காதிபத்திய முதலாளித்துவத்தின் நிதி மூலதனம் தனது ஆகக்கேடான வடிவமாக பாசிசத்தை முன்னிறுத்துகிறது. இந்தியாவில் இந்திரா காந்தி ஆட்சிக்கு வருவதற்கு முன் அதாவது 1960-64 காலகட்டங்களில் அந்நிய மூலதனத்தின் பேரில் நமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட சராசரி லாபம் ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் ஆகும். இந்திரா காந்தி ஆட்சியில் அதாவது 1964-70 ஆண்டுகளில் இந்த சராசரி லாபம் ஆண்டுக்கு 24.39 கோடியாக உயர்ந்தது. அதாவது முன்பை விட 62.60% உயர்ந்தது.

இந்த லாபத்தை கொள்ளையடித்த அமெரிக்க, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பானிய நிதி மூலதன கும்பல்களுக்கும், இந்திரா புதிதாக ஆதரிக்க துவங்கிய ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனத்திற்கும் இடையிலான போட்டி உக்கிரமடைந்து கொண்டே சென்றது.

ஒரு புரிதலுக்காக கூறினால் 1947 க்கு பிறகு இந்தியாவின் பொருளாதரத்தில் பிரிட்டனின் நிதி மூலதனம் மேலோங்கி இருந்தது. 1950 களுக்கு பிறகு அமெரிக்க நிதி மூலதனம் இந்திய பொருளாதாரத்தில் மேலோங்க துவங்கியது. 1964 க்கு பிறகு சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் நிதி மூலதனம் மேலோங்க துவங்கியது. 90களில் சோவியத் வீழ்ச்சிக்கு பின் மீண்டும் அமெரிக்காவின் நிதி மூலதனம் இந்தியாவில் மேலோங்க செய்தது மட்டுமின்றி ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியது.

இந்த அந்நிய நிதி மூலதனம் மற்றும் நிதியாதிக்க கும்பல்களின் சுரண்டல் வடிவமாக தேசங்கடந்த தொழில் நிறுவனங்களும்(TNC), பன்னாட்டு நிறுவனங்களும்(MNC) இந்திய பொருளாதாரத்தில் கொடூரமாக தனது சுரண்டலை மேற்கொண்டு வந்தது.

2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு பிறகு நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏகபோக நிதி மூலமாக உருவெடுத்து, கார்ப்பரேட்டுகளின் மூலம் சுரண்டலை உலகம் முழுவதும் சுமத்தத் துவங்கியது. இந்த கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை இந்தியாவில் உள்ள தரகு முதலாளிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஆதரிக்க துவங்கினார்.

1947 முதல் இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி வந்த தரகு முதலாளிகளில் புதிய பிரிவாக உருவாகிய தேசங்கடந்த தரகு முதலாளிகள் அமெரிக்கா மற்றும் அதற்கு போட்டியாக உருவாகியுள்ள சீனாவின் நிதி மூலதனத்தை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கும், அவர்கள் இந்திய செல்வங்களை சூறையாடி செல்வதற்கும் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த காலகட்டத்தில் தான் இந்திய தரகு முதலாளியான டாடா பிரிட்டனில் கோரஸ் என்ற எஃகு நிறுவனத்தை 13.1 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார். இரும்பு எங்கு துறையில் ஜின்டால் மற்றும் பூஷன் ஸ்டில்ஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் மூலதனம் இட துவங்கியது. அதே காலகட்டத்தில் ஆதித்ய பிர்லா குழுமத்தின்ஹிண்டால் கோ அமெரிக்காவின் நோஜெலிங் நிறுவனத்தை 6 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது.

டாடா மோட்டார்ஸ் பிரிட்டனின் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தை 2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், தொலைத்தொடர்பு துறையில் வளர்ந்து வந்த நிறுவனமான பாரதி ஏர்டெல், ஜைன் ஆப்பிரிக்கா என்ற நிறுவனத்தை 10.7பில்லியன் அமெரிக்க டாலருக்கும் வாங்கியது.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா, சிப்லா, லூபின், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் போன்றவை ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளில் மூலதனமிடத் துவங்கியது. மென்பொருள் துறையில் நாராயணமூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமும், அசிம் பிரேம்ஜியின் விப்ரோ, ஷிவ் நாடாரின் ஹெச்சிஎல் போன்ற நிறுவனங்களும், உள்கட்டுமான வசதிகளை பெருக்குகின்ற துறையில் அதானி குழுமமும், எல்& டி நிறுவனமும், நிதி வங்கிகளாக உருவெடுத்த ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, கோடக் வங்கி, எஸ் பேங்க் போன்றவை தனது மூலதனத்தை விரிவுபடுத்திச் சென்றன.

இவை தரகு முதலாளிகளில் ஒரு புதிய பிரிவினரை உருவாக்கியது என்பது மட்டுமின்றி  90களில் ஆதிக்கம் செலுத்தி வந்த 30 நிறுவனங்கள் படிப்படியாக தொழில் போட்டியில் பின்னடைந்து 9 நிறுவனங்கள் போட்டியில் முன்னிலைக்கு வந்தன. அதானி, அம்பானி போன்ற குஜராத் முதலாளிகளும், பீகாரின் மார்வாடியான அகர்வால், மராட்டியத்தின் சைரஸ் பூனவாலா, ராஜஸ்தானின் ராதாகிருஷ்ணன் தமனி போன்ற முதலாளிகளும் இந்தியாவின் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்த துவங்கியனர்.

2008 உலக பொருளாதார நெருக்கடிக்கு முன்னால் இருந்த முதலாளிகள் படிப்படியாக பின்னடைந்து புதிதாக இந்திய தரகு முதலாளிகளில், தேசங்கடந்த தரகு முதலாளி பிரிவினர் மேலோங்க துவங்கினர். இந்த இரு பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாடு கார்ப்பரேட் பாசிசமாக நாட்டின் மீது ஏறி தாக்க துவங்கியது. இதற்கு உகந்த வகையில் இந்தியாவில் ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு பொருத்தமான ஆட்சி வடிவத்தை அதாவது ’ஒரே நாடு, ஒரே சந்தை’ என்பதை முன்னிறுத்தக்கூடிய ஆர்எஸ்எஸ் பாஜகவின் பிரதிநிதிகளை ஆளும்வர்க்கம் ஆதரிக்க துவங்கியது. குறிப்பாக ஆளும் வர்க்கத்திலேயே தேசங்கடந்த தரகு முதலாளிகள் ஆர்எஸ்எஸ் பாஜகவை ஆதரிக்க துவங்கினர்.

தரகு முதலாளிகளிலேயே ஒரு பிரிவு உருவாகி தேசங்கடந்த தரகுமுதலாளிகளாக மாறியுள்ளனர் என்ற எமது வரையறுப்பையும், அவர்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் முரண்பாடு உருவாகி வருகிறது என்று எமது வரையறுப்பையும் பார்த்து ஆச்சரியமடைகின்றனர் போலி புரட்சியாளர்கள் மற்றும் போலிக் கம்யூனிஸ்டுகள்.

நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி போக்கு குறித்து ஆசான்களான மார்க்ஸ் மற்றும் லெனின், மாசேதுங் போன்றவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து நிதி மூலதனத்தை ஆய்வு செய்கின்ற போது தான், தொடர்ந்து இடையறாது வளர்ந்து வரும் அவர்களின் நிதி மூலதன ஏகபோக தன்மை குறித்தும், அது அரசியலில் வெளிப்படுத்துகின்ற புதிய வகையிலான ஆட்சி முறையைப் பற்றியும் புரிந்து கொள்ள முடியும். இதையே கார்ப்பரேட் காவி பாசிசம் என்று வரையறுத்து முன்வைக்கின்றோம். 

2014 முதல் இந்தியாவின் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக தொடர்ந்து அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் அதற்கு முன்பு 70 ஆண்டு காலத்தில் இருந்ததை விட பல மடங்கு வெறித்தனத்துடன் இறங்கி தேசத்தை சூறையாடுவதற்கு அனுமதியளித்தது.

அது பற்றிய விவரங்களை அடுத்து பார்ப்போம்.

(தொடரும்…) 

  • நன்னிலம் சுப்பராயன்.

முந்தைய பதிவுகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here