பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மசூதிகள் தகர்க்கப்பட்டுள்ளன. இந்தாண்டு ஜனவரி மாதத்தின் கடந்த சில வாரங்களாக ராணுவத்திற்கும் உள்ளூர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் ராணுவம் பலுசிஸ்தான் மாகாணத்தில் (நாட்டில்) தாக்குதலை தொடுத்துள்ளது.
பலுசிஸ்தான் பகை நாடா!
பலூசிஸ்தான் மாகாணமானது தன்னிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்ததை பாகிஸ்தான் ஏற்கவில்லை. எனவே பகை நாடாக பார்த்துதான் தொடர் தாக்குதலில் இறங்கி உள்ளது; மசூதிகளையும் தகர்க்கிறது.
புவியியல் படி பலுசிஸ்தான் நிலப்பரப்பை, பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் என்றும் ஈரான் நாட்டின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் என்றும் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் என மூன்றாகப் பிரிப்பர்.
இந்தியா, பாகிஸ்தான் என்ற நாடு ஆங்கிலேயர்கள், அவர்களின் சுரண்டல் மற்றும் கொள்ளைக்காகவே உருவாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், பலுசிஸ்தான் பல மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
வலுக்கட்டாய இணைப்பு!
1947 இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, கலத் (Kalat) மாநிலத்தின் கான் (Khan) ஆக இருந்த மிர் அஹ்மத் யார் கான் ஆகஸ்ட் 12, 1947 அன்று பலுசிஸ்தானின் சுதந்திரத்தை அறிவித்தார்.
பலுசிஸ்தான் நாடாளுமன்றம் பாகிஸ்தானுடன் இணைவதை பலமுறை நிராகரித்த போதிலும், மார்ச் 1948 இல் கான் பாகிஸ்தானுடன் இணைய ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் படைகள் ஏப்ரல் 1948 இல் பலுசிஸ்தானுக்குள் நுழைந்தன.
பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்ட பிறகு, பலுசிஸ்தானின் வளங்கள் சுரண்டப்படுவதாகவும், அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் பலுச் மக்கள் கருதினர், இது தொடர்ச்சியான கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தது.
உருவெடுத்த போராளிக் குழுக்கள்!
1970கள் முதல் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) போன்ற குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டங்களை நடத்தி வருகின்றன,
இத்தகைய போராளி குழுக்களை சில நாடுகள் மறைமுகமாக ஆதரிக்கவும் செய்கின்றன. இப்படி ஆதரிப்பதற்கு இப்பொழுது தான் மக்களின் உரிமைகளை மதிப்பதோ அல்லது அவர்களின் மதத்தின் மீதான பற்றோ காரணம் அல்ல. போராளி குழுக்களை ஆதரிக்கும் அத்தகைய நாடுகளுக்கு தனிப்பட்ட சொந்த ஆதாயங்கள் இருக்கவே செய்கின்றன.
சீனத்தின் பொருளாதார நலன்கள்!
பலுசிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பரவியுள்ளது, இப்பகுதியில் தான் சீனா கட்டியமைத்துள்ள குவாதர் துறைமுகம் உள்ளது.
ஈரான் எல்லையில் இருந்து 120 கிமீ தொலைவிலும், கராச்சியில் இருந்து 533 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது; ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியே, உலகளாவிய வர்த்தக வழிகளுக்கு அருகில் இருப்பதால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் (BRI) ஒரு முக்கிய அங்கமாகும், இது சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை குவாதருடன் இணைக்கிறது. இந்த துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக காரகோரம் நெடுஞ்சாலை மூலம் சீனாவிற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீனா தமது உற்பத்தி பொருட்களை உலக நாடுகளுக்கு இப்பாதையின் மூலமாக ஏற்றுமதி செய்தும் வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியமானது சிங்கப்பூர் மலேசியாவிற்கு இடையிலுள்ள மலாக்கா நீரிணையை தன் கட்டுப்பாட்டில் வைத்து, சீன வணிக கப்பல்களை, சரக்கு கப்பல்களை தடுத்து, பொருளாதார ரீதியாக முடக்க பார்க்கிறது.
அமெரிக்காவின் தடைகளை தகர்க்கும் விதமாக சீனா மியான்மர் வழியாகவும், பங்களாதேஷ் வழியாகவும், பாகிஸ்தான் வழியாகவும் பொருளாதார வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் தனது ஆதிக்கத்தை வளர்த்தது வருகிறது.
சீனா தனது பொருளாதார நலனிலிருந்து பாகிஸ்தானை ஆதரிப்பதோடு, ராணுவ ரீதியாகவும் உதவி வருகிறது. கடந்த ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் பதிலடியை கூட சீன உதவியோடு தான் பாகிஸ்தான் எதிர்கொண்டது.
சீனாவானது பாகிஸ்தானை அனைத்து வகையிலும் ஆதரித்து நிற்கிறது. இதற்கு கைமாறாக பாகிஸ்தானோ பலூசிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்தை சீனாவுக்கு தாரைவார்த்து வருகிறது. 2000 ஏக்கர் நிலம் குவாதர் பொருளாதார மண்டலத்தை நிர்மாணிப்பதற்காக நவம்பர் 2015 இல் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
சென்னையில் அதானி நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் எப்படி மண்ணின் மைந்தர்களை அகதிகளாகி விரட்டி அடிக்கிறதோ, வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களை புறக்கணிக்கிறதோ, அதே கதைதான் பலுசிஸ்தானின் குவாதரிலும் நடக்கிறது.
பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதுதான் பிரிவினைக் குரலை வலுவாக எழுப்பவும் வைக்கிறது. பலூசிஸ்தானை தனிநாடு என்று அறிவிக்கவும் வைத்துள்ளது. இதை ”இந்தியாவின் சதி” என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவின் ‘கை’ உள்ளதா?
பலூசிஸ்தானில் போராடுபவர்கள் பாகிஸ்தானின் ‘எதிரியாக’ உள்ள இந்தியாவை ஆதரிக்கிறார்கள். இந்தியாவும் பலூசிஸ்தானை ஆதரித்து அவ்வப்போது பேசியும் வருகிறது.
பலூசிஸ்தானில் உள்ள தீவிரவாதத்திற்கு இந்தியாவின் தலையீடே, RAW உளவுத்துறையே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியும் வருகிறது. இலங்கையில் இந்திய உளவுத்துறை எப்படி தலையிட்டது என்பதையும், போராளிக் குழுக்களை வளர்த்தது என்பதையும், ஒரு கட்டத்தில் அக்குழுக்களை இலங்கை ராணுவத்திற்கு பலி தந்தது என்பதையும் வரலாறு அறியும்.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் தற்போதைய தாக்குதல்களை இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கவும் வேண்டும்.
படிக்க:
♦ அமெரிக்காவின் உத்தரவுக்கு அடிபணிந்து போரை நிறுத்திய இந்தியா பாகிஸ்தான்
♦ இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை : ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை!!
கடந்த 12ம் தேதி கலாட் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக 13ம் தேதி தாதர் பகுதியில் தகவல் தொடர்பு கோபுரம் மற்றும் டேரா புக்டி பகுதியில் எரிவாயு குழாய்களை பலுசிஸ்தான் குடியரசு படையினர் தகர்த்தனர்.
மசூதிகளைத் தகர்த்த பாகிஸ்தான்!
ஜனவரி 14ம் தேதி நடந்த தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர். “இந்நிலையில் இன்று பலுசிஸ்தான் தேசியவாத தலைவர் மிர் யார் பலூச் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தி பலுசிஸ்தானில் உள்ள சுமார் 40 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்” என்று கள நிலவரத்தை விவரிக்கிறது தினகரன்.
புல் பூண்டு கூட முளைக்காத பாறைகளை கூட ராணுவ நலம் கருதி ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில், பொருளாதார வழித்தடத்தின் முக்கிய கண்ணியாக உள்ள, ஆப்பிரிக்க, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல உதவி வரும் துறைமுகங்களை அவ்வளவு எளிதாக சீன நவீன சமூக ஏகாதிபத்தியம் விட்டு விடுமா? நிச்சயம் விடாதுதான்.
உலக மேலாதிக்கத்திற்கான போட்டியில் அமெரிக்காவுடன் மல்லுக்கட்டி வரும் நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனாவின் முன்னெடுப்புகளை, சீனாவின் ஆதரவோடு ஏறித் தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தை, பலூசிஸ்தான் போராளிகளால் தடுத்து விட முடியுமா? சீனாவில் எதிரியாக உள்ள அமெரிக்கா துணைக்கு வருமா? அல்லது பாகிஸ்தான் குற்றம் சாட்டுவது போல் இந்தியாவின் உதவிக்கரம் நீளுமா? இத்தகைய கேள்விகள் தற்போது எழத்தான் செய்கின்றன.
ஒரே மதமாக இருந்தும் பலூசிஸ்தானில் இரு தரப்புகளுமே மோதிக் கொள்கின்றன. ஒற்றுமையின்மையே நீடிக்கிறது. இதற்கான காரணத்தை அந்நாட்டுக்குள் மட்டும் தேடினால் பதில் கிடைக்காது. ஆட்சியாளர்களின் பிராந்திய நலன்களும், உலக மேலாதிக்கத்திற்கு வெறிபிடித்தலையும் ஏகாதிபத்தியங்களின் சர்வதேச அரசியல் பொருளாதாரம் திட்டங்களுமே ஒரு நாட்டின் ஒரு பகுதியின் அமைதியை அல்லது பதற்றத்தை தீர்மானிப்பவையாக உள்ளன.
ரயில்களைக் கடத்திப் பயணிகளைப் பிணைக்கைதிகளாக்குவது , செல்போன் கோபுரங்களை தகர்ப்பது, எரிவாயு குழாய்களை தகர்ப்பது என பாகிஸ்தானை மட்டுமே தனது எதிரியாக வரித்துக்கொண்டு செயல்பட்டு வரும் போராளிக் குழுக்களால், சீனாவின் ஆதரவுடன் களம் இறங்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களை முறியடித்து விட முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- இளமாறன்






