இந்தியாவில் மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக் கொண்டு ஆயுதமேந்தி போராடி வருகின்ற மாவோயிஸ்ட் அமைப்பு கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே பல்வேறு பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.
ஆர்எஸ்எஸ் பாஜக, அதன் உள்துறை அமைச்சர் மற்றும் இந்திய உளவுத்துறை, ராணுவம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்துகின்ற தாக்குதல்களை எதிர்கொள்வதில் நெருக்கடிகளை சந்தித்ததுடன் மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் நாடறிந்த செய்தி.
சத்தீஸ்கர் மாநிலத்தின் அபுஜ்மத் மற்றும் காரேகுட்டா பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக சந்தித்து வரும் பல்வேறு அடக்குமுறைகள், உயர்மட்ட தோழர்களின் படுகொலைகள் ஆகியவற்றின் காரணமாக தற்காலிக சண்டை நிறுத்தம் மற்றும் பேச்சு வார்த்தை என நடத்தப் போவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அபய் ஆடியோ மூலம் ஒன்றிய அரசுக்கு செய்தி வெளியிட்டுள்ளார்.
“பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆயுதங்களைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சி, “கட்சியின் பொதுச் செயலாளர் (மறைந்த பசவராஜு) முன்முயற்சியின் பேரில் தொடங்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல, மாறிவரும் உலகளாவிய மற்றும் தேசிய சூழ்நிலைகளையும், நாட்டின் பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, முக்கிய நீரோட்டத்தில் சேருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதையும் கருத்தில் கொண்டு, ஆயுதங்களைத் தவிர்ப்பதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மேலும், ஆயுதமேந்திய நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, பொது நலனுக்காகப் பாடுபடும் பிற அரசியல் கட்சிகளுடன் ஒற்றுமையை நாடுவதே மாவோயிஸ்டுகளின் நோக்கமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் அறிவித்துள்ளது.. “ஆயுதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளோம். எதிர்காலத்தில், பொது நலனுக்காகப் போராடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் முடிந்தவரை தோளோடு தோள் சேர்ந்து போராடுவோம் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்,” என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே மாவோயிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து படுகொலை செய்யப்பட்ட தோழர் பசவராஜ் இருந்தபோதே இந்த பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சூழலில், இந்திய ஒன்றிய அரசாங்கம் அதனை மறுதலித்து மாவோயிஸ்டுகளை 2026 மார்ச்சுக்குள் முழுமையாக ஒழித்து கட்டப் போவதாக அறிவித்து அதன்படி ஆப்ரேஷன் காகர் என்ற பெயரில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று பேச்சு வார்த்தைக்கு தயாரான சூழலில் அவர்கள் மீது ராணுவ பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி படுகொலை செய்ததை நாடு முழுவதும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் மாவோயிஸ்டுகள் சண்டை நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை அறிவித்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக்கொண்டு உறுதியுடன் செயல்பட்டு வருகின்ற மாவோயிஸ்டுகள் புதிய ஜனநாயக புரட்சியை நடத்துவதற்கு தேர்வு செய்துள்ள அரசியல் மற்றும் ராணுவ வழிமுறைகளின் மீது புதிய ஜனநாயகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கு விமர்சனம் உள்ளது என்பதை ஏற்கனவே பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம்.
நாடு முழுவதும் ஒன்றுபட்ட கட்சியை கட்டுவது; அரசியல் போராட்டம் அதன் நீட்சியாக ஆயுதப் போராட்டம் என்ற மார்க்சிய லெனினிய வழிமுறையை கைவிட்டு சாகச வழிமுறையை மேற்கொள்வது; குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தின் சேகுவரா முன்வைத்த ஃபூக்கோயிச பாணியில் போராடுவது போன்றவை அந்த அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக பின்னடைவுக்கு தள்ளி உள்ளது என்றே கருதுகிறோம்.
கம்யூனிச புரட்சியாளர்கள் என்ற முறையில் அடக்குமுறைகளை எதிர்கொள்வது; அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளுக்கு பலியாவது; நீண்ட கால சிறையில் அடைக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை சந்திப்பது தவிர்க்க முடியாதது என்ற போதிலும், தான் வகுத்துக் கொண்ட அரசியல் மற்றும் ராணுவ பாதையின் வழியாக இதனை வரவழைத்துக் கொள்வது என்பது அவர்கள் மீதான எமது விமர்சனங்களில் முக்கியமான ஒன்று.
படிக்க:
♦ போலி மோதல் கொலைகளில் பலியாகின்ற மாவோயிஸ்ட் அமைப்பினர்!
♦ மாவோயிஸ்டுகள்- பழங்குடிகள் மீதான உள்நாட்டுப் போரை உடனே நிறுத்து! ஜூன் 5 பொதுக்கூட்டம்
90களில் அமலாக்கப்பட்ட மறு காலனியாக்கம் தற்போது தீவிரத் தன்மை அடைந்து நாட்டை கடுமையான அரசியல், பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளது. இதனை அரசியல் ரீதியாக கார்ப்பரேட் காவி பாசிசம் என்று வரையறுத்து உள்ளோம்.
“இந்தியா போன்ற அரைக்காலனிய நாடுகளில் பாசிசம் தோன்றாது; பாசிச எதிர்ப்பு என்று பேசுவதே புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டு சந்தர்ப்பவாதமாக அரசியலை நடத்துவதாகும்” என்று எமது அமைப்புகளின் மீது விமர்சனத்தை முன்வைத்த மாவோயிஸ்டுகள் பாசிசத்தின் கொடூரமான விளைவுகளையும், அது ஏற்படுத்துகின்ற நாசக்கார கொள்கைகளையும் பற்றி சரியாகவே விளக்குகின்றனர். ஆனால் அதனை பாசிசம் என்று வரையறுக்க மறுப்பது தான் அரசியல் ரீதியிலான தவறு என்றே கருதுகிறோம்.
இத்தகைய விமர்சனங்கள் உள்ள போதிலும் கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்ற சூழலை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்றும், நக்சல் பாரி அரசியலை ஒழித்துக் கட்டுவோம் என்று கொக்கரிக்கின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிச அடக்குமுறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தி தொடர்ச்சியாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
தற்போது மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு போன்றவை இயக்கத்தின் செயல்பாடுகளை மீளாய்வு செய்வதற்கும், இந்திய சமூக அமைப்பிற்கு பொருத்தமான அரசியல், ராணுவ பாதைகளை மேற்கொள்வதற்குரிய சரியான நடவடிக்கையே என்று கருதுகிறோம்.
◾கணேசன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







நாம் மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் லட்சியங்களை – தியாகங்களை என்றும் கொச்சைப்படுத்த முன் வருவதில்லை. ஆனால் அவர்களது விலை மதிக்க இயலாத தியாகங்கள் அனைத்தும் பின்னடைவைச் சந்திப்பது ஏன் என்பதைத் தான் அவர்கள் பருன்மையாக சுய விமர்சனம் செய்து கொள்ள முன்வர மாட்டாமல் இருக்கிறார்கள் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.
பாசிச காவிக் கூட்டத்தின் தளபதிகளான அமித்ஷா – மோடி – மோகன் பகவத் போன்றவர்கள் இந்தியாவில் பாசிசத்தை நிலைநிறுத்தி ஒற்றை சர்வாதிகாரத்தை நோக்கி பயணப்பட்டு இந்து ராஷ்ட்ரா என்ற இழிவான ஒரு சமூகத்தை படைக்க எத்தனிக்கிறார்கள். அதற்கு கணிசமான மனித சக்திகளை திரட்டி ஆயுத பாணிகளாகவும் மாற்றி இருக்கிறார்கள். 2026 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் நக்சலிசம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என எக்காலமிட்டு ‘முழங்குகிறார்’ இந்திய நாட்டின் கொலைபதாகச் செயல்களில்
முதன்மையானவராகத் திகழும் அமித்ஷா.
அந்த வகையில் கட்டுரையாளர் துள்ளியமாக
சகலவற்றையும் ஆய்ந்து, மாவோயிஸ்டுகள் பொதுச் செயலாளர் பசவராஜ் மரணத்திற்குப் பின் அவ்வியக்கத்தின் முன்னோடிகள் பேச்சுவார்த்தைக்கு முன் வந்திருக்கக் கூடிய சூழல் குறித்து நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு அமையப் பெறல் வேண்டும்? என்பது குறித்து சுருக்கமாக இருந்தாலும் சிறப்பாக கட்டுரை வெளியிட்டுள்ள தோழருக்கு வாழ்த்துக்கள்.