கொலம்பசின் நவீன கால அடிமைகளான இந்திய ஊடகங்கள்
(அல்லது) நரியை நாட்டாமைக்கு வச்சா…
அராவாக் பழங்குடி செவ்விந்திய மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றும் தீயிட்டு கொளுத்திய நாளிலிருந்து தொடங்குகிறது அமெரிக்கா மனிதகுலத்தின் மீது ஏவும் மரண வேட்டை வரலாறு.
ரொம்பவும் பின்னோக்கி போக வேண்டாம். 1905இல் ஈரானில் பெட்ரோலிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்க பட்ட நாளில் இருந்துதான் அரபு பிராந்தியத்தில் அமெரிக்க நாட்டாமை தொடங்குகிறது. பெட்ரோலியத்தின் மதிப்பு தெரியாமல்
சல்லிக்காசு மதிப்புக்கு விற்றுக்கொண்டு இருந்த ஈரான் அதிபர் மொசாதிக், ஒருநாள் விழித்துக்கொண்டு விலையை நிர்ணயம் செய்ய, அவரது ஆட்சியை கவிழ்த்து அவரையும் கொலை செய்தது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
அரபு பிராந்திய நாடுகளுக்குள் சண்டையை மூட்டிவிட்டு பிரித்தாளும் சூழ்ச்சி, பல்வேறு அரசியல் படுகொலைகள், ஆட்சி கவிழ்ப்புகள், விளைவாக பல லட்சம் அரபு மக்களின் உயிர்களை பலி கொண்ட வளைகுடா போர் எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்ததும் இருப்பதும் அமெரிக்காதான்.
இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருந்த நேரத்திலும் கூட, தன் சக கூட்டாளியான சோவியத் அரசை ஹிட்லர் அழித்து விட்டாலும் நல்லதே என்று கணக்கு போட்டுகொண்டு இருந்த கயவன்தான் அமெரிக்கா.
1990இல் சோவியத் ஒன்றியத்தை சிதைத்ததன் பின்னால் இருந்ததும் அமெரிக்காவே.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள் முற்றியதால் பிறந்ததே முதலாம் உலகப்போர் என்பதையும் அதன் தீராத முரண்பாடுகளின் தொடர்ச்சிதான் இரண்டாம் உலகப்போர் என்பதையும் அறியாத அறிவிலிகளும், இரண்டாம் உலகப்போரின் முடிவில் 2 கோடி மக்களை பலி கொடுத்து சோசலிச சோவியத் ஒன்றியம் நாஜி ஹிட்லரை அழித்து விடாமல் போயிருந்தால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசியல் வரலாறு எப்படி எழுதப்பட்டு இருக்கும் என்று அறியாத மட்டைகளும்தான் உக்ரேய்னுக்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று கூச்சல் போடுகின்றனர்.
டிவி சானல் நெறியாளர்களின் நடுநிலை இரண்டு நாட்களாக சந்தி சிரித்து நாறுகின்றது. மட்டுமல்ல, அமெரிக்காவின் இன்றைய அரசியல் நிலை, பொருளாதார நிலை, சீனாவின் பொருளாதார நிலை, அரசியல் நிலைப்பாடு, உலக பொருளாதார நிலை தெரியாமல் ‘போரில் அமெரிக்கா எப்போது குதிக்கும்?’ என்று போஸ்டர் அடிக்காத குறையாக அலறுகின்றார்கள். அது சரி, ‘அந்த’ செய்திக்காக அப்போலோ மருத்துவமனை முன் காத்துகிடந்த உங்கள் ஊடக அறம் உலகறிந்த ஒன்றுதானே? டி ஆர் பி ரேட் ஒன்றே குறிக்கோள், திருந்தவா போகின்றீர்கள்?
இன்றைய பிரச்சினை பற்றி கேட்டால், திபெத் விசயத்தில் சீனாவுக்குள் விரைவில் பெரும் கலகம் வரும் என்ற தொனியில் பேசும் பத்ரி போன்றவர்களின் அரசியல் அறிவு தலை சுற்ற வைக்கின்றது. அதாவது ரஷ்யாவுக்குள் பெரிய உள்நாட்டு கலகம் வெடிக்க போகுதாம்! ஜோ பிடேன் ரொம்பவே குஷியாகி இருப்பார் பத்ரி!
இரண்டாம் உலகப்போர், போரின் முடிவில் பிறந்த புதிய உலக அரசியல் போக்கு, சோவியத் சிதைவுக்கு பின் உலக அரசியல் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து ஓரளவு அறிவும் இல்லாதவர்கள் டிவி சானல்களில் நெறியாளராக அமர்வதை தவிர்த்தால் குறைந்தபட்ச ஊடக அறத்தையாவது நீங்கள் காப்பாற்றுவீர்கள்.
- மு இக்பால் அகமது
முகநூல் பதிவு