இந்தக் கட்டுரையில் முதல் பாகத்தில் ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை பற்றி முன் வைத்திருந்த விமர்சனம் பொருத்தமானது கிடையாது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இன்றைய முதலாளியம் என்ற நூலில் அவர் எழுதியதாக முன்வைக்கப்பட்ட வரிகள் அனைத்தும் ஏற்கனவே மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்பட்டு வரும் கோபட் காந்தியின் வரிகள் தான் என்று தோழர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். அது சரியானது தான். எனினும் கோபட் காந்தியின் கட்டுரையிலிருந்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான விமர்சனம் உள்ளடங்கிய பகுதியை எஸ்.வி.ராஜதுரை எடுத்து எழுதியதன் மூலம் அது அவருடைய கருத்தாகவும் உள்ளது என்ற அர்த்தத்தில் நாம் அவர் மீது விமர்சிக்கின்றோம்.
மற்றபடி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை பற்றி எஸ்விஆர் விளக்க குறிப்புகளுடன் எழுதிய நூலானது, 2014 ஆம் ஆண்டும், அதன்பிறகு 2023-ல் மறுபதிப்பாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய பங்களிப்புகளை நாம் மறுக்கவில்லை. எனினும் சாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான அவரது விமர்சனங்களுக்கு நாம் பதிலளிக்கின்றோம், கேள்வி யெழுப்புகின்றோம். அவர் நேர்மறையாக முன் வைக்கிறாரா? எதிர்மறையாக முன் வைக்கிறாரா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானதுதான்.
ஏகாதிபத்தியம் குறித்த ஆய்வுகள் தோழர் லெனின் காலத்திலும், அவருக்கு பிறகு தோழர் மாவோ காலத்திலும் அதன் பிறகு புதிய ஜனநாயகம் சார்ந்துள்ள இயக்கத்தின் மூலமாகவும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆய்வு செய்து முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் செய்யப்படுகின்ற இத்தகைய ஆய்வு முடிவுகள் சர்வதேச பார்வையின் அடிப்படையில் சர்வதேச போர்த்தந்திரம் மற்றும் எதிரிகள், நண்பர்கள் ஆகியவற்றை தீர்மானிப்பதற்கு இவை முக்கியமானது என்ற கண்ணோட்டத்திலேயே ஆய்வு முடிவுகள் வெளிவருகிறது. அதன்பிறகு அந்த அடிப்படையில் நடைமுறையிலும் குறிப்பான நாடுகளின் தவறுகள் அவற்றின் ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்திற்கு விளக்கப்படுகிறது. அவற்றின் ஆதிக்கத்திற்கு எதிராக போராட்ட இயக்கமாகவும் எடுக்கப்படுகிறது.
இவையெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்பதைப் போல மேற்படி ஆய்வாளர்கள் எழுதுவதும், கம்யூனிச இயக்கங்களின் மீது அவதூறு மற்றும் அவநம்பிக்கை பரப்புகின்ற நடவடிக்கை ஈடுபடுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஏகாதிபத்தியம் பற்றி மட்டுமல்ல! மார்க்சிய லெனினியத்தை பருண்மையான சூழலில் பருண்மையாக அமல்படுத்த வேண்டும் என்ற விஞ்ஞான கண்ணோட்டத்தை மறுக்கின்ற வகையில் பல்வேறு குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதே.
கட்சித் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் போன்றவை பற்றி ஒவ்வொரு மா.லெ குழுவும் தான் புரிந்துக் கொண்ட அடிப்படையில் முன்வைப்பதும், அதனடிப்படையில் செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதும் அவர்களது உரிமை என்ற போதிலும், பல்வேறு குழுக்களாக பிளவுபட்டு செயல்படுகின்ற சூழலில், அவர்களின் தவறுகளைப் பற்றி விமர்சிப்பதும், அதன் கீழ் உள்ள அணிகளை சரியான மா.லெ இயக்கத்தை நோக்கி செயல்படத் தூண்டுவதும் தவிர்க்க இயலாதது. அதைவிட அமைப்புசாரா மார்க்சிய ஆய்வாளர்களுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்ல முடியாது என்றே கருதுகிறோம்.
ஏகாதிபத்தியம் பற்றி முன்வைத்த தோழர் லெனின், ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்க புரட்சியும் என்ற சகாப்தத்திற்கான அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியிலான தீர்வுகளை முன்வைத்து சோசலிசப் புரட்சியை எந்த திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை பற்றிய ஆலோசனைகளையும் முன் வைத்தார் என்பது மட்டுமின்றி ருசியாவில் அதனை சாதித்தும் காட்டினார்.
”1905 ஆம் வருட ரசியப் புரட்சியும், விசேடமாக 1917 ஆம் வருட பிப்ரவரி புரட்சியும் சமூகத்தின் புதிய அரசாங்க ஸ்தாபன வடிவம் ஒன்றை முன் வைத்தன. அதுதான் தொழிலாளர் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத். இரண்டு புரட்சிகளின் அனுபவங்களை ஆய்ந்தறிந்ததன் பயனாக மார்க்சிசத்தை ஆதாரமாகக் கொண்டு லெனின் புதிய முடிவைக் கண்டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு மிகவும் உகந்த அரசாங்க வடிவம் சட்டசபை குடியரசு அல்ல; சோவியத்துக்களின் குடியரசே உகந்த அரசாங்க வடிவமாகும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த முடிவைக் கொண்டு 1917 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் முதலாளித்துவ புரட்சியிலிருந்து சோசலிச புரட்சிக்கு மாறுதல் அடைந்து சென்ற கட்டத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு ஏற்ற உன்னத அரசாங்க ஸ்தாபன வடிவம் சோவியத்துகளின் குடியரசு என்ற முழக்கத்தை வெளியிட்டார்”. என்கிறது போல்சவிக் கட்சியின் வரலாறு.
”ஆனால் இத்தகைய புதிய முடிவுகளை இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாத ஆதிக்கம் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஆனால் நடைமுறையில் அதுதான் ஆதிக்கம் வகித்தது. தோற்றத்தில் இரண்டாம் அகிலமானது, ”நம்பகமான விசுவாச” மார்க்சியவாதிகளாலும், ”வைதீக” மார்க்சியவாதிகள் என்று கருதப்பட்டவர்களாலும்தான்- காவுத்ஸ்கியாலும் இன்னும் அவரைப் போன்றவர்களாலும் தான் தலைமை தாங்கப்பட்டது. எப்படி இருப்பினும் இரண்டாம் அகிலத்தின் தலையாய வேலையானது சந்தர்ப்பவாத வழியை எதார்த்தத்தில் அடியொற்றியே சென்றது.
சந்தர்ப்பவாதிகள் தமது தொளதொளப்பான பண்பினாலும், குட்டி முதலாளித்துவ இயல்பினாலும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்ப தம்மை மாற்றியமைத்துக் கொண்டனர். ”வைதீக” மார்க்சியவாதிகளோ, தமது பங்கிற்கு என்ன செய்தனர் என்றால், சந்தர்ப்பவாதிகளுடன் ”ஐக்கியத்தை பேணுவதற்காகவும்” கட்சிக்குள் சமாதானத்தை காக்கும் நலன்களுக்காகவும், சந்தர்ப்பவாதிகளுக்கு தகவாக தம்மை மாற்றிக் கொண்டனர். இவ்வாறாக முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கைக்கும், ”வைதீக”வாதிகளின் கொள்கைக்கு இடையிலான பிணைப்பு முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. இதன் விளைவாக சந்தர்ப்பவாதத்தின் ஒப்புயர்வற்ற அதிகாரம் மேலோங்கி இருந்தது” என்கிறார் தோழர் ஸ்டாலின்.
நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி தற்போதையக் கட்டத்தில் மறுகாலனியாதிக்க வடிவத்தை கையாள்வது போல எதிர்காலத்தில் வேறொரு புதிய வடிவத்தை எடுக்கலாம் அல்லது அதற்கு முன்பாக புவிப்பரப்பிலிருந்து காலனியாதிக்கத்தை முற்றாக ஒழிக்கின்ற கம்யூனிச புரட்சி உலகம் முழுவதும் வெடிக்கலாம்.
ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் கொடூரமான சுரண்டலானது கார்ப்பரேட் முதலாளித்துவமாக இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. நிதி மூலதனத்தின் ஆகக் கேடான, ஆகப் படுமோசமான வடிவமான பாசிசத்தை இந்த கார்ப்பரேட் முதலாளித்துவம் உலகம் முழுவதும் தனது அரசியலாக முன் வைக்கிறது.
இந்திய நிலைமைகளில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு மேலிருந்து பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணியையும், கீழிருந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியையும் உருவாக்கி ஜனநாயக கூட்டரசு என்ற தற்காலிக புரட்சிகர அரசாங்கம் என்ற ஒரு இடைநிலை வடிவத்தை முன் வைத்தால், ”நாமோ சிறிய சக்தி” நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் நம்முடன் கூட்டு சேர்ந்து பாசிசத்தை வீழ்த்த வருவார்களா? கட்சிகளை விடுங்கள் மக்கள் நாம் முன் வைக்கும் அரசியலை ஏற்று நம்முடன் செயல்பட வருவார்களா? என்று அவநம்பிக்கை தெரிவிக்கின்ற குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாதிகள், இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளுக்கு இணையான, ”சமகால சந்தர்ப்பவாதிகள்” என்பதை சொல்லாமலே விளங்கிக் கொள்ள முடியும்.
இதனைப் பற்றி புரியும் வகையில் தோழர் ஸ்டாலின் லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து ரசியாவின் ஸ்வர்த்லோவ் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில் எடுத்துரைக்கின்றார்.
”இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகள் எண்ணற்ற பல வறட்டுக் கோட்பாடுகளை வைத்திருந்தனர். அவற்றை பல்லவி போல மீண்டும் மீண்டும் பாடினர். எப்போதும் அவற்றையே தமது தொடக்க புள்ளியாக கொண்டிருந்தனர். அவற்றில் ஒரு சிலவற்றை நாம் பரிசீலிப்போம்.
முதலாவது வறட்டுக் கோட்பாடு: இது பாட்டாளி வர்க்கம் எந்த நிலைமைகளில் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதைப் பற்றியது. நாட்டினுடைய மக்கள் தொகையில் பாட்டாளி வர்க்கமானது பெரும்பான்மையாகும் வரையில் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது. அப்படி கைப்பற்ற முயற்சிக்கவும் கூடாது என்று இந்த சந்தர்ப்பவாதிகள் அடித்து கூறுகின்றனர்.
இதற்கான நிரூபணங்கள் எவையும் அவர்களால் முன்வைக்கப்படவில்லை. ஏனென்றால் இதற்கு கோட்பாட்டு ரீதியான ஆதாரங்களோ நடைமுறை ரீதியிலான ஆதாரங்களோ எதுவும் கிடையாது. அது ஒரு அபத்தமான நகைப்புக்கிடமான ஆய்வுரை தான்.
இரண்டாம் அகிலத்தின் கனவான்கள் கூறுகின்றபடியே வைத்துக் கொண்டாலும் அதற்கான பதிலைக் கூறுகிறார் லெனின். ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிலைமை போர் அல்லது விவசாயத் துறையிலான அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலாக ஒரு நெருக்கடி எழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது மக்கள் தொகையில் ஒரு சிறுபான்மையாய் இருக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினரை தன்னை சூழ்ந்து அணிதிரட்டிக் கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட நிலையில் பாட்டாளி வர்க்கம் ஏன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றக் கூடாது.
மூலதனத்தின் அணி வரிசையை ஊடுருவித் தாக்கிப் பிளப்பதற்கும், முதலாளித்துவத்தின் பொது அழிவை விரைவுப்படுத்துவதற்குமான வாய்ப்பாக ஒரு குறிப்பிட்ட சர்வதேச மற்றும் தேசிய சூழ்நிலைமையை பாட்டாளி வர்க்கம் ஏன் தனக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ளக் கூடாது
முன்பொருமுறை நடந்தது போல, ”இரண்டாவது முறையாக விவசாயிகளின் போர்” ஒன்று நடக்குமானால் ஜெர்மனியில் அது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு உதவிகரமாக அமைந்து, புரட்சி ”புகழொளியுடன்” முன்னேறும் என்று நீண்ட காலத்துக்கு முன்னரே 1850 ஆம் ஆண்டுகளிலேயே மார்க்ஸ் சொல்லவில்லையா? 1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்ததை விட ஜெர்மனியில் அப்போது பாட்டாளிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டுரீதியில் மிகக்குறைவானதாக இருந்தது என்பது பொதுவாகவே நன்கறியப்பட்ட உண்மை இல்லையா?
இரண்டாம் அகிலத்தைச் சார்ந்த வீராதி வீரர்களுக்கு மிகவும் பிடித்தமான இந்த வறட்டு சூத்திரம், பாட்டாளி வர்க்கத்திற்கு உயிராதார முக்கியத்துவம் எதுமற்ற வெட்டிப் பேச்சு தான் என்பதை ரஷ்ய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நடைமுறை அனுபவம் தெளிவாக நிரூபித்துக் காட்டவில்லையா? பரந்துபட்ட மக்களின் புரட்சிகர போராட்ட நடைமுறை அனுபவமானது இந்த காலாவதியாகிய போன வறட்டுக் கோட்பாட்டை மறுத்து நிராகரிப்பதும், அடித்து நொறுக்குவதும் தெளிவாகத் தெரியவில்லையா?” என்கிறார் தோழர் ஸ்டாலின்.
படிக்க:
♦ ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!
♦ ”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்! பாகம் 2
இவ்வாறு மார்க்சிய லெனினிய அரசியலுக்கு எதிராக சந்தர்ப்பவாதத்தை முன்வைக்கின்ற பிரபலங்கள் மற்றும் குட்டி முதலாளித்துவ அறிஞர்கள், முகநூல் பக்கங்களில் புரட்சிக்கு தலைமை தாங்கத் துடிக்கின்ற, அமைப்பு சாராத ’ஒண்டிக் கம்யூனிஸ்டுகள்’ போன்ற அனைவரையும் பற்றி இவ்வாறு எழுதுவது அவர்களுடன் ஐக்கியத்தை பாதிக்காதா? என்று சிலர் கேட்கலாம்.
மார்க்சியத்தின் மீது நம்பிக்கை கொண்டு புரட்சிகர அமைப்புகளில் ஒன்றிணைந்து செயல்பட முன்வருகின்ற இளைஞர்களையும், ஓரளவுக்கு புத்தகங்களை வாசிக்கின்ற, சித்தாந்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளைஞர்களையும் தேடிப்பிடித்து விரையடிக்கின்ற வேலை செய்து வருகின்ற இத்தகைய அமைப்பு சாரா மார்க்சியர்களுக்கு பொருத்தமான பதிலை பொது வெளியில் தெரிவிப்பதன் மூலமே அவர்களின், ’தலைக் கனத்திற்கும்’, மார்க்சியத்தின் மீதும், புரட்சிகர அமைப்புகளின் மீதும் அவர்கள் பரப்புகின்ற அவதூறுகளுக்கும் பதிலடி கொடுக்க முடியும் என்றே கருதுகிறோம்.
– தொடரும்.
◾ஆல்பர்ட்
புதிய ஜனநாயகம் தினசரி






