GEN Z இளைஞர்கள் நேபாள அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டம் நேபாள பிரதமரை பதவி விலகச் செய்துள்ளது. அப்போராட்டத்தீக்கு உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், பிரதமர் வீடு இரையாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே நேபாள அரசின் ஊழல் ஆட்சியாளர்களின் பிள்ளைகள் அதிகாரத்திற்கு வருவது வேலையின்மை போன்ற பிரச்சினைகளை முன்வைத்து சமூக ஊடகங்களில் இளைஞர்கள் விவாதங்களை நடத்தி வந்தனர். அரசிற்கு எதிரான  கோபமாக கருத்து திரட்சியாக  அது மாறிவந்த நிலையில் நேபாள அரசு அதனை முடக்குவதற்காக முகநூல், இன்ஸ்டா உள்ளிட்ட 23 சமூக ஊடக செயலிகளை தடை செய்தது. ஆனால் நேபாள அரசு எதிர்பார்க்காத ஒன்றாக அதனால் தடை செய்யப்படாத டிக்டாக் மூலமாக ஒருங்கிணைந்த் மிகப்பெரிய போராட்டத்தை GEN Z இளைஞர்கள் கட்டியமைத்துள்ளனர்.

நேபாளத்தின் வரலாற்றில் நடந்த மிகப்பெரும் போராட்டங்களில் ஒன்றாக GEN Z இளைஞர்களின் போராட்டம் உருவெடுத்துள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்க நினைத்த நேபாள அரசு தன் குண்டாந்தடி மூலம் 19 இளைஞர்களின் உயிரை காவு வாங்கியுள்ளது. அது போராடும் இளைஞர்களை பின்வாங்க செய்யவில்லை. போராட்டத்தை அதிகரிக்கவே செய்துள்ளது. விளைவாக பிரதமர், உள்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். போராட்டக்காரர்கள் நிதி அமைச்சரை நடு ரோட்டில் ஓடவிட்டு அடித்து விரட்டியுள்ளனர்.

இந்த போராட்டத்தை பின்வாங்கச் சொல்லி நேபாள இராணுவமும், ஆளும் வர்க்கமும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இளைஞர்கள் மொத்த கட்டமைப்பையும் துடைத்தெறிந்து விட்டுதான் நிற்பார்கள் என்பதாகவே தெரிகிறது.

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக உழைக்கும் மக்கள் வேலையின்மை சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட  பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் கழுத்து நெரிக்கபட்டு வருகிறது. குறிப்பாக பின் தங்கிய நாடுகளான தெற்காசிய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைகளை தீர்க்காத மேலும் அதிகரிக்கும் வண்ணம் செயல்படும் அரசுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

படிக்க: நேபாளத்தில் வெடிக்கும் கலகக் குரல்!

இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் மக்கள் எழுச்சியால் அரசுகள் தூக்கியெறியப்பட்டன. 2022 ஆம் ஆண்டு கடும் விலைவாசியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அந்நாட்டு அரசிற்கு எதிராக ஒருபேரெழுச்சியை நடத்தி அதிகாரத்தில் இருந்த கோத்தபய ராஜபக்சே – ரணில்விக்கிரமசிங்கே கும்பலை விரட்டியடித்தது. 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்தில்  ஊழல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இளைஞர்களின் போராட்டம் வெடித்து அந்நாட்டின் பிரதமர்  ஷேக் ஹசீனாவை நாட்டை விட்டே ஓடவிட்டது. 2024 ஆம் ஆண்டு கென்யாவில் சர்வதேச நாணய நிதியத்தின் வற்புறுத்தலின் பேரில் அதிக வரிவிதிப்புக்கு எதிராக இளைஞர்கள் சமூக ஊடகத்தின் மூலம் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக வீதியில் போராடினார்கள். நாடாளுமன்றத்திற்குள் புகுந்து தீ மூட்டினார்கள். அரசை பணிய வைத்தார்கள்.

2010-களில் தொடங்கி அரபு நாடுகளில் துனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் பெரும் எழுச்சிகள் வெடித்து அந்நாட்டு அரசுகளை தூக்கியெறிந்தது. அரபு வசந்த என அழைக்கப்பட்ட இந்த போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு மாற்றான சித்தாந்தத்தை கொண்டில்லாத காரணத்தினால் இந்த போராட்டங்களின் விளைவு மக்களை விடிவு தருவதாக அமையவில்லை.

அதேபோன்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்துவரும் மக்கள் போராட்டங்களும் எழுச்சிகளும் மக்களிடம் மேலோங்கியுள்ள அரசிற்கு எதிரான கோபத்தை மட்டுமே வெளிப்படுத்துவதாக உள்ளன. மக்களின் இந்த போராட்ட எழுச்சி என்பது தவிர்க்கவியலாத ஒன்று, வரவேற்பிற்குரியதுமாகும். ஆனால் இத்தகைய போராட்டங்கள் ஒரு மாற்றை உருவாக்க வேண்டுமெனில் முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச சித்தாந்தத்தை பற்றுவதை நோக்கி தீரமிக்க போராடும் இளைஞர்கள் நகர வேண்டும்.

இந்தியாவிலும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்திற்கு எதிராக இத்தகைய எழுச்சிகளை இந்திய இளைஞர்கள் முன்னின்று நடத்த வேண்டும்

  • திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here