அக்டோபர்-1: மகத்தான சீன மக்கள் குடியரசு அமைந்த தினம்!
புரட்சியின் அனுபவத்தைக் கற்று முன்னேறிச் செல்வோம்!
அக்டோபர் 1: மகத்தான சீன புரட்சியானது வெற்றியடைந்து புதிய ஜனநாயக குடியரசு ஒன்று உருவான தினமாகும். அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ நாடு ஒன்றில் புரட்சியை எப்படி சாதித்து காட்டுவது என்பதை பற்றி இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளுக்கு முன்னுதாரணத்தை உருவாக்கிக் கொடுத்தது தான் சீனப் புரட்சியின் முக்கியத்துவம்.
மகத்தான சீனப் புரட்சியின் அனுபவம் நமக்கு இரண்டு முக்கியமான அனுபவத்தையும், வழிமுறைகளையும் கற்றுக் கொடுக்கின்றது. ஒன்று:- ஏற்றத்தாழ்வான வளர்ச்சிகள் கொண்ட உலக நிலைமைகளில் முதலாளித்துவம் வளர்ச்சிப் பெறாத சூழலில் ஒரு நாட்டில் எப்படி சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வது; அதற்கான வழிமுறை என்ன என்பதைக் கண்டறிந்து முன் வைத்தது மற்றொன்று:- இந்த காலகட்டத்தில் பாட்டாளி வர்க்க கட்சி தனது சொந்த அனுபவத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் கற்றுக்கொண்டு இடது,, வலது சந்தர்ப்பவாத போக்குகளை முறியடித்து சரியான திசைவழியில் புரட்சியை எப்படி முன்னெடுத்துக் கொண்டு செல்வது என்பதை கற்றுக் கொடுக்கிறது.
முதலாளித்துவ வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒரு சில பத்து நாட்களில் அரசு கட்டமைப்பை தகர்த்தெறிந்து மக்களின் பேரெழுச்சிப் பாதையின் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய ரஷ்ய புரட்சியின் அனுபவத்தை தனது சொந்த அனுபவத்தின் மூலம் கற்று தேர்ந்துக் கொண்ட தோழர் மாவோ புதிய ஜனநாயகம் என்ற வழிமுறையை வந்தடைந்தார்.
1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், “சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றிய ஆய்வு” (Analysis of the Classes in Chinese society) என்ற பெயரில் சீன சமூதாயத்தின் வர்க்க நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வை முன் வைத்தார். அதிலிருந்து சீனாவில் இருக்கும் வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்து, விவசாயிகளை திரட்டி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான “புதிய ஜனநாயகப் புரட்சி” நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தில் இருந்து 1917 ஏப்ரல் புரட்சி வரை கம்யூனிச இயக்கங்கள் அரசு கட்டமைப்பை தகர்த்தெறிந்து அதற்கு மாற்றாக முன்வைக்க வேண்டும் என்று முன்மொழிந்திருந்த சட்டசபைக் குடியரசு என்ற ஆட்சி வடிவத்தை புரட்சியின் அனுபவத்தின் ஊடாக கற்றுக்கொண்டு எவ்வாறு தொழிலாளர்கள் விவசாயிகள் அடங்கிய சோவியத் குடியரசு தான் மாற்று என்று தோழர் லெனின் முன் வைத்தாரோ அதேபோல காலனி, அரைக்காலனி, நவீன காலனிய நாடுகளில் புரட்சிக்கான பாதை புதிய ஜனநாயகம் தான் என்பதை முன் வைத்தார் தோழர் மாவோ.
”சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து மூன்று பெரிய புரட்சிகளை – மூன்று புரட்சிகரமான யுத்தங்களை நடத்தியுள்ளது. முதல் பெரும் புரட்சி, வடதிசை படையெடுப்பு யுத்தம், நிகழ்கால ஜப்பானிய எதிர்ப்பு தேசிய புரட்சி யுத்தம் முதலியவை சீன கோமிங்டாங்குடன் சேர்ந்து கூட்டாக நடத்தப்பட்டது. ஆனால் பத்து வருட விவசாயப்புரட்சி, சீன சோவியத் பகுதிகளில் நிகழ்த்திய யுத்தம் ஆகியவை நமது கட்சியின் ஏகதலைமையில் நடத்தப்பட்டது. நமது கட்சியை பொறுத்தவரையில் மூன்று புரட்சிகரமான யுத்தங்களும் இன்றுவரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக, பல கம்யூனிஸ்டுகள் ஆயுதங்களை கீழே வைக்கவேயில்லை. இந்த விஷயம் மட்டுமே, ஆயுதந்தாங்கிய போராட்டம்தான் பிரதான போராட்ட வடிவம்; சீனப் புரட்சியின் பிரதான அமைப்பு வடிவம் என்பதை இந்த ஒரு விஷயமே எடுத்துக்காட்டுகிறது. சீனப்புரட்சியின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் ஆயுதப் போரட்டத்திலிருந்து பிரிக்க முடியாதவை.”
”இந்த இருபத்திரண்டு வருடங்களில் நமது கட்சியின் போராட்ட அனுபவம் எளிமை மிக்கதாகவும், பல்வேறு வகைப்பட்டதாகவும் இருந்துள்ளது. அதை விபரமாக இப்பொழுது என்னால் விளக்க முடியாது. இந்த அனுபவங்களில் எல்லாம் எது மிக முக்கியமானது? உண்மையான மார்க்சிஸ்டு உண்மையான போல்ஷ்விக் என்றால் என்ன? என்ற விஷயத்தைப் பற்றியதேயாகும். மார்க்சியம் ஒன்றால்தான் சீனாவைக் காப்பாற்ற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சீனாவில் மார்க்சிஸ்டுகள் என்று தங்களைச் சொல்லி கொள்பவர்கள் பல பேர்கள் இருக்கின்றனர். ஆனால் உண்மையான மார்க்சியம் என்பது என்ன? போலி மார்க்சியம் என்ன? போலி மார்க்சிஸ்டு என்றால் என்ன? புரட்சிகரமான சீன பொதுமக்கள் மத்தியிலும், சீன கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் பல வருடங்களாக பூர்த்தியாக தீர்க்கப்படாத பிரச்சினையாகும்”.
”உண்மையான மார்க்சியத்திற்கும் போலி மார்க்சியத்திற்குமிடையில், உண்மையான மார்க்சிஸ்டுக்கும் போலி மார்க்சிஸ்டுக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது. இந்த வேறுபாடு தன் மனப்பார்வையை அடிப்படையாகக் கொண்ட அளவுகோல் கொண்டோ அல்லது பல்வேறு நபர்கள் சொல்லிக் கொள்வதைக் கொண்டோ நிர்ணயிக்கப்படுவதில்லை! யதார்த்தமான அளவுகோல் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. நமது கட்சி அங்கத்தினர்கள் உண்மையான மார்க்சிஸ்டுகளை, போலி மார்க்சிஸ்டுகளிடமிருந்து பாகுபாடு படுத்துவதற்கு யதார்த்த அளவுகோலை புரிந்து கொள்ளவில்லையென்றால், புரட்சியில் தெரியாமல் குருட்டுத்தனமாக போலி மார்க்சிஸ்டுகளைப் பின்பற்றிச் சென்றால், அதைக் காட்டிலும் அபாயகரமானது வேறு ஒன்றுமிருக்க முடியாது. நமது கட்சி கற்றுக்கொண்ட வேதனை நிறைந்த பல படிப்பினைகளுள் மிகவும் வேதனை நிறைந்த படிப்பினை இதுதான்”. என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்தில் இருந்து எதிர் கொண்ட நெருக்கடிகளை வரலாற்றுப் பொருள்முதல்வாத பார்வையில் அணுகுவது என்ற வழிமுறைகளை பற்றி தோழர் லியூஷோசி எழுதிய கட்டுரையின் மூலமாக. 1943-ம் வருடம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது முன்வைத்துள்ளார்.
இந்தியாவில் வலது, இடது சந்தர்ப்பவாதப் போக்குகளை முறியடித்து புரட்சிகர வழிமுறையில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவது எங்ஙனம் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்தது நக்சல்பாரி அரசியல்.
1970களில் முன்வைக்கப்பட்ட கட்சித் திட்டத்தின் அடிப்படையில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் நிலவுகின்ற அரசு கட்டமைப்பை தகர்த்தெறிவது என்பதை முன்வைத்து செயல்படுத்துவங்கிய நக்சல்பாரி இயக்கம் கடந்த 50 ஆண்டுகளில் தான் கடந்து வந்த பாதையைப் பற்றியும், இந்திய நிலைமைகளில் புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு தடையாக உள்ள அனைத்து சக்திகளையும் முறியடித்து முன்னேற வேண்டிய அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
கட்சிக்குள் தோன்றுகின்ற முதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்குகளையும், சாகச போக்குகளையும், அரசியலற்ற பிழைப்புவாத கண்ணோட்டங்களையும் முறியடித்து மார்க்சிய லெனினியக் கண்ணோட்டத்தில் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு எந்த விதமான சமரசமும் இன்றி முன்னேற வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது சீனப் புரட்சியின் அனுபவம்.
மகத்தான சீனப் புரட்சியின் அனுபவத்திலிருந்து நாமும் கற்றுக் கொள்வோம். இந்தியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்ல முயற்சிக்கின்ற கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாத கும்பலிடம் இருந்து நாட்டை மீட்டெடுப்போம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஜனநாயக கூட்டரசு என்ற புரட்சிகர தற்காலிக இடைக்கால அரசாங்கம் ஒன்றை நிறுவி புதிய ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுகின்ற பாதையில் பயணிப்போம்.
◾ஆல்பர்ட்.






