ஈரான் சுப்ரீம் லீடராக இருந்த அலி கொமெய்னி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஈரான் மீது ராணுவ பயங்கரவாத தாக்குதலை கட்டவிழ்த்து விட்டு உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டணியை கண்டித்தும் தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்துவதை கடுமையாக கண்டனம் செய்து தமிழக பாஜக இந்திய ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது ஈரானுக்கு ஆதரவாக தமிழகத்தில் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் பாசிச பாஜக கும்பல் பீதியடைந்துள்ளது.
இதனால் தமிழகத்தை ஆளுகின்ற திமுகவை விமர்சித்து, “திமுக அரசு தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்துகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, பிப்.28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் நாடு தழுவிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதை அலட்சியப்படுத்திவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தனது கூட்டணி கட்சிகளான விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணைந்து ஈரானுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது” இதனால் மத்திய படைகளை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேலுக்கு சென்ற இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி இஸ்ரேலுடன் பல்வேறு விதமான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டார் என்பதும் அவர் நாடு திரும்பிய இரண்டே நாளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டு படைகள் ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய நிகழ்வுகள் தான்.

இதனை நிரூபிக்கின்ற விதமாக ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டதை கண்டித்து உலகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எதிரொலித்தாலும், இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி இதனை கண்டிக்கவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஈரானின் உயர்மட்ட தலைவர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட ராணுவ தளபதிகள் முன்னணி தலைவர்கள் நடத்திய கூட்டம் ஒன்றை இஸ்ரேலின் உளவு படையான மொசாத் மற்றும் அமெரிக்காவின் உளவுப் படையான சிஏஏ இணைந்து துப்பறிந்து துல்லியமான தாக்குதல் ஒன்றின் மூலம் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இவர்கள் துல்லியமாக கண்டுபிடித்தனர் என்பதை விட ஈரான் உயர்மட்ட தலைவர்கள் மத்தியிலேயே சில உளவாளிகளையும், கருங்காலிகளையும் உருவாக்கியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகி கொண்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதன் காரணமாகவே அதன் மீது தாக்குதல் தொடுக்கின்றோம், ஈரானில் மக்கள் விரோத ஆட்சி நடக்கின்றது அதனை தூக்கி எறிந்து ஜனநாயகத்தை கொண்டு வரப் போகின்றோம் என்ற புளித்துப்போன, சொத்தையான வாதத்தை முன்வைத்து இந்த தாக்குதலை துவங்கிய அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் அதன் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் புலிவால் பிடித்த கதையாக தற்போது திகைத்து நிற்கின்றனர்.
அமெரிக்காவின் 70 ஆண்டு சாம்ராஜ்யம்! வெறும் 4 நாளில் மிகப்பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது என்பது மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து வெளிவரும் செய்திகள் நமக்கு அறிவிக்கின்றது.
அமெரிக்கா கடந்த 70 ஆண்டுகளில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செய்த முதலீடு என்பது கற்பனைக்கும் எட்டாத ஒரு பிரம்மாண்டமான தொகை. ராணுவத் தளங்கள் அமைப்பது, பில்லியன் டாலர் மதிப்பிலான எஃப்-35 போர் விமானங்கள், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு என அமெரிக்கா சுமார் 8 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் (8 Trillion Dollars) இங்கே செலவிட்டுள்ளது. இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் (1 டாலர் = ₹92.27 என கணக்கிட்டால்) இது சுமார் 740 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையாகும்.

அதாவது, இந்தியாவின் தற்போதைய ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட பல மடங்கு பெரிய இந்தச் செல்வம், வெறும் நான்கு நாட்களில் ஈரான் நடத்திய துல்லியமான நகர்வுகளால் பயனற்றுப் போயிருக்கிறது. வெறும் நிலப்பரப்பாகப் பார்த்தால் அது சில ஏக்கர்கள் தான், ஆனால் பொருளாதார ரீதியாகப் பார்த்தால் அமெரிக்காவின் பல தலைமுறையினரின் வரிப்பணம் அந்தப் பாலைவன மணலில் மண்ணோடு மண்ணாகக் கரைந்து போயிருக்கிறது என்பதுதான் அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் விரும்பாத கசப்பான உண்மை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது கால்தடத்தைப் பதிக்க அமெரிக்கா பெரும் திட்டமிடல்களை செய்தது. சவுதி அரேபியா முதல் கத்தார் வரை, ஈராக் முதல் சிரியா வரை என ஒரு மிகப்பெரிய ராணுவ வலைப்பின்னலை (Military Base Network) அமெரிக்கா உருவாக்கியிருந்தது. இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் எண்ணெய் வளத்தை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வதற்கு மூர்க்கத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இதற்காகவே பிற்போக்கு மன்னராட்சி நிகழ்கின்ற அரேபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெரும்பான்மை அரசுகள் அமெரிக்க கைக்கூலிகளாகவும் அமெரிக்க அடி வருடிகள் ஆகவும், அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு பயந்த அடிமைகளாகவும் நவீன காலனி ஆதிக்கத்தின் கீழ் மாற்றப்பட்டிருந்தனர்.
படிக்க:
♦ ஜனநாயகத்துக்காகப் போராடும் ஈரான் மக்கள்! மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் அமெரிக்கா!
♦ உலக சமாதானத்தின் முதன்மை எதிரி அமெரிக்கா
இந்த நாடுகளின் முக்கியமான பகுதிகளில் தனது ராணுவ தளங்களை நிறுவிய அமெரிக்கா அங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தனது ஆதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வருகின்ற சீனா, ரஷ்யா ஆகியவற்றை கண்காணிப்பது தேவைப்பட்டால் தாக்குதல்களை நடத்துவது ஆகியவற்றிற்கு பெரும் தொகையை செலவிட்டு கொண்டிருந்தது.
ஈரானின் அதி உயர் தலைவர் கொல்லப்பட்டது மட்டுமின்றி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 170 பேர் மீது கொடூரமான தாக்குதல் நடத்திக் கொன்றது முதல் பல்வேறு மாகாணங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகள்,, தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதன் ராணுவ மையங்கள் ஆகியவற்றின் மீது கொடூரமான தாக்குதல்களை கடந்த நான்கு நாட்களாக நடத்தி வருகிறது இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுப் படை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில் ஈரான் புரட்சி படை தொடர்ச்சியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் நிறைந்துள்ள பத்துக்கும் மேற்பட்ட அரேபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் சுமார் 700க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கு அவர்கள் குவித்து வைத்திருந்த ஆயுத தளவாடங்கள் பீரங்கிகள் பெரும்பாலும் நாசகதியாகியுள்ளது என்றும் போர்களை பற்றி நேர்மையான முறையில் செய்தி சேகரித்து வெளி உலகத்திற்கு அறிவிக்கின்ற செய்தி பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறைகூவல் விடுத்துள்ள அமெரிக்காவின் அதிபரான ட்ரம்ப், அவர்கள் சொந்த பொறுப்பில் திரும்ப வேண்டும் என்று அறிவித்திருப்பது அமெரிக்க மேல்நிலை வல்லரசின் அரசியல் மற்றும் ராணுவ படுதோல்வியை சுட்டிக்காட்டுகிறது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ட்ரம்புக்கு எதிரான போராட்டங்களும் நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாமல் இந்த கொடூரமான தாக்குதல்களை மற்றும் போரை ட்ரம்ப் நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் போன்றவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
படிக்க:
♦ அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
♦ “கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து நாடு விடுபட வேண்டும்”. அமெரிக்க கொத்தடிமையின் அலறல்!
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு மற்றும் ராணுவ ரீதியிலான பின்னடைவுகள் அதைவிட அமெரிக்கா எதிர்பாராத வகையில் திருப்பி தாக்கி வரும் ஈரானின் தீவிரமான தாக்குதல்கள் ஆகியவை அமெரிக்கா மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
புதை குழியில் விழுந்தவன் மீண்டு எழுவதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதுபோல் அமெரிக்கா தனது பொருளாதார நெருக்கடிகளையும், தான் உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடு என்பதையும் மறைப்பதற்கு இத்தகைய தாக்குதல்களை நடத்துவது கொடூரமாக சிறுவர்கள் குழந்தைகள் மக்கள் மீது நடத்துகின்ற தாக்குதல்கள் அனைத்தும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த கொடூரமான தாக்குதல்களுக்கு பிராந்திய வல்லரசாக அந்த பகுதியில் ஆட்டம் போட்டு வருகின்ற இஸ்ரேல் அதன் அதிபரான நெதன்யாகு ஆகியோருடன் இளைய பங்காளியாக பாசிச மோடி இணைந்திருப்பது உலகெங்கிய பாசிச கூட்டணி உருவாகி இருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
இந்த கொடூரமான பாசிச கூட்டணியை எதிர்த்து உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தை அறைகூவல் விடுத்து ஒன்று திரட்டுவோம்.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகப் பெரும் யுத்தமாக கடும் பொருளாதார இழப்புகள், கொடூரமான விலை ஏற்றங்கள் மற்றும் மனித குலத்தை அழிக்கின்ற நாசக்கார போர் உத்திகள் ஆகியவற்றின் மூலம் நடந்து வருகின்ற இந்த யுத்த வெறியையும் யுத்த நடவடிக்கைகளையும் கண்டிப்பதற்கு ஒன்று திரள்வோம்.
பாசிச கூட்டாளிகள் பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் எதிர்த்துப் பேசுபவர்கள் போராடுபவர்கள் விமர்சிப்பவர்கள் ஆகியவர்கள் மீது நடத்துகின்ற தாக்குதல்கள் ஆகியவற்றையும் சேர்த்தே முறியடிக்க ஒன்று திரள்வோம்.
- ஆல்பர்ட்.
புதிய ஜனநாயகம் தினசரி







ஈரான் மீது கொலை வெறியாட்டம் அமெரிக்கா இஸ்ரேல் இந்தியா கொலைகார பாசிச கூட்டணி !
புதிய ஜனநாயகம் தினசரி கட்டுரை சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர் ஆல்பர்ட்
பாசிச காவிக் கும்பலுக்கு சரியான செருப்படி கொடுத்து அம்பலப்படுத்தி உள்ள கட்டுரையாளருக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
உலக ரவுடி அமெரிக்கா – அதன் தொங்கு தசை இஸ்ரேல் கூட்டாக ஈரானுக்கு எதிராக போர் தொடுத்துள்ள வேளையில்
அவர்களது ஷூக்களை நக்கி பிழைப்பு நடத்தும் ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவ பாசிச காவிக் கும்பலையும் சேர்த்தே
முறியடிக்க இந்திய ஜனநாயக இயக்கங்கள் உலகளாவிய ஜனநாயக இயக்கங்ங்களுடன் கரம் கோர்த்துப் போரிட அணி திரள்வோம்…!!!