ஊடகவியலாளர் இசை செல்விக்கு எதிராக நடத்தப்படும் இணையவழிக் கும்பல் தாக்குதலை TNDJU வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் இச்செயலில் ஈடுபட்டுள்ளோர் மீது தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிரிவு நடவடிக்கை வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்!
கடந்த 22-01-26 அன்று மாலை சென்னை, ராயப்பேட்டை வள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டமாகச் சேர்ந்து சத்தமிட்டு விசில் அடித்து அங்கு பேருந்துக்காகக் காத்திருந்த பொது மக்களுக்கும், அந்த நிறுத்தத்திற்கு வரக்கூடிய பேருந்துகளில் ஏறி விசில் அடித்து வாகனங்களை இயக்குவதற்கும் இடையூறு செய்துள்ளனர்.
அவ்வேளையில் அங்கிருந்த ஊடகவியலாளர் இசை செல்வி, அங்கு நடந்த காட்சியைப் பதிவு செய்து, அந்த நபர்களின் அத்துமீறல்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கருத்துடன் இணைத்து வெளியிட்டுள்ளார்.

இந்த விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் பெண் ஊடகவியலாளரை மிகக் கொச்சையாக சமூக வலைதளங்களின் வழியே தாக்கி வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடிய விடயங்களைப் பதிவு செய்வதும் விமர்சிப்பதும் ஒரு ஊடகவியலாளரின் அடிப்படைக் கடமை. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் நடத்தும் கூட்டங்களில் கூட சில தவறுகள் நடந்த போதெல்லாம் கூட ஊடகவியலாளர்கள் அவற்றை விமர்சித்தே வந்திருக்கிறார்கள்.
ஆனால் தங்கள் கட்சியினரின் தவறான செயலை ஒரு பெண் ஊடகவியலாளர் பதிவு செய்து வெளியிட்டதற்காக, ஒழுக்கக் கேடான வகையில் பேசி, எழுதி அவரை சோசியல் மீடியாவில் Abuse, Intimidate செய்யும் போக்கு ஆபத்தானது.
பொது இடங்களில் மக்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் வகையில் விசில் அடிப்பது, குறிப்பாக பெண்களை நோக்கி இதுபோன்று செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதைப் பொறுப்புள்ள அனைவரும் கண்டிக்கதான் செய்வார்கள். அந்த வகையில் ஊடகவியலாளர் இசை செல்வியும் செய்துள்ளார். இந்த விமர்சனத்தைப் பொறுப்புடன் ஏற்றுக்கொண்டு அதனைக் கலைய முயல்வதே முறையாகும். அதைவிடுத்து விமர்சனம் செய்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட குடும்பப் புகைப்படங்களை எடுத்து AI மூலம் மோசமாகச் சித்தரித்துப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களை ‘தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர்கள் சங்கம்’ வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேலும் இசை செல்வி அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பேசியும், எழுதியும், மிரட்டியும் வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை வேண்டும் என்று காவல்துறையை TNDJU வலியுறுத்துகின்றோம்.
தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகவியலாளர் சங்கம்
மக்கள் அதிகாரம் ஊடகக் குழு






