டெல்லி பல்கலைகழகத்தின் பேராசிரியரும், தீவிர செயல்பாட்டாளருமான ஜி.என்.சாய்பாபா நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில்(NIMS) உயிரிழந்தார்.
57 வயதான ஜி.என்.சாய்பாபாவுக்கு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய்ப்பட்டது. அதன் பின் உடல்நிலை மோசமடைந்த்தால் நிம்சில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது மனைவி வசந்தா கூறுகையில் “ மருத்துவர்கள் சிபிஆர் கொடுத்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.” என்றார்.
90 சதவீத உடலுறுப்புகள் செயலிழந்த நிலையில் இருந்த ஜி.என்.சாய்பாபாவை, மாவோயிஸ்ட் சார்புள்ள ‘புரட்சிகர ஜனநாயக முன்னணி’ என்ற அமைப்புடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக சதி செய்ததாகக்கூறி UAPA உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 2014-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார் சாய்பாபா. ஓராண்டு சிறைக்குப் பிறகு 2015 ஜூலை மாதத்தில் பிணை வழங்கினாலும், அதே ஆண்டு டிசம்பரில் மறுபடியும் கைது செய்தனர். ஐந்து மாதங்கள் கழித்து 2016 ஏப்ரலில் பிணை கிடைத்தது. ஆனால், 2017 மார்ச் மாதத்தில் வழக்கில் தீர்ப்பளித்த கச்சிரோலி செசன்ஸ் நீதிமன்றம் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதில் இருந்து விடுதலையாகும் வரை அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிருந்தார்.
8 ஆண்டுகளுக்கு பின்பு 2022-ல் மும்பை உயர்நீதி மன்றம் அவரை விடுதலை செய்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதாவது அவர் சிறையிலிருந்து வெளியேறும் முன்னரே இந்துத்துவ ஆதரவு நீதிபதி பேலா திரிவேதி அமர்வு அந்த தீர்ப்பை ரத்து செய்தது. இறுதியாக கடந்த மார்ச் 2024-ல் நாக்பூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அவர் விடுதலையாகும் போதே உடல்நிலை படுமோசமாக இருந்த்தாக அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். “மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும் சிகிச்சைகளும் தனக்கு அளிக்கப்படவில்லை…” இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்கிறேன், ஆனால் என் உடலின் ஒவ்வொரு பாகமும் செயலிழந்துக் கொண்டிருக்கிறது. நான் உயிர் பிழைப்பேன் என சிறை அதிகாரிகள் நம்பவில்லை” என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இதிலிருந்து நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். கடந்த 10 ஆண்டுகளாக சிறையில் வைத்து அவரை துன்பப்படுத்தி நடை பிணமாகவே அதாவது சிறையில் இறந்துப் போனால் பழி நம்மீது விழும் என்று கருதியே அவரை விடுதலை செய்துள்ளது. அவர் சிறையில் இருக்கும் போது சில கோரிக்கைகள் வைத்திருந்தார் அதனை சிறை நிர்வாகம் சிறிதும் மனித தன்மையற்று புறக்கணித்தது.
மனித உரிமைப் போராளி டாக்டர் ஜி.என். சாய்பாபாவுக்கு சிவப்பு அஞ்சலி.
ஜி.என்.சாய்பாபா இவ்வாறு கூறுகிறார்; “சிறையில் உள்ள கழிப்பறைக்கு சக்கர நாற்காலியால் செல்ல முடியவில்லை, குளிக்கக் கூட இடமில்லை, தனியாக கால் ஊன்றி நிற்க முடியவில்லை. கழிவறை செல்லவும் குளிக்கவும் மீண்டும் படுக்கைக்குச் செல்வதற்கும் எனக்கு 24 மணி நேரமும் 2 பேர் தேவை” என்கிறார்.
இவ்வாறு உடலளவில் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்த சாய்பாபாவை தான் – அவரது கருத்துக்களை முடக்குவதற்காக – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவதை தடுப்பதற்காக காங்கிரஸ் ஆட்சியில் கைது செய்யப்பட்டு பாசிச பாஜக ஆட்சியில் சிறையில் துன்பப்படுத்தப்பட்டு இன்று இறந்துள்ளார் சாய்பாபா.
குற்றுயிர் குலையுயிருமாக சிறையில் இருந்து விடுதலையானவரை கொன்றது பாசிச பாஜக தான் என சொல்வதில் தவறில்லை எனக் கருதுகிறோம். அவர் அப்படி என்ன தவறு செய்தார். அவரே கூறுகிறார், “ பழங்குடிகளின் உரிமைக்காக குரல் எழுப்பினேன். இதற்காக பல பொதுச் சமூக குழுக்கள் மற்றும் மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தேன். இந்த அடிப்படையில் இயங்கும் பல குழுக்கள் என்னை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தன…” “பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும், சுரங்கத் தொழிலுக்கு எதிராக பழங்குடியினரின் இனப்படுகொலைக்கு எதிராகவும், ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’-க்கு எதிராகவும் நாங்கள் குரல் எழுப்பினோம்”. என்றார்.
ஆம் இது மிகப்பெரிய தவறு அல்லவா!. அதெப்படி இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாக்க, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின் மக்களுக்கு ஆதரவாக போராடலாம், குரல் எழுப்பலாம். இது தான் அவர் செய்த மாபெரும் குற்றம் என்கிறது அரசும், அதிகார வர்க்கமும். 10 ஆண்டுகள் சிறையில் கடுமையான துன்பத்தை அனுபவித்த பிறகு நாக்பூர் நீதிமன்றம் ‘கம்யூனிஸ்ட் அல்லது நக்சல் இலக்கியங்களை இணையத்தில் இருந்து பதிவிறக்குவது அல்லது எந்தவொரு சித்தாந்தத்தின் ஆதரவாளராக இருப்பதும் உபா குற்றத்தின் கீழ் வராது’ என கூறி விடுவிக்கிறது. இந்த காலங்கடந்த நீதியே அவரை கொன்றிருக்கிறது.
இந்தியாவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் அமலுக்கு வந்த பின்பு நாட்டின் கனிம வளங்களை வேட்டையாட உலகின் முன்னணி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி 1990 காலக்கட்டத்தில் படையெடுத்தன. பழங்குடி மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தண்டகாரண்யா பகுதியில் மலைகளையும், காடுகளையும் அபகரிக்கும் அரசின் முயற்சிக்கு தடையாக இருந்தனர் என்பதற்காக பசுமை வேட்டை என்ற பெயரில் அரசின் அதிகாரப்பூர்வ அடியாள் படையான இராணுவத்தை வைத்து ஒடுக்க ஆரம்பித்தன. காங்கிரசும், பாஜகவும் தத்தமது ஆட்சியில் பழங்குடியின மக்களை மலைப்பகுதிகளில் இருந்து விரட்டியடிக்க அவர்கள் மீது பயங்கரவாதிகள் என பட்டம் கட்டி நர வேட்டையாடின.
மறுக்கப்படும் நீதி என்பது அநீதிதான் பாதிரியார் ஸ்டேன்ஸ் சுவாமி போல சாய்பாபாவையும் சிறையிலேயே கொன்று விட சதி நடக்கிறதா?
இதனை எதிர்த்து பல முற்போக்கு இயக்கங்கள், இடதுசாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் போராடினார்கள் அதில் முக்கியமானவர் தான் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. இந்திய மக்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையிடும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், இந்திய தரகு முதலாளிகள், தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு எதிராகவும் போராடும் செயற்பாட்டாளர்களை கைது செய்வதும் பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதையும் ஆளும் கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் செய்து வருகிறது. அதற்கு தற்போது பலியாகியிருப்பவர் தான் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. இதற்கு முன் பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி இதே போன்றே கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்காக தங்கள் வாழ்நாளை தியாகம் செய்யும் ஜி.என்.சாய்பாபா போன்றோர்களுக்கு நமது சிவப்பஞ்சலியை செலுத்துவோம். கார்ப்பரேட் – காவி பாசிசம் ஆள்தூக்கி சட்டமான உபா சட்டம் மூலம் போராடுபவர்களை ஒடுக்கினாலும் அஞ்சாமல் துணிந்து போராடுபவர்களுக்கு பேராசிரியர் சாய்பாபா முன்னுதாரனமாக உள்ளார். அவர் மரணித்த இந்நாளில் இந்திய மண்ணில் வேறூன்றியிருக்கும் பாசிஸ்டுகளை வேரறுக்க உறுதியேற்போம்.
- மோகனன்








எமது சிவப்பு அஞ்சலி செலுத்துகிறேன்.
தோழருக்கு எமது சிவப்பஞ்சலி