப்படுத்துவதாக அமெரிக்க மாணவர்களின் போராட்டங்கள் அமைந்துவிட்டன. இஸ்ரேல் பிரதமர் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் (ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுக்க ஆரம்பித்து விட்டன.

அமெரிக்க ஐரோப்பிய நாட்டு அரசுகள் தமது விசுவாசியான பெஞ்சமின் நெதன்யாகுவை பாதுகாக்க நினைத்தாலும் அந்நாட்டில் உள்ள ஜனநாயகவாதிகளான மக்கள் அதை செய்ய தம் நாட்டு அரசுகளை அனுமதிப்பதாக இல்லை. வேறு வழியின்றி தான் அம்பலப்படுவதை தவிர்க்கவே, பெயரளவுக்கு இஸ்ரேலை கண்டிக்க வேண்டிய நிலைக்கு ஏகாதிபத்திய வல்லரசுகள் தள்ளப்படுகின்றன. இதன் மூலம் தமது அரசாங்கத்திற்கும் சேர்த்து ஒரு பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் மேற்குலக நாட்டு மாணவர்களும் மக்களும். இதில் நியூயார்க் நகரத்திலுள்ள கொலம்பியா பல்கைலைக்கழக மாணவர்கள் போராட்டமும் முக்கியமானது.

மனசாட்சி அற்ற மிருகங்கள்!

உலகமே பார்த்துக் கொண்டிருக்க, காசாவின் கடைசி புகலிடமான ராபா நகரத்திற்குள்  தஞ்சமடைந்துள்ள மக்களை ஆயுதத்தின் மூலம் கொன்று குவிப்பதை இஸ்ரேலிய அரசு ஒரு வழிமுறையாக செய்கிறது  என்றால், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை, ஐநாவின் உதவிகளை, செஞ்சிலுவை சங்கத்தின் உதவிகளை தடுத்து நிறுத்துவது மற்றொரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: 

மருத்துவமனைகளை ஏவுகணைகளை வீசி தகர்ப்பதோடு நிற்காமல், மின்சாரம், ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள், மருந்து, குடிநீர், உணவு இல்லாமல் அவர்களை சாகடிக்கும் போர் குற்றமும் பெஞ்சமின் நெதன்யாவின் அரசின் மீது சேர்த்து சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐநாவின் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களையே இஸ்ரேலிய ராணுவம் ஏவுகணை வீசி தகர்த்துள்ளது கடும் கண்டனத்தை கிளப்பி இருந்தது.

இன அழிப்புப் போரின் எதிர் விளைவு!

இப்படி தனது ஜியோனிச இன வெறியால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று கொக்கரித்த பாசிஸ்ட் பெஞ்சமினுக்கு  பாடம் புகட்ட வளைகுடா நாடுகளை சார்ந்த ஹவுதி உள்ளிட்ட பல இயக்கங்கள், ஈரான், சிரியா, லெபனான் உள்ளிட்ட அரசுகள் களமிறங்கின. ஹமாசுக்கு உதவியாக செயல்பட்டன.

இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் செங்கடலில் பயணிக்க முடியாத நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளின் மீதும் அந்நாட்டிலுள்ள புரட்சியாளர்களின் முகாம்களின் மீதும் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது.

சிரியாவில் ஈரானிய துணை தூதரகம் தகர்க்கப்பட்டு, போராளிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலை தாக்கி எச்சரித்தது.

ராஜினாமா நாடகம்!

இப்பொழுது உலகம் இன அழிப்பு போரை நடத்தி வரும் பாசிஸ்ட் நெதன்யாவுக்கு பதிலடி தர போராட்ட களத்தில் குதித்துள்ளது. அதிகரித்து வரும் அம்பலப்படுத்தலின் விளைவாக, வேறு வழியின்றி அவர் ராஜினாமா செய்யக்கூடும். நீலி கண்ணீர் வடிக்க தெரியாதவர்களா பாசிஸ்டுகள் ?

ஒருவேளை ராஜினாமா செய்தாலும் ஜியோனிச இனவெறியை தூண்டி, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை மூலாதாரமாகக் கொண்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர நெதன்யாகுவால் முடியும்தான். பாசிஸ்டுகள் அதற்கே உரிய பேச்சுத் திறமையை வளர்த்து வைத்துள்ளார்கள் தான்.

இந்தியாவில் 2000 இஸ்லாமியர்களை படுகொலை செய்து உலக அளவில் தனிமைப்பட்ட மோடி மீண்டும் உயர் பதவியை எட்டவில்லையா?  குஜராத்தின் முதலமைச்சர் என்ற மட்டத்திலிருந்து உயர்ந்து, இந்தியாவின் பிரதமராக ஆனதையும் நாம் பார்த்துள்ளோம் தானே. தற்போதும் மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டே மீண்டும் ஆட்சி கட்டிலில் அமருவதற்காக இந்தியாவில் சுழன்றடித்து பிரச்சாரம் செய்து வருவதையும் பார்க்கிறோம்.

எனவே, பாசிஸ்டுகள் தான் அம்பலமாவதை கண்டு அஞ்சி பின்வாங்க போவதில்லை. மாறாக, அவர்கள் மக்கள் போராட்டங்கள் மூலம் துடைத்தெறியப்பட வேண்டும்.நெதன்யாகுவையே மீண்டும் பதவியில் அமர்த்த ஏகாதிபத்தியங்கள் விரும்பும். இந்தியாவில் உள்ள பாசிஸ்டான மோடியும் விரும்புவார்.

உலகம் முழுவதும் பிற்போக்காளர்கள் கைகோர்த்துள்ளனர். ஏகாதிபத்தியங்கள் தங்களது நவீன காலனிகளை உருவாக்க இடைவிடாமல் முயற்சிக்கின்றன. இதற்காக  பதிலிப்போரை தூண்டி உக்ரேன் போன்ற உலக நாடுகளை பலியிடுகின்றன. ஏகாதிபத்தியங்களும் அவர்களின் அடிவருடிகளும் முற்றாக வீழ்த்தப்படும் வரை போர்களுக்கும், இன அழிப்புக் குற்றங்களுக்கும், மதப்படுகொலைகளுக்கும், வறுமை, பட்டினி சாவு, அகதிகளின் பெருக்கத்திற்கும் முடிவு கட்ட முடியாது.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here