உலக சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும் தான் போராடிக் கொண்டிருப்பதாகவும் பல்வேறு நாடுகளில் நடந்த போர்களை தான் முடிவுக்கு கொண்டு வந்ததால் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் பிதற்றி வருகிறார் அமெரிக்காவின் ஜனாதிபதியான திருவாளர் ட்ரம்ப்.
உலக சமாதானத்தை ஒரு புறம் பேசிக்கொண்டே நோட்டோவின் துணையுடன் கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதற்கு திட்டம் போட்டுள்ளார். கிரீன்லாந்து பூகோள ரீதியாகவும், புவிசார் அரசியல் ரீதியாகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு மிகவும் தேவையான பகுதியாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் டாலர் வீழ்ச்சி அடைய துவங்கியுள்ளது என்பது மட்டுமின்றி அமெரிக்கா முன் வைக்கின்ற அரசியல், பொருளாதார திட்டங்கள் உலகில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களினால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
வெனிசுலாவுக்குள் புகுந்து அந்த நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த நடவடிக்கையானது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியிலும் கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது.
ஒரு நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அமெரிக்காவின் சிஐஏ மூலம் பல்வேறு ரகசிய சதித்திட்டங்களை தீட்டி வந்த அமெரிக்கா தற்போது பென்டகன் மற்றும் அமெரிக்காவின் கொலைகார ராணுவத்தின் உதவியுடன் ஒரு நாட்டிற்குள் புகுந்து அதிபரை தூக்குகின்ற அளவிற்கு உலக மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதில் வெறிபிடித்தலைகிறது.
இதே காலகட்டத்தில் ரஷ்யா மற்றும் சீனா போன்ற இடது பாதையில் பயணிப்பதாக கூறிக் கொள்கின்ற நாடுகளை எதிர்த்து முறியடிப்பதற்கு பூகோள ரீதியில் ஏவுகணை தளங்களையும், அணு ஆயுத தயாரிப்பு கொண்ட பல்வேறு ராணுவ தளவாடங்களையும் நிரப்பி வைப்பதற்கு கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது.
இந்த உலக மேலாதிக்க கண்ணோட்டத்தில் இருந்து கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார்.
தற்போது உலகைப் பிடித்தாட்டுகின்ற ஏஐ தொழில்நுட்பம் மூலமாக இருக்கின்ற ஒருவரை இல்லாமல் மாற்றுவதற்கும் முடியும். இல்லாத ஒருவரை இருப்பதாக உயிருடன் நடமாடிக் கொண்டிருப்பதாக காட்டுவதற்கும் முடியும் என்ற அளவிற்கு மிகவும் கேடுகெட்ட வழியில் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தால் பயன்படுத்தப்படுகிறது என்பதை ட்ரம்ப் நிரூபித்துள்ளார்.
படிக்க:
♦ இந்தப் பொழப்புக்கு… ட்ரம்ப் தட்டோடு ஏந்தி நாடு நாடாய் பிச்சை எடுக்கலாம்!
♦ ட்ரம்ப்பின் குறி க்யூபா! வெனிசுலா அதற்கான பகடைக்காய்!
கிரீன்லாந்தை ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் கைப்பற்ற போவதில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் மூலமாகவே கிரீன்லாந்தை அமெரிக்காவின் பகுதியாக மாற்றப் போகிறோம் என்று கொக்கரித்து வருகின்ற திருவாளர் ட்ரம்புக்கு டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, டிரம்ப் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிப்பேன். ஜூன் 1 முதல் இந்த வரி விகிதம் 25% ஆக உயரும்” என்று எச்சரிக்கின்ற வகையிலும், மிரட்டுகின்ற வகையிலும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகத்தின் வரைபடத்தை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் தங்களுக்கு விருப்பமான வகையில் எவ்வாறு வேண்டுமானாலும் வரைந்து கொள்ளலாம். ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோர விளைவினால் அதிகரித்து வரும் இரு துருவ ஏற்றத்தாழ்வானது அதற்கான சரியான தீர்வை தேடிக் கொண்டுள்ளது.
முதலாளித்துவ பசப்பல்களை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற தாராளவாத ஜனநாயகம், அனைவரையும் சமத்துவமாக அணுகுகின்ற ஜனநாயகம் என்ற மோசடியான ஆட்சி வடிவங்கள் இனிமேலும் செல்லுபடியாகாது என்று உணர்த்துகின்ற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் ஒரே தீர்வு என்பதை உரக்கச் சொல்வோம்.
சொல்வது மட்டுமின்றி அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அடாவடித்தனங்களுக்கு எதிராக இந்திய ஒன்றியத்தின் பாட்டாளி வர்க்கத்தை தயார்படுத்துவதற்கு அனைத்து வகைகளிலும் முயற்சியை மேற்கொள்வோம்.
- ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






