26-11-1949 -இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாள்!
இதைத்தான் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் என்று வரையறுத்து ஆண்டுதோறும் நவம்பர் 26-ல் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றும் பல்வேறு தரப்பினரும் அண்ணல் அம்பேத்கர் படத்தின் முன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையைப் படித்து உறுதியேற்றுள்ளனர்.
நவம்பர் 26 அரசியல் அமைப்புச் சட்ட தினத்தை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் நவம்பர் 26ம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகுந்த பெருமை சேர்க்கும் நாள். இது நாட்டின் முன்னேற்றத்தை தெளிவுடனும் உறுதியுடனும் தொடர்ந்து வழிநடத்தும் ஒரு புனித ஆவணமாகும். அதனால்தான், கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பு, 2015ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கொண்டாட முடிவு செய்தது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை போற்றிப் பாதுகாப்பவர் போல பாவனை செய்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட போது அதில் “பாரதீய” தன்மை எதுவுமே இல்லை, முழுக்க மேற்கத்திய இறக்குமதி என ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்ப்பூர்வ இதழ் ஆர்கனைஸரில் வன்மத்தைக் கக்கியவர்கள் என்பதே அவர்களின் வரலாறு. அந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தைக் கொண்டாட சொல்கிறது.
அரசியலமைப்புச் சட்டம் உருவான விதம்
ஜவர்கலால் நேரு பிரதமராக இருந்த தருணத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், என். கோபாலசாமி ஐயங்கார், கே. எம். முன்சி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ் (பி. எல்.மித்தர் உடல் நலக்குறைவால் விலகியதால் நியமனமானவர்), டி. டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு மொத்தம் எழுவர் (7) அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள் என்பது கதை. ஆனால், ஏறத்தாழ முழு பணியையும் டாக்டர் அம்பேத்கரே மேற்கொண்டார். சுற்றி இருந்த பெரும்பாலான கூட்டம் சனாதன பார்ப்பனீய கண்ணோட்டத்தை உடையவர்களாக இருந்தனர். இருப்பினும் தன்னால் இயன்ற வரையிலும் ஒட்டுமொத்த மக்களுக்குமான அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்றை வடிவமைக்க அம்பேத்கர் பெருமளவு தனது ‘அரசியல் சிந்தனை’க்கு ஏற்ப முயன்றார். ஆனால் அவர் நினைத்ததை முழுமையாக நிறைவேற்றிட, சுற்றி இருந்த கூட்டம் அனுமதிக்கவில்லை.
இதனால்தான் ஒரு முறை அம்பேத்கர் இப்படி கூறினார்:
‘நான் அரசியலமைப்பு சட்டத் தயாரிப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தாலும், குழுவில் ஏறத்தாழ அரசியலமைப்புச் சட்ட தயாரிப்பு பணியில் நான் ஒரு எழுத்தராகவே காரியமாற்றத்தக்க அளவிற்கு ஆளாக்கப்பட்டேன். அவ்வளவு நெருக்கடிகளை சுற்றி இருந்தவர்கள் கொடுத்தார்கள்.எனவே இந்த அரசியல் அமைப்புச் சட்டம் நல்லவர்கள் கையில் வாய்க்குமேயானால் நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும்; தீயவர்கள் கையில் சிக்குமேயானால் நாடும், நாட்டு மக்களும் அபாயக் கட்டத்தை எட்டுவர்’- என்ற பாணியில் தனது ஆதங்கங்களை பதிவிட்டிருந்தார்.
’நல்லவர்கள்’ ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்தின் ஆளும் வர்க்க தன்மை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு விடிவைத் தரவில்லை என்பது வரலாறு. ஆனால், தற்போது தீயவர்கள் கையில் அரசியலமைப்புச் சட்டமும் அரசாங்கமும் (நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை உட்பட – தேர்தல் ஆணையம் – அதிகார வர்க்கம் உட்பட) சிக்கிக்கொண்டதால் நாட்டு மக்கள் முன்பைவிட இந்த பாசிச காவிக் கூட்ட ஆட்சிக் காலத்தில் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் தாக்குதல் அரசியலமைப்பு சட்டத்தின் மீது அதிகம் உள்ளதாலேயே எதிர்கட்சிகள் முன்னிலும் அதிகமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அதிகம் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் பல்வேறு போட்டிகளை நடத்தவும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் காணும் வாசகங்களை படித்து காண்பித்து உறுதிமொழி ஏற்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த முகப்புரையில் உள்ள ஜனநாயக, மதசார்பற்ற, சோசலிச குடியரசு போன்ற சொற்கள் ஆர்.எஸ்.எஸ்- பாஜக கும்பலை எரிச்சலூட்டுகிறது என்ற வகையில் வரவேற்புக்குரியதே. ஆனால், அந்த விழுமியங்கள் இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது என்று எவரேனும் சொல்ல முடியுமா?
அந்த அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 26-01-1950. இதனையே இந்திய நாடு ‘குடியரசு தினம்’ என்று கொண்டாடி வருகிறது. மக்களின் வாழ்நிலையை தொடர்ந்து கவனித்து வாருங்கள். சட்ட நியதிகளுக்காக மக்கள் மற்றும் அரசியல்வாதிகள், அரசியல் அமைப்பு சட்டத்தின் வழியே போராடுகின்ற பொழுது – அரசியல் அமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நீதி பரிபாளன அரங்கை நாடுகின்ற பொழுது, எவ்வித இழிந்த நிலைக்கு ஏமாற்றப்படுகிறார்கள்? அல்லது தள்ளப்படுகிறார்கள் என்பதனை அவதானித்தே வருகிறோம்.
அரசியலமைப்பு சட்ட தினத்தை – குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையிலா மக்கள் நிலை உள்ளது?
அரசியலமைப்புச் சட்டம் வடிவமைத்த பிறகு எத்தனையோ முறை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றும் உழைக்கும் மக்களுக்கு ‘சர்வரோக நிவாரணி’யும் அல்ல; ஏதோ குறைந்த பட்சம் பேச்சுரிமை – எழுத்துரிமை – கூட்டம் கூடும் உரிமை உட்பட சிறு சிறு உரிமைகளை மட்டும் கொடுத்து இந்திய நாட்டின் உச்சபட்ச அதிகார பலம் படைத்தது அரசியல் அமைப்புச் சட்டமே…’ என்பதாகப் படம் காட்டிக் கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம்.
ஆனால் உண்மையில், சொல்லிக் கொள்ளப்படும் ‘உயர்ந்த வடிவம் பெற்ற அரசியல் அமைப்பு சட்டம்’ நாட்டு மக்களின் கோவணத்திற்குச் சமமாகக்கூட ஆளும் வர்க்கம் கருதுவதில்லை. இன்னும் கூடுதலாக அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நீதி அரசர்களே அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாஜக ஆர் எஸ் எஸ் சங் பரிவார் கூட்டம், அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு ‘மனுஸ் மிருதி’ போன்ற சனாதன பார்ப்பனீயக் கொள்கைகளை உள்ளடக்கிய மக்கள் விரோத சட்டங்களையே அரசியலமைப்புச் சட்டமாக மாற்றிட பகிர்த்தனமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.
எனவேதான் காவிப் பாசிஸ்ட்டுகள் மோடி அமித்ஷா மோகன்பகவத்…. இக்கும்பலுடன் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ, ராணுவம், ஐஏஎஸ் – ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிகார வர்க்க அமைப்புகளையும் ஏறத்தாழ காவி மயமாக்கி நாட்டை சர்வாதிகாரத் தலைமையின் கீழான ஆட்சி என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். அப்பட்டமாக ஹிட்லர் முசோலினி பாணியை மேற்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார்கள்.
மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த உச்ச நீதிமன்றங்கள் – உயர் நீதிமன்றங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் துணிச்சலாக ஈடுபடத் துவங்கி விட்டன. Custodian of Constituition என்ற நிலையில் இருந்து தரம் தாழ்ந்துவிட்டன.
உதாரணத்திற்கு…
*பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் ராமர் கோவில் இருந்தது; அல்லது ராமன் பிறந்தான் என்பதற்கான ஒரு துண்டுச் சீட்டு ஆதாரத்தையும் சங் பரிவார் கும்பலால் காண்பிக்கப்படாத நிலையிலேயேயே, அனைத்து நீதிமன்றங்களாலும் உணர முடியாத நிலையிலையே ‘ராமபிரானிடம் வேண்டுதல் விடுத்தேன்; பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உத்தரவிட்டான் ராமன்; அதன்படி ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்புரை எழுதினேன்’ – என்று ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் துளியும் வெட்கமின்றி இந்த விஞ்ஞான யுகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். இன்னும் ஒரு பேட்டியில் ”பாபர் மசூதி கட்டப்பட்டதே ஏற்கனவே இருந்ததை அவமதித்தே” என்று கூறினார் இவற்றின் மூலம், தான் ஒரு பக்கா காவி கூட்டத்தினன் தான் என்பதை நிரூபித்துக் கொண்டார்.
*தேர்தல் ஆணையமும், பாசிச பாஜக மோடி அரசும் ஒன்றிணைந்து கொண்டு, சட்ட நியதிகளுக்குப் புறம்பாக வாக்குத்திருட்டுக்களை மேற்கொள்வதையும், தில்லு முல்லு மோசடிகள் செய்வதையும், SIR என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படுவதையும், கோடிக்கணக்கான போலி வாக்குகளை திட்டமிட்டே சேர்ப்பதையும், தேர்தல் முடிந்த பின் அடுத்த தேர்தல் வரும் வரை பாதுகாக்கப்பட வேண்டிய தேர்தல் ஆவணங்கள் மற்றும் வாக்கு இயந்திரங்களை, 45 நாட்கள் முதல் மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே ஒன்றன்பின் ஒன்றாக அனைத்தையும் ஒன்றிய பாஜக அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து நின்று அழித்து (Destroy) விடுவதையும் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால், எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான ஆவணங்களை கேட்டால் தேர்தல் ஆணையம் தர மறுப்பதையும், அவை அனைத்தும் உண்மை என்று தெரிந்திருக்கும் ‘நீதியரசர்களோ’ அவற்றையெல்லாம் எள்ளின் முனையளவும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதையும் பார்க்கின்ற பொழுது இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறதா? இல்லையா?
*இவற்றில் எல்லாம் நவம்பர் 24 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட சூர்யகாந்த் முக்கியப் பங்காற்றி இருக்கிறார் என்பதனை நாம் அவதானித்தே வருகிறோம். மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். இவரது பதவிக்காலத்தில் இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ என்பது தெரியவில்லை.
*ஆளுநர்கள் அதிகாரம் குறித்த பல்வேறு மாநிலங்கள் தொடுத்திருந்த வழக்கில் – குறிப்பாக தமிழ்நாடு அரசாங்கம் தொடுத்த வழக்கில், குறுக்குச்சால் ஓட்டி, ஒன்றிய மோடி அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உபத்திரவம் செய்வதற்காகவே நியமிக்கப்பட்ட R.N.ரவி போன்ற அதிகார வெறி பிடித்த ஆளுநர்களுக்கு ஆதரவாக – ஏப்ரல் 8-ல் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா – மகாதேவன் உத்தரவுகளை முடக்கிப் போட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூலம் உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் கேட்கப்பட்டதில் சனாதன பார்ப்பனக் கூட்டத்திடம் சரணாகதி ஆகி மாநில உரிமைகளை நசுக்கும் வகையிலான பதில்களை வழங்கினார் நவம்பர் 23இல் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பி ஆர் ஹவாய். அந்த பதில்கள் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும்,வழக்கறிஞர்களும் ஒவ்வொரு விதமான தமக்கு சாதகமான வியாக்கியானங்களை வெளிப்படுத்திக் கொண்டாலும் உண்மை என்னவோ பாஜக ஆர் எஸ் எஸ் மோடி கும்பலுக்கு ஆதரவாகவே அவை உள்ளன என்பதை மறுப்பதற்கு இல்லை. இவ்வளவுக்கும் பார்ப்பன கூட்டத்தால் உச்சநீதிமன்றத்திலேயே செருப்பு வீச்சுக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர் இந்த கவாய். அனைத்தையும் துடைத்து எறிந்து விட்டு போவோர்க்கு என்ன சொல்லி என்ன பயன்?
*கரூரில் நடிகர் விஜய்யின் தவெக பொதுக் கூட்டத்தில் 41 பேர் அநியாயமாக கோரச் சாவுகளுக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையமும், சிபிசிஐடி விசாரணை குழுவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் டிஜிபி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவும் ஆக மூன்று தரப்பில் தமிழ்நாடு அரசு விசாரணையை துரிதப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், பாஜகவின் அணில் குஞ்சுகள் ஆன தவெக விஜய் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, மற்றும் என். வி. அஞ்சாரியா அமர்வு எளிதான முறையில் வழக்கினை பொறுப்பற்ற தன்மையில் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ க்கு மாற்ற மனுச் செய்திருந்ததாக கூறப்படும் இருவர் போலியான நபர்/மோசடிக்கு அறியாமையால் உட்படுத்தப்பட்டவர் என்பதனை இந்த அமர்வில் வெளிப்படுத்திய போதும், ‘உச்ச நீதிமன்றத்தில் பொய்யைச் சொல்லி வழக்கா’ என்று கூட சிந்திக்கத் துப்பின்றி அந்த பொய்மை பிரச்சனைகளையும் சிபிஐ-யே விசாரிக்கும் என்று உத்தரவிட்ட இந்த ‘நீதி அரசர்’களின் செயற்பாடுகளை எங்கே கொண்டு போய் சொல்லி முட்டிக்கொண்டு அழுவது?
எங்கே வாழ்கிறது அரசியல் அமைப்புச் சட்டம்?
உத்திரப் பிரதேச பிரதான வழக்கு ஒன்றில் உத்தரப்பிரதேச உயர்நீதிமன்றமே வழக்கை சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த பொழுது மேற்கண்ட நீதிபதிகளில் ஒருவர் அமர்வு, ‘கண்ட கண்ட வழக்குகளை எல்லாம் சிபிஐக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து நேரத்தை வீணடிக்கக் கூடாது’ என்று ‘கடமைவாதிகள்’ போல காண்பித்துக் கொண்டது உச்சநீதிமன்ற அமர்வு. எங்கே வாழ்கிறது அரசியல் அமைப்புச் சட்டம்? ஏன் மாநிலத்திற்கு மாநிலம் இப்படிப்பட்ட முரண்பட்ட தீர்ப்புகள்?
*தமிழ்நாட்டில் உயர்நீதி மன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் போன்றோர் அளித்த தீர்ப்புகளை எல்லாம் பட்டியலிட்டால் தமிழ் மக்களின் நெஞ்சம் குமுறுகிறது! அனைத்துமே காவிப் பின்புலத்தோடு வழங்கப்பட்ட தீர்ப்புகள். பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் புரள்வது நியாயம், திருப்பரங்குன்றம் தர்கா பிரச்சனையில் தேவையற்ற தீர்ப்புகள், சாதி மத கண்ணோட்டத்தில் தீர்ப்புகள்… இவற்றையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அதன் அடிப்படையிலான நிறுவனங்களும் அனுமதித்துதான் வருகிறது.
… இதுபோன்று எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இது தொடர்பாக எண்ணற்ற கட்டுரைகளை இதே ‘மக்கள் அதிகாரம்’ இணையதளத்தில் எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்து விட்டன.
இப்படிப்பட்ட பாசிச சர்வாதிகாரம் கோலோச்சத் துணிந்து விட்ட – கார்ப்பரேட்- காவிப் பாசிசம் அரங்கேற துடிக்கும் இச்சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டாடுவதிலோ, குடியரசு தினத்தை கொண்டாடுவதிலோ மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டு விடப் போகிறது?
அரசியலமைப்புச் சட்ட தினம் கொண்டாடத்தக்க நிலையிலா இருக்கிறது? இல்லை! இல்லவே இல்லை!
எழில்மாறன்







