காந்தாரா: சேப்டர் 1 பொதுவில் கொடுத்த காசுக்கு பொழுது போக வேண்டும் என்று வருபவர்கள் கொண்டாட கூடிய படம். சமூக அக்கறை கொண்டவர்கள் இப்படம் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கையுடன் அலசி பார்க்க வேண்டிய படமும் கூட.
அசைவம் சாப்பிட்டு விட்டு தியேட்டருக்கு வரக் கூடாதா?
காந்தாரா சாப்டர் ஒன் படம் வரும்பொழுது சர்ச்சையும் சேர்த்துக் கொண்டு வந்தது. படக்குழுவின் பெயரில் ஒரு போஸ்டர் வெளியாகி அது வைரலானது. அந்த போஸ்டரில் படம் பார்க்க வருபவர்கள் மது அருந்தக்கூடாது; புகை பிடிக்கக் கூடாது; அசைவம் உண்டிருக்கக் கூடாது என்று நிபந்தனைகள் விதித்தது. இதுகுறித்து விமர்சனங்கள் வலுத்தவுடன் ” இப்படி ஒரு போஸ்டரை நாங்கள் வெளியிடவில்லை” என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்து விட்டனர்.
கடந்த இரண்டாம் தேதி படம் ரிலீஸ் ஆகி திரையில் ஓடிக் கொண்டுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடையையும் விஞ்சி வசூலில் சாதனை படைத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. திரையரங்குகளில் இருந்து வெளியே வரும் ரசிகர்களிடம் எடுக்கப்படும் பேட்டிகளும் படம் பிரமாதம், ஆக ஓகோ என்று அவர்கள் மெச்சிப் புகழ்வதும்கூட வெளிவருகிறது.
அறிவை மழுங்கடிக்கும் கலைப் படைப்பு!
அடர்ந்த காட்டிற்குள் உலோகங்களை கண்டறிந்திராத கல்லாயுதங்களை பயன்படுத்தும் ஒரு இனக்குழு. அதன் அக்கம்பக்கமாக முன்னேறிய சமூகமாக கோட்டைகளுடன், அரண்மனையுடன் கூடிய ஓர் அரசாட்சி நடக்கும் நாடு. இவர்களுடன் வணிகத் தொடர்புக்காக கப்பல்களில் வந்து செல்லும் ஐரோப்பியர்கள் குறிப்பாக போர்த்துகீசியர்கள் என கலந்து கட்டி அடித்து இருக்கிறார்கள்.
படத்தில் லாஜிக் எல்லாம் தேடக்கூடாது: நம்ப வேண்டும். அப்படி நம்ப வைப்பதற்கு பொருத்தமான ஒளிப்பதிவு, பின்னணி இசை, சிறப்பு வி எஃப் எக்ஸ் காட்சிகள் என கைதேர்ந்த கூட்டணியுடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகருமான ரிசப்ஷெட்டி.
நம் முன்னோர்கள் குலதெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அதன் நீட்சியாக நாமும் தான் வழிபடுகிறோம். அதில் பல்வேறு வகையான சடங்குகள் வழிபாட்டு முறைகள் அமலில் உள்ளன. காந்தாரா சாப்ட்ர் 1 படத்திலும் அப்படித்தான் இனக்குழுவின் கடவுள்கள் அசத்தும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சடங்குகளும், அருள் வந்து எடுக்கும் அவதாரங்களும்தான் நம்பும் படி இல்லை.
இறை நம்பிக்கை உள்ளவர்களை இத்தகைய காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவுகள், பின்னணி இசை அனைத்தும் கலந்த கலவையாக ரிசப்ஷெட்டியின் கைதேர்ந்த நடிப்பும் மிரள வைக்கின்றன.
இப்படத்தை நாம் கொண்டாட முடியுமா?
பொதுவில் படம் பார்க்க வருபவர்கள் கொடுத்த டிக்கட் காசுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்காக, நேரம் போவதாக இருந்தால் போதும் என திருப்திப்படுவர். ஆனால், இந்த அளவுகோலை மட்டும் கொண்டு படத்தை மதிப்பிட கூடாது. பல்வேறு சடங்குகளை, தற்போதைய காலத்திற்கு ஒவ்வாததாக, வழக்கொழிந்து போய் விட்ட நிலையில், அவற்றை சரியானது; போற்றத்தக்கது என்று பிரமிப்புடன் பார்க்கவும், மயங்கவும், வழிப்படவும் தூண்டக்கூடிய ஆற்றல் கலைப் படைப்புக்கு உண்டு. இத்திரைப்படம் அதை மிகச்சரியாக நிரூபிக்கவே செய்கிறது.
இனக்குழு கடவுள்களுடன் (பார்ப்பனிய) பெருந்தெய்வ வழிபாட்டையும், அதாவது சிவன் வழிபாட்டையும் இணைத்து கலந்து கட்டி அடித்திருக்கிறார் ரிசப்ஷெட்டி. கைதேர்ந்த இயக்குனராக அறிவுக்கு ஒவ்வாத பாத்திர படைப்புகளை கண்ணை ஈர்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தி மயங்க வைக்கிறார்.
குறிப்பாக சுமார் 12 அடி உயரமுள்ள அரக்கன் / கடவுள் ஆகட்டும், புலி நேரில் வந்து வழி காட்டுவதாகட்டும், மந்திரங்கள் மூலம் நோய்களை வர வைத்து மக்களை கொல்வதாக திரைக்கதை அமைத்திருப்பதாகட்டும், இவை எல்லாம் தற்போதைய சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவை; இளம் தலைமுறைக்கு கடந்த காலத்தை பற்றி ஒரு குழப்பத்தை தருவிப்பவை.
காந்தாராவை சங்கிகளுக்கு மிகவும் பிடிக்கும்!
படத்தில் அரேபியர்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களின் கடவுள் எங்கும் காட்டப்படவில்லை. பழங்குடியின இனக்குழுவின் கடவுளையும் இந்து என்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் புதிதாக நிலை நாட்டத் தேவையில்லை. திரைக்கதையில் சிவன் கோயில் சிலை பிரதிஷ்டை சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தை சங்கிகள் கொண்டாட இதை விட வேறு என்ன தேவை.
இத்தகைய பக்தியை பரப்பும் படத்தின் இரண்டாம் பாதி தான் அவா்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம். அவர்கள் (அவாள்கள்) எழுதும் திரைவிமர்சனங்கள் இதையே நிரூபிக்கின்றன. நமக்கோ இந்த இரண்டாம் பாதியில் வருவது தான் மிகவும் அபத்தமாக தெரிகிறது.
நேரடியாக ராமனையோ, அனுமானையோ, பீஷ்மனையோ வைத்து படம் எடுத்து போனியாகாத நிலையில் காந்தாரா போன்ற வரவுகள் மூலம் சங்கிக் கூட்டம் ஆறுதல் வெற்றியை பெற்று மகிழ்கிறது. பார்ப்பனர்களுக்கு ஒரு வேளை காந்தாராவின் கிளைமாக்ஸ் மூலம் மனது புண்படலாம். எப்படி சிவபக்தர்களை சிவன் கைவிட்டான்? இனக்குழு கடவுள் எப்படி பழங்குடியினத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது? என்று சற்றே கலக்கமடையலாம். அல்லது சிவனே அநியாயத்திற்கு இனக்குழு கடவுளுடன் கைகோர்த்து கட்சி மாறலாமா? என்று புருவத்தை நெரிக்கலாம்.
ரசிகர்களே எச்சரிக்கை!
முழுப்பொய்; முழு உண்மை இரண்டையும் அச்சமோ பதற்றமோ இன்றி கையாளலாம். ஆனால் அரை உண்மைகள் ஆபத்தானவை. டாஸ்மாக் கடைகளில் விற்கும் சாராய பாட்டில்களோ அல்லது மூத்திர சந்துகளில் மறைவாக நின்று புகையை இழுக்கும் கும்பலிடம் உள்ள கஞ்சா பாக்கெட்டுகளோ ஆபத்தானவை தான். ஆனால், வெளிப்படையாகவே தெரியும் அதை நல்லதா கெட்டதா என்று தீர்மானித்து கையாள்வதும் எளிதானது. ஆனால் அரை உண்மைகள் அப்படி அல்ல.
உதாரணத்திற்கு கோவையை ஒட்டியுள்ள, பாலக்காடு வழித்தடத்தில் உள்ள மருந்து கடைகளில் குறிப்பிட்ட இருமல் மருந்துகள் மிக அதிகமாக விற்பனையாகின. பள்ளி மாணவர்கள் விருப்பத்திற்கு வாங்கி பாட்டில் பாட்டில்களாக குடித்தார்கள். காரணம் அது போதையை தந்தது என்பதுதான். மற்றவர்களுக்கு அது மருந்து. அந்த மாணவர்களுக்கு போதை.
குரங்கையோ நாயையோ வைத்துக் கொண்டு, பெண்கள் கையில் வேப்பிலையை வைத்து ஆடவிட்டு, அம்மனின் அருள் வந்ததாக படம் எடுத்தால் இன்றைய தலைமுறை ரசிப்பதில்லை. அருள் வந்து ஆடுவதற்கும் தயாரில்லை.
காந்தாரா போன்ற படங்கள் இனக் குழுக்களின் வாழ்க்கை முறையை தத்ரூபமாக காட்சிப்படுத்துவதன் மூலம் பாதி உண்மையை பேசுகின்றன. கற்காலத்தில் இருந்து உலோக காலத்திற்கு எப்படி வந்தார்கள் என்று நாம் கற்றதை உரசிப் பார்த்துக் கொள்ளத் தூண்டுகிறது தான். பண்டமாற்று முறை, அடிமைகள் விற்பனை, மன்னர்கள் அரசாட்சி என்ற சமுதாய படிநிலை வளர்ச்சியையும் நன்றாகவே காட்டியுள்ளார்கள். நமக்கு இந்தப் பகுதிகள் மிகவும் பிடித்துப் போகும்தான்.
ஆனால் சராசரி ரசிகர்கள் இந்த அறை உண்மையுடன் சேர்த்து அபத்தமான புளுகுகளையும், கற்பனைகளையும் கூட முற்காலத்தில் நடந்திருக்க கூடும் என்று நம்பி, படத்தில் ஒன்றி லயிப்பதுதான் ஆபத்தானது. இந்த நூலைப் பிடித்துக் கொண்டுதான் பூணூல் வேலையை காட்டும். நாம் அரை உண்மைகளை அலசிப் பார்த்து, அறிவுக்கு உகந்ததை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சிய புரட்டுகளை தூக்கி எறிவோம்.
இளமாறன்







