அரசியல் ரீதியாக பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற மாநிலங்கள் மற்றும் இந்திய தேசியத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுகின்ற மாநிலங்கள், இனங்கள் ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல் புதிய வகையிலான தாக்குதல்களை தொடுக்கின்றது.
அரசியல் பொருளாதாரத்தின் உருட்டி திரட்டப்பட்ட வடிவம் தான் பண்பாடு என்பது மார்க்சிய அணுகுமுறை. இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இன்று நாட்டையே சூறையாடி வருகின்ற கார்ப்பரேட் கொள்ளைக்கான அரசியல் பொருளாதரத்தை மறைப்பதற்கு பண்பாட்டு ரீதியில் பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டே தொடுக்கின்றனர்.
இந்த வகையில் இவர்கள் திரைப்படத்தின் மூலமும், திரைப்படத் துறையில் இயங்குகின்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஆதரிக்கின்ற பார்ப்பன கும்பலின் மூலமாக தொடர்ச்சியாக திரைப்படங்களை எடுத்து, அதை உண்மை என்று மக்கள் மூளைக்குள் திணித்து வருகின்றனர்.
காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இவர்கள் வெளியிட்ட போது அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடுமையான எதிர்ப்பு உருவானது. உண்மையான காஷ்மீர் மக்களின் வாழ்க்கை பிரச்சனைகளை பற்றி முன்வைக்காமல், காஷ்மீர் பண்டிட்டுகள் மீது தாக்குதல் நடத்திய காஷ்மீர் தீவிரவாதிகளை பற்றி படம் எடுக்கிறேன் என்ற போர்வையில் காஷ்மீர் மாநிலமே தீவிரவாதிகளின் கூடாரம் என்பதை போல முன்வைக்கப்பட்ட அந்த திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு உருவானது.

“இந்த வன்முறைக்குக் காரணமாகவும் அதன் பின்னணியாகவும் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் காஷ்மீரில் பெரும்பான்மையினராகவும் இந்தியாவின் பிற பகுதிகளில் சிறுபான்மையினராகவும் வாழும் இஸ்லாமியர்களை ஒட்டு மொத்தமாக தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக படம் ஒற்றைச் சார்புடன் இருக்கிறது. காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் அனைவருமே இந்துக்கள் மீதான வெறுப்பை சுமக்கிறவர்களாக, அவர்கள் மீதான வன்முறைக்குத் துணைபோகிறவர்களாக, இஸ்லாமைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளின் ஆதரவாளர்களாக காண்பிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியச் சிறுவர்கள்கூட மதவெறியர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.” என்று பார்ப்பன ஊதுகுழலான தமிழ் இந்து பத்திரிக்கையே எழுதியது.
இதை ஒட்டி பல திடீர் இயக்குனர்கள் தேசபக்தியுடன், இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற கலவரங்களை குறிப்பாக கடந்த காலங்களில் இந்து மதம் என்று சொல்லக்கூடிய பார்ப்பன மதத்தின் ஆதிக்க சாதிகள் நடத்திய வெறியாட்டங்கள், அதற்கு எதிராக தற்காப்புக்காக சிறுபான்மை மதத்தினர் நடத்திய தாக்குதல்கள் ஆகியவற்றை சமப்படுத்தி இந்து மதம் மிகப்பெரிய அழிவுக்கு உள்ளாகப் போகிறது என்ற பீதியூட்டுகின்ற வகையில் இது போன்ற திரைப்படங்களை எடுத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் விவேக் அக்னிஹோத்ரி எடுத்துள்ள, நாளை வெளியாக உள்ள பெங்கால் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பற்றி ரிவியூ ஒன்றை நாம் இந்த கட்டுரையில் எழுதவில்லை மாறாக எப்படிப்பட்ட சூழ்நிலையில் இது போன்ற திரைப்படங்கள் வெளியாகின்றது என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தவே இதனை பற்றிய சிறு கட்டுரையை எழுதுகிறோம்.
2014 ஆம் ஆண்டு முதல் இந்தியா என்று சொல்லக்கூடிய இந்திய ஒன்றியத்தில் பல்வேறு தேசிய இனங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பல தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியா, “ஒரே நாடு! ஒரே சந்தை” என்ற அடிப்படையில் ஒன்றிணைக்கப்படுகிறது இந்த அகண்ட, விரியாத சந்தையானது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மிகப்பெரிய லாபம் ஈட்டும் வேட்டைக் காடாக உள்ளது.
படிக்க: பெங்காலி ஃபைல்ஸ்: தொடர்ந்து மத மோதலைத் தூண்டி கல்லா கட்டும் காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குனர்!
இன்னொரு புறம், இந்த நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டு வளங்கள், கடல் வளங்கள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகள் கையில் லாப வேட்டைக்காக வாரி கொடுக்கப்படுகிறது.
இதனால் காடுகளில் வாழ்கின்ற பழங்குடி மக்கள்; நிலப் பகுதிகளில் வாழ்கின்ற விவசாயிகள்; கடல் வளத்தை பாதுகாத்து வருகின்ற மீனவர்கள் வாழ்க்கை என்றும் இல்லாத அளவிற்கு கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
படிக்க: காஷ்மீர்: தியாகிகளுக்கு மரியாதை செலுத்த அனுமதிக்காத பாசிச அரசு!
வர்க்க ரீதியாக விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் இதர பிரிவு உழைக்கும் மக்களின் வாழ்க்கை சூறையாடப்படுவதற்கு அடிப்படை காரணமாக உள்ள கார்ப்பரேட் பாசிசம் அதன் சுரண்டல், கொள்ளை, ஆதிக்கம் ஆகியவற்றை பற்றி மக்கள் கோபாவேசம் கொண்டு ஒன்றுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே திசை திருப்புவதற்கு இதுபோன்ற இனரீதியிலான சிக்கல்களையும், மத ரீதியிலான எப்போதோ நடந்த பிரச்சனைகளையும் முன்வைத்து அவர்கள் மூளையில் ஒன்று பட முடியாத அளவிற்கு சம்பவங்களை பெரிதாக்கி பைல்ஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் எடுக்கப்படுவதும் அவை வரிசையாக வெளியேயும் வருகிறது.
எனவே, இவர்களின் நோக்கம் காஷ்மீரிலோ, குஜராத்திலோ, பெங்காலிலோ நடந்த கலவரங்களை வெளிப்படுத்துவது அல்ல. மாறாக அவர்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமை உருவாகி விடக்கூடாது என்பதை ஒரு நோக்கமாக கொண்டு பிளவுபடுத்துகின்ற வகையில் இப்படிப்பட்ட திரைப்படங்களை எடுத்து கல்லா கட்டுகிறார்கள்.
உண்மையிலேயே இந்த நாட்டின் செல்வ வளங்களை தற்போதைய காலகட்டத்தில் சூறையாடி வருகின்ற அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டையை திரைப்படங்களாக எடுத்து வெளியிடுவதற்கு விவேக் அக்னிஹோத்ரி தயாராக உள்ளாரா என்றால் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
இதற்கு இணையாகவே பாசிச பாஜகவிற்கு எதிராக ஆளுகின்ற மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சிகள், அதன் முதலமைச்சர்கள் ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பைல்ஸ் என்ற பெயரில் வெளியிடுவது, அதனை பரபரப்பாக்குவது, மக்கள் மத்தியில் ஊழல் மீதான கோபாவேசத்தை தனது ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வது என்ற கீழ்த்தரமான வழிமுறைகளை ஆர்எஸ்எஸ் பாஜக செய்து வருகிறது.
எனவே, காலாவதியாகி போன விவகாரங்களை ஃபைல்ஸ் என்ற பெயரில் வெளி கொண்டு வருகின்ற முயற்சி அனைத்தும் கார்ப்பரேட் பாசிசத்தை மறைப்பதற்கு காவி பாசிச கும்பல் புதிய வழிமுறைகளில் இறங்கியுள்ளது.
இந்த வழிமுறைகளில் ஒன்றான ஊடகத் துறை மற்றும் திரைப்படத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி மூளைச்சலவை செய்வதுதான் என்பதை பாட்டாளி வர்க்கத்திற்கு புரிய வைப்போம்.
◾மருது பாண்டியன்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி