மிழ் மற்றும் மலையாளத்தில்  திரைக்கு வந்த நரி வேட்டை  திரைப்படத்தை பற்றி பல வகையான விமர்சனங்களும் வெளிவந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.

சிறந்த படங்களில் ஒன்றாக குறிப்பிட்டு சொல்லப்பட்ட வேண்டிய, அனைவரும் பார்க்க வேண்டிய நரி வேட்டை  திரைப்படத்தின் மீது உடனுக்குடன் விமர்சனம் எழுத நாங்கள் தவறியுள்ளோம். தற்போது இந்த படத்தை பற்றியும், இந்த படத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் சிலவற்றின் மீதும்  மார்க்சியவாதிகளாக எங்கள் கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் முன் வந்துள்ளது.

அரசுக்கு – போலீசுக்கு எதிரான ஒரு கதையை தேர்வு செய்து, அதை நுட்பமாக திரைக்கதை அமைத்து, அழகாக ஒலி – ஒளிப்பதிவு செய்து, அரசு பயங்கரவாதத்தை ஓரளவு அழுத்தமாக கண்முன் காட்டியுள்ள  படக் குழுவிற்கு நமது வாழ்த்துக்களை (தாமதமாகிய நிலையிலாவது)  தெரிவிப்போம்.

திரைப்படம் வெளிவந்துள்ள காலம்!

இந்தப் படம் திரைக்கு வந்துள்ள காலகட்டமும் மிகவும் பொருத்தமானது. மோடி – அமித்ஷா தலைமையிலான பாசிச அரசானது ஆப்ரேஷன் காகர் என்ற பெயரில், சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களை மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி நர(ரி)வேட்டையாடி வருகிறது. மாவோயிஸ்ட் என்று பயங்கரவாத பீதியூட்டி ஒட்டுமொத்த மலைத் தொடரையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கத் துடிக்கிறது.

நரிவேட்டை திரைப்படத்தில் பழங்குடியின மக்களில் ஒருவராக இருந்து அவர்களுக்காக தலைமை ஏற்று போராட்டம் நடத்தும் பெண் கதாபாத்திரம் போராளிகள் யார் என்பதையும்? அல்லது மாவோயிஸ்டு  முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்படுபவர்கள் யார் என்பதையும், அரசாங்கம் யாருக்கானது என்பதையும்  வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமே பறிக்கப்படும்  இந்தச் சூழலில், அரசின் பல்வேறு சதிகளை, கிரிமினல்தனங்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இந்நாட்டில் உள்ள புரட்சியாளர்கள், முற்போக்குவாதிகள், ஜனநாயகவாதிகள், நாட்டுப்பற்றாளர்கள் அனைவரின் கடமையாகவும் முன் நிற்கிறது. அத்தகைய கடமைக்கு வலு சேர்க்கும் விதமாகவே நரி வேட்டை திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

2003-ம் ஆண்டு வயநாடு மாவட்டம் முத்தங்காவில் நடந்த பழங்குடி மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும், அதன் கோரத்தையும் தழுவி, எழுத்தாளர் அபின் ஜோசப் கதை, திரைக்கதை எழுத, அதை இயக்கியுள்ளார் அனுராஜ் மனோகர்.

வயநாடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு வாழ்வாதார இருப்பிட வசதி கோரி பாதுகாக்கப்பட்ட வனத்துறை இடத்தில் கூடி பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக – நசுக்கி கலைப்பதற்காக  ரிசர்வ் போலீஸ் படையை அங்கு அனுப்புகிறது அரசாங்கம். அதில் டொவினோ மற்றும் சூரஜ் இருவரும் இடம் பெறுகின்றனர். அந்த ஆபரேஷனுக்கு தலைமை அதிகாரியாக சேரன் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் போராட்டக்காரர்களோடு நக்சலைட் தீவிரவாதிகள் கலந்திருப்பதாக வந்த – அல்லது உருவாக்கப்பட்ட தகவலையடுத்து, அவர்களை தேடி காட்டுப் பகுதிக்குள் போலீஸ் படை செல்கிறது.

படிக்க:

 “பறந்து போ” – இறக்கைகள் வேண்டுமே!
 நாங்குநேரி வன்முறைக்கு சினிமா தான் காரணமா?

இரு பிரிவுகளாக தேடுதல் வேட்டைக்கு செல்லும் அவர்களின் டொவினோ ஒருபுறமும், சூரஜ் ஒருபுறமும் செல்கின்றனர். அன்று மாலை டொவினோ திரும்புகிறார். ஆனால் சூரஜ் திரும்பவில்லை. இதனை அடுத்து சேரன் உத்தரவின் பேரில் டொவினோ தாமஸ் உள்ளிட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அப்போது மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சூரஜ் கிடக்கிறார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்படுகிறது – காக்கிகளினால் திட்டமிட்டு ஏவப்படுகிறது.

ஊடகங்களில் வெளிவந்துள்ள சில விமர்சனங்கள்!

ஒவ்வொரு செயலுக்கும் பின்னே ஒவ்வொரு கருத்துக்கும் பின்னே ஒரு வர்க்க நலன் இருக்கவே செய்கிறது. அதேபோல் நரிவேட்டை  படத்தின் மீது வந்துள்ள விமர்சனங்களிலும் பாராட்டுகளிலும் கூட இத்தகைய வர்க்க கண்ணோட்டம் அடங்கியே உள்ளது. இதை புரிந்து கொள்ள வகை மாதிரிக்கு சிலவற்றை பார்க்கலாம்.

  1. “ஒட்டுமொத்த கேரள அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்திய அரசு வன்முறையை, அரசியலாகத் தெளிவாக அணுகியிருந்தாலும், தத்தளிக்கும் முதற்பாதி திரைக்கதையும், போதுமான தெளிவும், எமோஷனும் இல்லாத இரண்டாம் பாதி திரைக்கதையும், இந்த ‘நரிவேட்டை’யில் பாதி இரையை மட்டுமே வேட்டையாடியுள்ளது.” என்கிறது விகடன்.
  2. “அப்பாவி மக்களை காக்கா, குருவியை போல் சுட்டுக் கொல்வது என்பதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. போலீசுக்கு எதிராக போலீஸே நீதிமன்றம் செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்.” என்கிறது தினமலர்.
  3. அரசாங்கம் சொல்வதை செய்யும் ஒரு போலிஸ் அதிகாரி, இங்க பாசம், நேசம், எமோஷ்னல் என எதற்கும் இடைமில்லை என போலிஸ்காரர்கள் மற்றும் இந்த சிஸ்டத்தின் கொடூரத்தை தோல் உரித்து காட்டியுள்ளது கிளைமேக்ஸ். அதே நேரத்தில் நீதித்துறை ஒன்று உள்ளது, அவர்களிடமிருந்து எந்த கொம்பனும் தப்பிக்க முடியாது, அதற்கு ஒருவர் மனம் திறந்தினாலே போதும், என டொவினோ கொடுக்கும் வாக்குமூலம் ஒரு அரசாங்கத்திற்கே அச்சம் வர வைக்கும் என்பதையும் இயக்குனர் காட்டிய விதம் சிறப்பு. பல போராட்டங்கள் கலவரங்களாக எப்படி மாறுகிறது. “கடைசியில் அரசாங்கம் அதை தங்களுக்கு சாதகமாக எப்படி மாற்றுகிறது என்பதை பல அதிர்ச்சியூட்டும் காட்சிகளுடன் காட்டியுள்ளனர். எந்த துறை என்றாலும் நல்லவர்களும் இருப்பார்கள் என்பது போல் டோவினோவுக்கு வழிகாட்டும் சூரஜ் நடிப்பு ரசிக்க வைக்கின்றது.” என்கிறது சினிஉலகம்.
  4. “நல்லவர் போல் துவங்கி அயோக்கியத்தனம் வஞ்சகம் இவற்றின் மொத்த உருவகமாக மாறும் கேரக்டரில் இயக்குனர் சேரன்.இந்த கேரக்டரை சேரனை விட சிறப்பாக பொருத்தமாக நடிக்க, மலையாளத்திலேயே நடிகர்கள் உண்டு .

ஆனால்  சேரனை ஏன் கூப்பிடணும்?

இருபது   வருஷம் முன்னாடி கேரளாவுக்கே வந்து மலையாளப் பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்கள் சேலை கட்டிப் படம் எடுத்தவன்தானே நீயி?  வாடி வா,, உனக்குத்தான் காத்திருந்தோம். மலையாள ஆதிவாசிகளை ஒழிக்க கேரளா அரசுக்கு உதவும் போலீஸ் யாரும் நம்முடே சேட்டன் மார் அல்லா. நோக்கனும் அயாட்கள் எல்லாம் பாண்டிப் பட்டிகள் தன்னே .. ‘ என்று கேரள மக்களுக்கு சொல்லாமல் சொல்ல வசதியாக-   இந்தக் கேரக்டருக்கு பொருத்தமே இல்லாமல்  சேரனை கூப்பிட்டு நடிக்கச் சொல்லி இருக்கிறார்கள். இவரும்  போய் நடித்து விட்டு வந்திருக்கிறார்” என்கிறது, நம்ம தமிழ்சினிமா.

நரிவேட்டை படத்தை புகழ்ந்தும் விமர்சித்தும் இதுபோல் பல வகையான கருத்துக்கள் வந்து விட்டன. வகை மாதிரிக்கு மேலே சில உதாரணங்களை தந்தோம்.

விமர்சனங்களை பகுத்து பார்ப்போம்!

“பாதி இரையைத்தான் வேட்டை ஆடி உள்ளது” என்றதோடு விகடன் வரம்பிட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இரையை வீழ்த்தவில்லை என்றாலும் அது சரியாக கவ்வி பிடித்துள்ளது; முக்கியமாக அதிகார வர்க்கத்தின் உயிர் நிலையைத்தான் கவ்விவிட்டது  என்பதால்  ஆளும் வர்க்க ஏடான விகடனுக்கும் வேர்க்கிறது.

பார்ப்பன தினமலரோ  நரிவேட்டையில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது; வெறும் கற்பனை என்பதாக ஒதுக்கி தள்ளுகிறது.

“போலீசார் மக்களை காக்கா குருவிகளை சுடுவது கொஞ்சம் ஓவராக தெரிகிறது” என்பதன் மூலம், போலீசார் அப்படி எல்லாம் சுட மாட்டார்கள் என்று முட்டுக் கொடுக்கும் வேலையை பார்க்கிறது தினமலர்.

இதனால் சில கேள்விகள் எழுகின்றன. தினமலர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் தான் இயங்குகிறதா? பார்வையில் ஒரு வேளை தூத்துக்குடி இல்லையோ?

2018 மே.22 இல்   தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் பேரணியாக வந்த மக்களை, போலீசார் காக்கா குருவிகளை சுடுவது போல தானே சுட்டுத் தள்ளினர்? அது தினமலருக்கு மறந்து விட்டதா? அல்லது மறைக்க பார்க்கிறதா?

நெட்டிசன்கள் தினமலர் என்பதை “தினமலம்” என்று விளாசியதை பல நேரங்களில் பார்த்துள்ளோம். அது பொருத்தமான மதிப்பீடுதான் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது பார்ப்பன தினமலர்.

“போலீசுக்கு எதிராக போலீஸே நீதிமன்றம் செல்வது போன்ற காட்சிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும்” என்பதன் மூலம் காவல்துறையில் ஒருவர் கூட மனசாட்சி உள்ளவராக இருக்கவோ, அல்லது மாறவோ மாட்டார் என்கிறது தினமலர்.

ஆனால் உண்மை சுடுகிறது. ஆனால் காவல்துறையிலும் விதிவிலக்குகள் இருக்கவே செய்கின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின்போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் கொட்டடி கொலை வழக்கில் முதல் நபராக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தற்போது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமலர் இதையும் மூடிமறைக்க வேண்டும். இப்போது ஸ்ரீதர்  அரசுத்தரப்பு சாட்சியாகி, “அனைத்து காவலர்கள் செய்த செயல்களை சொல்ல விரும்புகிறேன். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தந்தை, மகன் குடும்பத்திற்கு நீதி கிடைக்க விரும்புகிறேன்” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்

இதற்குப் பிறகாவது தினமலர் தனது உண்மையான பெயரை மீட்டெடுக்குமா? அல்லது மலமாகவே நாறுமா பரப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“நம்ம தமிழ் சினிமா” என்ற பெயரில் உள்ள இணைய பக்கம் இனவாத வெறுப்பை முன்வைத்து எழுதியுள்ளது.

“மலையாள ஆதிவாசிகளை ஒழிக்க கேரளா அரசுக்கு உதவும் போலீஸ் யாரும் நம்முடே சேட்டன் மார் அல்லா. நோக்கனும் அயாட்கள் எல்லாம் பாண்டிப் பட்டிகள் தன்னே” என்பதன் நோக்கம் என்ன? மலையாளிகள் மற்றும் பாண்டிகள் என்று கொம்பு சீவி விடவே பார்க்கிறது.

வரலாற்று வழியில் பாண்டிகள் என்றால் கள்ளர்கள் என்ற பொருளில் கேரளாவில் பார்க்கப்பட்டது என்றாலும், அதை இங்கு வலிந்து சொல்கின்றனர்.

இவர்களின் கருத்தானது, நாட்டை ஆளும் கார்ப்பரேட்டுகளுக்கு சாதமாக மக்களை பிளவு படுத்துவதற்காக  இன வெறுப்பை தூண்டும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

நரி வேட்டை படத்தை விமர்சிப்பதாக கூறிக்கொண்டு வயநாட்டில் வாழும் பழங்குடிகளை மலையாளிகள் என்று பொதுமைப்படுத்தி எவ்வளவு நைச்சியமாக கொம்பு சீவுகிறது தமிழ் சினி உலகம்.

எனவே தமிழ் சினி உலகம் என்ற பெயரில் எழுதுபவர்கள் கடைந்தெடுத்த இனவெறியாளராக சங்கிகளுக்கு துணை செய்பவராகவே உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக படத்தை பாராட்டினாலும் கூட, அரசின் ஒரு உறுப்பான நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை தூண்டும் விதமாக படத்தை முடித்து இருப்பதை சிலர் விமர்சனமாக சுட்டிக்காட்டியும் உள்ளனர்.

இது சரியான விமர்சனப் பார்வை தான். படத்தில் காட்டப்படுபவர் ஒருவேளை லோயாவை போல் நேர்மையான நீதிபதியாக – அதாவது விதிவிலக்குகளில் ஒன்று என்பதாக நாம் சமாதானம் அடையலாம்.

இன்றைய இணைய உலகத்தில் உலக நடப்புகள் மற்றும் கலை இலக்கிய படைப்புகளை பற்றி சரியான மற்றும் தவறான கருத்துக்கள் மலை போல் கொட்டி குவிக்கப்படுகிறது. வாசகர்கள் இதையெல்லாம் தனது சொந்த அனுபவத்தில் பகுத்துப்பார்த்தே சரியான சொந்த மதிப்பீட்டிற்கு வரவேண்டும். நரிவேட்டை படத்தை கொண்டாடுவோம்.

  •  இளமாறன்

1 COMMENT

  1. இறுதியாக முடிக்கின்ற வாக்கியத்தில் “நரி வேட்டை படத்தை கொண்டாடுவோம்” என்பதற்கு பதிலாக “…நரி வேட்டை படத்தை வரவேற்போம். மக்களிடம் கொண்டு செல்வோம்” என எழுதலாம்.

    காரணம், இது கொண்டாடும் படம் அல்ல! அரசின் பயங்கரவாத செயலை மக்களுக்கு புரிய வைக்க கொண்டு செல்ல வேண்டிய படம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here