
தெலுங்கானாவில் நாட்டாமை படபாணியில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் எச்சங்கள் பல கிராமங்களில் நீடித்திருப்பதே இதற்கு முதன்மையான காரணம்.
ஜத்தியால் மாவட்டம் கல்லேடா கிராமத்தில் அண்மையில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை அளிக்க தவறியதற்காக நான்கு குடும்பங்களை ஊரைவிட்டு விலக்கிவைத்துள்ளனர் பிற்போக்கு மதவாதிகள். பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து பொதுவெளிக்கு வந்துள்ளது.
பட்டியல் சாதி சமூகத்தை சார்ந்த அருண், கானா லச்சையா, அஞ்சி மற்றும் சூர்ய வம்ஷி ஆகியோரின் குடும்பங்கள் தான் இந்த சமூக அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது. கிராம மக்கள் அவர்களுடன் தொடர்புக் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்து ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்துடன் பேசுபவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். உத்தரவை மீறுபவர்கள் குறித்து புகார் அளிப்பவர்களுக்கு ரூ.5000 வெகுமதியும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி உள்ளிட்டு ஊர் திருவிழாவிற்கு குடும்பத்தில் ஒருவருக்கு ‘தெய்வத்திற்கு தேங்காய் காணிக்கை’ செலுத்த ரூ.1,116 கட்டாயம் செலுத்த வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். இதனை மறுதத்தற்கு தான் ஊரை விட்டு தள்ளிவைத்து “அன்னந்தண்ணி ஆகாரம் புழங்கக் கூடாது” என நாட்டாமை பாணியில் உத்தரவு போட்டுள்ளனர்.
நாங்கள் ஏற்கனவே கடனாளியாகி வறுமையில் உழன்று வருகிறோம். இந்த சூழ்நிலையில் எங்களால் 1,116 ரூபாய் எப்படி கொடுக்க முடியும்” என நியாயமான காரணத்தை கூறுகிறார்கள். எங்கள் கிராமத்தில் பல குடும்பங்கள் இதுபோன்ற நிலைமையில் தான் உள்ளது என்றும் கூறினர். பஞ்சாயத்து முடிவு என்ற பெயரில் குடும்பத்திற்கு என ஒரு தொகை முடிவு செய்து கட்டாய வசூலில் ஈடுபடுவது இந்தியாவில் பல கிராமங்களில் நடைபெறுகிறது.
இதே தெலுங்கான கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தை ஊரைவிட்டு விலக்கி வைத்த சம்பவமும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட குடும்பத்தை விலக்கி வைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு செய்வதன் மூலம் ஊரில் உள்ள மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பல கிராமங்களிலும் இந்த நடைமுறை இன்றும் உள்ளது. சமூக புறக்கணிப்பு குறைவாக இருந்தாலும் ஊர் பஞ்சாயத்து கூடி முடிவெடுத்து அமல்படுத்தும் முறை தொடர்கிறது. முக்கியமாக கோவில் திருவிழா என்ற பெயரில் அன்றாடம் உழைக்கும் மக்களை கடனாளியாக்குவது, மீறுபவர்களை சட்டத்தை மீறி தண்டிப்பது, என இந்தியாவின் கிராமங்கள் நிலப்பிரபுத்துவ பண்பாட்டை தூக்கிப் பிடிக்கின்றன.
கோவிலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் குறிப்பாக சங்பரிவார் கும்பலின் அடியாட்படைகள் மக்களை மதவெறியூட்டுவதற்கு கோவில்கள் மூலம் எளிதாக உள்ளே நுழைகிறார்கள். ஊரில் எங்கோ ஒரு இடத்தில் நடந்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி இன்று தெருவிற்கு ஒன்று என ஊர் மக்களிடம் வசூல் செய்து அதில் மதவெறி கூத்தடிக்கிறார்கள். இதனை காவல்துறை பெரிதாக கண்டுக் கொள்வதில்லை. கிராம பஞ்சாயத்துக்கள் ஒரு மினிகோர்ட் போல் பல இடங்களில் நடைபெறுவதும் உண்டு.
படிக்க:
♦ சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு உயர்கல்வி உரிமையை ஒழித்துக்கட்டும் ஆர்எஸ்எஸ் பாஜக!
♦ ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், அதை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை தடை செய்!
அதே நேரத்தில் ஊர்பஞ்சாயத்தை பயன்படுத்தி நல்ல காரியங்களையும் செய்ய முடியும். தங்களது ஊரில் அடிப்படை தேவைகளை அரசிடம் பெற பஞ்சாயத்து கூடி முடிவு செய்வது நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை கொடுக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவது என பஞ்சாயத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் பிற்போக்கு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பெரும்பாலும் சாதி ஆதிக்கவாதிகளே சட்டபூர்வமாக அல்லாமல் அனுமதியற்ற சமூக பஞ்சாயத்து கூட்டி தீர்ப்பு வழங்குகிறார்கள். குறிப்பாக சாதிமுறைகளை மீறுவது, மத/விழா நன்கொடை செலுத்தாதது “கிராம மரபு”க்கு எதிராக நடப்பது இதற்கு இவர்கள் தரும் தீர்ப்புகள் ”சம்பந்தப்பட்டவர்களுடன் யாரும் பேசக்கூடாது, தண்ணீர், கடை, குத்தகை, கூலி வேலைகள் தரக்கூடாது என்றும் அபராதங்கள் விதிப்பது, சில நேரங்களில் ஊரை விட்டு வெளியேற்றுவதும்” நடக்கிறது.
இத்தகைய அனுமதியற்ற பஞ்சாயத்து தீர்ப்புகள் சட்டவிரோதம். SC/ST Atrocities Act, BNS படி குற்றப்பத்திரிக்கைகள் பதிவு செய்ய முடியும். உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பலமுறை இந்த பஞ்சாயத்துக்களை சட்டவிரோதம் என அறிவித்துள்ளன. ஊரின் சமூக அழுத்தம், பயம், அரசாங்கத்தின் தலையீடு இல்லாதது போன்ற காரணங்களால், பல இடங்களில் இப்படி “அனுமதியற்ற பஞ்சாயத்து தீர்ப்புகள்” இன்னும் அமல்படுத்தப்படுகின்றன.
தெலுங்கான, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் சாதி அடிப்படையிலான சமூக புறக்கணிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடந்ததால் 2016-ல் மகாராஷ்டிரா மாநிலம் Social Boycott (prevention, Prohibition and Redressal) Act என்ற சிறப்பு சட்டம் கொண்டு வந்தது.
இதற்கு எதிராக எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அதை காலில் போட்டு மிதித்துக் கொண்டு தான் இதுபோன்ற பழைய மரபுகளை உயர்த்திப் பிடிக்கும் பஞ்சாயத்துக்களை நடத்துவார்கள் பிற்போக்குவாதிகள். ஆனால் ஊர் மக்கள் முடிவுச் செய்து இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்க மறுப்பதன் மூலமே பிற்போக்கு, நிலப்பிரபுத்துவ சங்கிலியில் இருந்து மீள முடியும்
- நந்தன்







ஆதிக்க சாதிவெறி கொடுமைகள் ஒருபுறம் தாழ்த்தப்பட்ட மக்களை கொடுந்துயருக்கு ஆளாக்குகிறது; மறுபுறம் இவ்வாறு
ஊர் பஞ்சாயத்து என்ற பெயரில் கண்ட கேவலங்கெட்ட நிகழ்வுகளுக்கும் வசூல் வேட்டை நடத்தி ஏழை எளிய மக்களை மட்டும் அன்றி குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களை கடனாளிகளாக்கக்கூடிய வகையில் மக்களை மேலும் கொடுமைப் படுத்துகிறார்கள். கட்டுரையாளர் நந்தன் சுருக்கமாக இருந்தாலும் தக்க தருணத்தில் இதனை அம்பலப்படுத்தி எழுதி இருப்பது சிறப்பு. இந்திய நாட்டு நிலைமைகள் எல்லா வகைகளிலுமே மிகவும் கடினமான சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்குகிறது. சமூக மாற்ற விரும்பிகள் அனைத்திலும் முகம் கொடுத்து உழைக்க வேண்டிய பெரும்பணி காத்துக் கிடக்கிறது.
பிள்ளையார் பேர சொல்லி ஆர் எஸ் எஸ் கூட்டம் மக்களை மிரட்டி கட்டாய வசூல் செய்வது சட்ட விரோதமானதும் கூட கிராம பஞ்சாயத்து மூலம் ஊரை விட்டு தள்ளி ஒதுக்குவது அவர்களை தண்டிப்பது மற்றவர்களுக்கு பயத்தை எச்சத்தை ஏற்படுத்துவது என்பது இந்த நவீன காலத்தில் இழிவான செயலை செய்யத் தூண்டும் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்கி கூட்டத்தை வீதியில் நிறுத்தி தோலுரிக்க வேண்டும் அப்பொழுதுதான் இப்படிப்பட்ட ஏழை எளிய உழைக்கும் மக்களை மிரட்டி பணம் வசூல் செய்வது கலவரத்தை உருவாக்குவது போன்றவற்றை தடுக்க முடியும் அதற்கு வேளாளர்கள் விவசாயிகள் மாணவர்கள் வர்க்க ஒற்றுமையை கட்டி அமைத்து ஆர் எஸ் எஸ் காலிகளை விரட்டி அடிப்பதை தீர்வு