மனித குலம் இயற்கைக்கு எதிராக போராடி படிப்படியாக இயற்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நிகழ்ச்சி போக்கு அவனது வாழ்க்கையையும் மாற்றிக் கொள்வதற்கு உதவி புரிந்தது.
இயற்கையின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு போராடுகின்ற மனித குலத்தின் வெற்றி இதுவரை முழுமை அடையவில்லை.
அதற்குள்ளாகவே ஏகாதிபத்திய முதலாளித்துவம் உருவாக்கியுள்ள நவீன தொழில்நுட்பங்கள் என்ற பெயரிலான கருவிகள், அலைபேசிகள் அவனது மூளையை கட்டுப்படுத்துவதில் முழுமையான வேகத்தில் செயல்படுகிறது.
இதன் எதிர் விளைவாக தனது ஊக்கமிக்க படைப்பாற்றலை நுகர்வு வெறிக்கு பலியாக்கி அலைபேசிகள், சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூபுகள், இன்ஸ்டாகிராம்கள் போன்றவற்றின் மூலமாக நேரத்தை விரையமடிப்பது என்பதில் துவங்கி படிப்படியாக குடி போதைக்கு அடிமையானவர்களை போல காட்சி போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் சமீபகாலமாக அல்சைமர் என்று சொல்லக்கூடிய ஞாபக மறதி என்ற நோய் உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. தற்போதைய சூழலில் உலகம் முழுவதும் ஐந்தரை கோடி பேர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் 2050 வாக்கில் இது 13.5 கோடியாக உயரும் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக இயற்கைக்கு எதிராக போராடி மூளையை படைப்பூக்கம் மிக்க செயல்பாட்டை உருவாக்குகின்ற கருவியாக பயன்படுத்தி வந்த மனித குலம் திடீரென்று மூளையின் செயல்பாடுகள் குறைவது, ஞாபக மறதி என்ற அல்சைமர் நோயால் பாதிக்கப்படுவது ஏன் என்பதற்கும், இது போன்ற செல்பேசிகளை கட்டுக்கடங்காமல் பயன்படுத்துவதற்கும் ஒரு தொடர்பு உள்ளது என்பதே உண்மையாக உள்ளது.
ஒரு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 4.88 பில்லியன் அலைபேசிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் 2029 வாக்கில் இது 6.35 பில்லியனாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தகைய அலைபேசிகளை தயாரிப்பதில் முன்னிலை வகிக்கின்ற ஆப்பிள், சாம்சங், ரியல்மீ, ஹவுவாய், ஜியோமி, விவோ மற்றும் ஓப்போ போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் அலைபேசி சந்தையை கட்டுப்படுத்துகின்றன. இதன்மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வருவாயாக கொள்ளையடிக்கின்றனர்.
இந்த அலைபேசிகள் தகவல் தொடர்புக்காக என்று முன்வைக்கப்பட்டு தற்போது அலைபேசியிலேயே உலகத்தை அடக்குகின்ற முயற்சியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு, தொழில் ரீதியாகவும் உற்பத்தி கூடங்களில் ஒன்றிணைந்து செயல்படுகின்ற உறவாகவும் இருந்த நிலைமைகள் மாறி ஒவ்வொருவரும் தனி உலகம் என்ற கண்ணோட்டத்தில் மனித உறவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது.
ஒரு குடும்பத்திற்குள்ளேயே அனைவர் கையிலும் அலைபேசிகள் புகுந்துள்ளதால் ஒருவருக்கொருவர் குறிப்பிட்ட சில சமயங்களில் சில வார்த்தைகள் பரிமாறிக் கொள்வதை தாண்டி உயிரோட்டமான உறவுகள் அனைத்தும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. மாறாக தனது நேரம் காலம் அனைத்தையும் இது போன்ற அலைபேசியில் மூழ்குவதிலேயே கழிக்கப்படுகிறது.
படிக்க: சீரழிக்கப்படும் இளைய தலைமுறை? (சமூகத்தைப் பற்றி சிந்திக்காத பெரும்பான்மையினருக்கு)
“இன்று குழந்தைகள்கூட கைபேசியில் முடங்கிக் கிடக்கிறார்கள். மரத்தடியில், மைதானத்தில் ஓடி ஆடிய குழந்தைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நமது குழந்தைகள் கைபேசியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளை அறிவீர்களா? உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. குழந்தை நான்கு பேருடன் அக்கம்பக்கம் பேசித் திரிந்தால்தான் பேச்சு வரும்.
கைபேசியில் முடங்கிக்கிடந்தால் பேச்சு எப்படி வரும்? காற்றுதான் வரும். கைபேசியிலேயே நேரத்தைச் செலவிடும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைய சிரமப்படும். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விடுபட்டு தனிமைப்படும். இதன் தொடர்ச்சியாக மனச்சிதைவு வரை ஏற்படும் வாய்ப்பு உண்டு.” என்று ஊடகங்களே புலம்புகின்ற அளவிற்கு நிலைமை படும் மோசமாகிவிட்டது.
படிக்க: சமூக ஊடகம் மைய ஊடகப் போராளிகளின் ’தேசபக்தி-போர்வெறி’!
இவ்வாறு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காட்சி போதைக்கு அடிமையாகி உள்ளதால் பல்வேறு உடல் நிலை பாதிப்புகள் உருவாகிறது.உடல் ரீதியாக கழுத்து, முதுகு, இடுப்பு, கண் தசைகள், தோள்பட்டை வலி, மூளை, நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காது, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கைகள் சுத்தமாக இல்லாவிட்டால், கைபேசி முலம் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினைகள், தொற்றுநோய், உடல் எடை குறைவது, அதிகரிப்பது ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
மனரீதியாக கோபம், மனப்பதற்றம், மனச் சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவை சுரப்பி அதிகமாகி ஞாபக மறதி என்ற அல்சைமர் நோயில் துவங்கி படிப்படியாக மனநோயாளியாக மாறுகின்ற அபாயத்தில் ஒட்டுமொத்த இளைய தலைமுறை பேராபத்தில் சிக்கியுள்ளது.
இந்தக் காட்சி போதைக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் முன் எப்போதையும் விட இப்போது தலை தூக்கியுள்ளது.
- மருது பாண்டியன்.






