அயோத்தியில் உயர்ந்த காவிக் கொடி! மதச்சார்பற்ற இந்தியாவின் அவமானச் சின்னம்!
ராமராஜ்யத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது போல பித்தலாட்டம் புரிந்து வந்து கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச மோடியின் ஆட்சியின் மூலம் அதிகாரப்பூர்வமாக ராமராஜ்யம் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டியது தான் பாக்கியுள்ளது.

ர்எஸ்எஸ் பாஜக சங் பரிவார கும்பல் தனது அமைப்பின் கொள்கை இலட்சியமாக முன் வைத்திருந்த ராமனுக்கு கோயில் கட்டுவது என்ற திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த பார்ப்பன (இந்து) மதவெறியுடன் அலைந்துக் கொண்டிருந்தனர். ராமனுக்கு வீடு இல்லாமல் அனாதையாக அலைந்துக் கொண்டிருப்பதாக கட்டுக் கதைகளை பரப்பினர். ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பின் கீழ் திரட்டப்பட்ட குண்டர் படையை வைத்து கலவரங்களை நடத்தினர்.

அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட இடம் பார்த்தனர். கி.பி.1528 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியை ’இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தான்’ என்று அடித்துப் பேசி, 1992 ஆம் ஆண்டு இடித்துத் தரைமட்டமாக்கிய பின் சில ஆண்டுகள் காத்திருந்தனர்.

2014-ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தின் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ராமர் கோவில் கட்டுகின்ற திட்டத்தை அமல்படுத்த துவங்கினர். இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டும் பணியை 2021 ஆகஸ்ட் மாதத்தில் துவங்கினர். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் வரவே திடீரென்று ராமனுக்கு கோவில் கட்டப்பட்டு விட்டது என்று 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 குழந்தை ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்து விழா எடுத்துக் கொண்டனர்.

தற்போது கட்டுமான பணி முழுதாக முடிவடைந்து விட்டது என்று கூறிக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜகவினர், இதனை இந்து தேசியத்தின் வெற்றியாகவும், ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யத்தின் துவக்கமாகவும் அறிவித்து கோவில் மீது 161 அடி உயரக் கோபுரத்தில் காவிக் கொடியை பிரதமர் மூலமாக ஏற்றி குதூகலிக்கின்றனர்.

இந்த காவிக் கொடி ஏற்றும் விழாவில் கலந்துக் கொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பேசுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஏராளமானோர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக பலர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். அவர்களுடைய ஆன்மா இன்று சாந்தி அடையும். அசோக் சிங்கால் இன்று இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். மஹந்த் ராம் சந்திர தாஸ், விஷ்ணு ஹரி டால்மியா உள்ளிட்ட எண்ணற்ற துறவிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். ஒரு காலத்தில் அயோத்தியில் உயர்ந்து பறந்து உலகுக்கு அமைதி, செழிப்பை பரப்பிய ராமராஜ்யத்தின் கொடி இன்று மீண்டும் அதன் சிகரத்தில் ஏறி உள்ளது’’ என்கிறார்.

பகத்சிங் உள்ளிட்ட நாட்டின் விடுதலைப் போராட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பையும், டெல்லி கேட் பகுதியில் இரத்த சாட்சியமாக பொறிக்கப்பட்டுள்ள பிறப்பால் இசுலாமிய படையினரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் வீசி எறிந்துள்ள இந்த கும்பல் இராமன் கோவிலுக்கு தியாகம் செய்த பயங்கரவாதிகளை புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அரசியல் சாசனத்தின் படி, ’இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு’ என்று அரசியல் சாசனத்தின் அபிமானிகள் கொண்டாடி வரும் சூழலில் இந்திய ஒன்றியத்தின் பிரதமரான பாசிச மோடி இந்து மத பண்டாரங்களை போல “நமது ராமர் யாருக்கும் பாகுபாடு காட்டுவதில்லை.. அதே உணர்வுடன் நாமும் முன்னேறி வருகிறோம்.. நாம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இரண்டையும் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த நாடு நமக்கு முன்பே இருந்தது.. நமக்கு பின்னரும் நீண்ட காலம் நீடிக்கும். எனவே மக்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். இதை நாம் ராமரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவரது குணாதிசயங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்” என்கிறார். ராமனை தேசிய நாயகனாக சித்தரித்து ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் நடத்தி வருகின்ற பார்ப்பன பாசிச பயங்கரவாத ஆட்சி ராமராஜ்யம் என்றெல்லாம் பீற்றிக் கொள்ளப் படுகிறது.

படிக்க:

 பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?

 ‘பெரும்பான்மை இந்து’க்களுக்கு தேவை ராமர் கோவில் அல்ல!

ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்ற போதிலும் அதில் வருகின்ற ஆணாதிக்க வெறியாட்டங்கள்; பழங்குடி மக்கள் என்று கூறப்படுகின்ற வானரங்களுக்கு எதிராக நடத்திய கோழைத்தனமான தாக்குதல்கள் மற்றும் அசுரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்ட ராவணனின் மீது நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் ஆகியவை ஆரிய, திராவிட இனங்களுக்கு இடையிலான மோதலை சித்தரிப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைத்துள்ளனர் என்பது தனிக்கதை.

அந்த ராமராஜ்யத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது போல பித்தலாட்டம் புரிந்து வந்து கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் பாஜக பாசிச மோடியின் ஆட்சியின் மூலம் அதிகாரப்பூர்வமாக ராமராஜ்யம் நிறுவப்பட்டுள்ளதாக அறிவிக்க வேண்டியது தான் பாக்கியுள்ளது.

“இன்று, முழு இந்தியாவும், உலகமும் ராமர்மயமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நீடித்த வேதனை இன்று ஓய்வு பெறுகிறது. நூற்றாண்டு கால தீர்மானம் இன்று நிறைவேறுகிறது. 500 ஆண்டுகளாக நீண்ட அந்த புனித யக்ஞத்தின் தீபம் இன்று நிறைவுபெறுகிறது.” என்று ஆரிய இனவெறி பிடித்த பாசிச ஹிட்லர் கொக்கரித்து போலவே பாசிச மோடியும் கொக்கரிக்கிறார்.

“இந்த காவிக் கொடி சாதாரணமானது அல்ல. போராட்டம், பக்தி, இந்திய நாகரிக மறுமலர்ச்சியின் சின்னமாக விளங்குகிறது. இதன் காவி நிறம், அதில் பொறிக்கப்பட்டுள்ள சூரிய (ரகு) வம்சத்தின் பெருமை, வரையப்பட்ட ஓம் என்ற எழுத்து, பொறிக்கப்பட்டுள்ள மந்தாரை (கோவிதாரா) மரத்தின் சின்னம் இவையெல்லாம் ராம ராஜ்யத்தின் மகிமையை குறிக்கும்” என்று காவிக் கொடியின் மகிமையை புகழ்ந்துள்ளார் திருவாளர் மோடி. காவிக்கொடி என்பது பார்ப்பனப் பண்டாரங்கள் மற்றும் பரதேசிகள், இந்து ஆன்மீகவாதிகளின் அடையாளக் கொடியாகவே திகழ்கிறது.

ராமனுக்கு கோவில் கட்டி முடித்தாகிவிட்டது கோபுரத்தில் காவிக் கொடியை ஏற்றியாகிவிட்டது. ஆனால் நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையான உணவுப் பொருட்கள் முதல் உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வரையிலான விலைவாசி உயர்வு குறையவில்லை. பணி நிரந்தரம் என்பது சட்டபூர்வமாகவே ஒழிக்கப்பட்டு விட்டது. விவசாயிகளிடம் இருந்த அரை குறை நிலங்கள் கார்ப்பரேட் பாணியிலான விவசாயத்துக்காக அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. சாதி தீண்டாமை கொடுமைகள் தலை விரித்தாடுகிறது. பழங்குடி மக்களின் நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அவர்களுக்காக போராடிய மாவோயிஸ்டுகள் மீது கொடூரமான தேடுதல் வேட்டை படுகொலைகள் நடத்தப்படுகிறது.

இவை அனைத்தையும் தற்போது நிலவுகின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் பெயராலேயே நிகழ்த்துவதற்கு நியாய உரிமையை பெற்றுக் கொண்டுள்ள சனாதானவாதிகள் அதாவது பார்ப்பன பாசிஸ்டுகள் காவிக் கொடியை உயர்த்தி தேசிய அவமானத்தை உருவாக்கியுள்ளனர்.

நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது ரத்த வியர்வையை சிந்தி இந்த நாட்டை உருவாக்கிய கோடான கோடி உழைக்கும் மக்களின் உழைப்பை உயர்த்திப் பிடிக்கின்ற ஒரே கொடி அது செங்கொடி தான்.

செங்கோடியின் கீழ் செயல்படுகின்ற கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்கள் ஒன்று திரளுகின்ற மகத்தான மக்கள் எழுச்சியின் மூலம் இந்த அவமானச் சின்னங்கள் அகற்றப்படும்.

இதனைப் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு புரிய வைப்பதும், தனித்தனியாக பிரிந்துக் கிடக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரள்வதும் காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.

பார்த்தசாரதி.

1 COMMENT

  1. நாட்டிற்கு தேவை ராமன் கொடி அல்ல?
    நாட்டு மக்களின் நலன் காக்கும் செங்கொடி என்பதை உரக்க கூறியுள்ளது.

    மேலும் ராமன் புராணம் பாடுவதால் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்க பரிவார கும்பல் இஸ்லாமிய படுகொலை கலவரங்களே அரங்கேற்றம் செய்யவே பயன்படுகிறது.

    கல்வி வேலைவாய்ப்பு தொழில் முன்னேற்றம் விவசாய வளர்ச்சி எதுவும் முன்னேறாது..

    காவியை வீழ்த்த ….
    கம்யூனிக்ஸ்டுகளை ஒன்றிணைவோம்…
    🚩🚩🚩✊✊👍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here