அன்பார்ந்த தோழர்களே!
8 ஜனவரி: இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் 8.1. 1942 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங் பிரபலமான கோட்பாட்டு இயற்பியலாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர். குறிப்பாக அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்த இயற்பியலாளர்.
இவர் தனது இளம் வயதில் நரம்பு இயக்க நோயினால் பாதிக்கப்பட்டு கை, கால் மற்றும் பேச்சு அனைத்தும் செயல் இழந்த நிலையிலும் தனது அறிவியல் குறிப்புகள் மூலம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார்.
தமிழில் இவரைப் பற்றி அறிந்து கொள்ள ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் என்ற புத்தகம் எதிர் வெளியீடு மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நூல் பயனுள்ளதாகும்.
அறிவியலற்ற “ஞான சூனியங்களின்” கையில் சிக்கியுள்ள இந்தியாவை மீண்டும் பகுத்தறிவுப் பாதைக்கு கொண்டு செல்வதற்கு கடுமையாக போராட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம்.
எனினும் இத்தகைய பிற்போக்கான சூழலை முறியடிப்பதற்கான நவீன விஞ்ஞானத்தை கற்றுக்கொள்வதற்கு ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற விஞ்ஞானிகளின் படைப்புகள் நமக்கு உதவுகின்றன.
அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்கு பயன்படுகின்ற இன்றைய உலக சூழலில், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் அறிவியலை கற்றுக்கொள்வதும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாக இருக்க வேண்டும்.
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
மக்கள் அதிகாரம்.
♦♦♦
இம்பால் நகரில் மணிப்பூர் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த 105-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடியும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ஹர்ஷ் வர்தன் “சமீபத்தில் நாம் ஒரு சிறந்த விஞ்ஞானி, அண்டவெளி ஆய்வாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்துவிட்டோம். அவர் ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என்று ஆதாரத்துடன் பதிவுசெய்துள்ளார்” என்று பேசினார். அப்போது மோடியும் அதை ரசித்துக் கொண்டிருந்தார்.
ஹாக்கிங் எங்கு கூறியிருக்கிறார், ஆதாரம் என்ன என்று மத்திய அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது, “மீடியாவில் இருக்கும் நீங்கள் கொஞ்சம் உழைத்துக் கண்டுபிடியுங்கள், உங்களால் முடியாது எனும்போது நான் ஆதாரத்தைத் தருகிறேன்” என்று மழுப்பினார்.
பிறகு அமைச்சரின் இந்த ஃபிராடு செய்தியின் ரிஷி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் காறித்துப்பினர். ஏதோ ஒரு ஆர்.எஸ்.எஸ் அறிவிலி கூறியதை வைத்து அமைச்சர் துணிந்து இந்த உளறலை கூறியிருக்கிறார். இவர்தான் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர் என்றால் நம் நாடு உருப்படுமா? இதைப் பகடி செய்து டிவிட்டரில் Dr. Ꝁϰ.. @BlitzkriegKK எழுதியதை இங்கு வெளியிடுகிறோம்.
ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் ஆரியபட்டரின் அறுபதாவது சீடராவார். அவர் மதியவேளை மானஸா என்ற நூலை விரும்பிப் படிப்பார். காமசூத்ரா நூலே காலம் எழுதக் காரணம் என்று பல பேட்டிகளில் பேசியுள்ளார். தான் ஒரு பீஷ்மரின் அவதாரம் என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். அதுபற்றி பல யோகிகளிடம் சிலாகித்துள்ளார்.
தன்னுடைய ஐந்தாவது வயதில் பகவத்கீதையைக் கரைத்துக் குடித்திருந்தார். அதனால் ஏற்பட்ட வயிறு உபாதையைத் தவிர்க்க கோமூத்ரம் பருகினார். துளஸிதாஸரின் ராமாயணத்தின் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. அதில் வரும் புஷ்பக விமானத்தைப் பற்றி படிக்கும்போது வானியல் மீது ஆர்வம் ஏற்பட்டது.
வானியல் என்பது இயற்பியலின் ஒரு பகுதிதான் என்றாலும் வானியல் என்பது பூமாதேவியின் வடபுறம் இருக்கும் வானுலகே என்பதை ரிக் வேதத்தின் மூலம் அறிந்தவர் பின் குண்டலினியிலிருந்து குவாண்டம் இயற்பியலைக் குறிப்பிட்டறிந்து பழகினார். அப்போது ஸ்பாஸ்டிக்ஸ் என்ற நோயால் பீடிக்கப்பட்டார்.
ஸ்பாஸ்டிக்ஸ் என்பது வேறொன்றுமில்லை. அது ஒரு பிரம்மஹத்தி தோஷமாகும். அறிவிற்சிறந்த ப்ராஹ்மணன் ஒருவரை கந்தா ரிப்ளை என்று திட்டிவிட்டார். ஆகவே பிரம்மஹத்தி அவரைப் பீடித்தது. எய்ட்ஸிடம் தப்பித்தவன் கூட பிரம்மஹத்தியில் தப்பிக்கமுடியாது. ஏனென்றால் ப்ரம்மஹத்தி ப்ருஷ்டத்தைத் தாக்கும்.
அப்படி இருந்தவருக்கு பேச்சு வரவில்லை. பாட வந்தது. ஏனென்றால் அவர் சரஸ்வதி சபதம் பார்த்திருந்தார் என்பதை சங்கராச்சாரியார் கூட பால சங்கராச்சாரியரிடம் தேவைபாஷையில் பகிர்ந்துள்ளார். ஆல்பர்ட் ஐயங்காரே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார் என்பதை ஆரிய சமாஜ முன்னோடிகள் அறிவர். ஆக அது வேதத்திலுள்ளது.
இப்படி பிரம்மஹத்தியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிருக்கு சேதமில்லை. ஏனென்றால் அவரும் பிறப்பால் ஒரு ப்ராஹ்மணன். வஸூதேவ தேவகியரின் மகனான விருஷ்ணிகுல கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் கோபியரை கோலடித்துக்கொண்டே பார்க்கவில்லையா? அதுபோல பிராமணனாய்ப் பிறந்து வெளிநாட்டில் வளர்க்கப்பட்டவர்.
அப்படி வளர்ந்தவர் வாழ்வின் பாதியில் வளைந்தவராவதற்கு காரணமான ரிஷ்யபிருங்கரின் சாபத்தைப் பற்றி பாடலிபுத்திர நகரைச் சேர்ந்த பாரத்வாஜ முனிவர் பின்வருமாறு கூறுகிறார். “ஓம் ஸ்டீபன் உவாச. யதா யதா ஹி ப்ரம்மஸ்ய க்ளானிர் கந்தாரிப்ளை மேவ அப்யுத்தான ப்ரம்மஹத்தி ததாத்மானம் ப்ருஷ்ட் ஹே!!”

இவ்வாறாக சென்றுகொண்டிருந்த ஹாகிங் வாழ்வில் ஒரு தேவ ஒளி பரலோகத்திலிருந்த பரிபூரணமாக கிளம்பி வந்தது. அதுதான் ஏசு அருளிய போஸான் துகள். மலைப்பிரசங்கம் முடித்த மறுநாள் அப்பமளித்து ஆசி வழங்குகையில் தெறித்த துகளே ஹிக்ஸ் போஸான் ஆகும்.
மழையெனத் தெறித்து விழுந்த ஸ்கந்தனுக்கு இணையானது இந்த ஹிக்ஸ்துகள். இந்தத்துகள்களே உலக உருவாக்கத்தின் அடிப்படைத் துகள்களாகும். இப்படி ஒன்றைத் தேடியே தேனி அருகே நியூட்ரினோ குடைவு நிகழ்வுற இருக்கிறது. ஆனால் இதெல்லாம் அதர்வண வேதத்தின் ஐந்தாம் பகுதியில் உள்ளது.
ஏனென்றால் உலகவரைபடத்தையே முயல் ஆலிலை வைத்து தலைகீழாய் வரைந்து தன்யனான தனவந்திரியின் தாய்மாமன் பேரன் என்பதால் அவ்வழி வந்த அக்மார்க் ப்ரா மகனாகிய ஹாகின்ஸ் குக்கருக்கு இவை பற்றிய அறிவு இருந்ததில் ஆச்சர்யமில்லை என்பதால் உபன்யாஸ உபநிஷத் புருஷர் எனவும் அழைக்கப்படுகிறார்..
இவ்வாறான வரலாறு படைத்த நமது ஹாக்கின்ஸ் பின்னாளில் கடவுளும் இல்லை ஒரு கபோதியும் இல்லை என்று வாழ்விற்கான சூத்திரம் தேட சாத்திரம் கடந்து முயற்சித்தபோது ஸ்ரீலஸ்ரீ சித்பகவானால் தடுத்தாட்கொள்ளப்படுகிறார். ஏனெனில் அவர் ஒரு ப்ராமணர். அவர் இருந்த நாற்காலியில் இருந்ததும் பூணூலே.. ததாஸ்து
நன்றி : @BlitzkriegKK








Great content! Keep up the good work!