உச்ச நீதிமன்றம்: ராகேஷ் கிஷோருக்கு சரியான செருப்படி! பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களின் பல்வேறு விதமான தீர்ப்புக்களில் நமக்கு நிறைய முரண்கள் உண்டுதான்.
குறிப்பாக, அவர் ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற மசோதாக்களில் ஆளுநர் ஆரியன் RN.ரவி வேண்டுமென்றே கையெழுத்துப் போட மறுத்து முடக்குவது அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்ற இழிவான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்.
இப்பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா – மகாதேவன் அமர்வு தமிழ்நாட்டு அரசாங்கத்திற்குச் சாதகமான நியாயமான தீர்ப்பு ஒன்றினை – அதாவது R.N.ரவி வருடக் கணக்கில் முடக்கி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் முன் தேதியிட்டு 2025 ஏப்ரல் 8-ல் கையொப்பம் இட்டு தீர்ப்புரை வழங்கினர்.
அதை சகித்துக் கொள்ள மாட்டாத ஒன்றிய பாஜக மோடி-அமித்ஷா கும்பல் நேரடியாக நீதிமன்றத்தை அணுகி மேல்முறையீடு செய்ய வக்கற்று போய், துருப்புச் சீட்டாக குடியரசுத் தலைவரையே பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஆம், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மூலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 14 கேள்விகளை கேட்டு பர்திவாலா – மகாதேவன் தீர்ப்பினை முடக்க எத்தனித்தனர். அதற்குப் பணிந்து போய் கோழைத்தனமான தீர்ப்பினை கடைசி காலத்தில் வழங்கி விட்டுச் சென்றவர் தான் பி.ஆர்.கவாய்.
அந்த வகையில் நாம் அவரைக் கண்டனம் செய்கிறோம். ஆனால் இது முற்றிலும் வேறு விடயம்.
ம.பி. ஜவாரி கோவில் பிரச்சனை தான் என்ன?
மத்திய பிரதேசத்தில் சதாப்பூர் மாவட்டத்தில் உள்ளது யுனெஸ்கோ உலக பாரம்பரிய கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது ஜவாரி கோயில்.
இக்கோவிலில் சேதம் அடைந்த நிலையில் கிடக்கும் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலையை புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்வதற்கு உத்தரவிடக்கோரி மனுதாரர் ராகேஷ் தலால் என்பவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சஞ்சய் எம்.நூலி என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார்.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் 16-09-2025-ல், அன்றைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவுற்று நீதிபதி கவாய் அளித்த தீர்ப்பின் சாரம் இதோ:
“சம்மந்தப்பட்ட ஜவாரி கோவில் அதில் சேதமடைந்து கிடக்கும் மகாவிஷ்ணு சிலை யாவும் தொல்லியல் துறைக்கு (ASI) சம்பந்தப்பட்டதாகும். அக்கோவில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. நீங்கள் தொல்லியல் துறையை நாடலாம்; அல்லது நீங்கள் (மனுதாரர்) தான் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள்; எனவே இப்போதே சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள்”
– இவைதான் இவ் வழக்கில் நீதிபதி பி ஆர் கவாய் அளித்த தீர்ப்பு அல்லது அறிவுரைகள் ஆகும்.
கொதித்தெழுந்த சங்கிகள்! ‘ஷூ’ வீசிய வழக்கறிஞன்!
ம.பி. ஜவாரி கோவில் விஷ்ணு சிலை தொடர்பாக சரியாகத்தான் தீர்ப்பு/அறிவுரை வழங்கியிருந்தார் பி.ஆர்.கவாய்.
ஆனால் அவரது கூற்று சனாதன – இந்துத்துவவாதிகளின் மனதை மிகவும் புண்படுத்திவிட்டதாம்! எனவே இந்திய நாடு முழுமைக்கும் ஊடகங்களிலும், ஐ.டி.விங் போன்ற சகலவற்றிலும் நெட்டிஷன்கள் என்ற பெயரில் கும்பல் கும்பலாக, பி.ஆர்.கவாயை வறுத்தெடுத்து விட்டார்கள்.
பார்ப்பன வழக்கறிஞர்கள் கும்பல், பி.ஆர்.கவாயிடம் அவரது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டும் பாணியில் எழுத்து பூர்வமாக கடிதம் எழுதினார்கள்.
அதன் பின்பும் நீதிபதி பி.ஆர்.கவாய், ‘நான் இந்த நாற்காலியில் அமர்ந்த பிறகு எல்லா மதத்திற்கும் பொதுவானவன்தான்; நான் ஒரு சார்பு நிலை எடுத்து தீர்ப்போ/ கருத்தோ வழங்க முடியாது’ என்று மிகவும் எளிய முறையில் தான் கருத்துக்களை வெளியிட்டார். ஆனாலும் ஆர்எஸ்எஸ் – பாஜக பாசிச காவிக் கூட்டத்தின் வெறி அடங்கவில்லை.
எனவே, ‘பாபர் மசூதியை இடிக்க திட்டமிட்டது போல’, கவாயையை அவமானப்படுத்தத் திட்டம் தீட்டியது காவிக் கும்பல்.
ஆம், காவிக் கூட்டத் திட்டபடி ஆர்எஸ்எஸ் வெறியன் – வழக்கறிஞன் என்ற பெயரில் கருப்புக் கோட்டுடன் அலையும் ‘ராகேஷ் கிஷோர்’ என்ற பொறுக்கி உச்ச நீதிமன்றத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தருணத்தில் கடந்த 06-10-2025 திங்கள் கிழமை பி.ஆர்.கவாய்க்கு எதிராக – முழக்கம் விட்டவாறு தன் காலில் அணிந்திருந்த ‘ஷூ’-வைக் கழற்றி வீசினான். நல்ல வேலையாக நீதிபதி மேல் படாமல் வேறு திசையில் சென்று விழுந்தது. காவலர்கள் தற்காலிகமாக கைது செய்து ஒரு மணி நேரம் காவல் நிலையத்தில் வைத்திருந்து விசாரணை செய்துவிட்டு அவனை விடுதலை செய்து விட்டார்கள்! எப்பேர்ப்பட்ட போலீஸ்? எப்பேர்ப்பட்ட அரசாங்கம்? எப்பேர்ப்பட்ட நீதிமன்றம்?
படிக்க:
♦ உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சும்! சனாதன பயங்கரவாதத்தின் உண்மை முகமும்!
♦ சனாதனத்தை ஊக்குவிக்க திட்டம்! பார்ப்பனியத்துக்கு அடிவருடி வேலைபார்க்கும் நிதீஷ் அரசு!
ஆனால் ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நிதீபதியை இவ்வளவு தூரம் அவமானப்படுத்திய பிறகு – அதனை நீதிபதி கவாய் கடந்து சென்றிருந்தாலம் கூட, இந்த நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உச்சநீதிமன்றம், ராணுவம், உளவுத்துறை இன்ன பிற ‘பட்டாளங்கள்’ யாவும் அந்த ராகேஷ் மீது ஒரு துரும்பு அளவு பாதிப்படைய விடாமல் பாதுகாத்துக் கொண்டார்கள். இதுதான் காவிக் கூட்டத்தின் ‘ஜனநாயக மாண்பு’ !
உச்ச நீதிமன்ற பார் அசோசியன் மட்டும் அவனது வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்தது; பார் கவுன்சிலிலும் அவன் நீக்கம் செய்யப்பட்டான். அங்கொன்றும் இங்கொன்றுமாக முற்போக்கு எண்ணம் கொண்டவர்களால், சில இயக்கங்கள்/ கட்சிகளால், சில கண்டனங்களும், சில ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. இதே தருணத்தில் ஒரு பார்ப்பன நீதிபதிக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருந்தால் இந்தியா என்ன பாடுபட்டு இருக்கும் என்பதனை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
‘ஷூ’ வீசிய பொறுக்கிக்கு உச்ச நீதிமன்றத்தில் ‘ஷூ-வாலேயே அடித்துத் துவைத்த வழக்கறிஞர்கள்!
அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதாக கூப்பாடு போடும் RSS பா.ஜ.க. இந்துத்துவவாதிகள், பார்ப்பன நீதிபதிகள், பார்ப்பன வழக்கறிஞர்கள், மற்றும் அதன் கைப்பாவைகளான அதிகார வர்க்கம் என ஒட்டுமொத்த கும்பலும் பி.ஆர்.கவாய் மீது ‘ஷூ’ வீசியது சரிதான் என்ற பாணியில் கடந்து போய்விட்டனர்.
ஆனால், இச்சம்பவத்தால் மனம் உடைந்து போய் இருந்த உச்சநீதிமன்ற நியாயப்பூர்வ வழக்கறிஞர்கள் 09-12-2025 அன்று ஒன்று திரண்டார்கள். முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதி என்பதால் ‘ஷூ’ – வை மட்டும் அவர் மீது படாமல் கழற்றி வீசி அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதி ‘நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் எவனையும் தப்பிக்க விடமாட்டேன்’ – என்று நரி போல இறுமாப்புடன் கூச்சலிட்டான்.
தற்போது சுயமரியாதை மிக்க வழக்கறிஞர்கள், 6-9-2025-ல் கவாய் மீது ‘ஷூ’ வீசிய பொறுக்கி – அயோக்கியன், ராகேஷ் கிஷோர் மீது ஒட்டுமொத்தமாகத் திரண்டு நின்று 9-12-2025ல் செருப்படியும், ஷூத் தாக்குதலையும் வசமாகக் கொடுத்துத் தாக்குதலை அரங்கேற்றி இருக்கிறார்கள்.
இது…இதுவே… நாம் சங்கிகளுக்கு எல்லாவிதமான அவர்களது அட்டூழியங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ‘வைத்தியமுறை’யாகும்!
இப்படித் தளத்தில் நேருக்கு நேர் நின்று அவர்களை மோதி அழிக்காமல், காவிக் கூட்டத்தை வீழ்த்த முடியாது.
எனவே, உச்சநீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞன் ராகேஷ் கிஷோருக்கு சரியான செருப்படி கொடுத்த அனைத்து வழக்கறிஞர்களையும் தந்தை பெரியார் பாணியில் சொல்ல வேண்டுமானால், மனதார, உளமார, கையார, இதயபூர்வமாக பாராட்டுவோம்! வாழ்த்துவோம்!
அனைத்துவித கேடுகெட்ட சங்கிக் கூட்டங்களையும் வீழ்த்துவதற்கான வழிமுறை… “இதுதான்” என சூத்திர – பஞ்சம உழைக்கும் மக்கள் உணர வேண்டும்! களம் காண வேண்டும்! கலகங்கள் புரிய வேண்டும்!
- எழில்மாறன்







உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி ஆர் கவாய் மீது ஷூ வீசிய பாசி சங்கி ராகேஷ் கிஷோர்க்கு 9/ 12 /2025 அன்று வழக்கறிஞர்கள் அனைவரும் சேர்ந்து ஷூ வைத்தியம் கொடுத்துள்ளார்கள் என்ற செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பாசிஸ்டுகளை நேருக்கு நேர் மோதி விழுத்த வழக்கறிஞர்களின் அனுபவத்தை படிப்பினையாக ஏற்போம்.