‘டெல்லியில் உள்ளது உச்ச நீதிமன்றம் அல்ல; அது உச்சிக் குடுமி நீதிமன்றம் தான்’ — என வெகு காலத்திற்கு முன்பு தந்தை பெரியார் வரையறுத்துக் கூறினார்.
இப்பொழுது நாம் கரூர் 41 பேர் மரணித்தது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ‘நீதி அரசர்கள்’ பற்றி விவாதிக்க முன்வரவில்லை.
அதே நேர்வில் தமிழ்நாடு அரசுக்கு அல்லது தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் மீது கடந்த 10-10- 2025-ல் ஒரே நாளில் விசாரணையை முடித்துக் கொண்ட நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.பி.அஞ்சாரியா அமர்வு 13-10-2025ல் அளித்த ஒரு தலைப்பட்சமான தீர்ப்பினை நாம் அலசி ஆராய வேண்டியதுள்ளது. அது ஒவ்வொரு குடிமகனது உரிமையும்கூட.
இதில் இன்னொன்று. மேற்படி நீதிபதிகள் அளித்த தீர்ப்பை தமிழ்நாட்டில் உள்ள தவெக., அதிமுக., ‘மாபெரும் வெற்றி’ பெற்று விட்டதாகக் கொண்டாடுகிறார்கள். கரூர் பகுதி அப்பாவி மக்கள் 41 பேர் செத்து வீழ்ந்தது பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. இந்த இரண்டு கட்சிகளை தவிர்த்து, பாஜக மேலும் கீழுமாக தலைகீழாக குதித்து கொண்டாட்டத்தில் மூழ்கி ‘முத்து எடுக்க’ முனைந்து விட்டார்கள். இதன் மூலமாக ‘மூடு மந்திரமாக’ பயன்படுத்தி வந்த தவெக-வை – அதன் தலைவர் விஜய்யை (CBI-ஐ தம் கையடக்கத்திற்குள் வைத்துள்ள காவிக் கூட்டம்) பட்டவர்த்தனமாக பாஜக எனும் பாசிச வலைக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டது மோடி-அமித்ஷா கும்பல்.
கரூரில் 41 பேர் படுகொலை ஆனது எப்படி என்பது உலகறிந்த விடயம்!
கரூர் கூட்டத்தில் சிக்கித் திணறி உயிரிழந்தது பற்றி சதிக் கோட்பாடுகளை (conspiracy theories) பேசி பற்பல தனி நபர்கள், ‘அறிவு ஜீவிகள்’ என உலா வருவோர், பல்வேறு ஊடகங்களில் முற்றும் முழுதான பொய்களை பரப்பி மக்களை மாய வலையில் சிக்க வைத்தார்கள்.
அதுவும் எப்படி? கூட்டத்தில் மாபெரும் சதி நடந்துள்ளது; செந்தில் பாலாஜி தலைமையிலான ரவுடிகள் உள்ளே நுழைந்து கலாட்டாவில் ஈடுபட்டு விட்டார்கள்; கூட்டத்தில் கத்தியை வைத்து கீறினார்கள்; மின்சாரத்தை துண்டித்தார்கள்; லைட்டுகள் அனைத்தும் அணைக்கப்பட்டன; செருப்பைத் தூக்கி வீசினார்கள்; போலீஸ் தடியடி நடத்தியது; ஆம்புலன்ஸ்கள் வேண்டுமென்றே உள்ளே நுழைந்தன; அனுமதிக்கப் பட்ட இடத்தில் கூட்டத்தை நடத்தியதைத் தவிர விஜய்யோ, அவரது தொண்டர்களோ எவ்விதத் தவறுமே செய்யவில்லை….
இவ்விதமான முழு பொய்யான Conspiracy வதந்திகள் திட்டமிட்டு தமிழகம் எங்கும் பரப்பப்பட்டன. அப்படி இருக்கின்ற பொழுதுதான் அரசுத் தரப்பு ஊடகத் தொடர்பாளரான திருமதி அமுதா ஐஏஎஸ், தலைமையில் கூடுதல் டிஜிபி டேவிட்சன், சுகாதாரத்துறை செயலாளர், மின்வாரிய பொறியாளர் எனப் பலரும் பங்கு கொண்ட – பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.
அந்த நேர்காணலில் அதிகாரிகள் வீடியோ ஆதாரங்களுடன், எத்தனை மணிக்கு? எத்தனை நிமிடத்திற்கு? என்னென்ன நிகழ்வுகள்? எப்படி எப்படி அரங்கேறின?; அதற்கு யார் யாரெல்லாம் பொறுப்பாக இருந்துள்ளனர்? என்பதனை பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்து தமிழக மக்களுக்கு உண்மையை உணர்த்தினார்கள்.
விஜய்க்காக – அவரைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் மேற்கண்டவாறு ‘சதிக் கோட்பாட்டு பொய்களை’ பரப்பாமல் இருந்திருப்பார்களேயானால் அமுதா ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கண்டவாறு நேர்காணல் நடத்தி உண்மையை உலகறியச் செய்யும் தேவை ஏற்பட்டிருக்காது.
உடனே பாஜக – அதிமுக – தவெக கூட்டம் குய்யோ முறையோ என்று கத்துகிறது. ‘அது எப்படி? அரசு தரப்பில் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் குழுவும், உயர்நீதிமன்றம் நியமித்த ஐஜி அஸ்ரா கர்க் தலைமையான குழுவும் விசாரணை மேற்கொண்டிருக்கின்ற பொழுது அரசுத் தரப்பில் அமுதா ஐஏஎஸ் தலைமையில் எப்படி (உண்மையை உடைக்கும் வகையில்) நேர்காணல் நடத்திடலாம்…?’
‘செந்தில் பாலாஜி எப்படி நேர்காணல் நடத்தி வீடியோ ஆதாரங்களை காண்பிக்கலாம்?’
இதுதான் இவர்களது ஒப்பாரி. ஆனால் இந்தக் கூட்டமும் சவுக்கு, மாரிதாஸ், அண்ணாமலை, தமிழிசை, நயினார், எடப்பாடி, ‘மனநல மருத்துவர்’ ஷாலினி இப்படி எண்ணற்றோர் பொய்க் கருத்துக்களை பரப்புவது மட்டும் மேற்படி விசாரணைக் குழுவின் விசாரணைகளை பாதிக்காதாம்! பாஜகவின் எம்பி நடிகை ஹேமமாலினி தலைமையிலான குழு ஒருபுறம் பொய்யைப் பரப்புகிறது! அப்படிப்பட்ட பொய்யான சதி வலையை பரப்புவது மட்டும் நியாயமாம்.
காரணம் இவற்றையெல்லாம் உணர்வதற்கு அவர்களது மண்டையில் மூளைகள் இல்லை என்பதல்ல; அரசியல் அறுவடை செய்து தமிழ்நாட்டில் திமுக-வை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் அதில் அடங்கியிருந்தது என்பதே உண்மை.
அதிகாரிகள் தரப்பிலும், செந்தில் பாலாஜி தரப்பிலும் நேர்காணல்கள் நடத்தியது ஒருபுறம் என்றால், மறுபுறம் தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள், அச்சு ஊடகங்களின் கள ஆய்வுகள் மூலம் மக்களுக்கு உண்மை நிலவரம் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
தவெக-வினர் சார்பாக கூட்டத்திற்காக பெறப்பட்ட அனுமதி நேரம் என்பது தனியாக இருக்கட்டும். ஆனால் நடந்தது என்ன? புஸ்ஸி ஆனந்த்தே ஒலிபெருக்கி வாயிலாக ‘தலைவர் விஜய் நாமக்கல்லில் 27-ம் தேதி காலை 8:45 மணிக்கு உரையாற்றுகிறார்; அணிதிரண்டு வாருங்கள்’ என விளம்பரம் செய்கிறார்.
கரூரில் அணில் குஞ்சுகள் ஒலிபெருக்கி வாயிலாக ‘தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி சரியாக பகல் 12:00 மணிக்கு பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறார்; அனைவரும் அணி திரண்டு வாருங்கள்…’ என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவை யாவற்றையும் தொலைக்காட்சிகளில் கண்டோம்.
படிக்க: கடவுள் விஜய்-யும், வெறியூட்டப்பட்ட பக்தர்களும்!
ஆனால் நடந்தது என்ன? அவர்கள் மக்களுக்கு விளம்பரம் செய்திருந்தபடி நாமக்கல்லில் காலை 08:45 மணிக்கு வர வேண்டிய விஜய், அதற்கு மாறாக, சென்னையிலேயே 08:45 மணிக்கு மேல் தான் புறப்படுகிறார். நாமக்கல் அவர் வருகின்ற பொழுது பகல் 12:00 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
நாமக்கல்லில் முதல் நாள் இரவு துவங்கி அதிகாலை வரை ரசிகர்கள் கூடத் துவங்கி விஜய் வரும் வரையிலும் பல நேரம் தண்ணீர் இல்லாமல் உணவில்லாமல் கடும் வெயிலில் வாடி வதங்கி கிடந்தார்கள். அங்கேயும் நெரிசலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் எண்ணற்றோர் சேர்க்கப்பட்ட கொடுமைகளை கண்டோம். நல்ல வேலையாக எவரும் சாவைத் தழுவவில்லை.
கரூருக்கு பகல் 12 மணி என்று கூறிவிட்டு இரவு 7 மணிக்கு வருகிறார். அதாவது 7 மணி நேரம் தாமதமாக வருகிறார். அதுவும் கரூர் கூட்டத்திலேயே பங்கேற்றிருந்த பெரும் கூட்டத்தையும் தம் பின்னாலேயே அணிவகுக்கச் செய்து கரூருக்கு இழுத்து வருகிறார்.
கரூரில் காலை ஒன்பது மணி துவங்கி படிப்படியாக கூட்டம் கூடி நெரிசலுக்கு உள்ளாகி இருந்த தருணத்தில், தண்ணீர், உணவு, இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொள்ள கழிப்பிட வசதி எந்த வசதியும் செய்யப்படாத நிலைமையில் மக்கள் ரசிகர்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளானார்கள்.
‘விஜய்யை பார்க்க வேண்டாம்; திரும்பிச் சென்று விடலாம்… என்று நினைத்து நகர்ந்திட முனைந்தோர் எவரும் கூட்ட நெரிசலில் இருந்து வெளியேற முடியாத அளவிற்கு கூட்டத்திற்குள்ளேயே அமிழ்தப்பட்டார்கள்; இடிபாடுகளிலும், கீழே விழுந்து மிதிபடுதல்களிலும் ஆட்படுத்தப்பட்டனர். விஜய் இரவு 7:00 மணிக்கு வந்த தருணத்தில் கரூரில் ஏற்கனவே தாங்க முடியாத கூட்டமும் விஜயை தொடர்ந்து வந்த நாமக்கல் மற்றும் பிற பகுதி கூட்டமும் இணைந்து கொண்டதால் தான், லும்பன்களாக செதுக்கப்பட்டிருந்த ரசிகர்கள் கூட்டம் மின்கம்பங்களிலும், மரங்களிலும், தனியார் கடைகளில் உள்ள ஷீட்டுகளிலும், ஏறி விபரீதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அசம்பாவிதங்களை உருவாக்கியதாலேயே 41 பேர் அநியாயமாக மிதிபட்டு மூச்சுத் திணறி மாண்டு போனதைக் கண்டோம். இவ்விவரங்கள் உட்பட ஏனைய பல விவரங்களையும் ஏற்கனவே முந்தைய கட்டுரைகளில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.
படிக்க: திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!
இவற்றை மீண்டும் சிலவற்றை நாம் பதிவிடுவதற்கு காரணம், கரூர் பிரச்சனை தொடர்பாக மேற்கண்ட முக்கிய அம்சங்கள் எதனையுமே அக்டோபர் 13ம் தேதிய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு ‘நீதி அரசர்கள்’ கடுகளவும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதே ஆகும்.
உச்சநீதிமன்றம்: மேல்முறையீடுகளும் – அநீதியான தீர்ப்பும்!
தமிழ்நாடு அரசு 28-09-2025 அன்றே கரூர் சம்பவத்திற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அறிவித்து, அது விசாரணையை நடத்தி வந்தது.
மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் பாஜக உமா ஆனந்த் உட்பட ஐவர் சார்பாக வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் நிறைய சதி நடந்துள்ளது; செருப்புகள் வீசப்பட்டன; விஷ வாயு ஸ்ப்ரே செய்யப்பட்டுள்ளது; போலீஸ் தடியடி நடத்தியது; போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது… என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தமிழ்நாடு காவல்துறை விசாரணை செய்வது சரியல்ல; எனவே,வழக்கினை சிபிஐக்கு மாறுதல் செய்ய வேண்டும்’ எனக்க்கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
ஆதவ் அர்ஜுனும் தமிழ்நாட்டு போலீஸ் மீதும், ஒரு நபர் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தலைமறைவாயிருந்த தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், முதலானோர் சார்பாக ‘இந்தக் கூட்டம் ஏற்பாட்டிற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை; கூட்ட ஏற்பாடு செய்திருந்த மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு விட்டார்’ என இழிந்த ‘கெட்டிக்காரத்தனமாக தப்பித்துக் கொள்ளும்’ கருத்துக்களை முன்வைத்து அவர்களின் வழக்கறிஞர்கள் முன் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
படிக்க: கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!
மதுரை இரு நீதிபதிகள் அமர்வு அரசு தரப்பு விவாதங்களை ஏற்று ‘வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் தான் உள்ளது; மேலும் வழக்கில் பாதிக்கப்பட்டோரல்லாதோர் எப்படி சிபிஐ விசாரணை கோரலாம் என பற்பல காரணங்களை விவரித்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
அதேபோல விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் முன் ஜாமீன் கோரியோர் மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
இது ஒரு புறம் இருக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்வில் தாக்கலான மனு ஒன்றில், கரூரில் 41 பேர் மரணமுற்ற சூழலில் அந்த மரணங்களைப் பற்றி எவ்வித பொறுப்பும் எடுத்துக் கொள்ளாத தலைமைப் பண்பை விமர்சித்தும், சம்பவம் கொடூரமானதாக நிகழ்ந்திருக்கக் கூடிய சூழலில் ஆதவ் அர்ஜூன்
‘நேபாளம், பங்காளதேஷ், ஸ்ரீலங்கா போன்று தமிழ்நாட்டிலும் புரட்சி வெடிக்க வேண்டும்’ என்று அபாயகரமான பதிவு ஒன்றினை தனது ட்விட்டரில் வெளியிட்டது மிகவும் கண்டனத்திற்குரியது; அது தொடர்பாகவும் வழக்குத் தொடர வேண்டும் எனவும், இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தோர் எப்படி முட்டி மோதி பிரச்சார வாகனத்தின் அடியில் வீழ்ந்தனர் என எல்லா தொலைக்காட்சி ஊடகங்களிலும் வெளிவந்தும், ஏன் காவல்துறை வாகனத்தை பறிமுதல் செய்யவில்லை; வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், இவ்வழக்கில் ஓரிருவரைத் தவிர முதல் தகவல் அறிக்கையில் ஏன் முக்கிய தலைவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்றும் விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, தெளிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, சிறந்த புலனாய்வு அதிகாரியும், ஏற்கனவே சிபிஐ-யில் பணியாற்றி புகழ்பெற்ற வருமான ஐஜி அஸ்ரா கர்க் IPS தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றினை அமைத்து உத்தரவிட்டார். அந்தக் குழுவும் அக்டோபர் 4 முதல் விசாரணையை துவங்கிவிட்டது.
படிக்க: கவர்ச்சிவாதமும், பாசிச அடிவருடித்தனமும் இணைந்து மிரட்டிய விஜய்யின் இரண்டாம் மாநாடு!
இப்படிப்பட்ட நிலையில்தான் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் (பன்னீர்செல்வம், செல்வராஜ், பிரபாகரன்-க்காக) இவர்களது சார்பிலான வழக்கறிஞர்கள் சிபிஐ விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இது தவிர, ‘தமிழ்நாடு SIT தமது தலைவர் விஜய் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே நியமிக்கப்பட்டுள்ளது; எனவே உச்ச நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் சிறப்பு புலனாய்வு குழு (SIT)அமைத்து விசாரணை செய்ய வேண்டும்’ என்றே ஆதவ் அர்ஜுன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்.
இதனை மேல்முறையீட்டு வழக்குகளை உடனடியாக அக்டோபர் 10-லேயே விசாரணை செய்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.பி. அஞ்சாரியா அமர்வு இருதரப்பு வாதங்களையும் கேட்டுத் தீர்ப்பை தள்ளி வைத்தது. இடையில் 11, 12 சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகும்.
அக்டோபர் 13ஆம் தேதி மேற்கண்ட இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை வாசித்தது. அதாவது 41 பேர் மரணம்; எண்ணற்றோர் காயம்பட்ட சூழலில்…
*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அமர்விற்கு அரசியல் கூட்டங்களுக்கான மற்றும் ரோடு ஷோ உள்ளிட்டவைக்காக வழிகாட்டு நெறிமுறைகள் கோரிதான் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், எப்படி சிறப்புப் புலனாய்வு குழு (SIT) அமைக்கலாம்? எப்படி அரசியல் இயக்க தலைவர் மீது கமெண்ட் பாஸ் செய்யலாம்?
*மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை நடந்து கொண்டிருக்
கின்ற பொழுது, சென்னை அதிகார வரம்பிற்கு (jurisdiction) உட்படாத வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் எப்படி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்?
*ஆக, கரூர் சம்பவம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை வாய்ந்த விசாரணை அவசியம் தேவைப்படுகிறது;
*எனவே, இந்த வழக்கு CBI விசாரணைக்கு மாற்றி உத்திர விடப்படுகிறது;
*இந்த சிபிஐ விசாரணையை கண்காணிப்பு (Monitor) செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரு போலீஸ் ஐஜிகள் நியமனம் செய்யப்படுவார்கள்; அந்த இரு போலீஸ் அதிகாரிகளும் தமிழர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும்;
*இக்குழு சிபிஐ விசாரணையை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும்; உரிய நெறிமுறைகள் வகுத்து வழிகாட்டுதல் வேண்டும்; தவறு என்றால் திருத்த வேண்டும்; தேவைப்பட்டால் சுயமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்;
*தமிழ்நாடு அரசு அமைத்த அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த அஸ்ரா கர்க் தலைமையிலான புலனாய்வு குழுவும் (SIT) கலைக்கப்படுகின்றன. அந்த இரண்டு விசாரணை அமைப்புகளும் இதுவரை மேற்கொண்ட விசாரணை அறிக்கை ஆவணங்களை அப்படியே அஜய் ரஸ்தோகி குழுவிடம் (SIT) ஒப்படைக்க வேண்டும். அவர்கள் CBI யிடம் ஒப்படைத்து பூர்வாங்க விசாரணை மேற்கொள்வார்கள்.
… இவைதான் கரூர் படுகொலைகள் சம்பந்தமான மேல்முறையீட்டு மனுக்களின் மீதான தீர்ப்பின் ‘சாரம்’ ஆகும்.
*சிபிஐ விசாரணை கோரியதாகக் கூறப்படும் இருவர் (மறைந்த 9 வயது சிறுவனின் தாய் ஷர்மிளா மற்றும் மறைந்த சந்திராவின் கணவர் செல்வராஜ்) தங்கள் பெயர்களில் பொய்யான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள்; எனவே இது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் வில்சன் உண்மையை விளக்கிய பொழுது, அதையுங்கூட CBI-யே விசாரிக்கட்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தையே ஏமாற்றும் மாபெரும் குற்றத்தை எளிதாகக் கடந்து சென்றனர் நீதிபதிகள்.
மொத்தத்தில் இவ்வித தீர்ப்பு என்பது குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாகவும், கிரிமினல் வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் விசாரணை அதிகாரி ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியாக இருக்க முடியுமா? என்பது நமது முதன்மைக் கேள்வி. CBI- விசாரணைக்கு உத்தரவிட்டு கூடுதலான அதிகாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு வழங்கியதன் மூலம் CBI-ஐ ஒரு டம்மி பீஸாக – அல்லது ஒரு பியூன் ரேஞ்சுக்கு உச்ச நீதிமன்றம் உருவாக்கி உள்ளது என்று சொன்னால் அது தவறல்ல.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் மனுதாரர் வைக்கப்பட்ட கோரிக்கை கூட்டங்களை நெறிமுறை படுத்துவது தொடர்பான கோரிக்கையே (Prayer-ரே)
யொழிய புலனாய்வு குழு (SIT) அமைக்கக் கோரியது அல்ல என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ‘மாபெரும்’ கருத்தாக இருக்குமேயானால், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில்புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்பதே கோரிக்கை (Prayer)எனும் போது, தமிழ்நாடு அரசு நியமித்த அருணா ஜெகதீசன் ஒரு நபர் ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று யார் கோரிக்கை (Prayer) வைத்தது? அவ்வாறு இருக்கும் பொழுது அருணா ஜெகதீசன் ஆணையத்தை ஏன் கலைத்தீர்கள்? அதற்கான தேவை என்ன என்று ஒரு வரி உச்சநீதின்றத்தின் ஆணையில் இல்லை.
*மதுரை உயர்நீதிமன்ற அமர்வு அதிகாரத்திற்கு உட்பட்ட வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் எடுத்தது தவறு எனில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு, தமிழ்நாடு அரசு ஆளுநர் மசோதாக்களுக்கு கையெழுத்து போட மறுக்கும் செய்கைகளுக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் மீது ஆளுநரின் தவறுகளை சுட்டிக் காண்பித்து அவர் தேக்கி வைத்திருந்த பத்து மசோதாக்களுக்கும் முன் தேதியிட்டு ஆளுநரே ஒப்புதல் வழங்கியதாகக் கருதி உத்தரவிட்டது.
அதன் பேரில் பற்பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்க முயற்சி எடுத்து தமிழ்நாடு முதல்வர் தேர்வு குழு அமைத்து செயற்படுத்த முனைந்த போது, அதற்குத் தடை கோர முயன்ற திருநெல்வேலி மாவட்ட பாஜக செயலாளர் வெங்கடேசன் என்பவர் கடந்த மே மாதம் தனக்கு அருகில் உள்ள மதுரை உயர்நீதிமன்ற (jurisdiction) அமர்வில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மனுவை, தமக்கு சம்பந்தப்படாத சென்னை உயர்நீதிமன்றத்தில், தனக்கு ஏதுவான நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் தாக்கல் செய்திட, அந்த நீதிபதிகளோ அரசுக்கு ஒரு நாள் அவகாசம் கூட தர மறுத்து குறிப்பாக சீனியர் வழக்கறிஞர் வில்சன் டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவும், அட்வகேட் ஜெனரல் ராமன் நேரடியாகவும் வாதிட்டு அரசு தரப்புக் கருத்துக்களை தெரிவிக்க ஒரு நாள் அவகாசம் மட்டும் கேட்டும் கூட தர மறுத்து தடையாணை பிறப்பித்தார்கள். இது விடுப்பு கால நீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய அளவிற்கான அவசர வழக்கும் அல்ல. சென்னை உயர்நீதிமன்ற அதிகார வரம்பிற்குட்பட்ட
(Jurisdiction) வழக்கும் அல்ல.
இதன் காரணமாக வருடக் கணக்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் மாணவர்கள் நிற்கதிக்கு ஆளாகி இருக்கின்றனர் என்ற கொடும் செயலும் இந்த நீதிபதிகளால் அரங்கேறி உள்ளது என்பது ஒரு புறம்.
பின்பு இந்த இரு நீதிபதிகள் தீர்ப்பினை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் மாதங்கள் பல கடந்தும் இன்று வரை அந்த மேல்முறையீட்டு வழக்கு உறங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வித தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழங்கிட முன்வரவில்லை. ஒரு பிரச்சனையை அணுகுகின்ற பொழுது இரு வேறுவிதமான அணுகுமுறையை உச்சநீதிமன்றம் கையாள்வது Article 14 -ஐ அப்பட்டமாக மீறுவதாகும் (violation).
எனவே, கரூரின் கொடிய சம்பவத்தை ஒட்டி எவருமே மனுத்தாக்கல் செய்யாமல் இருந்திருந்தாலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் தாமாக முன்வந்து (suo moto) வழக்குப் பதிவு செய்து இப்படிப்பட்ட புலனாய்வு குழுவை (SIT) அமைத்தாலும் கூட தவறு இல்லை என்பதே சட்டப்படியும் கூட சரியான கண்ணோட்டம் ஆகும். சரியான செயல்முறை ஆகும்.
யார் இந்த அஜய் ரஷ்தோகி? தமிழர்கள் விசாரணைக் குழுவில் இடம்பெறக் கூடாதாம்!
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள புலனாய்வு குழுவில் (SIT) நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஷ்தோகி என்பவர் யார்? குஜராத் கலவரக் காலத்தில் கற்பிணியான
பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மிகக் கொடுமையானவழக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வழக்கு நடைபெற்று குற்றவாளிகள் 11 பேர் சிறைத் தண்டனை அனுபவிக்கின்ற பொழுது, குஜராத் அரசாங்கம் குற்றவாளிகளின் நன்னடத்தை களைக் கணக்கிற் கொண்டு
விடுவிக்கலாம் என்று தீர்ப்பளித்த ‘புண்ணியவான்’தான் இந்த அஜய் ரஷ்தோகி. பின்பு அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டு இதே அஜய் ரஷ்தோகி-யின் தீர்ப்பை ரத்து செய்து அவரை கண்டனம் செய்தது.
அப்படி இருக்கின்ற பொழுது, அஜய் ரஷ்தோகிக்கு எந்த மனித நேயம் அல்லது அருகதை இருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கரூர் வழக்கு தொடர்பான முக்கியமான வழக்கில் விசாரணைக் குழுவில் தல கர்த்தராக நியமிக்க முன் வந்தது என்பது வினோதமாய் உள்ளது. கொடுமையாக உள்ளது. எனவே தகுதியற்ற இந்த ஓய்வு பெற்ற நீதிபதியின் நியமனத்தை உச்சநீதிமன்றம் உடனடியாக ரத்து செய்து தகுதி வாய்ந்த நேர்மையான நீதிபதியை தேர்வு செய்து நியமன செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புவோம்.
மேலும் அவரது தலைமையிலான குழுவில் நியமனம் செய்யப்படும் இரண்டு ஐஜி- கள் தமிழர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள் இந்த வினோதமான நீதிபதிகள். இது தமிழர்களை இழிவு படுத்தும் செயல் இல்லையா? ஒரு தேசிய இனத்தை கொச்சைப்படுத்தும் செயல் இல்லையா?
குஜராத்தில் 2000 பேர் படுகொலை செய்யப்பட்ட பொழுது விசாரணைக் குழுவில் குஜராத் அல்லாதவர்கள் தான் நியமனம் செய்யப்பட்டார்களா?
கண்ணெதிரே மணிப்பூரில் நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட பொழுதும், பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பொழுதும், சுட்டுக்கொன்ற பொழுதும் மணிப்பூர் அல்லாதவர்கள் தான் விசாரணைக் குழுவில் இடம் பெற்றார்களா?
காஷ்மீரில் அன்றாடம் நடைபெறும் கொலைகளுக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் காஷ்மீர் அல்லாதவர்கள் தான் விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டார்களா?
இன்னும் பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்ற எண்ணற்ற கொடுமைகள் நிகழ்ந்தேறும் போது அங்கே நியமிக்கும் விசாரணைக் குழுக்கள் எல்லாம் அந்தந்த மாநிலத்தவர் அல்லாதவர்களைத்தான் நியமனம் செய்யப்படுகிறதா?
இது கேலிக்கூத்து மட்டுமல்ல; தமிழர்களை உச்ச நீதிமன்றம் மிகவும் அவமானப் படுத்தி இருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யார் பின்புலம் என்று கூட யோசிக்க வைக்கிறது.
எனவே, நீதிபதிகளின் இந்த அருவருக்கத் தகுந்த செயல்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் கொதித்தெழுந்து போராட வேண்டும் என்பதே சரியானதாகும். தமிழ்நாடு அரசு இதனை கண்டனம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும். தமிழர்கள் அல்லாதவர்கள் என்ற வார்த்தைகளை உச்சநீதிமன்றம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தொடரும்…
- எழில்மாறன்