ர்நாடகா மாநிலம் கடக் பகுதி விவசாயி தான் விளைவித்த 205 கிலோ வெங்காயத்தை பெங்களூரு சந்தையில் விற்றதில் அவருக்கு கிடைத்தது வெறும் 8 ரூபாய் மட்டுமே!. வெங்காய விலை வீழ்ச்சி அடைந்தது, கர்நாடகா விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை உண்டாக்கியுள்ளது.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பாவடப்பா ஹல்லிமுகரே என்ற விவசாயி, திம்மாபூரை சேர்ந்த மற்ற விவசாயிகளுடன் சேர்ந்து , பெங்களூரு யஸ்வந்த்பூரில் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு போர்டில் வெங்காயத்தை விற்றார். 205 கிலோ வெங்காயத்திற்கு ரூபாய் 410 விலையாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 2 ரூபாய் தான். அந்த 410 ரூபாயில் போர்ட்டர், சர்வீஸ் கட்டணம் உட்பட 401.64 பிடித்தம் செய்யப்பட்டு மீதம் 8.36 ரூபாய் அந்த விவசாயிடம் கொடுக்கப்பட்டது. அதற்கான பில்லும் கொடுக்கப்பட்டது.

வெங்காயம் விற்ற பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு விவசாயி கூறுகையில் 7,8 கிராம விவசாயிகள் ஒன்று சேர்ந்து, சுமார் 300 வெங்காய மூட்டைகள் ட்ரக்கில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு அனுப்பட்டன. நாங்கள் சந்தைக்கு வந்த போது மகாராஷ்டிரா நாசிக் வெங்காயமும், தமிழ்நாட்டு வெங்காயமும் சந்தைகளை நிரப்பியிருந்தன. அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுகையில் எங்களது வெங்காயம் தரம் குறைவு தான். அதற்கு காரணம், பருவ மழையின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், வெங்காயத்தின் அளவு சிறியதாக இருப்பதால் விலை போகவில்லை.

வீழ்ச்சியடைந்த வெங்காயத்தின் விலை:

கடந்த 2 ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயத்திற்கு வழங்கப்படும் விலை மிகக் குறைவு. நாடு முழுவதும் இது தான் நிலைமை. 50 கிலோ மூட்டைக்கு விவசாயிகள் 2000 முதல் 2500 வரை விலை எதிர்பார்த்தார்கள். ஆனால் விவசாயிகளுக்கு கிடைத்ததோ 50 கிலோ மூட்டைக்கு 500 முதல் 530 வரை தான்.
அந்த விவசாயி குறிப்பிடுகையில்,’ பயிர் சாகுபடி செய்ததிலிருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் வரை 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளேன். அந்த கோபத்தில் தான் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதால் சமூகவலைதலங்களில் பதிவிட்டேன்” என்கிறார்.

அச்சுறுத்தலுக்கு உள்ளான விவசாயி:

விவசாயி வெங்காயம் விற்ற பில், சமூகவலைதளங்களில் வைரலான பின்பு குறிப்பிட்ட விவசாயிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மோசமான விளைவுகளை சந்திக்கக் கூடும் என அஞ்சுகிறார்.

இதையும் படியுங்கள்: குறைந்தபட்ச ஆதார விலையும், ஒன்றிய அரசின் சதியும்!

கர்நாடகாவை ஆளும் பாஜகவின் மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், தற்போது விவசாயிகள் அதிருப்தியும் சேர்ந்து விட்டால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியாது என பாஜக அஞ்சுகிறது. பஞ்சாப்பில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கான காரணம் விவசாயிகளின் வீரியமிக்க போராட்டத்தினால் தான் என்பதை பாஜக அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது. அதனால் தான் விவசாயியை மிரட்டுகிறது.

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயிகள்:

கடந்த செப்டம்பர் மாதம் நமது இணையதளத்தில் ஆற்றில் கரையும் பூண்டு விவசாயிகளின் உழைப்பு! என்ற தலைப்பில் 1 கிலோ பூண்டின் விலை அதிகபட்சமாக 1 ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக 50 பைசாவுக்கும் எடுத்துக் கொண்டதால் விவசாயிகள் பூண்டை மூட்டை, மூட்டையாக ஆற்றில் கொட்டிய அவலமும் நடந்தது என எழுதியிருந்தோம். தக்காளி விவசாயிகளும் உரிய விலை கிடைக்காததால் ரோட்டில் கொட்டுவது அன்றாட செய்தியாக மாறியுள்ளது. இப்படி விவசாயிகளுக்கு தான் விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் நட்டமடைவதும், வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில் வாழ வேறு வழியின்றி தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். இதற்கு முழுக் காரணமும் அரசு தான்.

வெங்காயத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை இல்லை.

டெல்லியில் போராடிய விவசாயிகளின் கோரிக்கையில் முக்கியமானது குறைந்த பட்ச ஆதார விலை ஒன்று. போராட்டத்தை வாபஸ் வாங்க நைச்சியாமாக பேசிய ஒன்றிய அரசு இதுவரை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் துரோகம் இழைத்து வருகிறது. விவசாயிகள் தான் விளைவித்த பொருளுக்கு தானே விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில், குறைந்த பட்ச ஆதார விலை அவர்களை ஓரளவு காப்பாற்றும். ஆனால் அதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது மோடி அரசு.

கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வெங்காயத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயித்திருந்தால் இந்த பிரச்சினை எங்களுக்கு வந்திருக்காது. ஒன்றிய அரசு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என்கிறார்கள். மாநில அரசிடமும் கோரிக்கை வைத்துள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
விவசாயிகள் தான் விளைவித்த பொருளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம், 65 ஆண்டுகால பழமையான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ஐ திருத்தியுள்ளோம் என தம்பட்டம் அடித்தார் மோடி. ஆனால் இன்று தான் விளைவித்த வெங்காயத்தை 415 கிலோ மீட்டர் பயணம் செய்து பெங்களூருவில் விற்ற விவசாயிக்கு கிடைத்தது 8 ரூபாய் தான். இது விவசாயிகளுக்கு மோடி செய்தது.

மோடிக்கு கார்ப்பரேட் சேவையே முதன்மையானது:

விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறபடுத்தி, விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க காத்திருக்கிறார் மோடி. இப்படிபட்ட பாசிச மோடி அரசு, எப்படி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயித்து விவசாயிகளை பாதுகாக்கும். நாட்டையே கூறுபோட்டு அம்பானிக்கும் அதானிக்கும் விற்க துடிக்கிறது இந்த கேடு கெட்ட கும்பல். அதற்கான வேலையே மோடிக்கு பிரதானமானது.

போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதும், கார் ஏற்றி கொல்வதுமே நோக்கமாக கொண்ட கும்பலிடம் கருணையை எதிர்பார்க்காமல் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பாசிச கும்பலை களத்தில் வீழ்த்தினால் தான் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here