திருநர்களின் சுயமரியாதையைக் கேள்விக்குள்ளாக்கும் பாசிச மோடி அரசின் புதிய சட்டத் திருத்தம்!

இதைதான் பேராசிரியர் அக்சா ஷேக்  தனது கட்டுரையில் “எங்களது பாலின அடையாளம், எங்கள் கால்களுக்கு இடையில் இல்லை. எங்கள் மனங்களில் உள்ளது” என்று கூறுகிறார்.

0
TRANSGENDER BILL, 2026
சுய அடையாளப்படுத்தல் அடிப்படை உரிமை

ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் போரின் காரணமாகவும், மோடி அரசின் தோல்வியுற்ற வெளியுறவுக் கொள்கை காரணமாகவும் எரிபொருள் இறக்குமதி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடப்படுகின்றன. சில உணவகங்கள் விறகடுப்புகளை நோக்கி பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளன. வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தாமதமாக வருகின்றன.

இப்படி நாடே நாளைய உணவுக்கு என்ன செய்வது என்ற பதட்டத்தில் இருக்கும்போது மோடி அரசு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இதை நிறைவேற்றியுள்ளது.

அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய திருநர் கவுன்சிலின் (NCTP) உறுப்பினர்களான கல்கி சுப்பிரமணியம் மற்றும் ரிதுபர்ணா நியோக் ஆகியோர் புதன்கிழமை (மார்ச் 26) மாலை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த மசோதா “பிற்போக்கானது” என்று விமர்சித்துள்ள அவர்கள், “எங்களைக் கலந்தாலோசிக்காத ஒரு கவுன்சிலில் நீடிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

திருநர் உரிமை பாதுகாப்புச் சட்டம் அல்ல,

உரிமைப் பறிப்புச் சட்டம்!

திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் மோடி அரசு 2019 ஆம் ஆண்டு தான் கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான திருத்தங்களைச் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் 2019 ஆம் ஆண்டு அந்த சட்டத்தை கொண்டு வர உந்துதலாக இருந்தது 2014 ஆம் ஆண்டு NALSA வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பாகும்.

அந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சம் “ தனது பாலினத்தைத் தீர்மானிப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. இதற்கு மருத்துவச் சான்றுகளோ, எந்த அரசாங்க சோதனைகளோ தேவையில்லை” என்பதாகும். இதைதான் தற்போது கேள்விக்குள்ளாக்கியுள்ளது திருநர் உரிமை பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2026.

அதில், திருநர்கள் தங்களின் பாலினத்தை அடையாளப்படுத்திக் கொள்ளும் உரிமை அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு மருத்துவக் குழுவினரே, திருநர்களின் பாலின அடையாளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, தன்னை திருநராக அறிவித்துக் கொள்ள  மருத்துவ குழுவிடம் சான்றிதழ் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதாகும். அதன் பிறகே, அவர்கள் திருநர்கள் என அங்கீகரிக்கப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படும்.

இங்கே நாம் இதை பொது பார்வையில் இருந்து பார்க்கும்போது சரிதானே எவர் ஒருவரும் தனது பாலினத்தை நிரூபிக்க வேண்டும் தானே என்று தோன்றலாம். ஆனால் அது பாலினம் பற்றிய அறிவு குறைபாட்டால் வரக்கூடிய புரிதல் ஆகும்.

பால் × பாலினம் (Sexuality Vs Gender)

ஒரு நபர் பிறக்கும்போது அவரது பிறப்புறுப்பு அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது SEX எனப்படும் பால் வகையாகும். ஒருவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்புறுப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம் என்பது ஆகும். அதிலே மிகவும் சொற்பமான எண்ணிக்கையில் நிகழக்கூடியது என்பதால் அதில் பெரும் கவனம் இருப்பதில்லை அதாவது இரு பாலுக்கும் உரிய குரோமோசம்கள், பாலுறுப்புகள் கொண்டவர்களாக பிறப்பது ஆகும். இவர்களையே நாம் மருத்துவ அடிப்படையில் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல என்று தீர்மானிக்க இயலும். இவர்களை Intersex என்று அழைப்பார்கள். இவர்கள் திருநர்கள் (Transgenders) அல்ல. இந்த நிலையில் Intersex பிரிவினரையும் திருநர்களையும் போட்டு குழப்பியுள்ளது மோடி அரசின் புதிய திருத்தச் சட்டம்.

திருநர்கள் எனப்படுபவர்கள் பிறக்கும் போது ஆண் அல்லது பெண் பாலுறுப்புடன் பிறந்திருந்தாலும் மாற்றுப்பாலினத்தவர்களாக உணர்ந்தால் அவர்களைத் திருநர் என்கிறோம். அவர்களை ஆண் என்றோ, பெண் என்றோ குறிப்பிடுவதில்லை. அதாவது ஒரு ஆண் பிறப்புறுப்புடன் பிறந்தவர் தன் வாழ்க்கைப் போக்கில் பெண்ணாக உணர்வதாக அறிவித்தால் எனில் அவரை திருநங்கை எனவும், ஒரு பெண் பாலுறுப்புடன் பிறந்தவர் தன் வாழ்க்கை போக்கில் தன்னை ஆணாக உணர்வதாக அறிவித்தால் அவரை திருநம்பி என்றும் அழைக்கிறோம். சிலர் இரு பாலினத்திலும் ஈர்ப்பு இல்லாதவர்களாக மாறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களைதான் திருநர்கள் என்கிறோம்.

படிக்க: ஒலிம்பிக்கில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது!  மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

இவர்களின் உணர்வுகளை சோதனை செய்ய எந்த மருத்துவ பரிசோதனை முறையும் இல்லை என்பதே உண்மையாகும். இதைதான் பேராசிரியர் அக்சா ஷேக்  தனது கட்டுரையில் “எங்களது பாலின அடையாளம், எங்கள் கால்களுக்கு இடையில் இல்லை. எங்கள் மனங்களில் உள்ளது” என்று கூறுகிறார்.

இதில் முக்கியமாக ஒருவரது உணர்வடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனில் பாலினத்தை குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படாதா அல்லது ஒருவர் ஏமாற்ற துணிய மாட்டாரா என்ற கேள்விகள் எழக்கூடும்.

ஒருவர் தன்னை திருநர் என அறிவித்துக் கொள்வது என்பது 2019 சட்டத்தின் அடிப்படையிலேயே தான் ஒரு திருநம்பி, திருநங்கை என எந்த வகையைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே அரசு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதை போகிற போக்கில் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியாது என்பதே எதார்த்தம்.

மேலும், ஒருவர் தன்னுடைய பாலினத்தை மருத்துவ ரீதியாக நிரூபிக்க கட்டாயப்படுத்தப்பட்ட இடங்களில் நடந்தவை பாலியல் வன்முறைகளுக்கு நிகரான வன்முறைகள் ஆகும். இந்த வன்முறைகளை எதிர்த்து பலகாலம் நடந்த போராட்டங்களின் விளைவுதான் 2014 ஆம் ஆண்டு கிடைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பாகும். அதனை இன்று பின்னுக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

குற்றமாக்கப்படும் திருநரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்!

இந்த சட்டத்தின் மிக முக்கியமான மோசமான அம்சமாக திருநர் என ஒருவரை அடையாளப்படுத்த ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றம் என வரையறுத்துள்ளது. அதற்கு காரணமாக ”வயது வந்தவர்களும் குழந்தைகளும் கடத்தப்பட்டு, கடுமையான உடல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் பல்வேறு விதமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, திருநர் அடையாளங்களை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பிற்காலத்தில் பிச்சை எடுத்தல் போன்ற செயல்கள் மூலம் அவர்களைச் சுரண்டுவதற்காகவே இது பெரும்பாலும் செய்யப்படுகிறது” என மிக கரிசனமாக கூறியுள்ளது.

ஆனால், உண்மையில், கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது என்ற பெயரில் ”கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்” கொண்டு வந்து கிறிஸ்துவ மத போதகர்களை வேட்டையாடுவது  போன்றே மிகவும் கயமைத்தனத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள சட்டமாகும்.  சமூக எதார்த்தத்தில் இருந்து பார்க்கும்போது ஏமாற்றுபவர்களைத் தடுப்பதை விட, திருநர்களுக்கு உதவுபவர்களையே தண்டிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எந்த ஒரு குடும்பமும் தன் வீட்டில்  தனது மகன் அல்லது மகள் இப்படி மாற்றுப் பாலினத்தவராக உணர்கிறார் என்பதை எளிதில் அங்கீகரிப்பதில்லை. மாறாக, ‘அறிவியல்பூர்வமான’ முறைகள் என்ற பெயரில் மருத்துவம் பார்ப்பதும், மூடநம்பிக்கையில் சாமியார்களிடம் செல்வதும் தான் நிகழ்கிறது. அதையும் தாண்டி போனால் அடித்து உதைத்து கட்டுப்படுத்துவது, வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பதே நிகழ்கிறது. இதனால்தான் 97 சதவீதம் திருநர்கள் தங்களுடைய சொந்த குடும்பத்துடன் இல்லை என்று பேராசிரியர் அக்சா ஷேக் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அல்லது குடும்பத்தால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் திருநர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் பெற்றுத் தர உடனிருப்பவர்கள் மீது அந்தக் குடும்பத்தார் இத்தகைய வழக்கைப் பதிவு செய்யும் அபாயம் உள்ளது.  இதன் மூலம், ஏற்கனவே சமூகத்தின் புறக்கணிப்பால் அல்லல்படும் திருநர் சமூக மக்கள் எந்த உதவிகளும் கிடைக்கப் பெறாத நிர்கதியான நிலைக்கு இந்த திருத்தச் சட்டம் மூலம் மோடி அரசு கொண்டு செல்கிறது.

இந்த சட்டத்தை ஆதரிக்கும் சங்கிகள் திருநர் என்ற பெயரில் போலியானவர்கள் அரசின் சலுகைகளை பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இந்த சட்டம் உதவும் என்று வியாக்யானம் செய்கின்றனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் சுமார் 4.87 லட்சம் மட்டுமே ஆகும். இதிலும் அரசின் நிதி உதவிகள் மற்றும் பிற சலுகைகள் கிடைக்கப்பெற்றவர்கள் வெகு சிலர் என்பதே எதார்த்தம். இதில் விதிமுறை மீறல்களை தடுக்கப் போவதாக  சப்பைக்கட்டு கட்டுகிறது சங்கி கும்பல்.

இதில் விதிமீறலையும், ஏமாற்றுபவர்களையும் தடுக்க போவதாக சொல்லும் மோடி அரசு ஏற்கனவே இந்திய மக்கள் அனைவரும் மீண்டும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்று  குடியுரிமை திருத்தச் சட்டம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் எனக் கொண்டு வந்து திணித்து தெருவில் நிற்க வைத்தது.  ரேஷன் பொருட்கள் உபயோகத்தில் நடக்கும் விதிமுறைகளைத் தடுக்க ஆதார் கார்டை ரேஷன் அட்டையுடன் இணைப்பது அவசியம். அப்படி இணைக்காதவர்களுக்கு ரேஷன் பொருள் இல்லை என்று கொண்டு வந்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டது.

அந்த வழியில் இன்று திருநர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் தவறாக போய் சேர்ந்து விடக்கூடாது என்ற பெயரில் திருநர்களின் சுயமரியாதையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது ஒன்றிய மோடி அரசு.

ஆர் எஸ் எஸ் பாஜக கட்டமைக்கத் துடிக்கும் இந்துராஷ்டிரத்தில் சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்படி உரிமைகள் இல்லையோ, அதேபோல திருநர்களுக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதையே இந்த சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த முயல்கிறது பாசிச மோடி அரசு.

சமூகத்தில் பின் தங்கியவர்களில் எல்லாம் பின் தங்கியவர்கள் ஆன திருநர் பிரிவு மக்களின் சுயமரியாதைக்காகவும், உரிமைகளுக்காகவும் இந்த புதிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் போராட்டத்தை நடத்துவது ஜனநாயக சக்திகளின் கடமையாகிறது.

இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், சிறுபான்மை மக்கள், திருநர்கள் என ஒவ்வொரு பிரிவினருக்கு எதிராகவும் சட்டங்களை இயற்றி வரும் பாசிச மோடி அரசை ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிவதும் அதனிடத்தில் மாற்று அரசியல், சமூக, பண்பாட்டுத் திட்டங்களுடன் கூடிய ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதே நம் முன் உள்ள தீர்வாகும்.

திருமுருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here