ஜி.எஸ்.டி வரி விகித குறைப்பால் நாட்டு மக்களுக்கு என்ன பலன்?


ரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக, “ஒரே நாடு, ஒரே வரி” என்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி மூலம் இதுவரை 118 லட்சம் கோடி ரூபாயை வருவாயாக இந்திய ஒன்றிய அரசாங்கம் சொந்த நாட்டு மக்களிடம் கொள்ளையடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்கு நேர் மாறாக ஆர்எஸ்எஸ் பாஜகவின் புரவலர்களான உள்நாடு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2019 செப்டம்பரில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கான விகிதம் 30 முதல் 22% ஆகவும், புதிய நிறுவனங்களுக்கான விகிதம் 25 முதல் 15% ஆகவும் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக 2020-21 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 லட்சம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு தான் ஒவ்வொரு ஆண்டும் வரி வருவாய் இழப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த வரி குறைப்பின் காரணமாக இழந்த தொகை பற்றி ஆர் எஸ் எஸ் பாஜக அரசாங்கம் வெளியிடுகின்ற புள்ளி விவரங்கள் தான் மேற்கண்டவை. ஆனால் அரசாங்கம் வரி சலுகையாக வாரிக் கொடுத்த தொகை பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் என்பது தான் உண்மையான விவரமாகும். இத்தகைய விவரங்களை எந்த ‘ தேசபக்த’ ஊடகங்களும் வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் மீதான கொடூரமான ஜிஎஸ்டி வரி கொள்ளையால் 2025 ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 5-வது முறையாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட 11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில ஜிஎஸ்டியாக 37 ஆயிரத்து 623 கோடி ரூபாயும், மத்திய ஜிஎஸ்டியாக 29 ஆயிரத்து 773 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக 85 ஆயிரத்து 930 கோடி ரூபாயும், செஸ் வரியாக 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும் ஜூலை மாதத்தில் பெறப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளது.

“கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிகபட்சமாக டெல்லியின் ஜிஎஸ்டி வருவாய் வசூல் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசத்தில் 24 சதவீதமும், தமிழ்நாட்டில் 19 சதவீதமும் வசூல் உயர்ந்துள்ளதாகவும்” மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

இதற்கு நேர் மாறாக வரிச் சலுகை பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருமளவில் லாபத்தை ஈட்டி கொண்டன என்பதன் விளைவு தான் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது; தேசங்கடந்த தரகு முதலாளிகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்திருப்பது போன்றவை ஆகும்.

இன்னொரு புறம் இந்தியாவின் பிரதான தொழிலான விவசாயம் அதன் மூலம் விளைவிக்கப்படுகின்ற விளைபொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரி விகிதங்கள் காரணமாக விவசாயம் மேலும் மேலும் நொடித்துக் கொண்டே போனது.

அவ்வாறு நொடித்துக் கொண்டிருந்த விவசாயத்தின் மீது மேலும் ஒரு தாக்குதலாக மூன்று வேளாண் சட்டத் திருத்தங்கள் மூலம் இந்தியாவின் விவசாயம் முழுமையாக கார்ப்பரேட், குறிப்பாக வேளாண் கார்ப்பரேட்டுகளின் பிடிகளுக்குள் சென்றது.

அதுபோல நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் ஈடுபட்டு வரும் சிறு, குறு தொழில்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டது என்பது மட்டுமின்றி, தமிழகத்தின் திருப்பூர், கோவை, குஜராத்தின் சூரத், பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.

எனவே, நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இத்தகைய போராட்டங்களின் விளைவாக தற்காலிகமாக பணிந்துள்ள இந்திய ஒன்றிய அரசாங்கமானது, பாசிச மோடியின் மூலமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையின் கீழ் தீபாவளிக்கு இரட்டை போனஸ் என்று அறிவிக்க வைத்துள்ளது.

படிக்க: ஜிஎஸ்டி வரி பயங்கரவாதத்தின் மூலம் மக்களை கொள்ளையடிக்கும் பாசிச பாஜக.

இதன் தொடர்ச்சியாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறையின் கீழ் விதிக்கப்படும் 12%, 28% வரி விகிதங்களை நீக்க மாநில நிதியமைச்சா்கள் குழு மூலமாக (ஜிஓஎம்) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப்பட்டால் 12%, 28% வரி விகிதங்கள் நீக்கப்பட்டு 5%,18% ஆகிய இரு விகிதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

படிக்க: படாடோபமாக ஜிஎஸ்டியை அமல்படுத்திய மோடி அரசு! இதுவரை சாதித்தது என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய 4 ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கவும், புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட 7 பொருள்கள் மீது மட்டும் 40 % வரி விகிதத்தைக் கடைப்பிடிக்கவும் ஜிஎஸ்டி பகுப்பாய்வுக் குழுவுக்கு நிதியமைச்சகம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் இந்த வரி குறைப்பு பற்றி முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி ஊடகங்களும் இப்போதே சாமியாட துவங்கி விட்டனர்.

ஜிஎஸ்டி போன்ற கொடூரமான வரி விதிப்பு கொள்கை எவ்வாறு பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையை நாசகரமாகியது என்பதை பற்றி எந்த விதமான கவலையும் இல்லாமல் வரி கொள்ளையில் குறிப்பிட்ட சதவீதம் குறைப்பதையே சாதனை என்று பேசிக் கொண்டுள்ளனர்.

ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலோ இந்த வரி குறைப்பு பற்றி, மிகச் சிறந்த பொருளாதார நடவடிக்கை, மக்களின் மீது அக்கறையுள்ள நடவடிக்கை என்றெல்லாம், ‘ ஆவணியவிட்ட பஜனையில்’ இறங்கிவிட்டனர்.

இத்தகைய பொய் பிரச்சாரங்களுக்கு முடிவு கட்டவும், ஜிஎஸ்டி வரி கொள்ளைக்கு முழுமையாக முடிவு கட்டவும், ஜிஎஸ்டி போன்ற வரிகளை முழுமையாக நீக்குவதும், நிதி தேவைக்காக கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது விதிக்கப்படுகின்ற குறைந்தபட்ச வரியை உயர்த்தி அதிகபட்சம் வரி விதிக்கவும், பெரும்பான்மை மக்களின் உழைப்பை சூறையாடி சொத்து குவித்துள்ள செல்வந்தர்களின் மீது செல்வ வரி போடுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை மீண்டும், மீண்டும் உரக்கச் சொல்வோம்.

இத்தகைய மாற்று ஒன்று இல்லாமல் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

  • பார்த்தசாரதி

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here