”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!

”மார்க்சியமும், பிழைப்புவாதமும்!” தத்துவ மாரீசன்களை விரட்டியடிப்போம்!
முதலாளித்துவ வளர்ச்சி போக்கு படிப்படியாக ஏகபோகமாக பரிணாம வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் இத்தகைய புதிய தன்மை பற்றி புரிந்து கொள்ள முடியாத மேற்படி நபர்கள் மார்க்சிய சித்தாந்தத்தின் மீது தாக்குதலை தொடுத்தனர்.

மிழகத்தில் 40 ஆண்டுகளாக பிளவுபடாமல் இடது மற்றும் வலது சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராக கடுமையாக போராடி சமரசமற்ற வழிமுறையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை திரட்டி வந்த புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 2021 ஆம் ஆண்டு உட்கட்சிக்குள் தோன்றிய அதிகார வர்க்க தவறுகளினால் பிளவு பட்டது.

இந்தப் பிளவைக் கண்டு உண்மையிலேயே மனப்பூர்வமாக வருந்தியவர்கள் மீண்டும் பிளவுபட்ட கட்சியானது ஒன்றிணைய வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அமைப்பு ரீதியாகவும் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அதிகார வர்க்க மனோபாவத்தில் இருந்து உருவாகிய தவறான அரசியல், சித்தாந்த வேறுபாடுகள் என்ற அடித்தளத்திலிருந்து வேறொரு பரிமாணத்திற்கு சென்றது என்பதால் அரசியல் ரீதியிலாக இது பற்றி ஒரு முடிவுக்கு வராமல் ஒன்றுபடுவது சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

இந்த காலகட்டத்தில், ”யானை படுத்திருக்கும் போது அது குதிரை மட்டம்” என்பதைப் போல அதுவரை சித்தாந்த ரீதியாக மார்க்சியத்தின் மீதும் நக்சல்பரி அமைப்புகளின் மீதும் விமர்சனங்களை முன்வைக்க தயங்கி வந்த பல்வேறு தனிநபர்கள், இனவாதிகள் துவங்கி அரசியல் பிழைப்புவாதிகள் வரை அனைவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக புரட்சிகர அமைப்புகளின் மீதும் மார்க்சிய லெனினிசத்தின் மீதும் நக்சல்பாரி அரசியலின் மீதும் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர்.

இனிமேல் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு எதிராக முதலாளித்துவ சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு நேருக்கு நேர் மோதி வீழ்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்த ஏகாதிபத்திய முதலாளிகள் தனது ஏஜெண்டுகளையும் கூலிப் பிரச்சாரகர்களையும் மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு எதிராக செயல்பட வைத்தது. அவ்வாறு செயல்பட்ட போக்குகளில் ஒன்று செங்கொடியை ஏந்தி கொண்டு செங்கொடிக்கு எதிராக வேலை செய்கின்ற கடைந்தெடுத்த மார்க்சிய பிழைப்புவாத அரசியலாகும்.

உலக தழுவிய நிதி மூலதனத்தின் போக்கில் அவ்வப்போது ஏற்படக்கூடிய மாற்றங்கள்; நிதி மூலதனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிப் போக்கு; அது கண்டம் விட்டு கண்டம் தாவக்கூடிய நிலையில் உள்ள தன்மைகள்; அவை கட்டுப்படுத்துகின்ற மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் ஆகியவற்றின் புதிய, புதிய கூட்டமைப்புகள் ஆகியவற்றை பற்றி மார்க்சிய லெனினிய அமைப்புகள் ஆய்வு செய்து அவ்வப்போது வெளியிடுகின்றன. தனது அணிகளையும் இந்த அரசியல், சித்தாந்தக் கண்ணோட்டத்திலேயே பயிற்றுவிக்கின்றன.

ஆனால் அமைப்புகளுக்குள் நின்று செயல்படுவதற்கு தன்னை பணித்துக் கொள்ளாத தன்னகங்கார பேர்வழிகளாகவும், உலகம் முழுவதும் நடக்கின்ற பல்வேறு ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசியல், பொருளாதார போக்குகளை பற்றி முதலாளித்துவ கூலி எழுத்தாளர்கள் எழுதும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் இருந்து படிப்பதற்கு ’மேன்மையான அறிவு படைத்துள்ள’ காரணத்தினாலேயே மார்க்சிய லெனினிய அமைப்புகளின் மீதும் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதும் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர் கலைப்புவாதிகளாகவும், பிழைப்புவாதிகளாகவும் சீரழிந்துள்ள குட்டி முதலாளித்துவ ஆய்வாளர்கள்.

படிக்க:

 மே 5: பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் காரல் மார்க்சின் 207ஆவது பிறந்த தினம்.

♥ ஜூலியஸ் பூசிக் நினைவு நாளில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உறுதி ஏற்போம்!

மார்க்சியத்தை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக பயன்படுத்துகின்றனர் புரட்சியாளர்கள். ஆனால் மார்க்சியத்தை வெறும் படிப்பறைவாதமாகவும், ஆசான்களின் மேற்கோள்களை கொண்ட கலைக்களஞ்சியமாகவும் பயன்படுத்துகின்ற மார்க்சிய பிழைப்புவாதிகள், வீரியமிக்க சொற்றொடர்கள் மூலம் மார்க்சியத்தை அமல்படுத்துவதாக கூறிக் கொண்டு அதற்கு எதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் சேவையில் இறங்குகின்றனர்.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு அதன் சமகாலத்தில் இந்தியாவில் புகுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கப் போக்குகளுக்கு எதிராக போராடுபவர்களை குழப்பியடிக்க பின் நவீனத்துவம் என்ற மார்க்சிய விரோத அரசியலை முன்வைத்த சதிகாரர்கள், துரோகிகள் தற்போது 2008 ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு பிறகு புதிய வடிவத்தில் மார்க்சிய லெனினிசத்திற்கு எதிரான தாக்குதலில் இறங்கியுள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டாக 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் எஸ்வி ராஜதுரை எழுதிய, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: இன்றைய முதலாளியம். என்கின்ற நூலொன்றில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

”எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவை சட்டபூர்வமாக இயங்குகின்றவையாகவோ, சட்டத்திற்கு புறம்பாக இயங்குகின்றவையாகவோ இருக்கலாம். அரசியல் ரீதியில் மெல்ல, மெல்ல முடிவை நோக்கி செல்லும் அளவுக்கு சரிந்து கொண்டிருக்கின்றன. இது சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் இருக்கின்ற நிலை. இது அமைப்பு ரீதியான சரிவு மட்டுமல்ல. அமைப்பு ரீதியாக அவை முக்கியத்துவமற்றவையாகிவிட்டன. இதைவிடக் கூடுதலாக கருத்துநிலை ரீதியாகவும் சரிந்து விட்டன. அவற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான தேக்க நிலையை எதிர்கொள்வதற்கு புதிய மற்றும் ஆக்கபூர்வமான விஷயங்கள் எதையும் பரிசீலிக்க இயலாதவர் ஆகிவிட்டன.

அவை ஒன்று, இறுக்கமான நிலைப்பாடு வறட்டுவாதம், வழக்கமாக செய்து வந்ததையே திரும்பத் திரும்பச் செய்தல். உலகில் மாற்றம் ஏதும் நிகழாதது போல செயல்படுதல் ஆகியவற்றின் மீதோ அல்லது தோல்வி மனப்பான்மையின் மீதும் சாய்ந்துகொள்கின்றவையாக இருக்கின்றன. தங்களுக்கு நேர்ந்த பரிதாபத்துக்குரிய நிலைமைகளை பார்த்து சில கட்சிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றன; மற்றவையோ, ’பூசாரி தினந்தோறும் கோவிலுக்கு சென்று மணியடிப்பது போல’ பழக்கப்பட்டுப்போன அன்றாட வேலைகளை செய்து கொண்டு ஒரே வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வருகின்றன.

வேறு சில கட்சிகளோ நம்பிக்கை இழக்கும் போக்குடையவையாகவும், ஆக்கபூர்வமான சிந்தனைகள் என்று அவர்களால் உரிமை கொண்டாடப்படுவதும், சிறு குழுவுக்கு மட்டுமே புரியக்கூடியதுமான கருத்துக்களை மார்க்சியத்தின் பெயரால்-மார்க்சியத்தின் சாரமான வர்க்கப் போராட்டம், சோசலிச மாற்றம் ஆகியவற்றை களைந்தெறிந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன”. என்று பின் நவீனத்துவ அரசியலில் இருந்து தாவிக் குதித்து, மார்க்சியத்திற்கு திரும்பிவிட்டேன் என்று அறிவித்துக் கொண்ட பிறகு ஆய்வுக் களத்தில் குதித்துள்ள எஸ்வி ராஜதுரையார் மார்க்சிய லெனினிய அமைப்புகளுக்கு வகுப்பெடுக்கிறார்.

’நான் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனால் எல்லா அமைப்பிற்கும் பொதுவானவன்.’ என்று மென்மையாகவும், எல்லா அமைப்பிற்கும் மேலானவன் எவனும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று அமைப்புகளுக்கு மேலே நின்று எந்த வழியில் செயல்பட வேண்டும். புரட்சியை எவ்வாறு நடத்த வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருக்கும் எஸ்விஆர்-ஐ சந்தித்த, மாஜிப் புரட்சியாளர் ஒருவர், ”தங்களை புரிந்துக் கொள்ள முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று நொந்து கொண்டாராம்.. நல்ல வேடிக்கைதான்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்குகளை புரிந்துக் கொள்ள முடியாத குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிகள் மற்றும் மார்க்சியத்தின் பெயரால் பிழைப்பு நடத்துகின்ற பல்வேறு பிழைப்புவாதிகள் காலந்தோறும் தொடுத்து வருகின்ற தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் மார்க்சியம் எல்லா காலத்திற்கும் பொருத்தமான சித்தாந்தம் அல்ல என்பதுதான்.

முதலாளித்துவ வளர்ச்சி போக்கு படிப்படியாக ஏகபோகமாக பரிணாம வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் முதலாளித்துவத்தின் இத்தகைய புதிய தன்மை பற்றி புரிந்து கொள்ள முடியாத மேற்படி நபர்கள் மார்க்சிய சித்தாந்தத்தின் மீது தாக்குதலை தொடுத்தனர்.

ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சிப் போக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்த தோழர் லெனின் 1899 வாக்கிலேயே இவர்களை அம்பலப்படுத்தி தோலுரித்து, நமது வேலை திட்டம் என்ற கட்டுரையில் கீழ்கண்டவாறு முன் வைத்துள்ளார்.

”தற்போது சர்வதேச சமூக – ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இதுகாறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக-ஜனநாயகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக – ஜனநாயகக் கொள்கை முழக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக – ஜனநாயகவாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.”

“நாம் முற்றிலும் மார்க்சியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன் முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது; இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று. தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது. சொத்துடைமையற்ற இலட்சோப இலட்சக்கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவது என்பதை விளக்கியதன் மூலம், நவீன கால முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று. நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே, பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிச சமுதாய அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக் காட்டிற்று.

வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள் அரசியல் சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களான சட்டங்கள், கடுஞ்சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றின் புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமையற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்குமிடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது.

புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று: சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும், சோஷலிசச் சமுதாயம் ஒழுங்கமைக்கப்படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று” என்று முன் வைத்துள்ளார்..

தொடரும்…

1 COMMENT

  1. ஒரு கட்சி அமைப்பு வடிவம் அரசியல் மாற்றத்திற்க்கான திட்டம் என எதுவும் இல்லாதவர் மார்க்ஸின் அண்ணன்கள்தான் என்ற கற்பனை அதனால் வரும் விளைவுகள் தான் இது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here