வாக்காளர் சேர்ப்புக்கு, வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் 11 வகை ஆவணங்களில் ஒன்றைக் காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக பாஸ்போர்ட், பிறப்புச் சான்று, கல்விச்சான்று, ஓய்வுதியச் சான்று உள்ளிட்ட 11 வகை ஆவணங்களை வரிசைப்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற வலியுறுத்தலுக்கிணங்க 12-வது ஆவணமாக ஆதார் அட்டையையும் இணைத்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் அதில் ஒரு ‘பொறி’ வைத்துள்ளது.
ஆதார் என்பது குடியுரிமையை மேய்ப்பிப்பதற்கான ஆவணமாகவோ, பிறப்புத் தேதியை உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகவோ எடுத்துக் கொள்ள மாட்டார்களாம்.
எனவே ஆதாருடன் 11 வகை ஆவணங்களில் ஒன்றை காண்பித்தால்தான் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுமாம்.
ஒரே ஒரு ஆதாரில் அனைத்தும் அடக்கம் என்று பிரபல்யமாக விளம்பர செய்து அனைத்து மக்களின் 10 விரல்களின் ரேகைகளைப் பதிவு செய்து, கண் விழிகளை ஸ்கேன் செய்து, ஆதார் உடன் பேன் கார்டை இணை; ஆதாருடன் வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தை இணை; ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணை; ஆதாருடன் குடும்ப அட்டையை இணை; ஆதாருடன் கேஸ் சிலிண்டர் வினியோகத்தை இணை…
இப்படி எண்ணற்ற இணைப்புகளை செய்ய ஆணையிட்டு மக்களை அல்லோகலப்படுத்தி அலையவிட்டு ஆதாரின் ‘மாபெரும் சக்தி’-யை நாடு முழுமைக்கும் பிரபல்யப்படுத்தியவர்கள் தான் இன்று ஆதார் ஒரு துரும்புக்கு கூட ஆகாது என்று பேச வருகிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.அதற்கு வக்காலத்து வாங்குகிறது பாஜக சங்கிக் கூட்டம். இது கேவலத்திலும் கேவலம். தேர்தல் ஆணையம் வாக்காளர் திருத்த பணியை மேற்கொள்கிறதா? குடியுரிமை திருத்தப் பணியை மேற்கொள்கிறதா? எனில் பாஜக கொள்ளைப் புறமாக நுழைந்து குடியுரிமை திருத்தப் பணியையே தேர்தல் ஆணையத்தை செய்ய வைத்துள்ளது.
சட்டப்படி தேர்தல் ஆணையத்திற்கு இது உரிமை படைத்த பணி அல்ல. அனைத்துக் கட்சிகளுக்குமான அனைத்து மக்களுக்குமான சுதந்திரமாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் தறி கெட்டுப் போய் பாஜக-வின் ஊதுகோலாக செயல்படுகிறது என்பதையே ஆதார் அட்டையை ஏற்க மறுக்கும் செயல் காண்பிக்கிறது.
1951 முதல் 2002-2005 வரை நடைபெற்ற பத்து தீவிர வாக்காளர் திருத்தல் பட்டியல் தயாரிப்பு பணியில் இதுவரை இப்படிப்பட்ட அலங்கோலங்கள் இல்லாத சூழலில், கேவலமான சூழ்நிலையை – நடைமுறையை ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்துகிறது. இதன் மூலம் பீகாரை போலவே, இஸ்லாமியர் உட்பட சிறுபான்மை மக்கள், பட்டியலின, மக்கள், தமக்கு எப்பகுதியில் வாக்குகள் கிடைக்காதோ அப்பகுதி மக்கள் இவற்றையெல்லாம் கணக்கிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றி பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்து வகை செயற்பாடுகளிலும் இறங்கி உள்ளது தேர்தல் ஆணையம். அதனால் தான் பாஜக இதனை வரவேற்கிறது. அதனுடைய அல்லக் கைகளான – பிழைப்புவாத இயக்கங்களான அதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட பலரும் இந்த SIR-ஐ வரவேற்று உபசரிக்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்கள் செய்ய வேண்டியது என்ன?
குறுக்குப் புத்தியுடன் ‘பாராளுமன்ற ஜனநாயக’ வகையிலேயே பாஜக ஆர் எஸ் எஸ் காவிக் கூட்டம் பாசிசத்தை நிலை நிறுத்தத் துவங்கிவிட்டது.
எங்கும் எதிலும் காவி மயம் நிறைந்துவிட்டது. ஆர்எஸ்எஸ் -ன்நூற்றாண்டு 2025 என்பதால் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்ரா’என அறிவிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘ஜனநாயக முறை’ பாணியிலேயே ஒற்றை சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த துடிக்கிறார்கள். அரசியல் ரீதியில் எதிரிகளே இல்லாமல் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்கள்.
இருக்கக்கூடிய குறைந்தபட்ச அரசியல் சட்டத்தை ஓரங்கட்டுகிறார்கள். காவிமயமான புதிதான அரசியல் சட்டம் ஒன்றை நிறுவுவதற்கு படாத பாடு படுகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் SIR திருத்தப் பணி, வாக்குத் திருட்டு, EVM VVPAT தில்லுமுல்லு மோசடிகள், வாக்குச்சாவடி அலுவலரின் படிவம் 17(13), தேர்தல் நடத்தும் அதிகாரியின் படிவம் 17(20) என அனைத்திலும் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த காலத் தேர்தல்கள் அனைத்திலும் தில்லு முல்லு மோசடிகள் மூலமாகவே அவர்கள் ஆட்சி அதிகாரத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனவே, தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுமைக்கும், குறிப்பாக SIR – Phase – II -ஐ எதிர்கொள்ளும் 12 மாநிலங் களிலுள்ள இந்தியா கூட்டணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும், ஏன் புரட்சிகர இயக்கங்களும் ஒருங்கிணைந்து ஜல்லிக்கட்டு போராட்டம் போல கிராமம், நகரம், பெருநகரம் என மக்களை கோடிக்கணக்கில் அணிதரட்டி வீரம் செறிந்த வீதிப் போராட்டங்களில் இறங்கினாலன்றி பாசிஸ்ட்களை முறியடிப்பது சாத்தியமாகாது.
வெற்று வீண் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதும் மிகக் கேடானது. இந்தத் தேர்தல் ஆணையத்தையும் பாஜகவை நம்பி தேர்தலில் பங்கேற்பது ஆபத்தானது.
அந்த அடிப்படையில் அணிதிரள்வோம்! தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும், பாசிச பாஜக காவிக் கூட்டத்திற்கு எதிராகவும் வீதிப் போராட்டங்களில் உக்கிரமாக ஈடுபடுவோம்! வெற்றி வாகை சூடுவோம்!
- எழில்மாறன்






