அமலாக்கத் துறையின் அடாவடித்தனத்தை மறைத்து, அதை அப்பழுக்கற்ற புனித நிறுவனமாகக் காட்ட முயற்சிக்கும் மோடி அரசு!
தமிழ்நாட்டில் மதுபான விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை எதிர்த்து, தமிழ்நாடு அரசு செய்த மேல் முறையீட்டில் ஆகஸ்ட் 18 அன்று உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. ஒன்றிய பாஜக அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ் வி ராஜு, தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் வைத்த வேண்டுகோள் வினோதமாக இருந்தது.
அதாவது 69 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அமலாக்கத்துறை மீதான உச்ச நீதிமன்றத்தின் விமர்சனங்கள் அதன் மீதான மதிப்பை குறைப்பதாகவும், இது நீதித்துறையையும் கூட பாதிக்கக்கூடும் என்பதாகவும் தெரிவித்தார். இத்தகைய விமர்சனங்களை நீதிமன்றங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதை சொலிசிட்டர் ஜெனரலான துஷார் மேத்தாவும் ஆதரித்துப் பேசினார்.
முன்னதாக மே 22 அன்று நடந்த விசாரணையில் தலைமை நீதிபதி கவாய், அமலாக்கத்துறையானது அனைத்து வரம்புகளையும் மீறுகிறது என காட்டமாக விமர்சித்ததைக் குறிப்பிட்டுத்தான் இந்த குற்றச்சாட்டை மோடி அரசு தரப்பு வைத்தது. இந்த அமலாக்கத்துறை எனும் ED-யின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு கேவலமாக எதிர்கட்சிகளை பழிவாங்கவும், தேர்தலில் வென்றவர்களை பாஜக வில் சேர்க்க மிரட்டிப் பணிய வைக்கவும் உதவுகிறது என்பது பாமரனுக்கும் புரியும் வண்ணம் பட்டவர்த்தனமாக இருக்கும் நிலையில், அதன் புனிதம் கெட்டு விட்டதாக இவர்கள் புலம்புவது வேடிக்கைதான்.
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல!
இந்த வழக்கில் டாஸ்மாக் நிறுவனமானது டெண்டர் நிர்ணயம், கொள்முதல் மற்றும் விற்பனையில் பெரிய அளவிலான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் புரிந்துள்ளதாக ED குற்றம் சாட்டியது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பெரும்பாலான FIR களை வைத்து இன்றைய திமுக அரசு மீது குற்றச்சாட்டை பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி கவாய், நீங்கள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை முற்றிலுமாக மீறுகிறீர்கள் என்று கடுமையாக எச்சரித்தார்.
இது போன்ற விமர்சனங்கள்தான் தங்களை புண்படுத்துவதாகக் கூறி, அதை குறைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர் பாஜகவின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். இதற்கு பதில் அளித்த நீதிபதி கவாய், “நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை. உண்மை விபரங்களின் அடிப்படையில் விமர்சிக்கிறோம்” என்றார். சமீபகாலமாக ED-யின் நடைமுறைப் போக்குகள் குறித்து விசாரணை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
2021 முதல் இப்போது வரை 10 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ED – யின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளன நீதிமன்றங்கள். சமீப காலங்களில் நீதிபதிகள் அமலாக்கத் துறையின் மீது வைக்கும் விமர்சனங்கள் வழக்கத்தை விட கூடுதலாகவும், மிகவும் கூர்மையாகவும் உள்ளன. ED பழிவாங்கும் மற்றும் அடக்குமுறை செலுத்தும் அமைப்பாக மாறிவிட்டது என குற்றம் சாட்டுகின்றனர். அது ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல என்றும், இப்படியெல்லாம் மோசடிக்காரனைப் போல அது செயல்படக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோதமாக செயல்படும் அமலாக்கத்துறை!
சட்ட வல்லுனர்கள் ED-யின் நடத்தை சட்ட எல்லைகளை மீறுவதாகவும், சில சமயங்களில் கண்டறிய முடியாத புதிராக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், “ஒரு வழக்கு தொடுக்கும் நிறுவனமாக ED சட்டபூர்வமாகவும், நடுநிலையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அது எப்போதும் அப்படி நடந்து கொள்வதில்லை. பெரும்பாலும் அதன் அதிகாரம் எல்லைக்கு அப்பால் செயல்படுகிறது” என்கிறார்.
சட்டவிரோத சுரங்கம் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஹரியானா காங்கிரஸின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வாரிடம் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் தொடர்ந்து 15 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்க துறையின் மனிதாபிமானமற்ற நடத்தைக்காக உச்ச நீதிமன்றம் ED-ஐ கண்டித்தது.
இப்படி விசாரணை நடத்துவது ஒரு மனிதனின் கண்ணியத்துக்கு எதிரானது என்றும் ஐ.நா சபையால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஹரியானா உயர்நீதிமன்றம் கூறியது. மற்றொரு வழக்கில் ஏப்ரல் 15, 2024 அன்று மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவரின் தூங்கும் உரிமையை -ஒரு அடிப்படை மனிதத் தேவை- மறுத்ததற்காக ED-யை கண்டித்தது.
வானளாவிய அதிகாரம் படைத்ததா அமலாக்கத் துறை!
உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான நிபுன் சக்சேனா, குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுபவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் ED-யின் செயல்முறையே அவர்களுக்கான தண்டனையாக உள்ளது என்கிறார். மேலும் 2019 முதல் 2024 வரையிலான 5 ஆண்டுகளில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் வெறும் 6.4 % மட்டும்தான் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.
படிக்க:
♦ அமலாக்கத் துறையை அனுப்பி இரண்டு பேரை கொன்ற பாஜக அரசு!
♦ பாஜகவின் மற்றுமொரு பிரிவாக துடிப்புடன் செயலாற்றும் அமலாக்கத்துறை!
2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், விஜய் மதன்லால் என்பவரது வழக்கில் ED-க்கு பரந்து விரிந்த அதிகாரங்கள் இருப்பதை உறுதி செய்தது. இது போன்ற தீர்ப்புகள்தான் அமலாக்கத் துறையை அடாவடித்தனமாக ஆட வைக்கிறது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மறு ஆய்வு மனுக்கள் இன்னும் விசாரணைக்கே எடுக்கப்படவில்லை. இம்மனுக்கள் மூன்று ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் தூங்குகின்றன.
அதில் முக்கியமான அம்சம் என்னவெனில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழான வழக்கில் FIR-க்கு சமமான ECIR என்பதை குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்கத் தேவையில்லை என்ற கொடுமையான அதிகாரமாகும். மற்ற குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எஃப்ஐஆர் நகல் தரப்பட வேண்டும். அதை வைத்து உரிய நிவாரணம் பெற முடியும். ஆனால் PMLA வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ECIR இல்லாமலேயே தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும்?
அதாவது குற்றம் சாட்டிய ED, குற்றவாளி தவறிழைத்துள்ளார் என நிரூபிக்கத் தேவையில்லையாம். குற்றவாளியே தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடென்று பீற்றிக்கொள்ளப்படும் நாட்டில் எப்படியெல்லாம் கொடூரமாக சட்டம் இருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த அராஜகமான அதிகாரத்தைத்தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. அமலாக்கத்துறை தொடுக்கும் வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் செய்வதால், ஒவ்வொரு ED அதிகாரியும் நடமாடும் காவல் நிலையம் போல மாறிவிடுகிறார்.
அமலாக்கத்துறையால் 95 சதவீதம் எதிர்க் கட்சியினர்தான் ஒடுக்கப் படுகிறார்கள்!
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் செப்டம்பர் 2022 – ல் வெளிவந்த புள்ளி விபரங்களின்படி, 2014 ஆம் ஆண்டிலிருந்து 121 முக்கிய அரசியல்வாதிகள் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். இவர்களில் 115 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது PMLA சட்டத்தில் உள்ள கொடுமையான ஜாமீனுக்கான விதியானது, 2018-ல் பாசிச மோடி அரசால் பாராளுமன்ற சட்டத் திருத்தத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டது.
இவ்விதி ஆளும் கட்சியானது ED-ஐ ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துவதற்கு வழி வகுக்கிறது. மேலும் சமத்துவம், வாழும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமைகளை மீறுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பிரிவு 45 – ன் கீழ் ஜாமீன் வழங்குவதற்கான கடுமையான நிபந்தனைகள், 2018 – ல் மீண்டும் பாஜக அரசால் சேர்க்கப்பட்டன என விளக்குகிறார் சக்சேனா.
இப்படியான கடுமையான ஜாமின் விதிகளுடன் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சிறை வாசத்தை காலவரையறையின்றி நீடிக்கும் வகையிலான சூழ்ச்சி வலைகளை ED பயன்படுத்துகிறது. சில நேரங்களில் நீதிமன்றங்களையும் கூட மிரட்டுகிறது. உதாரணத்திற்கு மே 2025 – ல் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மீதான மதுபான ஊழல் தொடர்பான விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா ED-யை நோக்கி, “நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறீர்கள்” என குறிப்பிட்டார்.
ED மூன்று பெரிய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தாலும், விசாரணை முழுமை அடையாமல் இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தது. இது குற்றம் சாட்டப்பட்டவரை கால வரையறையின்றி சிறையில் அடைத்து வைப்பதாக நீதிபதி குறிப்பிட்டார். மேலும் விசாரணை முடியும் வரை உங்களது செயல் முறையையே தண்டனையாக மாற்றியுள்ளீர்கள் எனவும் குறிப்பிட்டார்.
அமலாக்கத் துறையின் அதிகார முறைகேடுகளை தடுப்பது எப்படி?
சமீபத்தில் நீதிபதி கவாய் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, ED ஒரு அரசியல் கருவியாக செயல்படக்கூடாது எனப் பலமுறை எச்சரித்துள்ளார். மேலும் குற்றவாளி என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், வழக்கு விசாரணையே நடத்தாமல் ஆண்டுக் கணக்கில் அந்த நபரை சிறையில் வைப்பதில் ED வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜுவை நோக்கி, “திரு. ராஜு தயவு செய்து எங்கள் வாயை திறக்க சொல்லாதீர்கள். அரசியல் போராட்டங்கள் வாக்காளர்கள் முன்னணியில் நிகழட்டும். நீங்கள் ஏன் இங்கு அதை செய்ய நினைக்கிறீர்கள்?” என காட்டமாக கேட்டார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஜூலை 21 2024 உச்சநீதிமன்றத்தில் ED-க்கு எதிராக ஒரு சித்திரத்தை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சி நடக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் மோடி அரசின் விருப்பங்களை நிறைவேற்றத் துடிக்கும் ED-யின் அதிகாரிகள் நடந்து கொள்வதில் இருந்து தானே அவ்வாறான விமர்சனங்கள் எழுகின்றன. உதாரணத்திற்கு விசாரணைகளை முடித்து வைப்பதற்கு லஞ்சம் கேட்பது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தவறான சமூக ஊடக இடுகைகளை பரப்புவது என்பதே ED-யின் வேலையாக உள்ளது. அதன் நம்பகத்தன்மையும் இதனால்தான் பாதிக்கப் படுகிறது.
2014 முதல் 2024 வகையிலான பத்து ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த 5300 வழக்குகளில் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. சேலம் ஆத்தூரைச் சேர்ந்த இரண்டு அப்பாவி முதியவர்களுக்கு சம்மன் அனுப்பி மிரட்டியது தொடங்கி, மாநிலத்தின் முதல்வர்கள் மீது பொய்யான குற்றம் சாட்டி கைது செய்தது வரை அத்தனை அடாவடித்தனங்களையும் செய்யும் அமலாக்கத் துறையை விமர்சிக்கவே கூடாதா?
உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையை வெறுமனே கண்டித்தால் மட்டும் போதாது. வரம்பு மீறிய அதன் அதிகாரங்களைப் பறித்து, தவறு செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும். இதற்கான நிர்பந்தத்தை ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் நாடெங்கும் நடத்தும் போராட்டங்களின் விளைவாக ஏற்படுத்த வேண்டும்.
- குரு