மதமாற்ற தடை சட்டம்: இந்தியாவின் மத சுதந்திரத்தின் மீதான இருகட்சி தாக்குதல்!

0
மதமாற்ற தடை சட்டம்: இந்தியாவின் மத சுதந்திரத்தின் மீதான இருகட்சி தாக்குதல்!
சட்டத்தின் மூலம் பெரும்பான்மைவாத மனப்பான்மையை தேர்தலில் வாக்குகளாக மாற்ற உதவும் அரசியல் பயனை தவிர வேறெதுவுமில்லை என்பதை இதன்மூலம் காணலாம்.

1950 ஆம் ஆண்டு இந்தியா தனது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டபோது, அனைத்து மதங்களையும் அரவணைத்து கொண்டு செல்லும் உணர்வுபூர்வமான சுதந்திர நாடு என்ற துணிச்சலான வாக்குறுதியை அளித்து. அரசியலமைப்பின் பிரிவு 25 ஒவ்வொரு குடிமகனுக்கும் “மதத்தை போதித்தல், பின்பற்றுதல் மற்றும் பிரச்சாரம் செய்தல்” போன்ற உரிமையை உறுதி செய்கிறது. அந்த உத்தரவாதம் வெறும் வாக்குறுதி அல்ல. அரசியல் நிர்ணய சபையில் நடந்த கடுமையான விவாதத்திலிருந்து இதை வெளிப்படுத்தியது, அங்கு இருந்த தலைவர்கள் கிருஸ்துவ மிஷனரிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான கோரிக்கைகளை நிராகரித்தனர், தனிப்பட்ட நம்பிக்கையை ஒருபோதும் அரசு கண்காணிக்கவோ கட்டுபடுத்தவோ கூடாது என்று வலியுறுத்தினர்.

ஆனால் பத்து ஆண்டுகளுக்குள் அந்த வாக்குறுதி சிதறத் தொடங்கியது. பாரதீய ஜனதா கட்சி (பாஜக) அல்லது ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க் (ஆர்எஸ்எஸ்) தேசிய சக்திகளாக மாறுவதற்கு முன்பே, காங்கிரஸ் ஆட்சியிலிருந்த மாநிலங்களே இன்று விமர்சிக்கப்படும் மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு அடித்தளமிட்டன.

காங்கிரஸ் விதைத்த விதைகள்

1950, 60களில்,  பழங்குடி மக்களிடையே கிறிஸ்தவ மிஷினரிகள் பரவலாக செயல்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை.. 1948 டிசம்பர் 6ஆம் தேதியிலான அரசியலமைப்பு சபை விவாதங்களில்  கே.எம். முன்ஷி, சர்தார் பட்டேல் போன்ற தலைவர்கள் மதமாற்றத்தையும், பிரச்சாரங்களையும் கட்டுப்படுத்தக் கோரும் கோரிக்கைகளை ஆதரித்தனர். எனினும் முக்கிய தலைவர்கள் அதனை நிராகரித்து அவர்களின் முயற்சியை தடுத்தனர். ஆனால் மாநில அளவிலான  காங்கிரஸ் அலகுகள் தனியாக அதனை மீறிச் செயல்பட்டன:

ஒடிசா மதச்சுதந்திரச் சட்டம் (1967), மத்தியபிரதேச தர்ம ஸ்வதந்த்ர்ய ஆதிநியமம் (1968), அருணாச்சலப் பிரதேச மதச்சுதந்திரச் சட்டம் (1978) ஆகியவை இயற்றப்பட்டன. இந்தச் சட்டங்கள் மாவட்ட ஆட்சியருக்கு முன்னறிவிப்பு அளிக்க வேண்டும் என்றும், “வலுக்கட்டாயம், மோசடி அல்லது தூண்டுதல்” மூலம் மதமாற்றம் செய்தால் குற்றமாகக் கருதப்படும் என்றும் கூறின. “தேசக் கட்டமைப்பு” மற்றும் “மக்கள் தொகை சமநிலை” எனும் காரணங்களை முன்னிருத்தியே மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரபட்டதாக அதன் ஆதரவாளர்கள் குறிப்பிட்டனர், உண்மையில் தலித் அல்லது பழங்குடி மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு பெருமளவில் மாறினால் இந்து செல்வாக்கு குறையும் என அஞ்சினர்.

ஆனால் உண்மையில் தரவுகள் அப்படி இருக்கவில்லை. 1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கிறிஸ்தவர்கள் மொத்த மக்கள்தொகையில் 2.4% மட்டுமே இருந்தனர்; 1951இல் இருந்த அளவிலிருந்து பெரிதாக மாறவில்லை. இருந்தாலும் அரசியல் கணக்கீடுகள், அரசியலமைப்பு வாக்குறுதியை வென்றது.

வளர்த்து அறுவடை செய்யும் பாஜக!

விதைகள் காங்கிரஸால் விதைக்கப்பட்டிருந்தாலும், அதனை மேலும் வளர்த்து  பலனை அறுவடை செய்கிறது பாஜக. குஜராத் மதச்சுதந்திரச் சட்டம் (2003) – அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி– தொடக்கமாகக் கொண்டு, புதிய, கடுமையான சட்டங்கள் பல மாநிலங்களுக்கு பரவின: ஹிமாச்சலப் பிரதேசம் (2006, திருத்தம் 2019), உத்தரகாண்ட் (2018, திருத்தம் 2022), உத்தரப்பிரதேசம் (2020, 2021), மத்தியபிரதேசம் (2021 திருத்தம்), ஹரியானா (2022), கர்நாடகா (2022), ராஜஸ்தான் (2025).

இந்தச் சட்டங்களில் புதிதாக  – மதமாற்றத்திற்கு முன் கட்டாய அனுமதி, ஜாமீனில்லா குற்றமாக அறிவித்தல், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. பல சட்டங்கள் வெளிப்படையாகவே “திருமணத்துக்கான மதமாற்றம்” மீது குறிவைத்து, ஆதாரமற்ற “லவ் ஜிஹாத்” சதி கற்பனையை ஊக்குவித்தன.

ராஜஸ்தான் ஒரு சமீபத்திய, சிறந்த உதாரணத்தை வழங்குகிறது. அதன் 2025 சட்டவிரோத மத மாற்ற தடை மசோதா “குழு மத மாற்றங்களுக்கு” ஆயுள் தண்டனை மற்றும் ₹25 லட்சம் அபராதம் விதிக்கிறது. அரசாங்கம் தலித்துகளையும் பெண்களையும் மோசடியிலிருந்து பாதுகாப்பதாக கூறியது, ஆனால் உள்துறை அமைச்சகம் ஐந்து ஆண்டுகளில் “லவ்-ஜிஹாத்” வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று ஒப்புக்கொண்டது (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 29 மார்ச் 2025). விவாதத்தின் போது, ​​பாஜக எம்எல்ஏ கோபால் சர்மா முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை “அவர்களின் அசல் மதத்திற்குத் திரும்ப” வலியுறுத்தினார், இது வகுப்புவாத போக்கை வெளிப்படுத்தியது. உத்தரபிரதேசத்தில் திருமணத்துடன் தொடர்புடைய மத மாற்றங்களுக்கு 2020 சட்டப்படி மாவட்ட நீதிபதியின் ஒப்புதல் பெறவில்லை என்று 700 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் தண்டனை விகிதங்கள் மிகக் குறைவாகவே உள்ளன (தி குயின்ட், 2024). மத்தியப் பிரதேசம் இதேபோன்ற கதையைச் சொல்கிறது: ஜனவரி 2020 மற்றும் ஜூலை 2025 க்கு இடையில், 283 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன; தீர்ப்பு வந்த 86 வழக்குகளில், 50 வழக்குகள் விடுதலையில் முடிவடைந்தன, ஏழு வழக்குகள் மட்டுமே தண்டனையில் முடிவடைந்தன (NDTV, 2 ஜூலை 2025).

உண்மையில், பழங்குடியின வாக்கு வங்கிகளைப் பாதுகாக்கவும், இந்து அடிப்படைவாதிகளை சமாதானப்படுத்தவும் காங்கிரஸ் இந்த யோசனையை உருவாக்கியது. பாஜக இன்று அதே பயத்தைக், மத அடிப்படையிலான கூர்மையான கோணத்தில் பெரிதாக்குகிறது. அரசியல் அறிஞர் கிறிஸ்டோப் ஜஃப்ரலோ “மக்கள் தொகை அச்சத்தின் அரசியல்” என்று இதை வர்ணிக்கிறார்.

குறிப்பிடும்படியான எந்த நன்மையும் இல்லை

அறுபது ஆண்டுகளாக நடந்த பரிசோதனையின் முடிவு:

  1. மதமாற்ற விகிதம் மிகச்சிறியது – 98% இந்தியர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருக்கிறார்கள் (Pew Research, 2021).
  2. சமூக ஒற்றுமை மேம்படவில்லை – மாறாக, பிரச்சாரகர்கள், பள்ளிவாசல் குழுக்கள், மத கலப்பு மண தம்பதிகள் தொடர்ந்து தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர்.
  3. பெண்களின் பாதுகாப்பு உயரவில்லை – மாறாக, இரு மதத்தினருக்கு இடையிலான திருமணங்கள் காவல் துறையால் தடுக்கப்படுகின்றன.

இந்த சட்டத்தின் மூலம் பெரும்பான்மைவாத மனப்பான்மையை தேர்தலில் வாக்குகளாக மாற்ற உதவும் அரசியல் பயனை தவிர வேறெதுவுமில்லை என்பதை இதன்மூலம் காணலாம்.

அரசியலமைப்புக்கு துரோகம்

அரசியலமைப்புச் சட்டம் 25 வழங்கும் “மத சுதந்திரம்” அரசு அனுமதி பெற்று மதத்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயத்துடன் பொருந்தவில்லை. மதத்தைத் தேர்வு செய்வது தனிநபரின் அடிப்படை சுதந்திரம் என்பதில் சந்தேகமில்லை.  1977 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் (ரெவ். ஸ்டானிஸ்லாஸ் v.மத்திய பிரதேச மாநில அரசு) கூட, “பிரச்சாரம்” மதமாற்ற உரிமையை உள்ளடக்கவில்லை என்பது இன்றைய புதிய சட்டங்களின் வெளிச்சத்தில் மறுபரிசீலனைக்கு உரியது. முரண்பாடாக, இந்தச் சட்டங்கள் எந்த மதத்திற்கு ஆதரவாக இயற்றப்பட்டதோ அந்த மதத்திற்கே எதிராக அமையக்கூடும் .

துஷ்பிரயோகம் குறித்த உள்ளூர் செய்திகள்

உத்தரகண்டில், போதகர்கள் சிறிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் மதங்களை கடந்து திருமணம் செய்யும் தம்பதிகள் போலீஸ் விசாரணையை எதிர்கொள்கின்றனர். முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி “நில ஜிஹாத்” மற்றும் “குழு மதமாற்றம்” குறித்து தொடர்ந்து எச்சரிக்கிறார், இது பதற்றத்தைத் தூண்டுகிறது. ஹரியானாவில், 2022 சட்டம் திருமணத்தின் மூலம் மதமாற்றம் செய்வதை குற்றமாக்குகிறது மற்றும் 30 நாள் முன்கூட்டியே அறிவிப்பு செய்ய கோருகிறது. உண்மையான வற்புறுத்தலைத் தடுப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கு இடையே திருமணம் செய்யும் ஜோடிகளைத் துன்புறுத்துவதற்கு இது பயன்படுத்தப்படுவதாக சிவில் உரிமைகள் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில், 2022 சட்டத்தின் பின்னர் தேவாலய பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் மீண்டும் சீர்குலைக்கப்பட்டன,  போதகர்களை தாக்கிய வன்முறை கும்பல்களின் மீது வழக்கு தொடுக்காத போலீசார் நேர்மாறாக போதகர்களின் மீது வழக்குத் தொடர்ந்தனர் (சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்க அறிக்கை, 2023). இந்த சம்பவங்கள் அரசியல் அமைப்பு வாக்குறுதிக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன: சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக விளம்பரப்படுத்தப்படும் சட்டங்கள் பெரும்பாலும் அவர்களை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகவே பயன்படுகின்றன.

சுதந்திரம், ன்முகத்தன்மை, வாதாடும் உரிமை

இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மை (வேற்றுமையில்-ஒற்றுமை)தான் – இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள், ஜைனர்கள், நாத்திகர்கள் – எல்லோரும் ஒரே நாட்டில் வாழ்ந்து விவாதிக்கக் கூடிய நிலைமை. உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை  என்பது வெறும் சகிப்புத்தன்மை அல்ல; ஒருவர் தமது மதத்தைத் தேர்ந்தெடுக்கவோ, மதம் கலந்த திருமணங்கள் செய்யவோ, மதத்தை நிராகரிக்கவோ உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பதே.

தேர்தல் வணிகம் தானே தவிர, பொது நன்மைக்கானது அல்ல

1960களின் காங்கிரஸ் அரசாங்கங்கள் முதல் இன்றைய பாஜக அரசாங்கங்கள் வரை, மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதை காட்டிலும் தேர்தல் வணிகத்தைப் பற்றியதாகவே இருந்தன – சமூகங்களை துருவப்படுத்துவதற்கும், பெரும்பான்மை உணர்வைத் திரட்டுவதற்கும், நிர்வாகத் தோல்விகளிலிருந்து திசைதிருப்புவதற்கும் நம்பகமான கருவியாக பயன்படுத்தப்பட்து.

பல தசாப்தங்களாக இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களுக்குப் பிறகான தரவுகள் மிகக் குறைவான மதமாற்றங்களே நிகழ்ந்துள்ளன என்பதையும் , குற்றம் சாட்டப்பட்டவர்களில்  ஆகப்பெரும்பான்மையானோர் விடுதலை செய்யப்பட்தையும் தெளிவாக குறிப்பிடுகின்றன, மேலும் இந்தசட்டங்களால் எந்த சமூக நன்மையும் இல்லை. இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் சமூகத்தை மேம்படுத்தும் திசையை நோக்கி செல்ல வேண்டும்.  ஒரு நம்பிக்கையான ஜனநாயகம் அதன் குடிமக்களின் சுதந்திர மனசாட்சிக்கு அஞ்சுவதில்லை; அது அவர்களை நம்புகிறது. நம்பிக்கையின் தனிப்பட்ட முடிவை குற்றமாக்குவது அரசியலமைப்பையும், உடன்படாததை ஒப்புக்கொள்ளும் நூற்றாண்டுகள் பழமையான இந்திய ஞானத்தையும் சீர்குலைப்பதாகும். இந்தியாவுக்குத் தேவையான ஒரே “மாற்றம்” – எல்லோருக்கும் சுதந்திரம் மற்றும் நீதி அளிக்கும் மாற்றமே.

மூலம்: https://countercurrents.org/2025/09/anti-conversion-laws-a-bipartisan-assault-on-indias-freedom-of-faith/

மொழியாக்கம்: தாமோதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here