பாஜக-வுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஊடுருவ ஒரு Weakest link தேவைப்படுகிறது. இங்கு இப்போது விஜய், TVK.

நூற்றுக்கணக்கான கேமராக்கள் சூழ, ஆயிரக்கணக்கான கண்கள் காண ஒரு பெருந்துயர் நிகழ்ந்திருக்கிறது. சதி நடந்திருப்பின், அது யார் தவறாயினும் உறுதியாக தப்ப முடியாது. அது சி.பி.ஐ-யே விசாரித்தாலும் சதிக் கோட்பாட்டை பரப்பலாம், விசாரணையை இழுத்தடிக்கலாமே அல்லாமல்… நிரூபிக்க முடியாது. அப்படியானால் இதில் விஜய் சிக்கியிருப்பது யாரிடம்? அமித்ஷாவிடம். அதுவும் நூற்றுக்கணக்கான கேமரா காட்சி ஆதாரங்களுடன்.

இந்த நேரத்தில் அமித்ஷாவின் புகழ்பெற்ற கூற்று ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ‘தேர்தலில் வெற்றிபெற உண்மைகளோ, வாக்குறுதிகளோ பயன்தராது. செண்டிமெண்ட் மட்டுமே பயன் தரும்’. இது அமித்ஷா சொன்னது. அது மத செண்டிமெண்டோ, ஊழல் செண்டிமெண்ட்டோ, சாதி செண்டிமெண்டோ… அப்படி ஒன்று தேவை. இல்லை என்றால் உருவாக்கிக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி, ஊழல், மதம், சாதி அடிப்படையிலான செண்டிமெண்ட் முயற்சிகள் அவர்களுக்கு இதுவரை கை கொடுக்காமல் இருந்தது. விஜய் தரப்பு இதில் ஓர் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வளர்த்தெடுத்து வைத்திருக்கும் அவருடைய ரசிகர் படையினர் படித்தவர்கள். துடிப்பானவர்கள். ஆனால் சுய சிந்தனையும் சுய மரியாதையும் இல்லாதவர்கள். இவர்கள் இத்தகைய மனநிலையோடு உருவாகி நிற்பதற்கு திராவிட கட்சிகளுடைய சமூக அரசியல் கொள்கை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளின் போதாமை என்ன, சினிமா உள்ளிட்ட ஊடகங்களின் பங்கு என்ன என்பதைப்பற்றி கவனத்தில் எடுத்து தனியே ஆய்வு செய்ய வேண்டும்.

பெரியார், ‘நான் சொல்வதை நம்பாதே… நீயே சிந்தித்து முடிவெடு’ என்றார். ஆனால் பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றிருக்கும் விஜய், தன் கட்சி தொண்டர்களுக்கு அத்தகையை சுய சிந்தனை அணுகுமுறையை பயிற்றுவிக்கவில்லை. அவருக்கே அது இல்லை என்று சொல்லமாட்டேன். அதெல்லாம் தெளிவாக இருக்கிறது. Cruel-ஆக இருக்கிறது என்பதுதான் பிரச்னை.

இத்தகைய சுய சிந்தனை முறை இல்லை என்பதால் அவருடைய ரசிகர்கள், ‘தளபதிதான் எல்லாம். அவர் என்ன செய்தாலும் அதற்கு ஒரு பொருள் உண்டு’ என நினைக்கிறார்கள். ‘விஜய் பேசினால் அதற்கு அர்த்தம் இருக்கிறது. 41 பேர் செத்து இவ்வளவு நாட்கள் அவர் அமைதியாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. அவருடைய ஒவ்வோர் அசைவிலும் ஏதோ ஓர் செயல் திட்டம் இருக்கிறது; அதை மக்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்பது அவர்களின் எண்ணம். மக்களிடம் என்றால் பொது மக்களிடம் இல்லை… தங்களிடமே கூட சொல்ல வேண்டியதில்லை என்று கருதுகின்றனர். ஏன் அப்படி நினைக்க வேண்டும்?

படிக்க: கிரிமினல் விஜய்: தமிழக அரசியலில் முளைத்துள்ள புதிய விசச் செடி!

ஏனெனில், தங்களுக்கு அந்த தகுதி இல்லை என்பது அவர்களின் எண்ணம். ‘என் தலைவன் என்னைவிட மேலானவன். எதற்கு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லனும்?’. இது அவரை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. கடவுளும் பக்தனும் எப்படி சமமாக முடியும்? விஜய் மானுடர் அல்ல, அதி மானுடர்.

இதனால்தான் அவருடைய ரசிகர் கூட்டம் ஒரு Trance state-ல் இருக்கிறது. ஒரு வழிபாட்டு மரபுகொண்ட Cult-ஆக இருக்கிறது. MGR, NTR போன்றோருக்கும் இத்தகைய Cult குழு இருந்தது. அதிலிருந்து விஜய் ரசிகர்கள் வேறுபடும் இடம் என்பது இவர்களின் ஆக்ரோஷம். அதற்கு காரணம் அவர் நடித்த படங்களின் வன்முறை. இதற்கு விஜய் படங்களின் வெறியூட்டப்பட்ட கதையமைப்பை உருவாக்கிய இயக்குனர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இப்படி… சுய சிந்தனையும், சுய மரியாதையும் இல்லாத.. வழிபாட்டு மனோபாவம் கொண்ட… வெறிபிடித்த Cult குழுவினராக இருக்கும் இவர்கள் அமித்ஷாவிடம் அடியாள்படையாக சேர்த்துவிடப்பட்டால் என்னவாகும்? உண்மையில் நாம் அஞ்சுவது இதற்குதான்; இதற்கு மட்டும்தான். திமுக தோற்றால் என்ன பிரச்னை? அது எத்தனையோ முறை தோற்ற இயக்கம்தான். அதன் மீண்டெழும் திறனால் தன்னை கட்டி எழுப்பிக்கொள்ளும். மாறாக, ஏதோ ஓர் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ… மாநிலத்தில் பாஜக செல்வாக்கு செலுத்தும் ஓர் ஆட்சி வந்துவிட்டால் என்ன ஆவது?

படிக்க: திரை நாயகன் விஜய் கட்சி தொடங்கியது முதல் 41 உயிர்கள் காவு கொடுத்தது வரை!

ஆனால் இந்த விசயத்தை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் விஜய் ரசிகர்களுக்கு புரியவே புரியாது. தாம் யாருக்கு பயன்படுகிறோம் என்பது கூட புரியாது. ஆனால் உறுதியாக விஜய்-க்கு புரியும். கடவுள் எதையும் காரண காரியத்துடன் கணக்கு போட்டுதான் செய்வார். பக்தர்கள்தான் வெறியூட்டப்படுவார்கள்.

இத்தனைக்கும் விஜய் ரசிகர்களின் பெரும்பான்மையானோர் பாஜக எதிர்ப்பாளர்கள். தமிழ்நாட்டின் இயல்பான உள்ளுணர்வு அவர்களிடமும் உண்டு. அந்த உணர்வு அரசியலாக மாறாமல் தடுக்கப்படும் இடம், விஜய் மீது அவர்கள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான பக்தி. இதுவே விஜய், தீவிர பாஜக எதிர்ப்பை பேசினால் இந்த லட்சக்கணக்கான ரசிகர் கூட்டமும் கேட்டு கேள்வியின்றி இதே தன்மையுடன் அதைப் பின் தொடரும். ஆனால் அதை செய்யும் நிலையில் விஜய் இல்லை. அவருடைய ரசிகர்களும் இல்லை.

‘ஜோஸப் விஜய்’ என்று மத அடையாளத்துடன் ஒதுக்கிய விஜய்-யை இன்று பாஜக அரவணைக்கிறதே… அதற்கு என்ன பின்னணி என்ற அடிப்படையான கேள்வி கூட தவெக தொண்டர்களின் மனங்களில் எழுவதில்லை. நடந்துகொண்டிருப்பது ஒரு திரைக்கதை; தங்கள் ஹீரோ வீழ்த்தப்பட்டிருக்கிறார்; திமுக என்ற வில்லன் அதை செய்திருக்கிறது; ஆகவே திமுக-வை வீழ்த்தி தங்கள் ஹீரோ வெற்றி பெற வேண்டும்… என்று கருதுகிறார்கள். இந்த வரம்பை தாண்டி அவர்கள் சிந்திப்பதுபோல் தெரியவில்லை.

பாஜக தமிழகத்தில் காலூன்ற ஏதேனும் ஒரு இந்துத்துவ அமைப்பு அடித்தளம் அமைத்துத் தரும் என நினைத்தோம். இறுதியில் அதை ஜோஸப் விஜய் என்ற கிறிஸ்தவரை வைத்து செயல்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் ஒன்று மட்டும் உறுதி… தங்கள் தேவை நிறைவேறிய பின்னர் பாஜக முதலில் கை கழுவுவது விஜய் ஆகதான் இருக்கும்.

அதைவிட முக்கியம், இந்த Cult குழுவிடம் விஜய், தன் செல்வாக்கை இதே தன்மையில் தொடர்ந்து தக்க வைப்பது கடினம். வெகு வேகமாக discredit ஆவார். லட்சக்கணக்கான தொண்டர்களை தொடர்ந்து Trance state-ல் வைத்திருக்க… சாகச கட்டுக்கதைகளும், Mass manipulation-ம் அவசியம். இந்த கலையில் பாஜக மாஸ்டர். மேலும், விஜயை பயன்படுத்திக்கொண்டு, தான் எப்படி வளர்வது என்றுதான் பார்ப்பார்களே அல்லாமல் அவரை வளர்ப்பது அல்ல பாரதிய ஜனதாவின் நோக்கம்.

முகநூல் பதிவு 

 பாரதி தம்பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here