உலகெங்கும் மனிதாபிமானம் உள்ள மக்களின் மனங்களை உலுக்கி எடுத்த முகமது அக்லக் -ன் கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்றுவதற்கான வேலையில் உத்தரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
இந்து மதவெறி பாசிஸ்டுகளின் கொலை பாதகச் செயல்களை அறிந்திருக்கும் யாரும் “அக்லக்” என்ற பெயரை மறந்திருக்க மாட்டார்கள். அக்லக் படுகொலை பற்றி அறியாத வாசகர்களுக்கு அது குறித்து சுருக்கமாக கூறிவிடலாம்.
இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து வெறும் 60 கிலோ மீட்டர் தொலைவில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிசாடா கிராமத்தில் வசித்து வந்த 50 வயதான முகமது அக்லக் தனது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி இந்து மத வெறியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலின் போது அக்லக்-ன் மகன் படுகாயமுற்றார். இது நடந்தது 2015 ஆம் ஆண்டு.
முகமது அக்லக்-கை அடித்துக் கொன்றதுடன் நிற்காமல் அந்த கிராமத்தில் உள்ள கோவிலின் ஒலிபெருக்கியில் அக்லக் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் மாட்டிறைச்சி இருந்ததாக காவி பாசிஸ்டுகள் அறிவிப்பும் செய்திருக்கிறார்கள்.
ஆனால், அக்லக் தன் வீட்டில் எந்த இறைச்சியையும் வைத்திருக்கவில்லை. எனவே அக்லக் -ன் வீட்டை சோதனை போட்ட காவல்துறையினரால் எந்த ஒரு இறைச்சியையும் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அதேசமயம் அக்லக் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்த ஒரு இறைச்சியை எடுத்து வந்து அது அக்லக் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டது தான் என்று காவல்துறையினர் கூறி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் கைப்பற்றிய இறைச்சியும் மாட்டிறைச்சி அல்ல அது ஆட்டு இறைச்சி தான் என்று சோதனையின் முடிவில் தெரிய வந்தது.
இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த கொலையில் ஈடுபட்ட நபர்களை காப்பாற்றுவதற்கான வேலைகளில் தற்பொழுது ஒரு பாய்ச்சலை உத்தரப் பிரதேசத்தை ஆண்டு வரும் பாஜக அரசு செய்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரையும் குற்றம் அற்றவர்கள் என்று கூறி இவர்கள் மீது உள்ள வழக்குகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக பாஜக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையை உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவர்னரும் எழுத்துப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.
சிறுபான்மையினர் மீது எப்படிப்பட்ட கொலை வெறித் தாக்குதலை நடத்தி கொலைகளை செய்தாலும் காப்பாற்றுவதற்கு துடியாக துடித்துக் கொண்டிருக்கிறது உத்திரபிரதேசத்தை ஆளும் பாசிச பாஜக அரசு.
அதேசமயம் குஜராத்தில் உள்ள பாசிச பாஜக அரசு பசுக்களை கொல்பவர்களுக்கு, பசு மாமிசம் வைத்திருப்பவர்களுக்கு ஆயுள் தண்டனை என்ற சட்டத்தை குஜராத்தில் நிறைவேற்றி, அந்த சட்டத்தை பயன்படுத்தி, இஸ்லாமியர்களை ஆயுள் முழுக்க சிறைக்குள் வைத்து கொல்ல துடித்துக் கொண்டிருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி (Amreli) நகருக்கு அருகில் உள்ள மோட்டா காகிவாட் (Mota Khakivad) என்ற ஊரில் பசுவை கொன்றதாகவும் பசு மாமிசம் வைத்திருந்ததாகவும் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த காசிம் (வயது 20), அக்கரம் (வயது 30) மற்றும் சர்தார் (வயது 52) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தத்துடன் 18 லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் நவம்பர் 11 ஆம் தேதி அன்று குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்களான இவர்கள் சிறையில் இருக்கும் நிலையில் இவர்களால் எவ்வளவு ஆண்டுகள் உழைத்த போதும் 18 லட்சம் ரூபாய் அபராத தொகையை செலுத்தவே முடியாது என்ற நிலையில் இவர்கள் ஆயுள் முழுக்க சிறையில் இருந்து வெளிவரப் போவது இல்லை என்ற நிலை தான் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அக்லக் -ன் கொலை வழக்கையும் குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்ற வழக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும் இந்தியாவில் எந்த அளவிற்கு சட்டத்தையும் நீதித்துறையையும் பயன்படுத்தி காவி பாசிஸ்டுகள் தங்களின் பாசிசத்தை நிலைநாட்டி வருகிறார்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
பசு மாமிசம் வைத்திருந்தாலே அவர்களுக்கு ஆயுள் தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவதும் பாஜக அரசு தான்; பசுமாமிசம் வைத்திருந்ததாக புரளியை கிளப்பி விட்டு இஸ்லாமியரை கொலை செய்த இந்து மத வெறியர்களை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக அறிக்கையை தயார் செய்து கவர்னரிடம் அந்த அறிக்கைக்கு ஒப்புதலையும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதும் பாஜக அரசுதான்.
ஆக, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அல்லது மாட்டை கொன்றதாக கூறி இந்து மத வெறியர்கள் நேரடியாக இஸ்லாமியர்களை அடித்தே கொல்லலாம்; அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இஸ்லாமியர்களை வாழ்நாள் முழுக்க சிறையிலேயே நடைப்பிணங்களாக “வாழவும்” வைக்கலாம் என்பதை தற்பொழுது சட்டபூர்வமாகவே காவி பாசிஸ்டுகள் நிலை நிறுத்தி வருகிறார்கள்.
மாட்டின் பெயரால் மனிதர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவதை எதிர்த்து பேசாமல் வேடிக்கை பார்ப்பது என்பது “வாழ்க காவி பாசிசம்”, “வளர்க காவிகளின் வெறியாட்டம்” என்று வாழ்த்துவதற்கு ஒப்பானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
– குமரன்







