அதிகரிக்கும் வேலை நேரம்!
தீவிரமாகும் உழைப்புச் சுரண்டல்!
ஜூலை-9 பொது வேலை நிறுத்தத்தை
அரசியல் போராட்டக் களமாக்குவோம்!


ந்தியாவில் வாழும் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாட்டின் மக்கள் முடிவு செய்வதில்லை. மக்கள் கேளாத ஒன்றை, மக்களுக்கு எதிரான ஒன்றை, ஏகாதிபத்திய கும்பலின் நலனுக்காக சட்டமாக்கி அல்லது ஏற்கனவே உள்ள சட்டத்தை திருத்தி மக்களை வதைக்கிறது பாசிச மோடி அரசு. அதற்கு எதிரான போராட்டங்களின் வீரியத்தை உணர்ந்து சற்று பின்வாங்குகிறது, அல்லது வேறு வழியில் நடைமுறைப்படுத்துகிறது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டதற்கு பின் தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டலும் அதிகரித்து வருகிறது. 90-களுக்கு பிறகு காங்கிரசும், பாஜகவும் முதலாளித்துவ சேவையில் தீவிரமாக இறங்கி செயல்பட ஆரம்பித்தன. ஏகாதிபத்திய நிதிமூலதன கும்பலின் சுரண்டலுக்கேற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது 2014 ஆட்சிப் பொறுப்பேற்ற பாசிச பாஜக தனது முதலாளித்துவ விசுவாசத்தை காட்ட தொழிலாளர்களுக்கு எதிரான வேலைகளை மின்னல் வேகத்தில் கொண்டுச் சென்றது என்றே கூற வேண்டும்.

கார்ப்பரேட் பாசிசத்தை தீவிரமாக்கும் பாஜக!
திருத்தப்படும் தொழிலாளர் நலச்சட்டங்கள்!

ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்கு – மோடி மொழியில் கூற வேண்டுமானால் ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு’ தொழிலாளர் சட்டங்கள் தான் இடையூறாக இருப்பதாக அச்சட்டங்களை 2014 ஆண்டிலேயே திருத்த துவங்கியது பாசிச மோடி அரசு. முதல் கட்டமாக தொழிற்சாலைகள் சட்டம், பயிற்சி தொழிலாளர்கள்(Apprentice) சட்டம், ஆலைகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தருதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்த சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்ய திட்டமிட்டது. மேற்படி திருத்தங்களை சட்ட திருத்த மசோதாவாக இரண்டு நாட்களுக்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரவேண்டும் என்ற விதியை துச்சமாக மதித்து அவசர அவசரமாக மசோதாக்களை தாக்கல் செய்தது.

இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக பணிநிரந்தரம் ஒழிக்கப்படும், காண்ட்ராக்ட் முறை நிரந்தரமாகும், தொழிற்சாலை ஆய்வாளரின் அதிகாரம் பறிக்கப்படும், பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் அதிகமாகும், வேலை நேரம் அதிகரிக்கும். இதனை அம்பலப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களை திரட்டி எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போராட்டங்களை நடத்தியது.

அடுத்த வருடமே அதாவது 2015 செப்டம்பர் 2 அன்று மோடி தலைமையிலான பாசிச அரசு தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்தும் 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றும் நடவடிக்கையை கண்டித்தும் உரிமையைப் பறிக்காதே இந்த அரசிடம் கெஞ்சி பயனில்லை. மாறாக தொழிலாளி வர்க்கம் தன்னுடைய அதிகாரத்துக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அறைகூவல் விடுத்து பாசிச மோடி அரசு முன்மொழிந்துள்ள தொழிலுறவு சட்டத்தொகுப்பு மசோதாவை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. அடுத்த வருடமும் அதே செப்டம்பர் 2 அகில இந்திய வேலைநிறுத்தத்தில் கலந்துக் கொண்டு தொழிலாளர்களுக்கு வர்க்க அரசியலை ஊட்டியது.

அதன்பின்பு நடந்த தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் பாசிச மோடி அரசை அசைத்துப் பார்க்கவில்லை. கடந்த 2019-2020-ல் நாடாளுமன்றத்தில் தனது அசுர பலத்தை பயன்படுத்திக் கொண்டு 44 தொழிலாளர் சட்டங்களை 4 புதிய சட்டக் குறியீடுகளாக(Labour Codes) மாற்றி அமல்படுத்தும் நடவடிக்கைகளை 2022 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள் குஜராத், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகண்ட், உத்திரபிரதேசம் ஆகியவற்றில் இந்த சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அம்மாநிலங்களில் 10, 12 மணி நேர வேலைகள் நடைமுறையில் உள்ளன.

படிக்க: 8 மணிநேர வேலையை ஒழித்து கட்ட ஒன்றுகூடும் கார்ப்பரேட்டு முதலாளிகள்!

தமிழ்நாட்டில் திமுக அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்டத்தில் பிரிவு 65 ஏ திருத்தமாக அறிமுகப்படுத்தியது. அதாவது பாஜக அல்லாத மாநிலமாக தமிழ்நாட்டில் தொழிலாளர் சட்டத்திருத்தை அமல்படுத்த முனைந்தது. எட்டுமணி நேர வேலையை பறித்து 12 மணி நேரமாக்கி தனது கார்ப்பரேட் விசுவாசத்தை காட்டியது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு உருவான நிலையில் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அமல்படுத்தத் துவங்கியுள்ளன.

கர்நாடகாவில் 12 மணி நேர வேலைக்கு எதிரான
தொழிலாளர்கள் போராட்டம்!

ஆந்திராவில் பாஜக கூட்டணி அரசான சந்திரபாபுநாயுடுவின் அரசு ‘Factories (Andhra Pradesh Amendment) Bill, 2025’ எனப்படும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தின் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 மணி நேரம் வேலைச் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. இதனை ஏற்கனவே புதிய ஜனநாயகத்தில் அம்பலப்படுத்தி எழுதியிருந்தோம். தற்போது கர்நாடகாவில் 12 மணிநேர வேலை நேரத்தை அறிமுகப்படுத்த கர்நாடக அரசு முன்மொழிந்துள்ளது. இந்த முன்மொழிதலுக்கு எதிரான போராட்டங்கள் கர்நாடகா மாநிலத்தில் வழுத்துள்ளது.

கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961-ஐ திருத்தும் கர்நாடக அரசின் முன்மொழிவு தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கவும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்கவும் வகை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 8 மணி நேர வேலை ஒழிக்கப்பட்டு 9 மணி நேரமாக இருந்ததை 10 மணி நேரமாக மாற்றி, கூடுதல் 2 மணி (ஓவர்டைம்) நேரம் வேலை வாங்கலாம் என திருத்தியுள்ளது. இந்த திருத்தம், ஏற்கனவே 3 மாதங்களுக்கு 50 மணி நேரம் ஓவர்டைம் பார்க்கலாம் என்றிருந்ததை 144 மணி நேரமாக உயர்த்தவும் பரிந்துரைக்கிறது. இந்த முடிவானது பாஜகவின் தொழிலாளர் சட்டத்திருத்தத்திற்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

படிக்க: 90 மணி நேரம் உழையுங்கள்! தொழிலாளிகளைச் சுரண்டிக்கொழுக்கும் மற்றுமொரு கார்ப்பரேட் கொடுங்கோலனின் குரல்!

கர்நாடக தலைநகரமான பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவில் முன்னணி நகரமாக உள்ளது. அதனால் தான் “இந்தியாவின் சிலிகான் வேலி” என்று அழைக்கப்படுகிறது. ‘70 மணி நேர வேலை புகழ்’ நாரயண மூர்த்தியின் இன்போசிஸ், அசிம் பிரேம்ஜியின் விப்ரோ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கு தான் உள்ளது. அதிகமான தொழில்நுட்ப ஊழியர்கள் பணிபுரியும் பெங்களூருவில் தற்போது வேலையிழப்பு அதிகரித்து வருவதற்கான காரணம், வேலை நேரத்தை அதிகரித்தது தான். மேலும் வேலை நேரத்தை அதிகரிப்பதனால் இந்த எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

ஐடி ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளா?

தொழிலாளர் சட்டத்திருத்தம் வேலை நேரம் அதிகரிப்பு இவையெல்லாம் முதலாளித்துவ நலனுக்காக செய்யப்படுவதை அனைவரும் அறிவர். சில மாதங்களுக்கு முன்னர் இன்போசிஸ் நாராயண மூர்த்தி கூறிய 70 மணி நேர வேலை நேரத்தை நோக்கி கர்நாடக அரசு நகர்கிறது. கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கம் (KITU) இது ஓரு நவீன கால அடிமைத்துவத்தின் வடிவம் என்று விமர்சித்துள்ளது. அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமையை விட பெருநிறுவனங்களின் லாபத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டியது.

ஏற்கனவே ஐடி ஊழியர்கள் மூன்று சிப்ட்களில் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். 12 மணி நேர வேலை எனும் போது 2 சிப்டுகளாக குறைக்கப்படும். இதனால் ஒரு சிப்டில் பணிபுரியக் கூடிய அனைவரும் வேலையை இழக்க நேரிடும். இது வேலையின்மை அதிகரிக்கும். இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியக் கூடியவர்கள் 90 சதவீதத்திற்க்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் ஏற்கனவே நிரந்தரமற்ற கடுமையான வேலை, குறைவான கூலி, நிச்சயமற்ற வாழ்க்கை என பல்வேறு மன அழுத்தங்களில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படியான சட்டத்திருத்தங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர குழிப்பறிக்கும் செயலாகும். மேலும் பணியிடத்தில் கொடுக்கப்படும் நெருக்கடி, தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஊழியர்களை கண்காணிப்பது என மனரீதியான பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற ஐடி நிறுவனங்கள்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வீட்டிலேயே வேலை செய்யப் பணிக்கப்பட்டார்கள் ஐடி ஊழியர்கள். அந்நேரத்தில் 8 மணி நேரம் என்றில்லாமல் 12 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. பலர் வேலையை விட்டு வெளியேறிய சம்பவங்களும் நடந்தேறின. வேறு வழி தெரியாமல் குடும்ப கஷ்டங்களை நினைத்துக் கொண்டு பலர் தொடர்ந்து பணியாற்றினார்கள். இப்போது அதனை சட்டமாகவே ஆக்கிவிட முனைகிறார்கள். எல்&டி நிறுவனத்தின் எஸ்.என்.சுப்பிரமணியன் கூறியது போல் இனி குடும்பத்துடனோ, குழந்தைகளுடனோ நேரத்தை செலவிட கூடாது என்கிறது முதலாளித்துவம்.

12 மணி நேர வேலை என்பது ஊழியர்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் அடிமையாக்கிவிடும். முதலாளித்துவம் தனது லாப நோக்கிற்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமையாக்க, பாஜக செய்த சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து விட்டு சட்டமன்றத்தில் நடைமுறைப் படுத்துகிறது காங்கிரஸ். கூடுதல் நேரம் வேலை செய்வதால் தொழிலாளர்கள் உடலளவில் படும் துன்பங்கள் குறித்து அரசுக்கும் முதலாளிகளுக்கும் எந்த கவலையும் இல்லை. மார்க்ஸ் கூறுவது போல் உழைப்பை விற்பவனுக்கும் வாங்குபவனுக்குமான உறவாகவே முதலாளித்துவம் பார்க்கிறது. உலகளவில் ஐரோப்பாவில் 8 மணி வேலை நேரத்தை 7 மணி நேரமாக குறைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் வேலை நேரத்தை அதிகரித்து முதலாளித்துவத்தின் அதீத சுரண்டலுக்கு வழிவகுக்கின்றன ஆளும் வர்க்கங்கள்.

ஜூலை 9 வேலை நிறுத்தமும்
அதற்கான தேவையும்!

படித்த இளைஞர்கள் குறைவான கூலிக்கு அதீத சுரண்டலுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். படித்த படிப்பிற்கு வேலையில்லாமல் கிக் தொழிலாளர்களாக பொதி மூட்டையை சுமந்துக் கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அங்கும் அவர்களுக்கு பணி பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பலர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கிடைக்கும் வேலையை பார்த்துக் கொண்டு கால்வயிற்று கஞ்சிக்கு அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க: ஆந்திராவில் 10 மணி நேர வேலை தொழிலாளர் வர்க்கத்திற்கு விடப்பட்டுள்ள சவால்!

வேலைநேரத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட் சேவையின் மூலம் வேலையின்மையையும், மக்களை வறுமையிலும் தள்ளிக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு. உழைப்புச் சுரண்டல் தீவிரப்படுத்துவதன் காரணமாக முதலாளித்துவ கும்பல் கொள்ளை லாபம் ஈட்டுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கு வேலையின்மை அதிகரித்து தொழிலாளி வர்க்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாய் நாடோடியாய் அலைந்துக் கொண்டிருக்கிறது. இந்திய முதலாளிகள் உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைக்கப்படுகிறார்கள். இந்திய உழைக்கும் வர்க்கமோ நடுத்தெருவில் நிறுத்தப்படுகிறது.

இப்படியான சூழலில் தான் வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி 29 தொழிலாளர் சட்டங்களில் செய்யப்பட்ட தொழிலாளர் விரோத திருத்தங்களையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு தொழிலாளர் குறியீடுகளையும்(Labour Codes) ரத்து செய்யக் கோரி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுமட்டுமல்லாமல் தேசிய குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 ஊதியத்தை அமல்படுத்துதல், மாநில சொத்துக்களை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் உணவு, மருந்துகள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டியை நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய 21 கோரிக்கைகள் கொண்ட பட்டியலையும் முன்வைக்கிறது தொழிற்சங்க கூட்டமைப்புகள். இதனை முன்னிறுத்தியே இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இப்படியான போராட்டங்கள் காலத்தின் தேவையாய் மாறியுள்ளது.

கடந்த காலங்களில் நடைப்பெற்ற இது போன்ற போராட்டங்கள் எதிர்ப்பை மட்டுமே பதிவு செய்தன. மாறாக பாசிஸ்டுகளை உலுக்கும் விதமாக போராட்டங்கள் கட்டமைக்கப்படவில்லை. முதலாளித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே பெரும்பாலான வேலை நிறுத்தங்கள் நடைபெறுகின்றன. வேலைநிறுத்த நாளை விடுப்பு நாளாகவும் அதற்கு மாற்று வேலை நாளை திட்டமிட்டுக் கொண்டு விடுமுறையை அறிவிக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். அதற்கு சில தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்கின்றன. இப்படியான போராட்டங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பெரும்பாலும் பயிற்சி தொழிலாளர்களும், ஒப்பந்த தொழிலாளர்களுமே உற்பத்தியை கட்டுப்படுத்துகிறார்கள். நிரந்தர தொழிலாளர்கள் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளார்கள். பெரும்பாலான தொழிற்சங்கங்களும் நிரந்தர தொழிலாளர்களுக்காகவே நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் நிரந்தர தொழிலாளர்களும் அமைப்புச்சாரா தொழிலாளர்களும் கலந்துக் கொள்வார்களே தவிர நேரடியாக இந்த முதலாளித்துவத்தால் கொடூர சுரண்டலுக்கு ஆட்படும் பெரும்பான்மை தொழிலாளி வர்க்கம் கலந்துக் கொள்வது தடைபடுகிறது. அவர்களையும் இணைத்து போராட தொழிற்சங்கங்கள் முயல வேண்டும்.

தொழிலாளர்களை அரசியல்படுத்துவோம்!
தொழிலாளர்களை ஒன்றிணைப்போம்!

“ஒவ்வொரு வேலைநிறுத்தமும் அரசாங்கம் தொழிலாளர்களின் எதிரி என்பதையும், மக்களின் உரிமைகளுக்காக அரசாங்கத்திற்கு எதிராகப் போராட தொழிலாளர் வர்க்கம் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வாறு வலுப்படுத்துகிறது மற்றும் வளர்க்கிறது” என்பதை “வேலைநிறுத்தங்கள் குறித்து” கட்டுரையில் தோழர் லெனின் வலியுறுத்தினார். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கையோடு அரசியல் கோரிக்கையை இணைக்க வேண்டும்.

“வேலை நேரத்தை குறைத்தல், ஊதிய உயர்வு பெறுதல் போன்ற பொருளாதார கோரிக்கைகளோடு மட்டும் நமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வலது திருத்தல்வாதிகளை லெனின் கண்டித்தார். தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கு நாம் பாடுபட வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நமது முக்கிய கடமை அரசியல் புரட்சிப் போராட்டமே என்பதை மறந்துவிடக் கூடாது. தொழிலாளர்களை படிப்படியாகப் புரட்சியாளர்களாக வளர்த்து உயர்த்த வேண்டும். அவர்களை வெறும் பொருளாதாரத்தில் வீழ்ந்துக் கிடக்கும் “தொழிலாளர் மக்கள் திரள்” என்று தரம் சரியும் வகையில் செயல்படுத்தக் கூடாது” என்கிறார் தோழர் லெனின்.

இந்தியாவில் அடிமைப்பட்டு கிடக்கும் தொழிலாளி வர்க்கம் பொருளாதார கோரிக்கையையின் ஊடாகவே அரசியல்படுத்தப்பட வேண்டும். பாட்டாளி வர்க்க ஆசான் காரல்மார்க்ஸ் கூறியது போல தொழிற்சங்கங்கள் கம்யூனிசத்தின் பள்ளிகளாக செயல்பட வேண்டும். அப்பொழுது தான் நிரந்தர தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் தொழிலாளி வர்க்கம் ஒரே குடையின் ஒன்று திரளவும், மக்களை ஒன்று திரட்டும் வேலைகளிலும் ஈடுபடும். இப்படியாக அரசியலாக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் காவிப் பாசிஸ்டுகளை மட்டுமல்ல உலகையே ஆட்டிப்படைக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கும் முடிவுக் கட்டும். ஜூலை 9 வேலை நிறுத்தத்தை அப்படியான பாதையில் கொண்டு செல்வோம்.

  • மாரிமுத்து

புதிய ஜனநாயகம் 2025 ஜூலை இதழ்

1 COMMENT

  1. ஜுலை 9 அகில இந்திய தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும் வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள் தோழரே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here