நான் போராட்டத்துக்கு வந்திருப்பேன்
ஆனால் வேலை நாளாகப் போய்விட்டது
விடுமுறை நாளில் ஏற்கனவே
முடிவு செய்த நிகழ்ச்சி ஒன்று இருந்தது
என் அன்பு மகள் பிறந்தநாள் அன்று
குடும்பத்தோடு சொந்தத்தில்
தவிர்க்க முடியாத திருமணம் ஒன்று
இலேசாக தலைப்பாரமாக இருந்தது
மேலும் இழுத்து வைத்தால்
அது காய்ச்சலாக மாற வாய்ப்பு இருக்கிறது
என் மனைவியை வெளியே அழைத்துச்செல்ல வேண்டிய கட்டாயம்
நான் போராட்டத்துக்கு வந்தால்
எங்களது கம்பெனிக்கு தெரிந்துவிடும்
தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நாள்
இல்லாவிட்டால் பயிர் கருகிவிடும்
போராட்டத்துக்கு வரத் தயாராகிவிட்டேன்
ஆனால் பாருங்கள் திடீர் எழவு ஒன்று
போராடிப்போராடி நாம் என்னத் கண்டோம்
எதையும் இங்கே மாத்த முடியாது தோழர்
நாமலே போராடிட்டிருந்தா எப்புடித் தோழர்?
சம்பந்தப்பட்டவங்கள பங்கேற்க வைக்கணும் தோழர்
தினசரி கட்சி கட்சினு அலைஞ்சா கஞ்சி எப்புடி கஞ்சி குடிக்கிறதுன்னு வீட்டுல ஒரே திட்டு தோழர்
அடுத்தமுறை கட்டாயம் கலந்துக்கிறேன் நம்ம ஆதரவு தான் எப்பவும் உண்டு தானே?
எத்தனை எத்தனை காரணங்கள்
எண்ணிக்கை அளவிட முடியாது…
ஆனால் தோழர்களே….
எட்டு மாதங்களை கடந்துவிட்டது
முன் பனி பின்பனி கோடை குளிர்
மழைக் காலங்களும் கடந்துவிட்டன
புலி வாலைப் பிடித்த கதையோவென
நமக்கு சந்தேகம் தீராதபோதும்
வெற்றிபெறாமல் வீடு திரும்ப மாட்டோமெனப் போராடும்
அந்த உழவர்களுக்குத்தான்
எத்தனை எத்தனை வைராக்கியம்?
நாம் உண்ணும் உணவில்
கண்ணீர்த்துளி சிந்தியாவது
உணவிலே உப்பிட்டுக்கொள்வோம்!
நன்றி,
சூர்யா, சென்னை.
இதை படிக்கும் போது “மானத்தை இழந்து வாழ்க்கை வேண்டுமா” என்ற ம க இ க பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.சாக்கு போக்குகளை சொல்லி இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் மக்கள் இப்படி காலம் கடத்துவார்கள் என்று பார்ப்போம்.
கவிதைக்கு வாழ்த்துக்கள் சூர்யா…..