தொழிற்சங்கங்களின் மீது வெறுப்பை உமிழும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!
மாண்புமிகு நீதிபதியின் குரல் ஒரு சித்தாந்தத்தை பின்புலமாக கொண்டு தொழிற்சங்கங்கள் மீது வன்மத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டும் குரல். இது சரியல்ல. தனக்கு தோன்றியவற்றை ஆதாரங்கள் இன்றி பேசுவது நீதிமன்றத்தின் மாண்புக்கு உரிய செயல் அல்ல.

தேதி: 29.01.2026

கண்டன அறிக்கை

அன்புடையீர்

வணக்கம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு சூரியகாந்த் அவர்கள் 29.01.2026 அன்று ‘தொழிற்சங்கங்களால் நாட்டில் தொழில்துறை வளர்ச்சி தடைபட்டு இருக்கின்றன. வேலை பார்ப்பதை தொழிற்சங்கங்கள் விரும்புவதில்லை. இந்த தொழிற்சங்க தலைவர்களால் தான் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது’ எனவும், ‘வீடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால் இந்த தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு வீட்டையும் நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டு விடுவார்கள்’ எனவும் வீட்டுப் பணியாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட நலன்கள் வழங்க கோரி தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் எந்த தொழிற்சாலையும் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டவை அல்ல. அதற்கான ஆதாரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தில் நோக்கியோ என்ற நிறுவனம் அரசுக்கு சேர வேண்டிய, செலுத்த வேண்டிய வரியையும் செலுத்தாமல் கடன் தொகையோடு அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்களுக்கு வழங்கவேண்டிய சட்டப்பூர்வ பணப் பலன்களை சங்கம் தலையிட்டுதான் பெற முடிந்தது. நோக்கியோ நலிவடைந்ததற்கு தொழிற்சங்கம் காரணம் இல்லை.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபோர்டு நிறுவனம், மோட்டார் வாகன உற்பத்தியில் உலக அளவில் மிகப்பெரும் நிறுவனமாக விளங்கியது. இந்தியாவில் அதன் சந்தை மிகப்பெரிய சரிவை கண்டதிலிருந்து தமிழகத்தின் மறைமலை நகரிலிருந்த ஃபோர்டு நிறுவனம் தொழிலை மூடிவிட்டு வெளியேற தயாரானது. அப்பொழுது தொழிற்சாலையை நம்பியிருந்த தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குள்ளான நிலையில் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை செட்டில் செய்யாமல் ஏமாற்றியது. இங்கும் தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய சட்டப்பூர்வ பலன்களை சங்கம் தலையிட்டுதான் பெற முடிந்தது.

படிக்க: கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களின் மீது பரப்பப்படும் அவதூறுகள் | உண்மை என்ன?

இவ்வாறு பல்வேறு பல்வேறு உதாரணங்களை நாடு முழுக்க பட்டியலிட முடியும். கார்ப்பரேட் நிறுவனங்களால் தொழிலாளர்கள் பாதிப்புகள் அடைந்தால் பெரும்பாலும் நீதிமன்றம் செல்வதில்லை. ஏனெனில் நீதி கிடைப்பதில் இருக்கின்ற தாமதமும், வாழ்வதற்கே வழியில்லாத நிலையில் வழக்கு நடத்துவதற்கான பொருட் செலவுகளையும் எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி போராடி, இருக்கின்ற சட்டப்பூர்வ உரிமைகளை தக்கவைக்க சங்கத்தின் குரல் சன்னமாக ஒலிக்கிறது. இதையே சகித்துக் கொள்ள முடியாமல் இது போன்ற கருத்துகள் வெளிப்படுத்தப்படுகிறது.

முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் உருவாக்கிய கருத்தான, ‘தொழிற்சங்கங்களால் தொழிற்சாலை மூடப்படுகிறது’ என்ற கருத்தை நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து பேசுவது நியாயமல்ல. ‘தொழிற்சங்கங்களால் தொழிற்சாலை மூடப்படுகிறது’ என அப்பாவி பாமர மக்களின் பொதுப் புத்தியில் இருப்பது அறியாமை. மாண்புமிகு நீதிபதியின் குரல் ஒரு சித்தாந்தத்தை பின்புலமாக கொண்டு தொழிற்சங்கங்கள் மீது வன்மத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிக்காட்டும் குரல். இது சரியல்ல. தனக்கு தோன்றியவற்றை ஆதாரங்கள் இன்றி பேசுவது நீதிமன்றத்தின் மாண்புக்கு உரிய செயல் அல்ல.

எனவே மாண்புமிகு நீதிபதி அவர்களின் கருத்து விமர்சனத்துக்கும் கண்டனத்திற்கும் உரியது என எமது தொழிற்சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

இப்படிக்கு

R. லோகநாதன்,

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு – புதுச்சேரி

1 COMMENT

  1. NDLF கண்டன அறிக்கை!

    உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கூறிய கருத்துக்கு கண்டன அறிக்கை !

    வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் நிர்ணயிக்க கோரி கொடுத்த வழக்கின் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தொழிற்சங்கங்களால் தான் தொழில் வளர்ச்சி தடைப்படுகிறது என்று வன்மத்துடன் பேசிய கருத்து கண்டிக்கத்தக்கது
    நோக்கியா கம்பெனி. ஃபோர்டு கம்பெனி இழுத்து மூடப்பட்ட சம்பவம் சரியான உதாரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here