உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது சனாதன கும்பலைச் சேர்ந்த வழக்கறிஞர் என்று சொல்லி சொல்லிக் கொள்ளும் ஒரு காட்டுமிராண்டி செருப்பை வீசியதன் மூலம் இந்திய சமூகத்தின் உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்த மண்ணின் பூர்வகுடி மக்களான பட்டியலின மக்கள் படித்து பதவிகளை பெற்றாலோ அல்லது ஜனாதிபதியாகவோ, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ வந்தால் கூட சனாதன தர்மத்தின்படி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதி-தீண்டாமைக் கொடுமைகள் ஒருபோதும் விலகாது என்ற உண்மையைத்தான் தனது செருப்பு வீச்சு மூலம் நிரூபித்துள்ளான் ராகேஷ் கிஷோர் என்ற அந்த சனாதன பயங்கரவாதி.
இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் கூறும்போது, ”சின்னஞ்சிறு நிலத்தில் குவிந்து கொண்டு சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சி அடைவதையும், வர்ணிக்க முடியாத கொடுமைகள் நிகழ்வதையும், பெரிய நகரங்களில் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் சலனம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த சமூகங்களின் காட்டுமிராண்டித்தனமான தன்னகங்காரத்தை நாம் மறக்க முடியாது.
இயற்கையில் நிகழும் சம்பவங்கள் சம்பந்தமாக எவ்வளவு அக்கறை காட்டினார்களோ அதே அளவு அக்கறையைத்தான் மேற்சொன்ன சம்பவங்கள்பாலும் காட்டினார்கள். தவிர எந்த ஆக்கிரமிப்பாளனுடைய கவனமாவது இதன் மீது விழுந்து விட்டால், இந்த சமூகங்கள் எதிர்க்க வகை இல்லாமல் ஆக்கிரமிப்புக்கு இரையாகின. இந்த தேக்கம் நிறைந்த அசைவற்ற வாழ்க்கை- அகெளரவ வாழ்க்கை-படைக்கும் திறனில்லாத செயலற்ற வாழ்க்கை-நேர்மாறான விளைவுகளையும் படைத்தது.
கட்டுக்கடங்காத நாசகர சக்திகள் நோக்கமில்லாமல், அழிக்கும் சக்திகள் குமுறி எழுந்தன இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்கு ஆயிற்று. இதை நாம் மறக்கக்கூடாது. இந்த சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும், அடிமை முறையாலும் கலங்கமடைந்திருந்தன. மனிதனை சூழ்நிலைக்கு எஜமானனாக்குவதற்கு பதிலாக அவனை சுற்றுச் சார்புக்கு அடிமைப்படுத்தினர். தானாக வளர்ந்து கொண்டிருந்த சமூகநிலையை ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாக செய்தன. இவ்விதம் இயற்கையே மனிதர் கும்பிட்டு வணங்கும் மிருகத்தனமான நிலைமையை படைத்தது. இயற்கையின் எஜமானனாகிய மனிதன் குரங்காகிய அனுமன் முன்பும், பசுமாட்டின் முன்பும் தண்டனிட்டு வணங்கியதில் இந்த சிறுமை காட்சியளித்தது. இவற்றையும் நாம் மறக்கக்கூடாது” என்கிறார் மார்க்ஸ்.
இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் முன் வைத்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் காட்டுமிரண்டித்தனமான தன்னகங்காரம் மாறவில்லை. அதுவும் பாசிச ஆர்எஸ்எஸ் -பாஜக கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு சனாதன மீட்பும், பார்ப்பன ஆதிக்க வெறியும் பல மடங்கு தலைவிரித்தாடுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது செருப்பு வீசுகின்ற அளவிற்கு ஆத்திரமடைகின்ற செயல் என்ன நிகழ்ந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
”கஜுராஹோ கோயில் என்பது கி.பி 950 முதல் கி.பி 1050 வரை சந்தேலா வம்சத்தால் கட்டப்பட்டது. இதில் சைவத்திற்கான சிவன், வைணவத்திற்கான விஷ்ணு மற்றும் சமண மற்றும் பெளத்த மதத்தவர்களுக்கான சிற்பங்கள் உள்ளதால், இது இடைக்காலத்தில் மதங்களிடையே நிலவிய சகிப்புத் தன்மை மற்றும் இணக்கத்திற்குமான ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.
படிக்க:
♦ நீதிபதிகளில் பி.ஆர்.கவாய் ஒரு விதிவிலக்கு?
♦ “சனாதனத்தை அவமதித்தால் செருப்பால் அடிப்பேன்” எனும் சங்கி வக்கீல்!
இந்தப் பகுதி தொல்லியல் துறையின் பல்லாண்டுகள் பராமரிப்பில் உள்ளது. தொல்லியல்துறையானது அந்தக் காலகட்டத்து சிற்பங்களை அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்குமே அல்லாது, அதில் கைவைக்காது. ஆகவே, இது உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இது யுனெஸ்கோவின் கண்காணிப்பில் உள்ளது.
இந்த இடத்தில் வழிபாட்டுக்கோ, பூஜை,புனஸ்காரங்களுக்கோ இடமில்லை. இதுவே இந்தியா சுதந்திரம் பெற்றது தொடங்கி நமது அரசின் நிலைபாடு.
இந்தச் சூழலில் இந்து மதத்தில் பற்றுள்ள ஒருவர் “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அந்த சிலையை மாற்றியோ அல்லது புனரமைத்தோ பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்குரியதாக்கும் நோக்கத்தில். விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்கிறார். என இது பற்றிய கட்டுரையில் முன் வைக்கிறார் எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பாரம்பரிய சின்னங்கள் எதையும் அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ மாற்றிவிட முடியாது என்பதெல்லாம் தெரியாதவர் அல்ல அந்த வழக்கறிஞர் என்று கூறிக் கொள்ளும் சனாதன பயங்கரவாதி.
ஆனால் ஏற்கனவே உள்ள நிலைமை அப்படியே நீடிக்கட்டும். அதில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் முன் வைத்த உடன் ’சனாதனத்தை அவமதித்துவிட்டார்’ என்று கூச்சலிட்டுக் கொண்டே செருப்பை வீசியுள்ளார் அந்த வழக்கறிஞர்.
பாபர் மசூதி இடிப்பு முதல் குஜராத் இனப்படுவலை வரை இன்னும் பல்வேறு சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக முன்வைக்கின்ற, ’உண்மைகளே’ நீதிமன்றத் தீர்ப்புகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்ற காலத்தில் இப்படி ஒரு மாறுபட்ட தீர்ப்பை முன் வைத்ததன் காரணமாக சனாதன கும்பலின் ஆத்திரம் தலைக்கேறி யுள்ளது.
இந்திய சமூக அமைப்பு சாதி-தீண்டாமை மற்றும் வர்ணாசிரமம், சனாதன தர்மம் ஆகியவற்றால் நிரம்பி வழிகின்ற சூழலில், அதனை திசை திருப்புகின்ற அயோக்கியத்தனமான போக்குகளும் முன்னிலைக்கு வருகின்றன.
இந்தியாவின் உயர்ந்த பட்ச அமைப்பு என்று கூறிக் கொள்ளப்படும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நடந்துள்ள சூழலில், ”அவர் அதை பெரிது படுத்தவில்லை” ”நாகரீகமாக நடந்து கொண்டார்,” ”விசாரணையின் போது கூட பிரச்சனையை திசை திருப்புகின்ற முயற்சிகளில் நாம் பலியாக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் என்றெல்லாம் இந்த நிகழ்வை மென்மையாக கடந்து செல்லப் பார்க்கின்றனர் சனாதன ஆதரவாளர்கள். இந்திய சமூக அமைப்பின் கீழ், ”பிறப்பால் மேல் சாதிகள் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் மற்றும் வைசிய, சத்திரிய வர்ணங்களை சார்ந்த நபர்களுக்கும், சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்த மக்களுக்கும் கொடுக்கப்படும் தண்டனைகள் இழிவுபடுத்தப்படுதல்கள், அவமானங்கள் ஆகியவை வேறு வேறு தான்” என்பதை நிரூபித்துள்ளனர்.
எனவே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது வீசப்பட்டுள்ள செருப்பானது இந்திய சமூக அமைப்பின் மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் வீசப்பட்டுள்ள செருப்பு வீச்சு என்றே புரிந்துக் கொள்ள வேண்டும். நீதிபதிகள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள்; அவர்கள் மீது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்தால் நமக்கு என்ன? என்றெல்லாம், வர்க்கம் என்பதையே கொச்சையாக புரிந்துக் கொண்டு உளறித்திரிவது மேலும் பல பயங்கரவாத நடவடிக்கைகளை நிகழ்த்துவதற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
- மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி