
“மத்திய பட்ஜெட், 55 லட்சம் கோடி ரூபாய்க்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2.5 சதவீதம் தான் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மாநில அரசுகள், 12 முதல் 14 சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்கீடு செய்கின்றன. இதில், பாதி சதவீதத்தையாவது மத்திய அரசு செலவு செய்தால், நாட்டில் அனைவரும் உயர் கல்வி பெற முடியும்.
இந்தியாவில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 28 சதவீதமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை, 60 முதல் 100 சதவீதமாக உள்ளது. கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், நமக்கு இணையாக இருந்த சீனாவும், 60 சதவீதத்தைை தாண்டி விட்டது.
இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், 60 சதவீத அளவுக்கு உயர் கல்வி மாணவர் சேர்க்கை இலக்கை அடைய வேண்டும்.” என்கிறார் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன்.
கல்வி உரிமைக்காக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மற்றும் உண்மையான மாணவர் அமைப்புகள் இதே கருத்தை முன் வைத்தால் இந்த அறிக்கையின் ஒரு வரியைக் கூட பார்ப்பன ஊடகங்கள் வெளியிட்டு இருக்காது.
ஆனால் மிகப் பெரிய கல்வி சாம்ராஜ்யத்தின் அதிபராக உள்ள விஸ்வநாதன் முன்வைத்தவுடன் இதை புதிதாக கண்டுபிடித்ததை போல செய்தியாக வெளியிட்டுள்ளனர்.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் உயர்கல்வியில் தனது திருவிளையாடல்களை நடத்தி இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்த மக்களை மீண்டும் அவர்களின் குலத் தொழிலுக்கு அனுப்புகின்ற மனுதர்மக் கொள்கையை அமுல்படுத்துகிறது.
இதற்காகவே பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்துகின்ற யுஜிசி என்ற அமைப்பை படிப்படியாக ஒழித்துக் கட்டி கல்வியை முழுக்க வியாபாரமயமாக்குவது; அந்த வியாபாரப் போட்டியில் பணம் இருந்தாலும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே பல்வேறு வகையிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது; அதன் மூலம் பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட சூத்திர பஞ்சம சாதிகளின் இளம் தலைமுறையினரை ஒழித்துக் கட்டுவது என்பதை நுட்பமாக செய்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குகின்றோம் என்று நியாயம் கற்பிக்கின்ற இந்திய ஒன்றிய அரசு மற்றும் அதன் வழிகாட்டிகளான ஆர்எஸ்எஸ், நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் லட்சக்கணக்கான ரூபாயை பறித்துக் கொண்டு சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதில் எங்கே இருக்கிறது தரம்? இது போன்று தான் பொறியியல் மற்றும் ஐஐடி, ஐஐஎம்எஸ் போன்ற உயர் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வுகளை வைத்து திட்டமிட்டு சூத்திர, பஞ்சம சாதிகளை வடிகட்டுகின்றனர். இத்தனை தடைகளையும் மீறி தகுதித் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர் சூத்திர, பஞ்சம சாதிகளை சார்ந்த இளம் தலைமுறையினர்.
உயர்கல்வி பெறுவதற்கு ஆர் எஸ் எஸ் மற்றும் பார்ப்பன கும்பல் முன் வைக்கும் தகுதி, திறமை என்பதும் பித்தலாட்டம் தான். ஏனென்றால் இதர வகுப்பினர் என்று குறிப்பிடப்படும் பார்ப்பன மற்றும் மேல் சாதியினருக்கும், சூத்திர பஞ்சம சாதிகளைச் சார்ந்த மாணவர்களுக்கும் இடையிலான கட் ஆப் மார்க் வேறுபாடு 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே. இந்த அளவில் மட்டுமே மதிப்பெண்ணில் விலக்கு தரப்படுகிறது.
படிக்க:
♦ டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசின் கொடூர தாக்குதல்!
♦ JNU இடதுசாரி மாணவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள்!
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் குறிப்பிட்ட சாதியினர் மற்றும் கோடிக்கணக்கான ரூபாயை கையிருப்பாக கொண்ட மேட்டுக்குடியினர் மட்டுமே உயர் கல்வியை அடைய முடியும் என்ற நிலையை நோக்கி படிப்படியாக சென்று கொண்டிருக்கிறது.
“சுதந்திர இந்தியாவில் பல்கலைக் கழக மானியக் குழுவினை இன்று ஒரு அதிகார மையமாக ஒன்றிய அரசாங்கம் ஆக்கி விட்டது. அது கூறும் ஒழுங்கு முறைக்குக் கட்டுப்படாவிட்டால், பின்வரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனக் கூறுகிறது. அவையாவன…
- யுஜிசியின் திட்டங்களில் இருந்து அப்பல்கலைக்கழகம் விலக்கி வைக்கப்படும்.
- பட்டம் வழங்கும் அதிகாரம் பறிக்கப்படும்.
- அப்பல்கலைக் கழகத்தின் திறந்த வெளி/ஆன்லைன் கற்பிக்கும் அதிகாரம் பறிக்கப்படும்.
- 2(f) and 12B of UGC ஆணை 1956 படி உள்ள பட்டியலில் இருந்து அப் பல்கலைக்கழகம் நீக்கப்படும்.”என்று எச்சரிக்கிறார் விருதுநகரை சேர்ந்த கல்வி செயல்பாட்டாளரான கே.யோகராஜன் M.E.,
இத்தகைய ஏற்பாடுகளின் மூலமாக உயர் கல்வி பெறுவதை தடுக்கின்ற கொடூரமான செயலில் இறங்கியுள்ள இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசாங்கமானது உயர்கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும் என்பது பகல் கனவே ஆகும்.
உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47% பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இது தேசிய சராசரியான 28.4% ஐ விட அதிகமானதாகும். இத்தனை சவால்களையும் மீறி தமிழகம் உயர்கல்வியில் முதல் நிலை பெற்றுள்ளது என்பது குறிப்பாக திராவிட இயக்கத்தின் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டு கொள்கைகளால் விளைந்த பயன் என்பதை மறுக்கவே முடியாது.
ஆனால் இதனைக் கண்டு நாம் சுய திருப்தி அடைந்து விட முடியாது.
உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை 60% ஆக உயர வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் இலவசமாக்கப்பட வேண்டும்.
தகுதி, திறமை என்ற போர்வையில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும்.
இவற்றின் மூலமே “காசு உள்ளவனுக்கே கல்வி” என்ற நிலைமை மாறி அனைவரும் கல்வி கற்கின்ற சூழல் உருவாகும். அப்போது தான் உயர்கல்வியில் சென்று படிக்கின்ற மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயரும்.
இத்தகைய சூழலை உருவாக்குவதற்கு கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவும் போது மேற்கண்ட அடிப்படையில் உண்மையான கல்வி மாற்றம் மற்றும் முன்னேற்றம் உருவாகும் என்பது நிச்சயம்.
பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
கல்வி எனும் பெரும் வணிகச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை பார்ப்பதை தீவிரமாக முன்னெடுக்கிறது மோடி அரசு கூடுதலாக காவிகளின் நோக்கமாகவும் புராண இதிகாசங்களை பாடத்திட்டங்களாக கொண்டு வந்து சேர்ப்பதும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு வளர்க்காமல் பின்னோக்கி வரலாற்று பிரிவுகளை தீவிரமாக கொண்டு வந்து சேர்க்கிறது மாணவர்களுக்கு நிறைவு தேர்வு என்பது மிகப் பெரும் தடை இதனை எதிர்த்து போராடி தான் நமக்கான உரிமையை பெற முடியும் இல்லையென்றால் நம்மை குறிப்பாக சூத்திரர்களை 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்ல கூடியதாக இருந்தால் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 இருக்கிறது