புதுக்கோட்டையில் 2026 ஏப்ரல் 25-அன்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக் கட்டிடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ்
இப்படிப் பேசியுள்ளார்:
“நல்ல மனிதர்கள் இருக்கும் இடம்தான் நல்ல இடமாக இருக்கும். ‘வழக்காடு மன்றங்கள்’ என நீதிமன்றங்களை அழைப்பதில் எனக்கொரு ஒவ்வாமை இருக்கிறது. ‘அறம் கூறும் அரங்கங்கள்’ -என நீதிமன்றங்களை அழைக்க வேண்டும். நம் முன் வரும் வழக்குகளை ஒரு கருத்துடன் அணுகாமல், நடுநிலையுடன் பார்க்க வேண்டும். சாதாரண மனிதனுக்கும் மேலாக அந்த வாதங்களைக் கவனிக்க வேண்டும்.
நீதிபதிகள், அரசியல்வாதிகள் என மக்களுக்கான பொறுப்பில் இருக்கும் எல்லோரும் ‘சரியாக முறை செய்யவில்லை’ என்றால் ‘தானே கெடும்’ – என்பதாகத்தான் முடியும்”… என்று பேசியுள்ளார். ‘நன்று’!
பின்பு சேலம் நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா முழுமைக்கும் 4 கோடியே 61 லட்சம் வழக்குகள் தேங்கிக் கிடப்பது பற்றிய கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இன்னும் புதுக்கோட்டை நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பேசும்போது, ‘வழக்கறிஞர்கள் தொழில் நடத்தும் இன்னொரு வீடு தான் நீதிமன்றங்கள்’ என்றும், ‘இம்மன்றங்கள் அரசமைப்புச் சட்டத்தின் உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்பட வேண்டும்’ என்றும் பேசியுள்ளார்.
மலைக்கும்-மடுவுக்குமான அளவில்
பிளவுபட்ட சமூகத்தில் பொது நீதி சாத்தியமா?
மேற்கண்டவாறு இரு நீதிபதிகள் தத்தம் கருத்துக்களைப் பதிவிட்டிருப்பது என்பது பலருக்கும் ‘தேனாக’க் கூட இனிக்கலாம். ஆனால் சமூகம் சுரண்டுபவர்களாகவும் – சுரண்டப்படுபவர்களாகவும் பிளவுபட்ட பிறகு, அங்கே இருக்கக் கூடிய ‘அரசு’ சார்ந்த ‘நீதிமன்றங்கள்’ உள்ளிட்ட அனைத்து வித நிர்வாக அமைப்புகளுமே, ‘அனைவருக்கும் பொதுவானதாக’ இருக்க முடியுமா என்பதே நமது கேள்வி? ஏற்கனவே நீதிமன்றங்கள் அல்லது வழக்காடு மன்றங்கள் என்ற பெயரில் இயங்கும் இந்நிறுவனங்கள், அருதிப் பெரும்பான்மை மக்களுக்குப் பெரிதாக ஒன்றும் கிழித்து விடவில்லை என்பதே எதார்த்தம்.
இந்த நிலையில் இந்நிறுவனங்களுக்கு ‘அறம் கூறும் அரங்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்வதால் மட்டும் என்ன பெரிய மாற்றம் நேர்ந்து விடப் போகிறது. அடக்குமுறைக் கருவியான காவல்துறையும், நீதித்துறையும் பின்னிப் பிணைந்ததே என்பதை நாம் பல உதாரணங்களின் மூலம் அறிந்திருக்கிறோம்.
மக்களின் பெருத்த போராட்டங்கள், ஊடகங்களில் ‘அசிங்கமாகும்’ அம்பலப்படுத்தல்கள் காரணமாக ஓரிரண்டு இனங்களில் விதிவிலக்காக வேண்டுமானால் உழைக்கும் மக்கள் சாதகமான தீர்ப்பினைப் பெற்றிருக்க முடியும்.
மற்ற வகையில் பெரும் முதலாளிகள், நிலச் சுவான்ந்தார்கள்,பெரும்பணக்காரர்கள்… அவர்களுக்கான ‘நீதி’ என்பது ஒரு விதமாகவும், ஏழை – எளிய, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான ‘நீதி’ என்பது வேறு விதமாகவுமே ‘நீதி அரசர்கள்’ ‘நீதி’யை நிலைநாட்டி வருவதை நாம் தொடர்ந்து அவதானித்தே வருகிறோம்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கீழவெண்மணி கிராமத்தின் ஒடுக்கப்பட்ட சாதி 44 பேரை 1968-டிசம்பரில் குடிசையில் வைத்து கொளுத்திய முதன்மைக் குற்றவாளி கோபாலகிருஷ்ண (நாயுடு) – அவன் பெரும் பணக்காரன் என்ற தகுதியை வெளிப்படையாக அறிவித்தே சென்னை உயர்நீதிமன்றம் அவனை குற்றச்சாட்டினின்றும் விடுதலை செய்தது.
1978-ல் உஞ்சனை தாழ்த்தப்பட்ட ஐவரை படுகொலை செய்த குற்றவாளிகள் ஆதிக்க சாதி வெறி கும்பல் 23 பேரையுமே குற்றம் ‘ருசுப் படுத்தப்படவில்லை’ எனக் கூறியே மதுரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
மக்களுக்கு பெரும் கேடு விளைவித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அமைதியான வழியில் திரண்டெழுந்த மக்களை காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டு 13 பேரை கொன்றொழித்தார்கள். இன்னும் நிரந்தர ‘நீதி’ கிடைக்கவில்லை.
வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மிகக் கொடூரமான முறையிலும், பாலியல் வன்புணர்ச்சி தொல்லையிலும் கொடுமைப் படுத்தப்பட்ட கொடூரங்கள் அரசினரால் மூடி மறைக்கப்பட முயற்சிக்கையில் அரசியல் இயக்கங்கள், பிரச்சனையை பூதாகரமாகக் கையில் எடுத்ததன் காரணமாக சில நீதிகளைப் பெற முடிந்தது.
அதேபோல்தான் சாத்தான்குளம் ஜெயராஜ்- பெனிக்ஸ் தந்தை மகன் இருவரையும் காவல் நிலையத்தில் அடித்தே கொலை செய்தது காலிப்படையாம் காவல்துறை. அதனையும் அரசும் – அரசாங்கமும் மூடி மறைக்கவே முற்பட்டன. ஆனால் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் பிரச்சனையை கையில் எடுத்துப் போராடியதால் சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி பூத்தாற் போல 9 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுவும் மேல்முறையீட்டில் என்ன கதிக்கு ஆளாகப் போகிறதோ என்று தெரியாது.
தமிழ்நாட்டிலேயே இதுதான் நிலை என்றால் பல்வேறு பின்தங்கிய மனோபாவம் கொண்ட வடமாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதனைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். கேள்வி கேட்பாரின்றி மலைவாழ் பழங்குடியின மக்கள் எல்லாம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கனிம வளங்களை வாரி வழங்குவதற்காக தீவிரவாத முத்திரை குத்தி அந்த அப்பாவி மக்களையும், அவர்களின் பாதுகாவலர்களான மாவோயிஸ்டுகளையும் சுட்டுப் பொசுக்குகிறார்கள் ‘அரசும்’ – ‘அரசாங்கமும்’!
இதுதான் எதார்த்த நிலை! மட்டுமல்ல; பல லட்சம் சம்பவங்களில் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே இவை.
அதே நேர்வில் இந்திய நாட்டின் வளங்களையும், இறையாண்மையையும் சூறையாடுவதோடு, உழைக்கும் மக்களின் உழைப்பையும் சுரண்டி, மக்களின் வரிப்பணத்தையும், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதோடு, காவிக் கூட்டத்தின் முழு ஒத்துழைப்போடு பல்லாயிரம் கோடி/பல லட்சம் கோடி கடன்களாகப் பெற்று ஏப்பம் விடுகிறார்கள் அதானி, அம்பானி, அனில் அகர்வால், விஜய் மல்லையா, சிவ் நாடார்… இத்தியாதி இத்தியாதி கும்பல்! இக்கும்பலுக்கு அரசாங்கம் பல லட்சம் கோடிக் கடன்களை கூச்ச- நாச்சம்-வெட்கமின்றி தள்ளுபடி செய்கின்றன. இவர்களுக்கு எதிராக பெருமளவு வழக்குத் தொடுக்கப்படுவதுமில்லை. ஒருவேளை ஒன்றிரண்டு தொடுக்கப்பட்டாலும், அடுத்த நிமிடமே அவர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாக்கப்படுகிறார்கள். ஏனெனில் ‘அரசும்’, ‘அரசாங்கமும்’ கார்ப்பரேட்டுகளுடையதே.
ஏற்கனவே இருக்கக்கூடிய அரசமைப்புச் சட்டமே உழைக்கும் மக்களை அரைகுறையாகக் கூடப் பாதுகாக்க வக்கின்றி உள்ளது. இந்தச் சட்டத்தையும் ஒழித்துக் கட்டி ‘மனுதர்ம’ச் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாசிசக் காவிக் கும்பல், அனைத்து விதத் தில்லுமுல்லுகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்கின்றன.
இவற்றையெல்லாம் நீதிமன்றங்களும், அதில் வீற்றிருக்கும் நீதி அரசர்களும் கண்டும் காணாமல் கடந்து போகின்றனர் அல்லது ஒத்திசைவு நல்கின்றனர்என்பதை மறுக்க முடியாது. அதற்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும்.
தாளில் ‘தேன்’ என எழுதி நாக்கில் வைத்தால் இனிப்புச் சுவைக் கிட்டாது!
அண்மை உதாரணத்தை எடுத்துக் கொள்வோமே! திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவில் உள்ளது. மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில், சமணக் கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், சிக்கந்தர் தர்கா, மசூதி முதலியவை உள்ளன. இவற்றிற்கான எல்கை தாவாக்களில் 1920 முதற்கொண்டு 1931 வரையிலான வழக்காடு மன்ற விசாரணையில் எந்தெந்த இடம் எவ்வளவு பரப்பளவில் எந்தெந்த கோயிலுக்கு அல்லது தர்கா-மசூதிக்குச் சொந்தம் என நிர்ணயிக்கப்பட்டு தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது.
1930 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் உச்ச நீதிமன்றமாக இருந்த லண்டன் பிரிவி கவுன்சில் வரை இவ் வழக்கு கொண்டு செல்லப்பட்டு, கீழமை நீதிமன்ற நீதிபதி ராமய்யர் திருப்பரங்குன்றம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பையே நியாயபூர்வமாக உறுதிப்படுத்தி வழங்கி முடித்தாகி விட்டது. அதன் பிறகு 1996, 2014, 2017 இப்படிப் பல ஆண்டுகளில் காவி கும்பலால் வழக்குகள் முன்னெடுக்கப்பட்டும் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
நிலைமைகள் இவ்வாறு இருக்க ஜி. ஆர். சுவாமிநாதன் என்ற ஒற்றை நீதிபதி எவனோ ஒருவன் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கில் – அவன் மனுவில் கோராத தர்காவிற்குச் சொந்தமான எல்கைத் தூணில் – ‘தீபத்தூண்’ என்று பெயர் சூட்டி தீபம் ஏற்ற அனுமதிக்கிறார் ஜிஆர்எஸ் என்றால், அன்றைய உச்ச நீதிமன்ற மாம் பிரிவி கவுன்சிலை விடவும் ஜி.ஆர். சுவாமி நாதனே மேம்பட்டவர் என்று எடுத்துக் கொள்வதா?
நூற்றாண்டு காலமாக உச்சிப் பிள்ளையார் கோவில் முன்புதான் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம் என அறநிலையத் துறையும், கோவில் நிர்வாகமும், தலைமை பட்டரும் கூறிய பிறகும் கூட இவர் ஏன் ஒரு தலைப்பட்சமாக தீர்ப்பளிக்கத் துடிக்கிறார் என்றால் அவருடைய மன நிலையில் படிந்து கிடக்கும் ஒரு மதச் சார்பு சிந்தனைப் போக்கன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றும் லட்சனமாக மக்கள் எடுத்துக் கொள்ள முடியுமா?
ஜிஆர்எஸ் அளித்த பல்வேறு வழக்குகளின் தீர்ப்புக்களும், அவர் பொதுவெளியில் ஆற்றிய உரைகளும், மிக அண்மைக்காலத்தில் ‘எனக்கு எஞ்சி இருக்கிற நான்கரை ஆண்டு கால பணிக்காலத்தை சனாதன தர்ம வழியிலேயே பின்பற்றி செயல்படுவேன்…’ என அரசியல் அமைப்புச் சட்டப்படி எடுத்துக்
கொண்ட உறுதிமொழிக்கு மாறாக பேசுகிறார் என்றால் எங்கே பொதுவான நீதி? பொதுவான சட்டம்? கோலோச்சிக் கிடக்கிறது என்பதை எவரால் நெஞ்சு நிமிர்த்தி கூற முடியும்? இவற்றையெல்லாம் தட்டிக் கேட்பதற்கு சென்னை உயர்நீதிமன்றமோ, டெல்லி உச்சநீதிமன்றமோ முன் வரவில்லையே, ஏன்!
நீதிமன்றத்தில் வழக்கறிஞரும் ஒரு அதிகாரியே! இதே மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனை நோக்கி,
‘நீ ஒரு கோழை; நேற்று உன்னைக் கோழை என்று சொன்னது தவறு என்றுகூட நினைத்தேன்; இல்லை, நீ கோழை தான்! உன்னை யாரு வீரன் என்று சொன்னது? நீ ஒரு பக்கா காமெடி பீஸ்!உனக்குக் கண் பார்வைக் கோளாறா? மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவா?’… என்று அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அவமானமாகப் பேசியது குறித்து எந்த ஒரு உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாய் திறந்து விமர்சிக்காதது ஏன்? ஏனென்றால் நீதிபதி என்றால் அதிலும் குறிப்பாக காவிச் சிந்தனை உடைய நீதிபதி என்றால் அவர்களுக்கான தகுதியே மேம்பட்டது என பறைசாற்றிக் கொள்வதைத் தவிர வேறு எதனைக் காரணமாகக் கூற முடியும். எங்கே இருக்கிறது அனைவருக்கும் பொதுவான சட்டம்? நீதி?
இன்னும் பல்வேறு அம்சங்களில் எத்தனை எத்தனையோ உதாரணங்களைப் பட்டியலிட முடியும். எனவே, தற்போது உள்ளபடி ‘நீதிமன்றங்கள்’ என்ற பெயரில் அழைத்தாலும் சரி; ‘வழக்காடு மன்றங்கள்’ என்ற பெயரில் அழைத்தாலும் சரி…
இந்த முரண்பட்ட வர்க்க பேதங்கள் நிறைந்துள்ள சமூக அமைப்பில், அனைவருக்கும் சமமான நீதி – பொதுவான நீதி என்பது கிட்டாது; கிட்டவே கிட்டாது!
நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது, உச்ச நீதிமன்ற நீதிபதி புதுக்கோட்டையில் தெரிவித்துள்ளது போல் ‘அறம் கூறும் அரங்கம்’ என வழக்காடு மன்றங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து விடுவதால் மட்டும் சமத்துவமான நீதி கிடைத்திடப் போவதில்லை.
ஆம், வெள்ளைத் தாளில் ‘தேன்’ என்று எழுதி வைத்துக்கொண்டு நாக்கில் வைத்து நக்கினாலும் இனிப்புச் சுவை கிடைத்திடப் போவதில்லை.
“…சட்டம் ஒவ்வொருவரையும் சமமாகப் பாதுகாக்கிறதாம்; அது சொத்து உள்ளவர்களின் சொத்துக்களை, சொத்தில்லாத மக்கள் திரள் தாக்குவதின்றும் காத்தளிக்கிறது – சொத்தில்லாத அந்த மக்களோ, தமது உழைப்புத் திறனைத் தவிர வேறு உடைமை எதுவும் இல்லாதவராய், நாளுக்கு நாள் மென்மேலும் வறுமைப் பட்டு, நிலை குலைந்து பாட்டாளிகளாக மாற்றப்படுகின்றனர் இதுதான் முதலாளித்துவச் சமுதாயம்..”
–என்று ‘சட்டம் அனைவருக்கும் பொதுவானது’ என்பதை ஏகடியம் செய்து முதலாளித்துவ கட்டமைப்பிலுள்ள ‘அரசு கட்டுமானங்கள்’ அனைத்தையும் தோலுத்தார் ஆசான் லெனின்.
அரசு என்பது வர்க்க சமூக அமைப்பில் அனைவருக்கும் பொதுவானதாக இயங்க முடியாது. அரசு, “உலர்ந்து உதிர்வது” குறித்து ஆசான் ஏங்கெல்ஸ் பெருமளவு விவரித்துள்ளார். அதிலுள்ள சில வரிகள் இதோ:
“… பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி சாதனங்களை முதலில் அரசுடைமை ஆக்குகிறது. ஆனால் இதன் மூலம் அது பாட்டாளி வர்க்கம் என்ற தனது நிலைக்கே முடிவு கட்டிக் கொள்கிறது. எல்லா வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்க பகைமைகளுக்கும் முடிவு கட்டுகிறது. அரசு அரசாய் இருப்பதற்கே முடிவு கட்டுகிறது. இதுவரை சமுதாயம் வர்க்கப் பகைமைகளின் அடிப்படையில் அமைந்திருந்ததால் அதற்கு அரசு தேவைப்பட்டது. அதாவது குறிப்பிட்ட சுரண்டும் வர்க்கத்துக்கான ஒழுங்கமைப்பு ஒன்று தேவைப்பட்டது. இந்த சுரண்டும் வர்க்கத்திற்குரிய பொருள் உற்பத்தி புற நிலைமைகளை நிலைநாட்டுவதற்காகவும், இதன் பொருட்டு இன்னும் முக்கியமாய், சுரண்டப்படும் வர்க்கத்தை அந்தந்த பொருள் உற்பத்தி அமைப்பாலும் (அடிமை முறை, பண்ணை அடிமை முறை, கூலி உழைப்பு முறை) நிர்ணயிக்கப்படும் ஒடுக்கு முறை நிலைமைகளை வலுக்கட்டாயமாய் நிறுத்தி வைப்பதற்காகவும் இந்த சமுதாயத்திற்கு ‘அரசு’ தேவைப்பட்டது…”
இப்படிப்பட்ட ஆசான்களின் கருத்துகள் யாவும் ஏதோ மேலோட்டமான அரசியல் பார்வை அன்று. மாறாக, சமூக விஞ்ஞான இயக்க இயல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து துல்லியமாக வரையறுத்துக் கூறப்பட்டவை ஆகும்.
எனவே, ‘அரசு’ என்பதன் அங்கங்களான நீதித்துறை, ஐஏஎஸ் ஐபிஎஸ் உட்பட்ட அதிகார வர்க்கத் துறை, பாராளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பும் முறை… இவை போன்று எண்ணற்ற உபகரணங்களும் வர்க்க சமூக அமைப்பில் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதில்லை என்பதையே உணர்த்துகிறது.
எனவே உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது போல பாழடைந்து போன அடிப்படை சாராம்சங்களைத் தகர்த்தெறியாமல், நீதிமன்றங்களுக்குப் புதிய பெயர் சூட்டுவதால் அருதிப் பெரும்பான்மை மக்களுக்குவிடியல் ஒன்றும் ஏற்பட்டு விடப்போவதில்லை என்பதே நிதர்சனம்!
எழில்மாறன்







