கர்நாடக மாநிலத்தில் அதிர்வை உண்டாக்கிய முகமூடி மனிதன் கடந்த ஆகஸ்ட் 23ந்தேதி சிறப்பு புலனாய்வுக் குழுவால் (SIT) கைது செய்யப்பட்டு 10 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அதுவரை சாட்சிய பாதுகாப்பு சட்டப்படி பாதுகாக்கப்பட்ட அவரது பெயர், புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்கள் பொது வெளிக்கு வந்துள்ளன.
புகார்தாரரான சின்னையா, 1995 மற்றும் 2014 க்கு இடையில் தர்மஸ்தலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணிபுரிந்ததாகவும், அந்த காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறார்களின் உடல்கள் உட்பட பல உடல்களை அடக்கம் செய்ய தர்மஸ்தலா நிர்வாகிகளால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கடந்த ஜுலை 3ந்தேதி தனது புகாரில் கூறியிருந்தார்.
தனது எழுத்துப்பூர்வ புகாரில், சமீபத்தில் புதைக்கப்பட்ட இடங்களுக்குத் திரும்பிச் சென்று எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்ததாகவும், அதன் புகைப்படங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை மேற்கொண்டு வரும் சிறப்பு புலனாய்வுக் குழு அவரை கைது செய்யப்பட்டுள்ளது, தர்மஸ்தலா நிர்வாகிகளான வீரேந்திர ஹெக்டே குடும்பத்தினர் பாதுகாக்கப்படுகின்றனரோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.
விசாரணையை இழுத்து மூடத் துடிக்கும் பாஜக!
புகார் அளித்த சின்னையா கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா “புகார் அளித்த சாட்சியை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்துள்ளது, அவர் போலீஸ் காவலில் உள்ளார். விசாரணை நடந்து வருவதால், கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது. சிறப்பு விசாரணைக் குழு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை வழக்கு குறித்து கூடுதலாக வெளியிட முடியாது.” என்றும், “வழக்கின் பின்னணியில் ஒரு மோசடி இருக்கிறதா என்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இறுதி அறிக்கை மூலம் மட்டுமே அத்தகைய விவரங்கள் வெளியிடப்படும். அவர் ஏன் கைது செய்யப்பட்டார், அதன் நோக்கம் குறித்து சிறப்பு விசாரணைக் குழுவால் மட்டுமே வெளியிட முடியும். புகார் அளித்த சாட்சியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், நாங்கள் விசாரணையைத் தொடங்கினோம். விசாரணையை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழுவிற்கு நாங்கள் அறிவுறுத்தவில்லை,” என்றும் கூறினார். இந்த அளவில்தான் கைதுக்கான விவரங்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், கைதுக்கான காரணம் முழுமையாக வெளிவரும் முன்னரே “முகமூடி அணிந்த நபரை விட, அவருக்குப் பின்னால் இருப்பவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். சதிகாரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்காக NIA-விடம் ஒப்படைப்பது பொருத்தமானது. இல்லையெனில், காங்கிரசும் அவர்களுடன் இணைந்துள்ளது என்று நாம் கருத வேண்டும். இதன் பின்னணியில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்” என்று பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அசோகா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
படிக்க: புதையுண்டு கிடக்கும் கர்நாடக தர்மஸ்தலாவின் குற்றங்கள்! விசாரணையை முடக்க பாசிச மோடி அரசு சதி!
கடந்த ஜூலை 3ந்தேதி முகமூடி அணிந்து வந்த சின்னையா காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததில் இருந்தே பாஜகவினர் எப்படியாவது இந்த வழக்கை இழுத்து மூட வேண்டும் என்று பதற்றமடைந்து வருகின்றனர். தர்மஸ்தலா என்ற “இந்து” ஆன்மீக பூமிக்கு களங்கம் ஏற்படுவதை அவர்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். அதனால்தான் சின்னய்யாவால் புதைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடங்களில் தோண்டுவதையும் எதிர்த்தனர். அதேசமயம், அங்கே கொன்று புதைக்கப்பட்டதாக சொல்லப்படும் பலரும், தர்மஸ்தலா பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போனவர்களில் பலரும் இந்துக்களே என்பதாகும். அந்த இந்துக்கள் பற்றி இந்து மத காவலர்களான சங்கபரிவார கும்பலுக்குக் கவலையில்லை என்பதையே தர்மஸ்தலா பிரச்சினை மீண்டும் அம்பலப்படுத்துகிறது.
இந்துத்துவ கும்பலுக்குள் கோஷ்டி மோதல்!
அதேவேளையில், இந்த பிரச்சினையில் இந்துத்துவ கும்பல் ஒரே அணியாக இல்லை என்பது புலப்படுகிறது. ராஷ்டிரிய ஹிந்து ஜகரன வேதிகே என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வரும் மகேஷ் ஷெட்டி திமிரோடி என்பவருக்கும் தர்மஸ்தலா மீதான புகார் கொடுத்ததில் தொடர்பு உள்ளது என சிறப்பு புலனாய்வுக் குழு சந்தேகிக்கிறது. கடந்த சில மாதங்களாக இவர்தான் முகமூடி மனிதனாக வந்த சின்னையாவுக்கு அடைக்கலம் தந்தார் என்ற தகவலின் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்துள்ளது சிறப்பு புலனாய்வுக்குழு. இதன் மூலம் இந்த புகார் என்பது திட்டமிட்ட சதி என்ற இடத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த மகேஷ் என்பவர் தற்போது தான் ஆர்.எஸ்.எஸ் முக்கிய நிர்வாகியான பி.எல்.சந்தோஷ் தொடர்பாக அவதூறாக பேசிய வழக்கில் சிறை சென்று பிணையில் வெளிவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து இந்த பிரச்சினை தொடர்பாக பேசி வந்த சமீர், கிரீஷ் என்ற இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது சிறப்பு புலனாய்வுக்குழு.
மேலும், சின்னையா உடல்களை புதைத்ததாக சொன்ன பல இடங்களில் எதுவும் கண்டறியப்படவில்லை. பெண் மண்டையோடு என அவர் கையில் கொண்டு வந்ததும் ஆண் மண்டை ஓடு; அனன்யா பட் என்ற பெண் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்த பெண் தனக்கு அப்படி ஒரு மகளே இல்லை என இப்போது பல்டி அடித்தது எனக் காரணங்களை முன்வைத்து ஊடகங்கள் இந்த வழக்கை முடித்து வைக்க அவசரப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் தன்னைச் சந்தித்து எலும்புக்கூடுகளைக் கொடுத்து பொய் புகாரளிக்கச் சொன்னதாக சின்னையா வாக்குமூலம் கொடுத்துவிட்டதாக உறுதிபடுத்தப்படாத தகவலை பரப்புகின்றன.
இந்த வழக்கில் மகேஷ் ஷெட்டி, சுஜாதா பட் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர்களே தவிர, வழக்கை முடித்துக் கொள்வதற்கு போதுமான காரணங்கள் இல்லை. தோண்டப்பட்ட இடங்களில் இருந்து எடுத்த மண் ஆய்வுக்குச் சென்றுள்ளது. சின்னையா தர்மஸ்தலாவில் பணிபுரிந்த காலத்தில் அங்கு அவருடன் பணியாற்றியவர்களையும், அவரை உடல்களை புதைக்க கட்டாயப்படுத்தியவர்கள் என குற்றஞ்சாட்டும் நபர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
ஆனால், பல கதைகள் மூலம் இந்த வழக்கு மீதான கவனத்தை குறைத்து, வழக்கை இழுத்து மூடி தர்மஸ்தலா நிர்வாகி வீரேந்திர ஹெக்டே கும்பலை காப்பாற்ற முயல்கின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். அதற்கு ஊடகங்கள் துணை போகின்றன.
ஒரு வாதத்துக்கு, தர்மஸ்தலா கோயில் நிர்வாகம் பற்றிய இந்த புகார் மகேஷ் ஷெட்டியின் சதித்திட்டமாகவே இருந்தாலும் சின்னையா சொல்வதெல்லாம் பொய் என்று எப்படி முடிவுக்கு வருகிறது. தர்மஸ்தலா நிர்வாகம் மீதான கடந்த கால புகார்களும், சின்னையாவின் வாக்குமூலமும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை தேவை என்பதையே உணர்த்துகிறது.
ஆவணங்கள் அழிந்துபோன மர்மம்!
சின்னையாவின் புகாரைத் தொடர்ந்து தர்மஸ்தலாவைச் சுற்றி நடந்து வரும் பல நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக, 2000 முதல் 2015 வரை அடையாளம் தெரியாத மரண வழக்குகள் தொடர்பான 15 ஆண்டுகால பதிவுகளை அழித்துவிட்டதாக பெல்தங்கடி போலீசார் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த காவல்நிலையத்தின் கீழ் தான் தர்மஸ்தலாவின் பகுதி வருகிறது என்பது முக்கியமானது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த பதிலின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்த ஒப்புதல் வாக்குமூலம், 1998 மற்றும் 2014 க்கு இடையில் நூற்றுக்கணக்கான உடல்களை அடக்கம் செய்ததாக புகார் தெரிவிப்பவரின் கூற்றுடன் காலவரிசை ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்பது அதைவிட முக்கியமானது, சந்தேகத்துக்குரியது. குஜராத் இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் விசாரணை பற்றிய ஆவணங்கள் காணாமல் போனதுடன் இது ஒத்துப்போவது தற்செயல் அல்ல. காவிக் கிரிமினல்களின் பேட்டர்ன் இது என்பதையே நமக்கு காட்டுகிறது.
இதற்கிடையில், தர்மஸ்தலா தொடர்புடைய மிக முக்கியமான பல வழக்குகள் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
பல ஆண்டுகளாக ‘சிக்காத’ குற்றவாளி!
தர்மஸ்தலா பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 17 வயது சிறுமி சவுஜன்யா வழக்கு 11 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளி என சிறைப்படுத்தப்பட்டவர் 2023 ஆம் ஆண்டு குற்றமற்றவர் என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவருடைய கைதே தொடர்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ள அதிகார வர்க்கம் கொடுத்த பலிகெடா என்பது நிரூபணம் ஆனது. கர்நாடக காவல்துறை, சிபிஐ என யாருக்கும் சவுஜன்யாவை கொன்ற உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லை. குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்பதை விட இந்த குற்றவாளி தர்மஸ்தலா தொடர்புடையதாக இருக்கக் கூடாது என்பதிலேயே அவர்கள் அதிக அக்கறை செலுத்தினர் என்பதே தெரிய வருகிறது. தற்போது இந்த வழக்கு குறித்து சின்னையாவிடம் மீண்டும் விசாரித்து வருகிறது சிறப்பு புலனாய்வுக்குழு.
அதே போல, தர்மஸ்தலாவில் பதிவாகும் பெண்கள் கொலை தொடர்பான வழக்குகளுக்கு ஆரம்பம் 1987 ஆம் ஆண்டு பதிவான வழக்கு, பத்மலதா என்ற 17 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பானது. அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டால், இந்த முகமூடி மனிதனின் புகார் ஆழமான ஆய்வைத் தூண்டியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக, விசாரணை அமைப்புகளும், கார்ப்பரேட் ஊடகங்களும் இந்த குற்றங்களை மறைக்கவே முயற்சிக்கின்றன.
பல ஆண்டுகளாக, பல பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தர்மஸ்தல கோயிலின் பரம்பரைத் தலைவரும் 2022 முதல் (பாஜகவால்) பரிந்துரைக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினருமான வீரேந்திர ஹெக்டேவின் குற்றங்கள் தொடர்கின்றன என்று குற்றம் சாட்டி வருகின்றனர். பல சமூக ஆர்வலர்கள் ஹெக்டே மீது குற்றச்சாட்டுகளை விசாரிக்க கோரினர். அப்போதெல்லாம் அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் அவர்கள் குரல்வளையை நெரித்து பிரச்சினை வெளிவராமல் பார்த்துக் கொண்டன. அதன் தொடர்ச்சியாக தற்போதும் கடந்த ஜூலை 18 அன்று கூடுதல் மற்றும் சிவில் அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பான 8,000 க்கும் மேற்பட்ட ஆன்லைன் இணைப்புகளை நீக்க உத்தரவிட்டது.
தர்மஸ்தலா தொடர்பான இந்த வழக்கில் நீதிமன்றம், அதிகாரவர்க்கம், காவல்துறை என அனைத்தும் தர்மஸ்தலா நிர்வாகியான வீரேந்திர ஹெட்டே கும்பலுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகின்றன என்பது கடந்த காலம் நமக்கு உணர்த்தும் செய்தியாக உள்ளது அதேசமயம் இந்த முகமூடி மனிதனின் புகார் வந்த பிறகு, துரிதமாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த காங்கிரஸ் அரசு தற்போது அதற்குள்ளேயே இருக்கும் ஆர்எஸ்எஸ் ஆட்களின் அழுத்தத்திற்கும் பல்வேறு நபர்களின் அழுத்தத்திற்கும் உள்ளாகி இந்த விசாரணையை பின்னுக்குத் தள்ளுவதாகவே தெரிய வருகிறது.
மத நிறுவனங்களின் சொத்துக்களை பறிப்போம்! அதிகாரத்தை முடக்குவோம்!
தர்மஸ்தலா என்பது மிகவும் பேர் போன, பழமையான மஞ்சுநாதர் கோயிலைக் கொண்டுள்ளது. மஞ்சுநாதர் கோயில் என்பது ஒரு இந்து கோயில் என்றாலும் அதனை நிர்வகிப்பது ஜெயின் மதத்தைச் சார்ந்த பரம்பரையினர் என்பது இக்கோயிலின் தனித்துவமான அம்சம். அந்த பரம்பரையைச் சேர்ந்த வீரேந்தர் ஹெக்டேதான் தற்போது அந்த நிறுவனத்தின் தர்மாதிகாரியாக உள்ளார். அந்தக் கோயில் நிர்வாகத்தின்கீழ் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. பல கல்லூரிகள் உள்ளன. இவற்றையெல்லாம் நிர்வகிப்பது இந்த தர்மதிகாரியின் குடும்பமே. மேலும், இந்த வீரேந்திர ஹெக்டே பாஜக மூலம் பாராளுமன்ற உறுப்பினராகி இருந்தாலும் பல்வேறு கட்சியினருடனும், அதிகார வர்க்கத்துடனும் உறவுகளை பராமரித்து வருகிறார். அதுவே தர்மஸ்தலா தொடர்பான புகார்கள் ஆழமான விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் போவதற்கு அடிப்படையாக உள்ளது.
தர்மஸ்தலா போன்ற அதிகாரம் மிக்க மத பீடங்கள் அவற்றின் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட வேண்டுமாயின் நேர்மையான ஒரு நீதி விசாரணையும் அதற்கு வெகு மக்களிடம் இருந்து போராட்ட அழுத்தமும் கட்டாய தேவை ஆகிறது. பக்தர்களிடமும் இருந்து கிடைக்கும் அபரிதமான மரியாதையை, அபரிதமான செல்வத்தை கொண்டு ஒரு மிகப்பெரும் அதிகாரத்தை கட்டமைத்துக் கொள்ளும் இந்த மத பீடங்கள் குற்றம் நடப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றை புனிதம், மதம் போன்ற மூடுதிரைகளுக்குப்பின் ஒளித்து வைத்துக் கொள்கின்றன. அதை மீறி புகார்கள் வந்தால் அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்கும் வழிமுறைகளையும் அரசியல் அதிகார தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. அது ஈஷாவோ, தர்மஸ்தலாவோ அல்லது மதுரை ஆதீனமோ இவற்றின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருப்பது மிக முக்கியமாக அவற்றின் சொத்துக்களே. சாதாரண உழைக்கும் மக்களான கோடிக்கணக்கான பக்தர்கள் அன்றாடங்காய்ச்சிகளாக தன் வாழ்க்கைத் தேவைகளுக்காக தினந்தோறும் அல்லற்பட்டு வரும் வேளையில் இந்த அதிகார பீடங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களில் மிதந்து கொண்டிருப்பது மிகப்பெரும் அநீதி. பக்தர்களுக்கும் மத நிர்வாகங்களுக்கும் இடையில் உள்ள இந்த அநீதியான ஏற்றத்தாழ்வே குற்ற விசாரணைகளுக்குத் தடையாக உள்ளது. கோயில், மடங்கள் உள்ளிட்ட மத நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அவற்றுக்கான சொத்துரிமையைத் தடை செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு நடக்கும் குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டு வர முடியும். இதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நாடு முழுவதும் கட்டமைக்க வேண்டும்.
- திருமுருகன்