ந்தியாவில் விவசாயிகள் வேளாண்மைக்காக கடன் வாங்கினால் வங்கிகள் அவர்கள் கழுத்தை நெரித்து வசூல் செய்ய முன்னிலையில் இருக்கின்றன. மாணவர்கள் கல்விக் கடன் பெற்று உரிய காலத்திற்குள் திரும்ப கட்டாவிட்டால் அவர்களது பெயரையும், அவர்களது படத்தையும் போட்டு மானபங்கப்படுத்துகிறது வங்கி.

தொழிலாளர்கள் வாகனக் கடன் முதல் வீட்டு வசதிக் கடன் வரை போன்ற அத்தியாவசிய கடன்களைப் பெற்று தவணை கட்டாவிட்டால் அதன் மீது மேலும் வட்டியை போட்டு கையை முறுக்கி பணத்தை வசூல் செய்கிறது வங்கி.

ஆனால் நாட்டையே சூறையாடி வருகின்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, அகர்வால் கும்பல் வங்கிகளில் கடன் பெற்றால் அவர்களிடம் உரிய காலக் கெடுவிற்குள் வசூலிப்பதற்கு பதிலாக அவர்கள் காலடியில் விழுந்து கெஞ்சுவதும், ஆர்எஸ்எஸ் பாஜக தயவுடன் அவர்கள் வாங்கிய கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதும், அதனை வாராக் கடன் என்று கணக்கு காட்டுவதும் ஒரு வாடிக்கையாக மாறியுள்ளது.

இவ்வாறு வங்கிகளில் பெற்றக் கடனை திரும்ப அடைக்காமல் வங்கிகளையே திவால் ஆக்கிய மோசடி கிரிமினல் பேர்வழிகளின் தலைவனான அனில் அம்பானி செய்த மோசடிகளுக்காக அமலாக்கத்துறை இன்று ரெய்டு நடத்தியுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

“ரிலையன்ஸ் குரூப் தலைவர் அனில் அம்பானியின் நிறுவனங்கள் YES வங்கியிடம் இருந்து ரூ.12,800 கோடி கடனாக பணம் பெற்றுள்ளன என கூறப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதற்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் புரவலர் அனில் அம்பானி வங்கிகளை சூறையாடும் மோசடிப் பேர்வழி!

இது தொடர்பாகவும், வட்டி மற்றும் அசல் தொகையை திருப்பி செலுத்துவதில் மோசடி தொடர்பாக அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மும்பை மற்றும் டெல்லியை சேர்ந்த அமலாக்கத் துறை குழுவினர் மும்பைக்கு வந்திறங்கினர்.

அவர்கள் தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு மற்றும் நிறுவனம் உள்பட பல்வேறு இடங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், இந்த சோதனை பற்றி அமலாக்க துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை”. என்று வங்கியை சூறையாடிய கிரிமினல் பற்றி மிகவும் மேலோட்டமாகவும் அவரது மனது புண்படக் கூடாது என்பதற்காகவும் செய்தியை வெளியிட்டுள்ளன ஊடகங்கள்.

YES பேங்க் திவால்!

2020 ஆம் ஆண்டு இந்திய வங்கி துறையில் பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த YES பேங்க் என்ற தனியார் வங்கி நடத்திய ஊழல் மோசடிகள் அம்பலமாகி நாறிக் கொண்டிருந்தது.

அவ்வாறு அந்த தனியார் வங்கி ஊழலில் சிக்கிக் கொண்டதற்கு முக்கிய காரணமாக முன்வைக்கப்பட்டது என்னவென்றால் அந்த வங்கியில் கடன் வாங்கிய அனில் அம்பானி உள்ளிட்ட பிரமுகர்கள் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாமல் மோசடி செய்தனர். இந்தத் தொகையை வாராக் கடன் என்ற முறையில் கையாண்டதன் காரணமாக மிகப்பெரும் நெருக்கடிக்கு அந்த வங்கி தள்ளப்பட்டது.

இந்த YES வங்கி படுதோல்வி, 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வங்கிகள் மீது கடுமையான கண்காணிப்பை இந்திய ரிசர்வ் வங்கி செலுத்தத் தவறியதை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.. அதே காலகட்டத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (PMC) வங்கி, நிறுவனத்தின் விளம்பரதாரர்களால் பெரும் ஊழலில் சிக்கியது.

2020 வாக்கில் மைய நீரோட்ட செய்தித்தாள்களான பிசினஸ் ஸ்டாண்டர்ட் முதல் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் போன்ற முதலாளித்துவ செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளபடி, YES வங்கியைப் பொறுத்தவரை, 30000 கோடி ரூபாய் கடன் வாராக் கடனாக மாறியுள்ளது,

மிகப் பெரிய அளவு வாராக்கடனும், பங்கு வீழ்ச்சியும் ஏற்பட்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தையே எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்ட YES பேங்க் என்ற தனியார் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் என்ற கோட்டு சூட்டு அணிந்த கிரிமினல் 36 மணி நேர விசாரணைக்குப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த YES பேங்க் நிறுவனரான ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்கள் ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுமம் வங்கியில் வந்த பணத்தை மோசடி செய்தனர் என்ற முறையில் அவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, “YES பேங்கின் வீழ்ச்சிக்கு ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் இருக்கும் தவறு முக்கியக் காரணமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த பிரச்சனையை முன்பிருந்தே சரியான முறையில் கையாண்டிருந்தால் இந்த நிலை வராமல் தடுத்திருக்கலாம். ஆனால், ரிசர்வ் வங்கியைச் சுயமாகச் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தற்போது எஸ் பேங்கை எஸ்.பி.ஐ வங்கிதான் எடுத்து நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. தனியார் வங்கிகள்தான் நன்றாகச் செயல்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் மோசம் என்ற கருத்து தவறாகியிருக்கிறது.”என்று தனியார் வங்கி மோசடி குறித்து அம்பலப்படுத்தி பேசியிருந்தார்.

படிக்க: வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட் காவி கும்பல்

ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் இந்த மோசடிகள் பற்றி எந்த செய்தியும் வெளிவராத நிலையில் வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாத நபர்கள் பட்டியலில் அனில் அம்பானியின் பெயரையும் இணைத்து இன்று அவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

மோசடி மன்னன் அனில் அம்பானி.

YES வங்கியில் மட்டுமின்றி பாரத ஸ்டேட் பேங்க் இந்தக் கிரிமினலுக்காக கொடுத்த கடனை மோசடி செய்தது பற்றி கடந்த ஜூன் மாதம் அறிக்கையாக வெளியிட்டது.

பாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) மற்றும் அதன் பிரமோட்டர்களின் கடன்களை “மோசடி” என்று வகைப்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு அறிவித்தது. இந்த அறிவிப்பில், ரூ.2,227 கோடி நிதி அடிப்படையிலான கடன்களும், ரூ.786 கோடி நிதி அல்லாத கடன்களும் அடங்கும்.

எஸ்பிஐ வங்கியின் தரப்பில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கையில், ஆர்காம் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், எஸ்பிஐ மட்டுமல்லாமல் பல்வேறு வங்கிகளிடமிருந்து ரு.31,500 கோடிக்கு மேல் கடன் வாங்கி அதில், ரூ.13,667 கோடியை, ஏற்கனவே நிறுவனம் வாங்கியிருந்த கடன்களைத் திருப்பிச் செலுத்த பயன்படுத்தியிருக்கிறது. மேலும் ரூ.12,692 கோடியை, குழுமத்துடன் தொடர்புடைய பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறது. தொடர்ந்து ரூ.6,265 கோடி, எந்த தொடர்பும் இல்லாத காரணங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

படிக்க: வங்கிகளை திவாலாக்கும் மோசடி கும்பல்! ரிசர்வ் வங்கியின் கையாலாகாத்தனம்!

இத்தகைய வங்கி மோசடிகளை திறமையாக நடத்துவதை வளர்ச்சி என்றும், இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளுக்கு நாட்டின் சொத்துக்களையும், வங்கிகளில் சேமித்து வைத்திருக்கின்ற சேமிப்புத் தொகைகளையும் கடனாக வாரி வழங்கி வரும் ஆர்எஸ்எஸ்- பாஜக கும்பலைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், இந்திய ஒன்றிய பிரதமரான மோடி ஆகியோர் கூட்டணி இந்தியாவை மிகப்பெரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது.

அன்றாடம் உழைத்துக் களைத்த உழைப்பாளிகள் தனது பெண்டு, பிள்ளைகளை வளர்ப்பதற்கு கடன் வாங்கி அதை கட்ட முடியாமல் போனால் அவர்களை மிகப் பெரிய கிரிமினல் குற்றவாளிகளை போல நடத்துகின்ற இத்தகைய வங்கிகள் கார்ப்பரேட் முதலாளிகளின் காலடியில் விழுந்து சேவை செய்வது அம்பலமாகி நாறியுள்ளது.

“பணக்காரன் வீட்டு கழிப்பறையில் நாற்றம் அடிக்காது” என்று பேசித் திரிகின்ற ஊடகப் பிழைப்புவாதிகள் மற்றும் சொல்லிக் கொள்ளப்படும் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் இன்னும் என்னவெல்லாம் சொல்லி மக்களை ஏய்பார்கள்; எத்தனை காலத்திற்கு ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு அவை அனைத்திற்கும் முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கியுள்ளது.

மாசாணம்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

3 COMMENTS

  1. கட்டுரை சரியாக பதிவு செய்யப்பட்டது.

    உழைக்கும் மக்கள் வங்கிகளில் கடன் வாங்கி, அதை கட்டுவதற்கு அவர்கள் பல முயற்சிகள் எடுக்கின்றனர். முதலாளிகள் வங்கிகளில் கடன் வாங்குவதே, கடன் கட்டாமல் ஏமாற்ற தான் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. இவர்களுக்கு சேவை செய்வது தான் காவி கும்பல்.

  2. மக்கள் பணம், வங்கி சேமிப்பு பணம் அனைத்தையுமே வளர்ச்சியை நோக்கிக் கொடுப்பதாக தேசங்கடந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆயிரம் ஆயிரம் கோடிகளை வங்கிகள் அள்ளிக் கொடுப்பதும், அதற்கு ஆர் எஸ் எஸ் பாஜக மோடி – நிம்மி கும்பல் துணை நிற்பதும், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாங்கிய கடனைச் செலுத்த இயலாவிட்டால்
    ‘வாராக் கடன்’ என்ற பெயரில் பல லட்சம் கோடி தொகையை தள்ளுபடி செய்வதும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு வந்த பெண் ஏறத்தாழ 12 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஏழை எளிய நடத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் கடன்களை இந்த வங்கிகளும் அரசாங்கமும் இவ்வளவு இழிவு நிலைக்கு இறங்கி அடாதுடியாக வசூலிக்கிறது என்பதனையும், பெரு முதலாளிகளின் கடன்களை எப்படி பதம் போன்று தடவி கொடுத்து மிக மென்மையான தன்மையில் கடந்து செல்கிறது என்பதனையும் நாம் எளிதில் உணர்வு வகையில் கட்டுரையாளர் மாசாணம் சிறப்பாக விளக்கியுள்ளார். இந்த நிலையில் தான் அம்பானி ஏமாற்று மோசடி செய்து விட்டதாக சொல்லி அவரது 35 வகையான இடங்களில் அமலாக்கத்துறை ‘மாபெரும் விசாரணையில்’ குதித்து விட்டதாக அரசாங்கமும் அமலாக்கத் துறையும் வேடங்கட்டி ஆடுகின்றன. ஏழை எளிய மக்கள் ஒரு ஒரு புறம் இருக்கட்டும். முதலாளிகளில் கூட கீழ்மட்டத்தவர் மற்றும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் இவர்களை அமலாக்கத்துறை ‘டீல்’ செய்வது போல அம்பானி போன்றவர்களை கைது செய்து
    எஃப் ஐ ஆர் பதிவு செய்து சிறையில் தள்ளி
    நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்பதுதான் பிரதான கேள்வி? அப்படிச் செய்யவே மாட்டார்கள். ஏனென்றால் அதானி, அம்பானி, அகர்வால், மிட்டல், எஸ்.ஆர், டாட்டா, பிர்லா … இன்ன பிற முதலாளிகளின் கைப்பாவைகள் தானே அவர்களால் ஆட்டுவிக்கப்படுபவர்கள் தானே அரசாங்கத்தில் வீற்றிருக்கும் பிரதமர்
    உள்ளிட்ட மாபெரும் அமைச்சர் பெருமக்கள்.
    அப்படி என்றால் அமலாக்கத்துறை உட்பட அனைத்து அதிகார வர்க்கமும் இப்பெரும் முதலாளிகளின் வளர்ந்து பிய்த்து எறியும் நகங்களுக்கு இணையானவர்களே. எனவே இந்த சோதனை நாடகங்கள் எல்லாம் போதும், நிறுத்துங்கள். உண்மையில் நீங்கள் எடுத்திடும் நடவடிக்கைகள் உண்மையாக இருக்குமேயானால் அம்பானி மீது வழக்குப் பதிவு செய்து எஃப் ஐ ஆர் பதிவிட்டு கைது செய்து வருட கணக்கில் சிறையில்
    தள்ளுங்கள்… பிறகு மக்கள் இந்த நடவடிக்கையை பற்றி நம்புவதா? நம்ப வேண்டாமா? என்பதை முடிவெடுக்கட்டும் என்ற தன்மையில் நாம் இந்த கட்டுரையிலிருந்து கூடுதலாக புரிந்து கொள்ள வேண்டும். அல்லது இந்த வகையிலும் கூட சில வரிகளை இணைத்து எழுதி இருக்க வேண்டும்.

  3. தரகு முதலாளிகள் திருடன்கள் நம்பர் ஒன் பிராடுகள் என்பது மோடி ஆட்சியில் தெளிவாக தென்படுகிறது.
    இவர்களின் காலை நக்கி பிழைக்கும் சங்க பரிவார் ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல் இவன்களுடைய கடன்களை மக்கள் வரி பணத்தை திருடி தள்ளுபடி செய்கின்றன‌ .

    மாணவர்கள் கல்வி கடன் கட்டாவிட்டால் துன்புறுத்தி தற்கொலை செய்ய வைக்கிறது.
    திருட்டு அயோக்கியர்களின் சொத்துகளை மக்கள் நாம்தான் பறிமுதல் செய்து மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here