ந்தியாவில் இயங்கி வரும் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி கடந்த மார்ச் மாத நிலவரப்படி 54.52 இலட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தியாவின் இன்சூரன்ஸ் சந்தையில் முதலிடத்தை வகிக்கிறது.

இந்த மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேமிப்பு தொகையை இந்தியாவில் உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான அதானி குழுமத்தின் கடன் நெருக்கடியை தீர்ப்பதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று இந்திய ஒன்றியத்தின் நிதி அமைச்சகம் மற்றும் அதன் முக்கிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து முடிவு செய்து இருந்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை பாஜக அரசாங்கத்தின் ஊழலை அம்பலப்படுத்தி உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் தனது கட்டுரையில் நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தது. அதன்படி:

1.எல்.ஐ.சி-யின் முதலீட்டு முடிவுகள் சுயமாக எடுக்கப்படவில்லை, மாறாக வெளிப்புறக் காரணிகளின் (அதாவது அரசியல் அல்லது அதிகார மையங்களின்) செல்வாக்கின் கீழ் எடுக்கப்பட்டன.

2.இந்த ஆண்டு மே மாதம், அதானி குழுமத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சுமார் $3.9 பில்லியன் டாலர் (சுமார் 32,000 கோடி ரூபாய்) முதலீடு செய்வதற்கான ஒரு முக்கிய முன்மொழிவை எல்.ஐ.சி அதிகாரிகள் அவசர கதியில் நிறைவேற்றினர்.

3.இத்தகைய பெரிய முதலீட்டுக்காக, நிறுவனத்தின் உயர்மட்டப் பிரிவு மூலம் ஒரு வழிகாட்டுதல் கூட தயாரிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது.” என்று தனது குற்றச்சாட்டை விளக்கமாகவே முன்வைத்தது.

உடனே எல்ஐசி நிறுவனத்தின் சார்பில் இருந்து இந்த குற்றச்சாட்டை மறுக்கின்ற வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் கீழ்கண்டவாறு மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள நிதிச் சேவைகள் துறை அல்லது வேறு எந்த அமைப்பும் இதுபோன்ற [முதலீட்டு] முடிவுகளில் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை” என்று எல்ஐசி எக்ஸ்-இல் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று உண்மையை வெளிப்படுத்தி விட்டது.

இந்த இரண்டு கூற்றுகளையும் ஆய்வு செய்துள்ள பிசினஸ் ஸ்டாண்டர்ட் தனது கட்டுரை ஒன்றில் எல்ஐசி நிறுவனம் மிகப்பெரிய பொருளாதார பின்னணியைக் கொண்டது என்பது மட்டுமின்றி, நேர்மையாக நடந்து வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில் தனது கட்டுரையை எழுதியுள்ளது.

அதாவது “எல்ஐசி என்ற காப்பீட்டாளர் நிறுவனம் ஒரு சிறிய, ஒற்றை நோக்க நிதி நிறுவனம் அல்ல, ரூ.41 டிரில்லியனுக்கும் அதிகமான ($500 பில்லியனுக்கும் அதிகமான) சொத்துக்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளர். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய வணிகக் குழு மற்றும் துறையிலும் பரவியுள்ள 351 பொதுவில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் (2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்) முதலீடு செய்கிறது.

அதுபோலவே அதானி குழுமத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களான பிளாக்ராக், அப்பல்லோ, ஜப்பானின் மிகப்பெரிய வங்கிகளான மிசுஹோ, எம்யூஎஃப்ஜி மற்றும் ஜெர்மனியின் இரண்டாவது பெரிய வங்கியான டிஇசட் வங்கி போன்ற உலகளாவிய முதலீட்டாளர்களும் சமீபத்திய மாதங்களில் அதானி கடனில் முதலீடு செய்துள்ளனர், இது குழுமத்தின் மீதான உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

அதானியின் மொத்த கடன் ரூ.2.6 டிரில்லியன் ஆகும். ஆண்டுக்கு ரூ.90,000 கோடி செயல்பாட்டு லாபமும் ரூ.60,000 கோடி ரொக்கமும் இதற்குக் காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பொருள், புதிய உள்கட்டமைப்பு முதலீடுகளை இடைநிறுத்தினால், அதானி மூன்று ஆண்டுகளுக்குள் தனது முழு கடனையும் அடைத்துவிட முடியும்.” என்று எல்ஐசி நிறுவனத்தைப் பற்றி மட்டும் கூறாமல் தனது கடனை கட்டுவதற்கு வழி இன்றி திகைத்து நிற்கின்ற அதானி குழுமத்தின் சொத்து மதிப்புகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை ஆகியவற்றை பற்றி எழுதி தனது கார்ப்பரேட் விசுவாசத்தை, அடிமை புத்தியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதானி குழுமத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் எல்ஐசி யின் சொத்து மதிப்பில் வெறும் இரண்டு சதவீதம் தான் என்பதால் இவை எல்ஐசிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாலிசிதாரர்களை ஏமாற்றுகின்ற மோசடியில் இந்திய ஒன்றிய அரசாங்கமும், நிதி அமைச்சகமும் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

வாஷிங்டன் போஸ்ட் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் கொடுக்காமல் அதானி குழுமத்திற்கும், எல்ஐசிக்கு உள்ள உறவைப் பற்றி துண்டு துக்காணி செய்திகளை வெளியிடுவது; அதானி நிறுவனத்தின் நம்பகத்தன்மையை பற்றி ஊதிப் பெருக்குவது போன்றவற்றின் மூலம் தனது விசுவாசத்தை பிசினஸ் ஸ்டாண்டர்ட் காட்டியுள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டுள்ள அதானியும் சரிந்துள்ள செல்வாக்கையும், சொத்துக்களையும் மீட்பதற்கு முயற்சிக்கிறார். அதற்கு இந்திய ஒன்றிய அரசாங்கமும் துணை போகிறது.

படிக்க: 

 எல்ஐசி பங்கு விற்பனை: உங்கள் காப்பீட்டுத் தொகை சூதாடிகளின் கையில்!

 நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோடி அரசு!

இந்த விவகாரத்தில் மேலும் சில அம்சங்களும் அம்பலமாகியுள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளை ஆதரிப்பது மட்டுமின்றி வேறு சில தரகு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கின்ற, அவர்களை பாதுகாக்கின்ற வேலையை மக்களின் சேமிப்பு தொகையை குவித்து வைத்துள்ள எல்ஐசி செய்து கொண்டுள்ளது என்பதுதான் அந்த முக்கியமான அம்சமாகும்.

“அதானி எல்ஐசியின் மிகப்பெரிய ஹோல்டிங் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அல்ல, ஐடிசி மற்றும் டாடா குழுமம். அதானி பங்குகளில் எல்ஐசி 4 சதவீதம் (ரூ. 60,000 கோடி) ரிலையன்ஸ் நிறுவனத்தில் 6.94 சதவீதம் (ரூ. 1.33 டிரில்லியன்), ஐடிசி லிமிடெட்டில் 15.86 சதவீதம் (ரூ. 82,800 கோடி), எச்டிஎஃப்சி வங்கியில் 4.89 சதவீதம் (ரூ. 64,725 கோடி), எஸ்பிஐயில் 9.59 சதவீதம் (ரூ. 79,361 கோடி) பங்குகளை வைத்திருக்கிறது. எல்ஐசி டிசிஎஸ் நிறுவனத்தில் 5.02 சதவீத பங்குகளை ரூ. 5.7 டிரில்லியன் மதிப்புள்ள பங்குகளை வைத்திருக்கிறது.”

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் பங்குசந்தையில் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்த அதானி குழுமத்தை பாதுகாப்பதற்கு இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் பிரதமரான மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகார வர்க்கம் உள்ளடக்கிய கூட்டம் எல்ஐசி யில் சேமிக்கப்பட்ட மக்களின் பணத்தை எடுத்து முட்டுக் கொடுத்துள்ளது அல்லது சூறையாடியுள்ளது என்பது தான் இந்த விவகாரங்களில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.
இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்ற போதெல்லாம் அதனை பாதுகாப்பதற்கு எந்த அக்கறையும் செலுத்தாத ஆர்எஸ்எஸ் மோடி சங்பரிவார கும்பலானது அதானி என்ற தனிப்பட்ட ஒரு முதலாளியின் சொத்துக்களை பாதுகாக்கின்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகிறது என்பதை வேறொரு வார்த்தையில் சொன்னால் கார்ப்பரேட் பாசிசத்தை மக்களின் தலையில் திணிக்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியும்.

மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here