பிப்ரவரி 3 ஆம் தேதி இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து, உச்சகட்ட குதூகலத்தில் இருந்த இந்திய ஒன்றியத்தின்  உள்துறை அமைச்சரான திருவாளர் அமித்ஷா   “இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்காக மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்கள் என்றும்,  இரு நாட்டு மக்களுக்கும் இந்த ஒப்பந்தம் நன்மை தரும். இரு நாட்டுக்கும் இடையில் இனி வர்த்தகம் பூத்துக் குலுங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா இந்தியாவின் மீது பன்மடங்கு வரி விதித்து நிர்பந்தம் செய்து வந்தது. குறிப்பாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று மிரட்டி வந்த நிலையில் அதற்கு அடிபணிந்து ரஷ்யாவுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை கைவிட்டது இந்திய ஒன்றிய அரசு.

இவ்வாறு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கைவிடப்பட்டவுடன், இந்தியாவின் மீதான வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மேலும், இனிமேல் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக் கொள்வதற்கு அனுமதி கொடுத்துள்ளது என்றெல்லாம் இந்திய ஒன்றிய அரசாங்கம் குறிப்பாக மோடி அமித்ஷா கும்பல் பெருமை பீத்திக் கொண்டுள்ளது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் மிரட்டலுக்கு பணிந்து நாட்டின் இறையாண்மையை அதாவது எண்ணெய் வர்த்தகம் யாருடன் செய்ய வேண்டும் என்பதை பறிக்கின்ற அடிமைத்தனமான ஒப்பந்தத்தை உயர்த்திப் பேசுவதற்கு நெஞ்சுரம் வேண்டும். பாசிஸ்டுகளிடம் நாட்டுப்பற்று சிறிதும் கிடையாது என்பதால் இத்தகைய ஒப்பந்தங்களை அவர்கள் உயர்த்தி பேசுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

இந்திய நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ள அமெரிக்காவின் எண்ணெய் கார்ப்பரேட்டுகள் கையில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு குறித்த நுகர்வு சந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை சிலாகித்துப் பேசிய அமித்ஷா பிப்ரவரி 8ஆம் தேதி மாவோயிஸ்டுகள் மீதான தாக்குதல் பற்றி விசாரிப்பதற்கு சத்தீஸ்கர் மாநிலம் சென்றபோது, கம்யூனிச சித்தாந்தம் பற்றியும், கம்யூனிசம் இந்தியாவிலிருந்து  முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மாவோயிஸ்டுகள் முன்வைக்கின்ற கம்யூனிச சித்தாந்தம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கானது கிடையாது என்றும் அது தோல்வி அடைந்த ஒரு சித்தாந்தம் என்றும், அது இந்தியாவில் திரிபுரா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பின்னடைவுக்கு உள்ளாகி இருப்பதாகவும், தற்போது கேரளாவில் மட்டும் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் பேசியுள்ளார்.

அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 9 பஸ்தார் பகுதிகளுக்கு சென்ற அமித்ஷா, “மாவோயிசம் இந்தியாவிற்கு நன்மையை தரவில்லை. மாறாக அழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது” என்று பேசியது மட்டுமின்றி மாவோயிசம் பரவிய கொலம்பியா, கம்போடியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் அழிவை மட்டுமே உருவாக்கியுள்ளது என்றும் தனது ‘அரிய கண்டுபிடிப்பை’ நல்கியுள்ளார்.

மிகவும் எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் பேசுவதாக கருதிக் கொண்டுள்ள அமித்ஷா மாவோயிசம் தோன்றிய சீனாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஒரு வாரத்திற்குள் கம்யூனிச சித்தாந்தத்தை பற்றியும் மாவோயிசம் பற்றியும் தொடர்ச்சியாக பேசியுள்ள அமித்ஷா அமெரிக்காவின் அடிமைத்தனமான ஒப்பந்தத்தில் இந்தியாவை ஆழ்த்தியது பற்றியும் அமெரிக்காவின் விசுவாசமான அடிமையாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள பாசிச மோடியை பற்றி பெருமையாக பேசியுள்ளதையும் இணைத்துப் பார்க்கும் போது தான் உண்மை நன்றாக புரியும்.

படிக்க:

 கம்யூனிசத்தையும், பாட்டாளி வர்க்கத்தையும் அச்சுறுத்தும் சீனாவின் ‘ சோசலிச பாதை?’

 இந்தப் பொழப்புக்கு… ட்ரம்ப் தட்டோடு ஏந்தி நாடு நாடாய் பிச்சை எடுக்கலாம்! 

உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்கப் போகிறேன் என்ற பெயரில் போர்வெறி கொண்ட, உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா பல்வேறு நாடுகளில் உள்ளே புகுந்து உள்நாட்டு அரசாங்கங்களை கவிழ்ப்பது; அந்த நாட்டு அரசாங்கங்கள் மற்றும் அதிபர்களை கைது செய்வது; படுகொலை செய்வது என்று பயங்கரவாத வெறியாட்டம் நடத்தி வரும் சூழலில் அமெரிக்காவுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை நாட்டின் முன்னேற்றத்திற்கான வழி என்றும், இந்தியாவின் இயற்கை வளங்களை பாதுகாக்க போராடுகின்ற மாவோயிசம் மற்றும் கம்யூனிச போராளிகளின் வாழ்க்கை குறித்து இழிவாக பேசியுள்ளதன் மூலம் தனது ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற சித்தாந்தத்தின் யோக்கியதையை வெளிக்காட்டியுள்ளார்.

கம்யூனிசத்தின் நேர் எதிரான சித்தாந்தமான அதாவது  ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை ஆட்டிப்படைக்கின்ற நிதி மூலதனத்தின் படுபிற்போக்கான, ஆகக் கேடான, இனவெறி பிடித்த சித்தாந்தம் தான் பாசிசம்.

அதனை உயர்த்திப் பிடிக்கின்ற இந்த கேடுகெட்ட இந்திய மக்களின் விரோதியான மோடி அமித்ஷா கும்பல் கம்யூனிசத்தை பற்றி விமர்சிப்பதும் கம்யூனிச சித்தாந்தம் உலகில் தோல்வி அடைந்து விட்டதாக  கும்மாளம் அடிப்பதையும் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

ஆர்எஸ்எஸ் பாஜக முன்வைக்கின்ற அரசியல், பொருளாதாரக் கொள்கை நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு எதிராக விவசாயத்தை சீரழித்து, தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து வருகிறது என்பது மட்டுமின்றி படித்த மாணவர்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பு இன்றி நாடோடிகளாக நாடு முழுவதும்  இங்கும் அங்கும் அலைகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வாழ்க்கை நடத்துகின்ற கொடூரத்திற்கு தள்ளியுள்ளது.  இதனை சாதித்தது தான் 11 ஆண்டுகால பாசிச மோடி கும்பலினை சாதனையாகும். அது மட்டுமல்ல இந்தியாவின் கடன் தொகையை 214 லட்சம் கோடிக்கு உயர்த்தியது தான் இவர்களின் சாதனை.

மக்கள் அதிகாரம் வாட்சப் சேனலை கிளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

பாலஸ்தீனத்தின் மீது பல ஆயிரம் வான்வெளி குண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களை சிறுவர்களை பெண்களை கொன்றொழித்த பயங்கரவாதிகளின் கூடாரமான அமெரிக்க மேல்நிலை வல்லரசு தற்போதும் ஈரான் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கும் வெறிபிடித்து அலைந்து கொண்டுள்ளது.

இந்த மனித குலவிரோத சக்திகளான அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாட்டை ஆண்டு கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கம்யூனிசத்தை பற்றியும், மாவோயிசம் பற்றியும் பேசுவது சகிக்க முடியாதது.

2025 மார்ச் 31 தேதிக்குள் மாவோயிஸ்டுகளுக்கு முழுமையாக முடிவு கட்டுகிறோம் என்ற பெயரில் மாவோயிசத்தின் மீதும், படிப்படியாக கம்யூனிச இயக்கங்களின் மீதும் தனது தாக்குதல்களை தொடுக்க தயாராகி வருகின்ற பயங்கரவாத கும்பலை நாட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒழித்துக் கட்டுவது இன்றைய முக்கிய கடமையாக மாறியுள்ளது.

இதற்கு கம்யூனிச சித்தாந்தத்தின் மீது முழுமையான நம்பிக்கையும் எத்தனை அடக்குமுறைகள், இடர்பாடுகளை எதிர்கொண்டாலும் உருக்குலையாத, தான் ஏற்றுக் கொண்ட லட்சியத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்காத, முதலாளித்துவ மற்றும் கார்ப்பரேட் கட்சிகளிடம் ஒரு போதும் சோரம் போகாத, போல்ஷ்விக்மயமான கம்யூனிஸ்ட் கட்சியை, பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதுதான் தீர்வாகும்.

  • ஆல்பர்ட்.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here