ஆதவ் அர்ஜூனா-சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த செப்டம்பர் மாதம் 27ந்தேதி, கரூரில்  நடிகர் விஜய் கலந்து கொண்டு நடைபெற்ற பரப்புரை நிகழ்வில் சிக்கி குழந்தைகள் – ஆண் – பெண் என மொத்தம் 41 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். அத்தருணத்தில் கட்சித் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளும் இறந்தவர்களையோ, காயம் பட்டவர்களையோ ஏறெடுத்துப் பார்க்கத் துணிவின்றி ஓடி ஒளிந்து தலைமறைவாயினர்.

அதே நேரத்தில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தப்பிப் பிழைத்து உத்தரகாண்ட் மாநில வாலிபால் அரங்கில் போய் அமர்ந்து கொண்டார். ஓடி ஒளிந்திருந்த காலத்தில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.

அதாவது இக்கோரச் சாவுகளுக்கு காரணமானோர் என்ற அடிப்படையில் இரு ‘சில்லுண்டி’த.வெ.க. நிர்வாகிகளைக் கைது செய்ததை சுட்டிக் காண்பித்தும் – கண்டித்தும்,’தமிழ்நாட்டில் நேபாளம் – இலங்கை போல பெரும்புரட்சி வெடிக்கும்’ என்பதாகப் பதிவிட்டிருந்தார். இதையொட்டி பெரும் வன்முறையை தூண்டியதாக அவர் மீது தமிழ்நாட்டு காவல்துறை, கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதை எதிர்த்து வழக்கை ரத்து செய்யுமாறு கோரி ஆதவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, விசாரணை நிறைவடைந்து வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இறுதியில் 21-11-2025 வெள்ளிக்கிழமையன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார்.

‘இந்த மனு விசாரணைக்கு எடுத்தவரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு வன்முறையையோ வெறுப்பையையோ தூண்டும் வகையில் இப்பதிவு இல்லை. அது ஒரு அரசியல் ரீதியிலான கருத்து. மக்களின் மனநிலையை கூறும் வகையில் மட்டுமே இந்த பதிவு அமைந்துள்ளது.

ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற புதிய குற்ற விசாரணை முறை சட்டம் தெரிவிப்பதால், ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’

… இதுதான் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் தீர்ப்பின் சாரம்.

நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் தீர்ப்பைக் ‘கொண்டாடுவோம்’!

இந்தியாவில் நீதித்துறை உட்பட அனைத்தும் காவிமயமாகி வருவதை நாம் பல தருணங்களில் பார்த்து விட்டோம். நடிகர் விஜய்யின் அடாவடித்தனமான செறுக்கால் 41 பேர் மாண்டு போன நிலையில் சிபிசிஐடி விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏடிஜிபி தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை…
என முப்பெரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் பாஜகவின் ஒட்டுண்ணியான தவெக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கை சிபிஐக்கு மாற்றி தனக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சிபிஐ விசாரணை கோரி விண்ணப்பித்ததாக போலி நபர்கள் இருவரைக் காட்டி அப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட தீர்ப்பினை அவர்களால் வழங்க முடிந்தது. அந்தப் போலித்தனத்தை தீர்ப்பு வழங்கிய தருணத்திலேயே அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன் சுட்டிக் காண்பித்த பொழுது, நீதிபதி அந்தப் பிரச்சினையையும் சேர்த்தே சிபிஐ விசாரிக்கும் என்று எளிதாகக் கடந்து சென்று விட்டார். இதுதான் நீதித்துறையின் லட்சணம்.

தற்போது ஆளுநர் அதிகாரம் குறித்த தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் தொடுத்த வழக்கில் குறிப்பாக தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். ஹவாய் அமர்வு அலித்தனமான தீர்ப்பை வழங்கிக் களங்கப்படுத்தியுள்ளது.

SIR தொடர்பாக தேர்தல் ஆணையம் குறித்தான வழக்குகளிலும் உச்ச நீதிமன்றம் ஜவ்விழுப்பாக இழுத்து மோடி அமித்ஷா கும்பலுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் விசுவாசமாக நடந்து கொண்டிருக்கக் கூடிய செயற்பாடுகளை நாம் அவதானித்தே வருகிறோம்.

சங்கித்தனமான தீர்ப்புகள் வழங்குவதில் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மிக முன்னோடியாகத் திகழ்கிறார். மதுரை ஆதீனத்தின் புளுகுனித் தனமான – கீழ்த்தரமான பேட்டிகளால் மதக் கலவரத்தை உண்டாக்கும் விடயத்திலும் நீதிமன்றம் மிகவும் தாராளமாக மதுரை ஆதீனத்திற்கு சார்பான முறையில் நடந்துள்ளதையும் பார்த்தோம்.

“திருப்பரங்குன்றம் முருகன் கோவில் – சிக்கந்தர் தர்கா பிரச்சனையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே இந்திய உச்சநீதிமன்றமாகத் திகழ்ந்த லண்டன் பிரிவிக் கவுன்சில் தெளிவான தீர்ப்பளித்த பிறகும், பாபர் மசூதி இடிப்பு பிரச்சனை போல அமைதிமிகு மதுரையை கலவர பூமியாக்க காவி கூட்டத்திற்கு அனுசரணையாக சட்ட நியதிகள் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு மதுரைக் கிளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த காலங்களில் தீர்ப்பளித்துள்ளனர்.

தற்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வேண்டுமென்றே வழக்கத்திற்கு மாறாக இஸ்லாமியர் வழிபாட்டுத் தளமான சிக்கந்தர் தர்கா அருகில் வரும் கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டம் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு சங்கிகளின் கோரிக்கைகளை சரியான காரணங்களை விளக்கி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

அதனை எதிர்த்து சங்கிகள் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை சங்கி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒரு நபர் அமர்வுக்குக் கொண்டு சென்றனர். அதனை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு இவ்விடயத்தில் தீர்ப்பளித்தபின் ஒரு நீதிபதி விசாரிக்கக்
கூடாது என்ற கடந்த கால சென்னை உயர்நீதிமன்ற, டெல்லி உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழிகாட்டுதல்கள் இருந்தும் கூட மனு தாக்கல் நிலையிலேயே ஜி. ஆர். சுவாமிநாதன் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். மாறாக அதனை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு எண் இடப்பட்டு விசாரித்து வருகிறார். அவர் எப்படிப்பட்ட தீர்ப்பு வழங்குவார் என்பதையும், மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளை கலவர பூமியாக்க காவி கூட்டத்திற்கு அணு சரணையான தீர்ப்பை வழங்க காத்திருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது. ஆக இப்படித்தான் நீதிமன்றங்களும் முழுமையாக காவிமயமாக்கப்
பட்டு விட்டன.

இவற்றின் ஒரு பகுதியாகவே ஆதவ் அர்ஜுனா வழக்கில், அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திராவின் தீர்ப்பும் அமைந்துள்ளது என்பதாக நாம் பார்க்க முடிகிறது.கரூரில் கொடும் செயல்களை அரங்கேற்றிவிட்டு குற்றச் செயலில் ஈடுபட்ட ஆதவ் அர்ஜூனா தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்கு உரிய ஒன்றாகும்.

எனவே, தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல இந்தத் தீர்ப்பிற்கு ‘நன்றி’ தெரிவிப்பது என்பதுவும், ‘கொண்டாடுவோம்’ என்பதுவும், வரும் காலங்களில் பல்வேறு தரப்பு அரசியல் இயக்கங்களும் தங்களுடைய கொள்கைப் பிரகடனங்களாக – செயற்பாடுகளாக தத்தம் அரசியல் முழக்கங்களை ஆதவ் அர்ஜுனா போல வெளிப்படையாகவே அறிவிக்கலாம்; காவல்துறையோ, நீதிமன்றமோ இதில் தலையிடாது என்று இந்தத் தீர்ப்பின் மூலமாக நமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வோம்!

நன்றி ‘நீதி அரசர்’ ஜெகதீஷ் சந்திரா அவர்களே!

எழில்மாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here