நாட்டில் மது ஒழிப்பு பற்றி பேச ஒரு அருகதை வேண்டும். தற்போது தமிழகத்தில் கள்ளக்குறிச்சி படுகொலைகளை காரணமாக்கி, கள்ளச்சராயத்தை கண்டித்து அல்லது ஆளும் அரசாங்கத்தின் முதல்வரின் ராஜினாமாவை முன்னிறுத்தி போராடுபவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தமக்கு தமது கட்சிக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் தாராளமாக மதுவை வாங்கி ஊத்தி கொடுத்து விட்டு, சமூகத்தில் சாராய சாவுகள் நடக்கும் போது மட்டும் மதுவுக்கு எதிரானவர்கள் போல் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சார இயக்கங்கள் என அனைத்திலும் மது ஆறாக பெருக்கெடுத்துப் பாய்கிறது. அப்படி சரக்கு ஓடாத கரை வேட்டிகளின் கூட்டங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

குவாட்டரும் பிரியாணியும் அதுபோக தன் கட்சியின் தகுதிக்கும், அன்றைய நிகழ்ச்சியில் பேசவிருக்கும் தலைவரின் மதிப்பிற்கும் ஏற்ப, தலைக்கு இவ்வளவு என்று கூலியும் கொடுத்து தான் அரசியல் கட்சிகள் ஆள் பிடிக்கின்றன. தமிழகத்திற்கு மோடி வந்த போதெல்லாம் அண்ணாமலையும் இப்படித்தான் ஆள் சேர்த்தார்.

இதில் சில கட்சியினர் ஆண்களுக்கு மட்டும் பாட்டிலும், பெண்களுக்கு புட்டியை மறுத்து பிரியாணி பணம் மட்டும் என்று பாகுபாடு காட்டுவதும் உண்டுதான்.

இப்படி தமது ஆதாயத்திற்காக குடிபோதையை தூண்டி பரப்பி அரசியல் செய்தவர்களுக்கு, தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள விஷச்சாராய படுகொலையை கண்டிக்க தகுதி இருக்கிறதா?

தேர்தல் திருவிழாவையொட்டி தினமும் குவாட்டர் பிரியாணிக்கு பழக்கப்படுத்துகிறீர்கள். வாக்குப்பதிவு வரை கொண்டாட்டம் தொடர்கிறது. அதன் பின்னர் நீங்கள் ஆட்சி அமைத்தோ அல்லது எதிர்க்கட்சியாகவோ உங்கள் பிழைப்பை பார்க்கப் போய் விடுகிறீர்கள். ஆனால் தினந்தோறும் சரக்கடிக்க உங்களால் பழக்கப்படுத்தப்பட்ட தொண்டன் எங்கே செல்வான்? அவர்களை மலிவான போதையை நோக்கி தள்ளிய குற்றவாளிகளாக நீங்களும் தானே இருக்கிறீர்கள்?

மக்கள் உழைத்து அதில் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு தமது குடும்பத்தினருடன் நண்பர்களுடன் உறவினர்களுடன் ஊர் மக்களுடன் மகிழ்ச்சியாக வாழும் சமூக எதார்த்தம் பராமரிக்கப்படுகிறதா?

அல்லது அனைத்து துறைகளிலும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தின் விளைவாக கூலிகள் குறைக்கப்பட்டு குடும்ப செலவுகளை செய்யவே போதிய பணம் இன்றி வட்டிக்கு கடன் வாங்குவது அதிகரிக்கிறதா?

ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி தான் வாங்கிய கந்துவட்டி கடனையோ, மகளிர் சுய உதவி குழு கடனையோ, தவணையையோ கட்ட முடியாமல் நெருக்கடிக்குள்ளாகி விரக்தியின் விளிம்பிற்கு மக்கள் தள்ளப்படுவது அதிகரிக்கிறதா? வாழ்க்கையில் வெறுப்பை, விரக்தியை, சலிப்பை உணரும் தருணத்தில் அவனை வீழ்த்துவதற்குத்தான் சுற்றிலும் வலை விரித்துள்ளன சாராய கார்ப்பரேட்டுகள்.

யாரெல்லாம் எளிதாக போதையை நாடுகிறார்கள் என்று கணக்கெடுத்தால் மனிதாபிமானமற்ற முறையில் உடல் உழைப்பையோ, மூளை உழைப்பையோ பிழிந்து எடுக்கப்படும் இடங்களில் இருப்பவர்கள் தான் அதிகமாக போதையை நாடுகிறார்கள். எந்த அளவு தான் கசக்கி பிழியப்படுகிறாரோ, அதற்கு ஏற்ப அவரால் சராசரி இன்பங்களை நுகர முடிவதில்லை.

அதாவது இளையராஜா ரகுமான் அனிருத் போன்றவர்களின் இசையை கேட்டு திருப்தி அடைய முடிவதில்லை. குழந்தையின் மழலையை கேட்டு பரவசம் அடைய முடிவதில்லை. இதுபோன்ற சமூகத்தில் உள்ள மகிழ்ச்சிகள் எல்லாம் போதாத போது அதையும் தாண்டி தன்னையே மறக்கடிக்க கூடிய ஒன்றுதான் தீர்வு என போதையை நாடத் தள்ளப்படுகிறார்கள்.

இந்த நச்சு சூழலுக்கு எதிராக குரல் கொடுக்க முன்னுராத கட்சிகள், தலைவர்கள் சாராயத்தை மட்டும் ஒழிக்க வேண்டும் என்று சந்தர்ப்பம் பார்த்து போராட்டம் நடத்துவதை நேர்மையானதாக பார்க்க முடியாது.

எட்டு மணி நேர வேலைக்கேற்ப கூலி, நிரந்தரமான வேலை, வாழ்க்கை பாதுகாப்புகள் இது எல்லாம் கிடைக்கப்பெற்ற மனிதர்கள் போதையை நாட வேண்டிய கட்டாயம் எழுவதில்லை. நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடிகளும் சரக்கடிப்பது என்பது பணக் கொழுப்பும், கார்ப்பரேட்டுகள் திணித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தின் விளைவும் தான்.

படிக்க:

♦ சாலைகள் பணம் படைத்த குடிகார சிறுவர்களின் விளையாட்டுமைதானங்களா ?

 ‘மதுவிலக்கு’ அமைச்சரே!

உழைத்து நேர்மையாக குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ கோடிக்கணக்கான மக்களை அனுமதிக்க கார்ப்பரேட்டுகள் தயாராக இல்லை. அதே நேரம் தமக்கான உரிமை கேட்டு தொழிலாளர்கள் போராடுவதையும் தடுத்தாக வேண்டும். அதற்கு அவர்களை சிந்திக்க விடாமல் போதையில் தள்ளியாக வேண்டும்.

சிந்திக்க கூடிய வாக்காளர்களாக இருப்பதை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் விரும்புவதும் இல்லை. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? என்று சட்டை பிடித்தால் அசிங்கமாக போகும் அல்லவா? எனவே வாக்காளர்களும் சுய புத்தியோடு இருக்கக் கூடாது. போதையில் வீழ்ந்து சீரழிவதே தமக்கு பாதுகாப்பானது என்ற முடிவுக்கு கேடுகெட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வந்தடைகிறார்கள்.

இத்தகைய சூழலில் கார்ப்பரேட்டுகளும் அவர்களின் எடுப்பிடிகளான அரசியல் கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு மக்களுக்கு ஊற்றிக் கொடுப்பதை தொடரவே செய்கின்றனர். இந்த கூட்டணியை முறிக்காமல், நசுக்காமல் இடுப்பை ஒடிக்காமல் சமூகத்திலிருந்து போதையை விரட்ட முடியாது.

எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று போராடும் நாம் போதையை நோக்கித் தள்ளுகின்ற சமூக சூழலுக்கு எதிராகவும் ஒன்றுபடுவோம். சாராயக் கடைகளை மூடுவது முதல் படி என்று வைத்துக் கொண்டால், மனிதனை மனிதனாக வாழ முடியாதபடி ஆடு மாடுகளை போல், இயந்திரங்களைப் போல் கசக்கிப் பிழிகின்ற கார்ப்பரேட்டுகளை ஒரு கை பார்ப்பதை அடுத்தபடியாக வைத்துக் கொள்வோம்.

இத்தகைய புரிதல் இல்லாமல் போதை ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லை. காரியவாத போராட்டங்களை இனம் காண்போம். உழைக்கும் மக்களின் நலனுக்காக ஒன்று படுவோம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here