இடதா? வலதா?
என்று குதிக்கும்
திசையை கூர்த்து
நோக்கி காத்திருக்கின்றன
பூனைகள்! பல நிறத்தில்!

புரட்சி, பண்பாடு, மாற்று
போன்ற பெருங்கதையாடல்கள்
பேச உவப்பாகவும்
அமுல்படுத்த கடுப்பாகவும்
இருக்கிறதே?
என்னக் கொடுமை!

உரை வீச்சும்,நடை வீச்சும்
ஊரில் உள்ளவர்களை
சிலிர்க்க வைக்க
தன்னடக்கம் கருதி தான்
மட்டும் விலகி நிற்கும்
தகைசால் பெரியோர்!
என்னே சான்றோன் சொல்!

இது டிஜிட்டல் யுகம்,
கணிணி பயன்பாடு, பேஸ்புக்,
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்,
டிவிட்டர்களில் முகத்தையும்,
முதுகையும் மறைத்துக் கொண்டு
அளக்கலாம் நீளமாக!

அக்கம், பக்கம், அக்கா,
மாமன் உடன் பணிபுரியும்
உறவுகள் மத்தியில் முகநூலில்
முகம் காட்டாமல் அளப்பது
தெரிந்து விடவா போகிறது?

மெய் உலகில் போத்தீஸ்,
நல்லி, வசந்த் அன் கோ,
ஶ்ரீ குமரன் தங்க மாளிகை
வகையறாக்கள் கடை பரப்பும்
நுகர்வு பொருட்களை விழுங்கி
செரியாமல் மயக்கமுற
எந்த தடையும் இனியும்
கூடாது!

பூனைகள் உலாவுகின்றன!
மதிலோ ஒரு அடி சுவரல்ல!
சீனத்து பெருஞ்சுவர்!
பேசிய பேச்சுக்கள்,
விமர்சனம் என்ற முகத்திரை கீழ் நண்பர்களையும்
விமர்சனத்தை ஏற்காத எதிரிகளையும்
ஏசிய ஏச்சுக்கள் அனைத்தும்
கணக்காக மறந்து
உலவும் வாத்தி பூனைகள்!

காரியத்தில் கண்ணாக இருக்கும்
பூனைகள் பலவும் ஊரான்
வீட்டு பொருளை ருசித்து தின்ற
ஆசையுடன் காத்திருக்கின்றன!
குதிக்கும் திசையை கூர்த்து நோக்கி!

இளஞ்செழியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here