
புதிய ஜனநாயகம் தினசரியில் கட்டுரைகளை படிக்கின்ற வாசகர் ஒருவர் சில கட்டுரைகள் சரியாகப் புரியவில்லையே ஏன்? இவ்வாறு எழுதுகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
‘காத்திரமான கட்டுரைகளை’ எழுத வேண்டும் என்பதை ஒருவேளை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று கருதுகிறேன். எனவே நானும் அவர்களிடம் முன்வைக்கின்றேன் என்று சமாதானப்படுத்தினேன்.
அது சரிங்க, ஒரு விடயத்தை புரிகின்ற வகையில் எளிமையாக கட்டுரையாக சொல்லுங்களேன் என்றார் அவர்.
சமீப காலமாக முற்போக்கு வலைதளங்களில், “தேர்தல் புறக்கணிப்பு” என்ற அம்சம் சுழன்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி சொல்லட்டுமா என்றேன்.
பீகாரில் நடந்துள்ள வாக்கு திருட்டு மற்றும் சிறப்பு தீவிர திருத்தம் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டு வரும் சூழலில் அதைப்பற்றி பார்ப்போம்.
இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் இருப்பதாக கருதி கொண்டிருக்கின்ற குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள் குறிப்பாக ஒன்றிய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனின் கணவரான பரகல பிரபாகர் மற்றும் ஜனநாயக சீர்திருத்த இயக்கம் என்ற பெயரில் இயங்குகின்ற பல்வேறு சமூக செயல்பாட்டாளர்கள் பீகாரில் நடந்துள்ள வாக்கு திருட்டு பற்றி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதில் பரகல பிரபாகர் சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில், “பீகார் தேர்தலை புறக்கணிக்க வேண்டும். அது மட்டுமல்ல. நாடு முழுவதும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” என்று பல்வேறு புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லி உரை நிகழ்த்தினார்.
உடனே மனக்கிளர்ச்சி அடைந்த சிலர் அவரே தேர்தலை புறக்கணிக்க சொல்லிவிட்டார். எனவே தேர்தல் புறக்கணிப்பு அரசியல் தான் தற்போதைய தேவை என்று எகிறி குதிக்க துவங்கி விட்டனர்.
தேர்தல் புறக்கணிப்பு என்பது மூன்று வகைப்படும் என்று கருதுகிறோம். ஒன்று, நிலவுகின்ற பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையானது பெரும்பான்மை மக்கள் வாழ்க்கை பிரச்சனைகளை தீர்க்க லாயக்கற்றது. பாராளுமன்ற, சட்டமன்ற அமைப்பு முறைகள் மக்களை வாழ வைக்காது. எனவே பாராளுமன்றத்திற்கு வெளியில் தீர்வை தேட வேண்டும். ஒரு புரட்சியின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டுமே தவிர பாராளுமன்றத்தின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்று முன்வைக்கின்ற மார்க்சிய லெனினிய அமைப்புகளின் வழிமுறை.
இரண்டாவதாக, தேர்தலில் நாங்கள் ஓட்டு போடுகிறோம். ஆனால் எங்களது அடிப்படை பிரச்சனைகள் கிராமமாக இருந்தாலும் சரி! நகரமாக இருந்தாலும் சரி! சாலை வசதியிலிருந்து மருத்துவமனை, கல்வி வசதி மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போன்றவற்றை அரசு செய்து தரவில்லை.
ஊரில் உள்ள ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை. வாய்க்கால்கள் புதர்மண்டி போய் உள்ளது. இவை காரணமாக நாங்கள் தேர்தலில் ஓட்டு போடவில்லை. தேர்தலை புறக்கணிக்கின்றோம் என்று பொருளாதார கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை புறக்கணிக்கின்ற வகை.
மூன்றாவதாக, ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 70% வாக்குப்பதிவு நடப்பதும், மீதமுள்ள 30 சதவீதத்தினர் வாக்கு பதிவுக்கு செல்லாமல், ஓட்டு போடாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் தேர்தலை புறக்கணிக்கின்றனர். இவ்வாறு குறிப்பிட்ட சதவீதம் ஓட்டு போடாமல் புறக்கணிக்கின்ற முதல் வகையினரான மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சுகின்ற முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரிசையில் நின்று ஓட்டு போடுவதில்லை.
அதிகார வர்க்கத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வரிசையில் நின்று ஓட்டு போடுவதில்லை. சின்னத்திரை மற்றும் பெரிய திரை போன்றவற்றில் நடித்து லட்சக்கணக்கில் கல்லா கட்டுகின்ற சினிமாக்காரர்கள் விதிவிலக்காக சிலரை தவிர வரிசையில் நின்று ஓட்டு போடுவதில்லை.
இவை தவிர மேட்டுக்குடிகள் அவர்களின் குல கொழுந்துகள் ஓட்டு போடுவதில் அக்கறை காட்டுவதில்லை.
மற்றொருபுறம் வேலை தேடி நாடு முழுவதும் நாடோடிகளாக மாறி புலம்பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளர்கள், தேர்தல் நாளின் போது சொந்த ஊருக்கு செல்ல முடியாத அவல நிலைமையால் ஓட்டு போட முடியாமல் தவிர்த்து விடுகின்றனர்.
படிக்க: பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.
இவ்வாறு வாக்குப்பதிவு குறைவதை வைத்துக்கொண்டு அல்லது ஓட்டு போடுகின்றவர்களின் எண்ணிக்கை குறைவதை வைத்துக்கொண்டு தேர்தல் புறக்கணிப்பு அரசியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று மனக்கிளர்ச்சி அடைகின்ற வகையினர்.
தற்போது பீகார் மாநிலத்தில் டிசம்பரில் நடக்க இருக்கின்ற தேர்தலில், அந்த மண்ணின் மைந்தர்கள், பூர்வ குடிகள் மற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கு திட்டமிட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
“இந்த சிறப்பு தீவிர திருத்தம் அங்கு மட்டுமல்ல.. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும், தேர்தலில் பதிவாகின்ற வாக்கு சதவீதத்தை காட்டிலும், குறிப்பிட்ட சதவீதம் அதிகமாக திருட்டுத்தனமாக பதியப்படுகிறது. அவை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கின்றது” என்று பரகல பிரபாகர் உள்ளிட்ட பலரும் பேசி வருகின்ற சூழலில், அவரே தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறிவிட்டார். எனவே தேர்தல் புறக்கணிப்பு தான் சரியானது என்று தமிழகத்தில், ‘புரட்சிகர’ அந்தஸ்து கோரி செயல்பட்டு வருகின்ற தர்மபுரி செங்கனல் கும்பல் முன் வைத்துள்ளது.
படிக்க: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் மோசடிகளை முறியடிப்பது எப்படி?
பரகல பிரபாகர் முன்வைக்கின்ற தேர்தல் புறக்கணிப்பும், இவர்கள் சொல்லிக் கொள்கின்ற தேர்தல் புறக்கணிப்பும் ஒன்றா என்பதை பற்றிய எந்த வகையான அடிப்படை அரசியல் ஞானமும் இல்லாத அரைவேக்காடுகள், தேர்தல் புறக்கணிப்பு என்றவுடன் மனக் கிளர்ச்சி அடைந்து அவரது உரையை முன்வைத்து கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அணிகளை திக்கு முக்காட வைக்கின்றனர்.
அதே சமயத்தில் பரகல பிரபாகர் முன்வைக்கின்ற மற்றொரு அம்சம் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக வழிமுறையிலான தேர்தல்கள் இனிமேல் நடக்காது என்பதும், போலி ஜனநாயக வடிவங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டது என்பதையும் அவர் முன் வைத்துள்ளார்.
உண்மைதான்! இந்தியாவில் உள்ள போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு காலாவதியாகி பாராளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்து ஆட்சி வடிவங்களும் பாசிச எதிர்ப்பு மற்றும் பாசிச ஆதரவு என்ற உள்ளடக்கம் கொண்ட புதிய தன்மையில் மாறியுள்ளது என்று புதிய ஜனநாயகம் முன்வைக்கின்றது.
இதனால்தான் பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக பரப்புரைகள் செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது. அவை நாடு முழுவதும் பிரச்சாரமாகவும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த சூழல் 1970களில் இல்லை.
இந்த வகையில், ‘ தேர்தல் ஜனநாயகத்தை’ புரிந்து கொண்டு அதனை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது புறக்கணிப்பது என்று பரிசீலனை செய்யாமல், “மூக்கு உள்ளவரை சளி பிடிக்கும்” என்பது போல தேர்தல் உள்ளவரை நாங்கள் புறக்கணிப்போம் என்று பேசுவதும், பொருளாதார நலனுக்காக தேர்தல் புறக்கணிப்பு என்று பேசுபவர்கள்; சொந்த தேவைகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு என்று பேசுபவர்கள்; குறிப்பிட்ட காரணங்களை முன்னெழுத்து தேர்தல் புறக்கணிப்பு என்று பேசுபவர்கள் அனைவரும் நமது அணியை சேர்ந்தவர்கள் என்று தானும் ஏமாந்து கொண்டு தனது அணிகளையும் ஏமாற்றுகின்ற ‘ கைங்கரியத்தில்’ இறங்கியுள்ளனர் செங்கனல் தரப்பினர்.
தேர்தலில் வாக்குத்திருட்டு முதல் தேர்தல் ஆணையம் செய்கின்ற திருட்டுத்தனங்கள் வரை அனைத்தையும் அரசியலமைப்புச் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளது.. இதனையும் மீறி ஒருவேளை சிறப்பு தீவிர திருத்தம் நிறுத்தப்பட்டு மீண்டும் வாக்காளர்களுக்கு வாக்களிக்கின்ற உரிமை கிடைத்தாலும் பாசிசத்திற்கு எதிராக மாற்று திட்டத்தை வைத்து மக்களை திரட்டாமல் வீழ்த்த முடியாது.
நிலவுகின்ற கட்டமைப்புக்குள்ளேயே தீர்வுகளை தேடுவது என்ற வழியில் ஒருபோதும் பாசிசத்தை வீழ்த்த முடியாது. அது தேர்தல் சீர்திருத்தம் ஆனாலும் சரி தேர்தலில் பாசிசத்திற்கு எதிரான குறைந்தபட்ச செயல் திட்டம் முன்வைத்து முறியடிக்காமல் பொதுவாக பிரச்சாரம் செய்தாலும் சரி. இவை அனைத்தும் ஒரு போதும் பாசிசத்தை ஆட்டவோ, அசைக்கவோ செய்யாது.
எனவே, இந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டு தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்துவது; தேர்தல். காலங்களில் பாசிச எதிர்ப்பு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வீச்சாக கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்வது; இதன் மூலம் மக்களை பாசிசத்தை வீழ்த்துவதற்கு தயார்படுத்துவது என்பதுதான் அவசியம். அதுவே தற்போதைய காலகட்டம் உணர்த்துகின்ற உண்மையாகும்.
- கணேசன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
தோழர் கணேசன் அவர்களின் சிறந்த கட்டுரையாக கருதுகிறேன். பல்வேறு நுன்னறிவு அரசியல் பார்வையுடன் கட்டுரை படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு அல்லது பங்கேற்பு என்பது மார்க்சிய – லெனினிய பார்வையில் எது? எப்போது?சாத்தியப்படானது என்பதை சிறப்பாகவே விளக்கி இருக்கிறார். மேலும் தேர்தல் திருட்டு என்பது பீகாரில் மட்டும் நடந்திருப்பது போன்ற கருத்தோட்டம் சரியன்று. முதலில் தேர்தல் திருட்டு அம்பலமானது கர்நாடகாவில் தான். எப்படி இருப்பினும் கடந்த 2024 தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது ‘தேர்தல் திருட்டு’ மூலமே. அப்படி திருட்டுத் தேர்தல் மூலம் வென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் இன்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்! நல்ல கூத்தும் கொடுமையும் தான் போங்கள்! எப்படியும் ஆசான் லெனின் குறிப்பிட்டுச் சொன்னது போல ‘பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்’ என்ற கூற்றை இந்திய பாராளுமன்றத்திற்கு சரியாகவே பொருத்திவிட்டார்கள் பாசிச பாஜக காவிக் கூட்டம்.
அண்மையில் நடைபெற இருக்கக்கூடிய தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உட்பட்ட மாநிலங்களில் பீகாரைப் போன்றே சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் (SIR) ‘பணிகளை’ மேற்கொள்ளப் போவதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ‘புண்ணியவான்’ ‘அப்பழுக்கற்ற’ ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார். என்னத்தச் சொல்ல?
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் ஏனோ தானோ என்றுதான் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டுதல் கொடுக்கின்றதேயொழிய, அழுத்தம் திருத்தமான தீர்ப்பை வழங்குவதற்கு அது முன் வரவில்லை. காரணம் உச்ச நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும், ED, IT, CBI, IAS, IPS உயர்நிலை – கீழ்நிலை அதிகாரிகள், ராணுவம், CRPF, என அனைத்தையும் ஏறத்தாழ காவிமயமாக்கி முடித்து விட்டது பாசிச பாஜக ஆர் எஸ் எஸ் இந்துத்துவ சங் பரிவார் காவி(லி)க் கும்பல்.
ஆக இப்படிப்பட்ட தருணத்தில் இந்த காவி கூட்டம் இன்னமும் சாதி வெறி; மதவெறி; கடவுள்கள்; வெறுப்பு அரசியல் இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஏமாற்றி பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கனவு காண்கிறது.
இப்படிப்பட்ட தருணத்தில் துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாஜக வேட்பாளருக்கு அணி மாறி வாக்களித்திருப்பது என்பது கேவலம்! அவமானம்! வெட்கக்கேடு! கோடிகளுக்கு சோரம் போன இந்த கேடுகெட்ட மனிதர்களை என்னவென்று கூறுவது.
எப்படியோ இன்றைக்கு நாடு இருக்கக்கூடிய பிரத்யேக நிலைமையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்றதொரு ஒன்றுபட்ட போராட்டம் இந்திய அளவில் நடத்தி காண்பிக்கப்பட வேண்டி உள்ளது.
உதாரணத்திற்கு இந்தியாவிற்கு அண்டை நாடுகளாக உள்ள நேபாளம், ஸ்ரீலங்கா, பங்காளதேஷ் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள் எழுச்சியை போன்று இந்தியாவிலும் தெருக்களில் இறங்கி போராடுவதற்கான அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் பாசிசத்தை வீழ்த்த நினைக்கக்கூடிய அனைவரது கடமையாக இருக்கிறது. எனவே அதனை நோக்கி பயணப்படுவோம்.
அப்படிப்பட்ட கண்ணோட்டத்திலும் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு இந்த கட்டுரையை தீட்டியுள்ளார் தோழர் கணேசன்.
அவருக்கு எமது பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!