
ஆர்எஸ்எஸ் – பாஜக முன்வைக்கின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது என்பதன் அடையாளம் தான் இன்று நடந்த வேலை நிறுத்தம்.
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 600 மாவட்டங்களில் மையப்படுத்தப்பட்ட பத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பான ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவை இணைந்து சுமார் 30 கோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ள மாபெரும் அரசியல் போராட்டமாக பரிணமித்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்க எஜமானனின் ஆணைக்கு அடிபணிந்து பாசிச மோடி போட்டு கொண்ட இந்திய அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த போகின்ற பாதிப்புகளை எதிர்த்தும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்ற பல்வேறு அம்சங்களை எதிர்த்த கோரிக்கைகள் ஆகியவற்றை முன்வைத்து இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டது.
“நாமோ சிறிய சக்தி! பாஜகவை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சமரசமாக அணுகுகின்ற வகையில் செயல்பட்டால் தான் பாசிசத்தை முறியடிக்க முடியும்” என்று பிதற்றிக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ அறிஞர்களின் போதனைகளை இந்திய பாட்டாளி வர்க்கம் புறந்தள்ளியுள்ளது.
நாடு முழுவதும் செங்கொடியின் கீழ் விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறுகுறு தொழில் முனைவர்கள் ஒன்றிணைந்து வருவதன் அடையாளமாக இன்றைய போராட்டம் பாசிச பாஜகவிற்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கின்ற வகையில் நடந்தேறியுள்ளது.
ஆனால் முதலாளித்துவ நலன்களை உயர்த்திப் பிடிக்கின்ற மைய நீரோட்ட பத்திரிகைகள், ஊடகங்கள் அனைத்தும், ‘ இந்த வேலை நிறுத்த போராட்டம், பெரிய அளவிற்கு பாதிப்பு இல்லை’ என்று தலைப்பு செய்தியாக போடுவதன் மூலம் தனது வர்க்க சார்பை அம்பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.
முக்கியமாக ஒடிசா மாநிலத்தில் முழுமையான அடைப்பும், மேற்குவங்கம், பீகார், சத்தீஸ்கர் துவங்கி தமிழகம், கேரளா வரை இந்த போராட்டங்கள் நீண்டுள்ளது.
படிக்க:
♦ பிப்ரவரி 12 தேசிய பொது வேலை நிறுத்தம்
♦ தொழிற்சங்கங்களில் நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி தின நிகழ்வுகள்
“நான் நினைத்தால் மோடியின் ஆட்சியை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று மிரட்டுகின்ற டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் அறிவிப்பை கண்டவுடன் மோடியை பற்றி அவர் ஏதோ விவகாரங்களை கையில் வைத்துள்ளார். குறிப்பாக Epstein Files! விவகாரம் தான் காரணம் என்றெல்லாம் கிசுகிசு பாணியில் முன்வைக்கின்றனர் சிலர்.
2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு உலகை பாசிச வழிமுறைகளில் அடக்கி ஒடுக்குவதற்கும், நிதி மூலதன ஏகபோகத்தின் கீழ் நாடுகளை மறு கட்டமைப்பு செய்வதற்கும் துடித்துக் கொண்டிருக்கும் நிதி ஆதிக்க கும்பல்கள் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியை விட பொருத்தமான ஆட்சி ஆர்எஸ்எஸ் பாஜகவின் ஆட்சிதான் என்று முடிவு எடுத்தனர்.
இந்த அடிப்படையிலேயே ஆர்எஸ்எஸ் பாஜகவையும், மோடியையும் இந்திய ஆட்சியாளர்களாக வைத்து தனது மறுகாலனியாக்க சுரண்டல் கொள்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தனது எஜமானனின் ஆணைக்கிணங்க நாட்டின் இயற்கை வளங்கள் முதல் கனிம வளங்கள், தற்போது நுகர்வு சந்தையில் நுகர்வோர்களாக உள்ள மக்களைப் பற்றிய தரவுகள் உள்ளிட்ட அனைத்தையும் எந்த நிபந்தனையும் இன்றி வாரிக் கொடுப்பதற்கு தயாராக உள்ள தேச துரோக கும்பல் தான் ஆர்எஸ்எஸ் பாஜக என்பதுதான் உண்மை.
இந்த அடிப்படையான அம்சத்தினை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்கு பதில் மோடியின் பாலியல் வக்கிர உணர்வுகள் அடங்கிய Epstein Files! விவகாரங்களை முன் வைப்பது அரசியலற்ற வகையில் மோடியை வீழ்த்துவதற்கு முயற்சிக்கின்ற கொல்லைப்புற அணுகுமுறையாகும்.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறு காலனியாக்க கொள்கைகள் அமுல்படுத்தப்பட துவங்கியது முதல், நாட்டில் உள்ள பாட்டாளி வர்க்கம் குறிப்பாக தொழிலாளர்கள், விவசாயிகள் கூட்டு மற்றும் சிறு குறு தொழில் முனைவர்கள், வியாபாரிகள் ஆகியவர்கள் ஒன்றிணைந்து அரசியல் கோரிக்கைகளுக்காக போராட முன்வந்துள்ளது அதிகரித்து உள்ளது. இந்த சூழலில் இத்தகைய போராட்டங்களை கார்ப்பரேட் காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைப்பதும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கீழ் பாசிச எதிர்ப்பு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவுவதை நோக்கி முன்னேறுவதும் தான் உடனடி வேலை திட்டமாக மாற வேண்டி உள்ளது.
இத்தகைய அரசியல் கோரிக்கைகள் உள்ளடங்கிய அரசியல் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற மகத்தான செய்தியை இன்றைய போராட்டங்களின் அரசியல் செய்தியாக நாம் பாட்டாளி வர்க்கத்தினரிடம் கொண்டு செல்வோம்.
- கணேசன்.
புதிய ஜனநாயகம் தினசரி






